2 இராஜாக்கள் 17:6-28
தானியேல் 1:1-21
1. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.
2. அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
3. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும்,
4. அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.
5. ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்.
6. அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
7. பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
8. தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
9. தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
10. பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.
11. அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
12. பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
13. எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.
14. அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
15. பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
16. ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
17. இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.
18. அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.
19. ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.
21. கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.
தானியேலின் கதையானது, அந்நிய தேசத்தில் இருந்த தேவஜனங்களுள் ஒருவரது கதையாகும். அது, உலகப்பிரகாரமான மற்றும் பொருள் சார்ந்தவற்றையே அடிப்படையாய்க்கொண்டதொரு கலாசாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதைக் காண்பிக்கிறது. எருசலேமின் முதல் முற்றுகையின்பின்பு, பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட, திறமையான மாணவர்கள் அடங்கிய சிறு குழுவில், தானியேலும் ஒருவர். அவர் அங்கு வந்தபோது, இளம் வாலிபப் பருவத்தினராக இருந்திருப்பார். அவர், எஞ்சிய தனது வாழ்நாளெல்லாம், பாபிலோனிலேயே இருந்தார்.
போதகர் ஸ்மித் அவர்களின் குடும்பம், முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்து வந்தபோது, அவரது மனைவியாகிய கேரன், ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் மழலையர் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்தார்கள். ஒரு நாள் பிள்ளைகள், பாயிலே அமர்ந்து, குடியரசுத் தலைவருக்கான தேர்தலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கேரன் அவர்களிடம், தான் வாக்களிக்கப்போவதில்லை என்று கூறி, எதனால் அப்படி இருக்கக்கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் கேட்டார்.
“உங்களுக்கு வயது அதிகம் என்ற காரணத்தினாலா?”
“நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்துகிறீர்கள் என்பதாலா?”
“உங்களுக்கு ஏதேனும் கூட்டம் ஒன்று பின்னர் இருக்கிற காரணத்தினாலா?”
கடைசியாக, ஒரு புத்திசாலிப் பிள்ளை, “திருமதி ஸ்மித், அது நீங்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவர் என்ற காரணத்தினாலா?” என்று கேட்டது.
“ஆம்,” என்ற கேரன், தொடர்ந்து, “என்னை எல்லாரும் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா? இங்கே தங்கி வசிக்கும் ஓர் அந்நியர் என்று,” எனச்சொன்னார். இரண்டு வாரங்கள் சென்றபின், பிள்ளைகள் தங்கள் காலை ஜெப நேரத்திற்காகப் பாயில் கூடி அமர்ந்திருந்தபோது, ஒரு சிறு பெண் பிள்ளை, திருமதி ஸ்மித் அவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கினாள். அவள், “அன்புள்ள ஆண்டவரே, திருமதி ஸ்மித் அவர்களை, இங்கே தங்கி வசிக்கும் ஓர் அந்நியர் என்று அழைப்பதை நிறுத்த, மக்களுக்கு உதவியருளும். உண்மையில், அது நன்றாகவே இல்லை!”
வேதாகமம், தேவஜனங்களை விவரிக்க, அந்நியர்கள் அல்லது பரதேசிகள் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறது (1 பேதுரு 2:11). நீங்கள் நிரந்தரமாக இந்த உலகிற்குச் சொந்தமானவர்கள் அல்ல. நீங்கள், “தேவன் தாமே கட்டி உண்டாக்கின” (எபிரெயர் 11:10), வேறொரு நகரத்திற்குச் சொந்தமானவர்கள். மேலும், தேவன் உங்களை உண்டாக்கியது இந்த உலகிற்காக அல்ல என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளும்வரையில், உங்களால் இவ்வுலகில் உங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாது.
நீங்கள் ஒரு கிறிஸ்தவர் எனில், நீங்கள் இரண்டு பாஸ்போர்ட்டுகளைக் கொண்டிருக்கும் ஒரு நபரைப் போன்றவர். இரண்டில் ஒன்று காலாவதியாகிவிடும். ஏனெனில், கிறிஸ்து மீண்டும் வரும்போது, நாம் சார்ந்திருக்கும் நாடுகள் எல்லாம் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுவிடும். ஆனால் பரலோகப் பிரஜை என்பதற்கான உங்கள் பாஸ்போர்ட்டோ, ஒருபோதும் கடந்து போகாது. அது என்றென்றும் நிலைத்திருக்கும்.
