2 இராஜாக்கள் 17:6-28
1. ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
2. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
6. நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
8. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
9. மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
10. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
11. அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12. ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
13. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படும்போது, தேவனுடன் நாம் சமாதானம் கொண்டிருக்கிறோம் என்றும், தேவகிருபை நம் அனைத்துப் பாவங்களையும் மூடுகிறது என்றும், ரோமர் 5-ல் நாம் கற்றுக்கொண்டோம். அது சரியென்றால், ஏன் நாம் தொடர்ந்து மேலும் சிறிது பாவம் செய்யக்கூடாது? இந்தக் கேள்விக்கு: “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?” (6:1), என்று பவுல், ரோமர் 6-ல் பதில் தருகிறார். அந்தக் கேள்விக்கு, “கூடாதே” (6:1), என்பதுதான் பதில். அதற்குக் காரணம், கிறிஸ்துவுடனான இணைப்பே ஆகும்.
ரோமர் 6:1-14
சிறிது காலத்துக்கு முன்பு, போதகர் ஸ்மித் அவர்களுக்குப் போக்குவரத்துக் காவலர் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அதிகாரி, குற்றங்கள் எதுவும் போதகரின் ஓட்டுநர் பதிவில் காணப்படும் என்று விளக்கமளித்தார். ஆனாலும் பின்பு அவர், குற்றப்பதிவை நீக்கக்கூடிய ஒரு வழியை, இல்லினாய்(ஸ்) மாநிலம் வழங்கியுள்ளதாகப் போதகரிடம் கூறினார். அவர், “நீங்கள் அதற்கான வகுப்பில் சேர்ந்து, பயிற்சியெடுத்துக்கொள்ளலாம். அப்பொழுது, இது ஒருபோதும் நிகழாததுபோலவே இருக்கும்,” என்று சொன்னார்.
இந்த அமைப்புமுறை இயங்கும் வகையைப்பற்றி இப்பொழுது யோசித்துப்பாருங்கள். ஒரு நாள், ஏதோ ஒரு வகையில் களைத்துப்போன ஓர் அலுவலர், இல்லினாய்(ஸி)ல் வாகனம் ஓட்டும் அனைத்து ‘ஸ்மித்’களின் நீண்ட பட்டியலினூடே, கொட்டாவி விட்டபடியே பார்வையை ஓட்டி, அவர்களுள் விதிவசத்தால் சிக்கிய ஒருவரின் பெயரைக் கண்டு, அவருக்கு எதிராக ஒரு குற்றத்தைப் பதிவு செய்யக்கூடும் என்பதை, நம்மால் ஓரளவுக்குக் கற்பனை செய்யமுடியும்.
பின்னர், ஒரு சில வாரங்கள் சென்றபின்பு, மற்றொரு அலுவலர், நீக்குவதற்கான பட்டனை அழுத்தி, அனைத்துக் குற்றப்பதிவுகளையும் அழிப்பதற்கான தேவைக்காக, அதே பட்டியலினூடே பார்வையை ஓட்டுகிறதான, ‘கடினமான’ பணியை மேற்கொள்வார். இந்தச் செயல்முறை, சட்டப்படியானதுதான். ஆனால் அது, மிகவும் தயவு-தாட்சண்யமற்றது. எந்த உறவு நிலைக்கும் உட்படாதது.
இயேசு, நம் பாவங்களின் பதிவுகளை அழிப்பதற்காக மரித்தார் என்பது, ஓர் அற்புதமான சத்தியமாகும். ஆனால், நாம் உணர்ந்துகொள்வதெல்லாம் அதை மட்டும்தான் என்றால், தனது குற்றப்பதிவை அழித்ததான கணிப்பொறியாளரின் மீது தான் கொண்டுள்ளதொரு பாசத்தைப்போலவே, தேவனிடத்தில் நமது அன்பும், மிகவும் பலவீனமானதாகவே இருக்கும் என்று, போதகர் ஸ்மித் கூறுகிறார்.