கிறிஸ்தவ வாழ்க்கையென்பது, ஒரு கலையாகும். அது இந்த உலகில், இந்த உலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டுவிடாதபடி, வாழ்வதாகும். வரப்போகின்ற நித்திய வாழ்விற்காக ஆயத்தப்படும்படி, நாம் இவ்வுலகில், நமது குறுகிய கால வாழ்வைப் பயன்படுத்தவேண்டும்.
கடத்தப்பட்ட இளம் வாலிப வயதினர்
தானியேல், தன் பள்ளி வகுப்பறை இருக்கையில் இருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். கதவு தட்டப்படுகிறது. அதன்பின் சிறிது நேரத்தில், நேபுகாத்நேச்சாரின் இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், திடீரென உள்ளே நுழைந்து, தானியேலை, எழுநூறு மைல்களுக்கப்பால் உள்ள பாபிலோனுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அவரது பெற்றோர், நிலைகுலைந்துபோகிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த, அவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை.
ஆனால், தானியேல் பாபிலோனுக்கு வரும்போதோ, துன்புறுத்தப்படுதல் மற்றும் சிறையிலடைக்கப்படுதல் ஆகியவற்றுக்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்ட விதத்தில், ராஜ உபசாரத்துடன் நடத்தப்படுவதையும், ஓர் உயர்தரப் பள்ளியில் சேர்க்கப்படுவதையும் காண்கிறார். தன்னை, ராஜாவின் சேவையில் விரைவாய்ச் சேர்த்துவிடக்கூடிய, ஒரு முதன்மையான கல்வித் திட்டத்தில் பங்குபெற, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், அவர் பாபிலோனில் மிக உயர்ந்த பணியில் அமர்ந்துவிடுவார்.
தேவபக்தியுள்ள மக்களின் செல்வாக்கின்கீழ் வளர்க்கப்பட்ட தானியேல், தன்னை யாரென்று அறிந்திராத, முற்றிலும் புதியதொரு சூழலில் விடப்பட்டார். பயணம் செய்கிறவர்கள், இந்த நெருக்கடியைப் பற்றி நன்கு அறிவார்கள். நீங்கள் ஒரு விமானத்தில் ஏறும்போது அல்லது ஒரு தங்கும் விடுதிக்குள் நுழையும்போது, நீங்கள் யாரென்பது ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் விரும்புகிறபடி இருக்கலாம். அதற்கென்று ஒரு நெருக்கடியும் உண்டு.
பாபிலோனியரின் எழுத்தையும், பாஷையையும் தனக்குக் கற்றுக்கொடுக்கும்படியாக நியமிக்கப்பட்டிருந்த, அஸ்பேனாசு என்னும் ஆசிரியரின் பொறுப்பில், தானியேல் விடப்பட்டார் (தானியேல் 1:4). எருசலேமிலோ, கடந்த காலத்தில் தானியேல், எபிரெய மொழியைப் படித்தும், வேதாகமத்தைக் கற்றும்வந்திருப்பார். ஆனால் பாபிலோனியப் பாடத்திட்டத்தில், பரிசுத்த வேதாகமம் இல்லை.
அதற்குப் பதிலாக, ஒரு பரந்த அளவிலான, கல்வித் திட்டத்திற்குத் தானியேல் அறிமுகப்படுத்தப்பட்டார். அது, சிறுவனாயிருந்தபோது வேதாகமத்திலிருந்து அவருக்குக் கற்பிக்கப்பட்ட அனைத்துடனும், பெரும்பாலான காரியங்களில் முற்றிலும் முரண்பட்டதாய் இருந்திருக்கும். தானியேலின் மனம் முழுவதையும் பாபிலோனியக் கல்வியால் நிரப்புவதன் மூலம், தேவன் மீதான தானியேலின் விசேஷித்தவிதமான விசுவாசத்தை, முற்றிலுமாய் அகற்றிவிட, அஸ்பேனாசு முயற்சித்தார். அதன் பலனாக, மூன்று வருடக் கல்லூரிப் படிப்பின் முடிவில், தானியேல் பூரணமான ஒரு பாபிலோனிய உலகிற்குரிய பார்வையுடன் எழும்புவார். அவர் அப்பொழுதும், நிச்சயமாய் ஒரு யூதராகவே இருப்பார். ஆனால், சிந்திப்பதிலும், செயல்படுவதிலும், ஒரு பாபிலோனியரைப்போல் இருப்பார்.
பாடத்திட்டத்தினுடைய சவால்களோடுகூட, தானியேல் தனது ஆசிரியரிடமிருந்தும், மற்ற மாணவர்களிடமிருந்தும், “உன்னுடைய தேவன்தாம் ஒரே தேவன் என்று, எப்படி நீ உறுதியாக நம்பமுடியும்? நீ மட்டும்தான் சத்தியத்தைக் கொண்டிருக்கிறாய் என்று, நீ நினைத்துக்கொள்வது எப்படிச் சாத்தியம்?” என்பன போன்ற கேள்விகளால், நெருக்கடிகளைச் சந்தித்திருப்பார். கிறிஸ்தவ இளைஞர்கள், இதே விதமான நெருக்கடிகளை, உலகப் பிரகாரமான பல்கலைக்கழகங்களில் இன்று எதிர்கொள்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளியில் போதிக்கப்படுகிற காரியங்களினிமித்தம், பெற்றோர்கள் சில நேரங்களில் வேதனையடைகிறார்கள். மாணவர்கள் பெரும்பாலும், சத்தியத்துடன் நேரடியாக முரண்படுகிற, பாடங்களைக் கற்கிறார்கள். ஆனால், இது ஒன்றும் முற்றிலும் புதிய விஷயமல்ல. தானியேலும், இதே சூழ்நிலையைத்தான் சந்தித்தார். அவ்விதமான நெருக்கடிகளைச் சமாளித்து, நிற்பது எப்படி என்பதற்குத் தேவன் நமக்கு ஒரு மாதிரியைக் கொடுத்திருக்கிறார். உண்மையில் தானியேலின் உலகப் பிரகாரமான கல்வி, அவரை மேற்கொண்டுவிடுவதற்குப் பதிலாக, அவரை உருவாக்குகிறதாயிருந்தது. அது, தேவனுடைய தயவால், அவரது விசுவாசத்தைத் தட்டி, முதிர்ச்சியை நோக்கி உருவேற்படுத்துகிறதான பட்டறைக்கல்லாக ஆயிற்று.
தேவஜனங்கள், தங்களது வரலாறு முழுவதிலும், மிகவும் வேறுபட்ட இரண்டு வகையான ஒடுக்குமுறையின்கீழ் வாழ்ந்தார்கள். தேவஜனங்களைத் துன்புறுத்துவதே, பார்வோனின் திட்டம். அவன் இரக்கமேயில்லாமல், அவர்களைக் கொடுமையான, சுமைசுமக்கிற வேலைக்குட்படுத்தினான். இன்றும் கிறிஸ்தவர்களை, அவர்களது விசுவாசத்தினிமித்தம் துன்புறுத்தும்படிக்கு, அநேக இடங்களில், சாத்தான் இதேபோன்ற தந்திரங்களைப் பயன்படுத்துகிறான்.
ஆனால் நேபுகாத்நேச்சாரின் திட்டமோ, மிகவும் நுட்பமானதாயிருந்தது. தேவஜனங்களைப் பாபிலோனியக் கலாசாரத்துக்குள் இழுத்துக்கொண்டு, அவர்களுக்குப் பிரகாசமான வாய்ப்புக்களுக்கான வாசல்களைத் திறந்துவிட்டு, அவர்களை வெற்றியை நோக்கிய விரைவான பாதையில் செலுத்துவதே, அவனது தந்திரம்.
நேபுகாத்நேச்சாரின் தந்திரங்களை, நமது ஆத்துமாக்களின் எதிரியானவன், இன்னும்கூடப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். அவை, மிகவும் வெற்றிகரமானவை என்று, நிரூபிக்கப்பட்டும்வருகின்றன. அந்த வியுூகம் மிக எளிமையானது: முதலாவது, இந்த உலகத்தின் கவர்ச்சி மற்றும் மேன்மைகள் ஆகியவற்றால், தேவஜனங்களை முற்றிலுமாகப் போதையடையச் செய்வது.
இரண்டாவது, தேவனுடைய மகிமைக்காக வாழும், அவர்களது விசேஷித்த அழைப்பு மூழ்கடிக்கப்பட்டுப்போகும்படியாக, அந்தக் கலாசாரத்துக்குள் முழுவதும் இழுத்துக்கொள்ளப்பட்டு, ஒன்றிணைந்துபோகும் வரையில் அவர்களது குறிப்பிடத்தக்கப் பழக்கவழக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றைச் சிதைத்துவிடுவது.