கிறிஸ்து, உங்களுடைய பாவப்பதிவுகளை நீக்குவதற்காக மட்டும் மரிக்கவில்லை. மாறாக, உங்களைத் தேவனோடு ஓர் அன்பின் உறவுக்குள் கொண்டுவருவதற்காகவும்தான் மரித்தார். இரட்சிப்பு என்பது, ஏதோ ஓர் அறியப்படாத பரலோக நிர்வாகியால் நிகழ்த்தப்படும், ‘பட்டும்-படாமலுமான’ ஒப்பந்தப் புரிதலுள்ள, ஒரு பரிவர்த்தனை அல்ல. அது, உங்களுடன் ஓர் அந்நியோன்யமான இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள, தேவனே தேடி வருவதாகும்.
இயேசுவை நீங்கள் விசுவாசிக்கும்போது, இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றுக்கும், இன்றைய உங்கள் வாழ்க்கைக்குமிடையே, பரிசுத்த ஆவியானவர் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறார். “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமர் 6:5).
இயேசு கிறிஸ்துவோடு, அவரது மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் “இணைக்கப்பட்டிருத்தல்” என்பதன் பொருள் என்ன?
அதை, இவ்விதமாகச் சிந்திப்பது, பயனுள்ளதாய் இருக்கும் என்று உணர்வதாகப் போதகர் கூறுகிறார்: உங்களைக் குறித்துச் சில காரியங்கள், முன்பொரு காலத்தில் உண்மையானவையாய் இருந்தன – நீங்கள் பாவத்தின் ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருந்தீர்கள், தேவனிடத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தீர்கள், மேலும், அதைப்பற்றி ஏதும் செய்வதற்கு வல்லமையற்றவர்களாயும் இருந்தீர்கள் (ரோமர் 5:21, எபேசியர் 2:12, 2:1). நீங்கள் அந்நிலையிலேயே நீடித்திருந்தால், நீங்கள் ஆக்கினைத்தீர்ப்பிலே போய் நின்றிருந்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டபோது, அந்த நபர் உயிர் வாழ்வதை நிறுத்திவிட்டார் (ரோமர் 8:1). அவன் அல்லது அவள், இயேசுவுடனே கூட சிலுவையிலே மரித்துவிட்டார்(ள்). பவுல், “கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோம்” (ரோமர் 6:8), என்று சொல்லும்போது, அதைத்தான் அர்த்தப்படுத்துகிறார்.
ஆனால், அது அங்கேயே முடிந்துவிடுவதில்லை. நம்மைப்பற்றிப் பவுல், “அவர் (கிறிஸ்துவின்) உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமர் 6:5), என்றும் எழுதினார். பரிசுத்த ஆவியானவர், உங்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்தபோது, அவர் ஒரு புதிய நபரை உண்டுபண்ணினார். இப்பொழுது நீங்கள் கிருபையின் ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் தேவனுடைய ஒரு பிள்ளையாய் இருக்கிறீர்கள், மேலும் உங்களது முடிவு, நித்திய ஜீவனாயிருக்கிறது (ரோமர் 5:21, கலாத்தியர் 4:4-7, ரோமர் 6:22-23). நீங்கள் இன்னும் கூட, அநேக வழிகளில் தவறுகிறீர்கள், ஆனால் நீங்கள் எவ்வளவுதான் அடிக்கடி தவறினாலும் சரி, நீங்கள் முன்பொரு காலத்தில் இருந்ததுபோன்ற நபராகப் பின்மாற்றமடைந்துபோக, உங்களால் ஒருபோதும் முடியாது. அந்த நபர் மரித்துவிட்டார், மற்றும், நித்திய காலத்துக்கும் இல்லாது ஒழிந்துபோனார். அவன் அல்லது அவள், உயிர் வாழ்வதை நிறுத்திவிட்டார்(ள்).
கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருத்தல் என்பது, ஒரு புதிய பக்கத்தைத் திருப்புவதைவிடவும், அல்லது ஒரு தீர்மானத்தைச் செய்வதைவிடவும், மிகவும் மேலானது. அது, கிறிஸ்துவின் ஜீவன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், உங்களுக்குள் பாய்வதாகும்.