தானியேலுக்கு, “ராஜா உண்ணும் போஜனத்தில் தினம் ஒரு பங்கு” வழங்கப்பட்டது. ஆனால் அவர், “ராஜாவின் போஜனத்தினால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டார்” (1:5, 8). இது, யூதர்களின் உணவைக் குறித்த நியமங்களுடன் தொடர்புடையது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள வாழ்க்கையின் வசதி வாய்ப்புக்களால், தன்னை வசப்படுத்த விரும்பினானென்று, தானியேல் உணர்ந்துகொண்டதாகப் போதகர் ஸ்மித் கருதுகிறார். அத்துடன், இது ஒருபோதும் நடக்காதென்பதில், தானியேல் தீர்மானமாக இருந்தார். அவர் பாபிலோனில், வாழ்வார், பணிபுரிவார், உயர்வடைவார். ஆனால், பாபிலோன் தன் இருதயத்தைக் கைப்பற்றிக்கொள்ள அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
தானியேலுக்கு, இதைத் தன் மனதில் தொடர்ந்து பதியவைத்துக்கொள்ள, ஒரு வழி தேவைப்பட்டது. ஆகவே, தனக்குத்தானே ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தார். நகரத்திலுள்ள மிகச்சிறந்த உணவகத்திற்குத் தினமும் செல்கிற வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தனக்கென்று காய்கறிகளாலான ஒரு உணவை உண்டார். சில வெளியரங்கமான நியமங்களின் காரணமாக இதை அவர் செய்யவில்லை. ஆனால், ஓர் உள்ளான வாஞ்சையின் காரணமாகச் செய்தார். அது, அவரது விசேஷித்த, சொந்த அழைப்பை அவருக்கு நினைப்பூட்டுவதற்கு, அவரே தன்னார்வமாக வடிவமைத்துக்கொண்டதொரு ஒழுங்குமுறையாகும்.
உலகம் உங்கள் மீது தொடுக்கிற நெருக்கடிகளை நீங்கள் உண்மையாக எடுத்துக்கொள்கிறீர்களா? ஒவ்வொரு நாளும், தேவனுக்குச் சிறிதும் இடமே இல்லாத, சுயத்தை மட்டுமே மையமாய்க்கொண்ட, வாழ்க்கையைக் குறித்த பார்வைகளால், நீங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறீர்கள். எதிர்த்து நிற்பதற்கு, உங்களுக்கு ஒரு திட்டம் தேவை.
தானியேலைப்போல, தேவபக்தியின்மைக்கு வேண்டாம் என்று சொல்லும் ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம் (தீத்து 2:11-12). அது, சின்னச்சின்ன விஷயங்களில் தொடங்குகிறது. நடைமுறையிலான வாழ்க்கைத் தீர்மானங்களில், பதில் சொல்வதற்கு ஏதோ ஒரே ஒரு கேள்விதான் இருப்பதைப்போலச் சில கிறிஸ்தவர்கள் எண்ணுகிறார்கள். நாம், “இது சரியா அல்லது தவறா?” என்று கேட்கிறோம். அது சட்டவிரோதமானதோ, ஒழுக்கக்கேடானதோ அல்ல என்றால், ஆவலாய் அதை அனுபவிப்பதற்கான நமது உரிமையை நாம் உறுதிப்படுத்துகிறோம். ஆனால், நமது சுதந்திரத்தின் எல்லைப் பகுதிக்குள் வரும் காரியங்களைப் பற்றி, நாம் கேட்கக்கூடிய இன்னொரு கேள்வியும் இருக்கிறது. “இது ஞானமுள்ள காரியமா?” என்பதுதான் அது.
என்ன பொழுதுபோக்கை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்? எந்த விருந்துக்கு நீங்கள் செல்லவேண்டும்? என்ன விதமான சகவாசத்தை நீங்கள் கொண்டிருக்கவேண்டும்? உங்கள் பணத்தை நீங்கள் எவற்றுக்குச் செலவிடவேண்டும்? நாம் இவ்வகையான தீர்மானங்களைச் செய்யும்போது, உலகின் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றுக்குள் நாம் இழுப்புண்டு போய்விடுவதற்கான நீண்டகாலச் சாத்தியக் கூறுகளை, நாம் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை, நமக்குத் தானியேலின் உதாரணம் நினைப்பூட்டுகிறது.
அவர்களது கல்லூரியில் தனக்குக் கற்பிக்கப்பட்டவற்றைத் தானியேலால் மாற்ற முடியவில்லை. ஆனால், தான் ஒரு தேவ ஊழியர் என்பதைத் தனக்குத் தினமும் நினைப்பூட்டக்கூடிய ஓர் எல்லையைத் தன் வாழ்வில் அவரால் உருவாக்கிக்கொள்ள முடிந்தது.
தேவன், தானியேலுக்கும், அவரது நண்பர்களுக்கும், அவர்களுடைய கல்வியில் சிறப்பான வெற்றியைக் கொடுத்தார். அவர், “இந்த நாலு வாலிபருக்கும்… சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்” (தானியேல் 1:17).
உண்மைத்தன்மையும், வெற்றியும், ஒன்றிற்கொன்று மாற்றாக இருக்கவேண்டியது அவசியமில்லை் அவை, இயல்பிலேயே இணையானவை. தானியேல், சிறியவற்றில் உண்மையுள்ளவர் என்று நிரூபித்தார். ஆகவே, தேவன் அவரைப் பெரியவற்றுக்குப் பொறுப்பாளராக நியமித்தார். தனது காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்திற்குள், பிரதானமான ஒரு பதவிக்குத் தானியேல் நியமிக்கப்பட்டார்.
கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருப்பதென்பது, ‘ஏதோ கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வது’ என்று ஒருபோதும் கற்பனை செய்துவிடாதீர்கள். தானியேல், தான் நம்பிக்கைக்குரியவர் என்று நிரூபித்தார். அவர், தேவனுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். ஆகவே, கர்த்தர் அவருக்கான நல் வாய்ப்புக்களின் வாசல்களைத் திறந்தார். பாபிலோனின் ராஜாவுக்கு அடுத்த, இரண்டாம் அதிகார ஸ்தானத்துக்குரியவராகத் தானியேல் இருந்தார். மேலும், அவர் கனவிலும் நினைத்திராத விதத்தில், செல்வாக்கும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
தானியேலைப்போல, இயேசுவும், தாம் சோதிக்கப்பட்டபோது, இவ்வுலகின் மயங்கவைக்கும் மாயக்கவர்ச்சிகளை எதிர்கொண்டார். அத்துடன் அவர், இவ்வுலகின் வெட்டவெளிச்சமான எதிர்ப்பையும் சிலுவையின் மீது எதிர்கொண்டார். அவையிரண்டின் மீதும் அவர் வெற்றிசிறந்தார். அவரால் தம் சீஷர்களிடம், “திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33), என்று சொல்ல முடிந்தது.
தானியேல், வசதிவாய்ப்புள்ளதும், தேவபபக்தியற்றதுமான ஒரு கலாசாரத்தில், தன்னார்வத்தோடு, சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததன் மூலம், தேவபக்தியுள்ளதும், வெற்றிகரமானதுமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். தேவன், நம்மைச் சந்நியாச வாழ்க்கைமுறைகளுக்காக அழைக்கவில்லை. அதே நேரத்தில், ஒழுங்கற்ற விதத்தில் சந்தோஷங்களை அனுபவித்தல், தேவபக்தியை அழித்துவிடுகிறது.
செல்வம், அதிகாரம் மற்றும் இன்பங்கள் ஆகியவற்றின் கவர்ச்சியானது, சக்திவாய்ந்தது. அது, சுலபமாக உங்கள் இருதயத்தைக் கைப்பற்றிவிடும். அதனினும் வல்லமைவாய்ந்ததான, தேவன் மீதான அன்புதான் உங்களுக்குத் தேவை. கிறிஸ்துவின் மீதான அன்பு உங்கள் இருதயத்தை நிறைக்கும்போது, அது உலகத்தின் மீதான குறைவான அன்பையெல்லாம் அதிகமதிகமான விதத்தில் வெளியேற்றிவிடும். அல்லாத பட்சத்தில், அவை உங்களை அடிமைப்படுத்திக் கொண்டுபோய்விடும்.
1. தனிப்பட்டவிதத்தில், உங்கள் மீது கலாசாரம் செலுத்தும் மிகப்பெரிய நெருக்கடி, எங்கே இருக்கிறது? உங்கள்மேல் அது கொண்டுள்ள தாக்கம் என்ன? குறிப்பிடத்தக்கவைகளை யோசித்துப் பாருங்கள்.
2. கடந்த மாதத்தில் நீங்கள் செய்த ஒரு தீர்மானத்தைக் குறித்து யோசித்துப் பாருங்கள். நீங்கள் வெறுமனே, “இது சரியா அல்லது இது தவறா?” என்று மட்டும் கேட்டீர்களா? “இது ஞானமுள்ள காரியமா?” என்று கேட்டிருந்தால், அது பயனுள்ளதாய் இருந்திருக்குமா?
3. உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் நெருக்கடிகளை, நீங்கள் எவ்வாறு ஒரு தீர்மானத்தோடு எதிர்க்கிறீர்கள்? நீங்கள் தொடங்கக்கூடியது எங்கே?
4. உண்மைத்தன்மையும், வெற்றியும் ஒன்றிற்கொன்று மாற்றானவைபோலத் தோன்றுகின்றனவா? அல்லது, அவை இயல்பிலேயே இணையானவை என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?
5. இந்தப் பூமியில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் காலத்தை, வரப்போகும் வாழ்வுக்காக, நீங்கள் எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும்?