இந்த இணைப்பைப்பற்றி இயேசு, “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” (யோவான் 15:5), என்று சொன்னபோது பேசினார். திராட்சச்செடியிலிருந்து சாறு எழும்பிக் கொடிகளுக்குள் பாய்வதைப்போலவே, கிறிஸ்துவின் ஜீவனும் அவரிடமிருந்து அவரது ஜனங்களுக்குள் பாயும். இது, சட்டப்பூர்வமானதொரு பரிவர்த்தனையைவிட மிகவும் மேலானது. இதில் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, மேலும் உங்களது பாஸ்போர்ட், பரலோகத்திற்கென்று முத்திரையிடப்படுகிறது. இதுவே தேவனின் ஜீவன் உங்களுக்குள் பிரவேசிப்பதாகும். இதனினும் அதிக நெருங்கிய உணர்வுள்ள படத்தைக் கற்பனை செய்வது மிகவும் கடினம்.
பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவோடு இணைக்கும்போது, அவர் தமது அன்போடு நமது வாழ்வில் உட்பிரவேசிக்கிறார். நல்லதொரு திருமண வாழ்வென்பது, சட்டப்பூர்வமானதும், உறவு சார்ந்ததுமான இரண்டுமேதான். அது, இணைப்புக்கான ஒப்பந்தம் மற்றும் அந்நியோன்னிய ஐக்கியம் ஆகிய இரண்டுமேதான். அது, ஆழ்ந்த பாதுகாப்பையும், ஆழ்ந்த அன்பையும் ஊக்குவிக்கிறது. தேவன் நம்மைப் பாதுகாப்பும், அந்நியோன்னியமும் கொண்ட ஒரு அன்பின் உறவிற்குள் கொண்டுவர விரும்புகிறார். அது பாதுகாப்பானது காரணம், தேவன் நம்மோடு ஓர் உடன்படிக்கையைச் செய்கிறார். மற்றும் அது அந்நியோன்னியமானது காரணம், அது இயேசு கிறிஸ்துவோடுள்ள இணைப்பை உள்ளடக்கியது.
ஒரு ஜோடி சாக்ஸ் மற்றும் ஒரு ஜோடி காற்சட்டைகள் ஆகியவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஒரு ஜோடி சாக்ஸைத் துவைக்கப் போடும்போது, என்ன நடக்கிறது தெரியுமா? அவற்றுள் ஒன்று தொலைந்துவிடுகிறது. உண்மையில் பிரச்சினை என்னவெனில், அவற்றை ஒன்றாக இணைத்துவைத்திருக்கக்கூடியது ஒன்றுமே அங்கு இல்லை. காற்சட்டைகளோ வேறு வகைப்பட்டவை. துவைக்கப் போட்டவற்றிலிருந்து ஒரு கால் காணாமற்போய், ஒரு கால் மட்டும் வெளிவருகிற காற்சட்டைகளின் ஜோடியை, நாம் ஒருபோதும் அறிந்ததில்லை.
தேவன் பரலோகத்திலிருந்து, “யாராவது மன்னிப்பை விரும்புகிறீர்களா? நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள யாரேனும் இருக்கிறீர்களா?” என்று சாக்ஸைப் போல், ஆசீர்வாதங்களை எறிவதில்லை. தேவன் நமக்கு, இயேசு கிறிஸ்துவாகிய ஓர் ஆசீர்வாதத்தைத் தருகிறார். அவர் “கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1:3). தேவனுடைய அனைத்து ஆசீர்வாதங்களும், கிறிஸ்துவில் நமக்கு வருகின்றன; அவராலேயன்றி, வேறு எவ்விதத்திலும் அவை நமக்கு வருவதில்லை.
இயேசுவில் மன்னிப்பு இருக்கிறது, இயேசுவில் நித்திய ஜீவன் இருக்கிறது, இயேசுவில் பரிசுத்தம் இருக்கிறது, இயேசுவில் பெலனும் இருக்கிறது. தேவன் அவரை நமக்கு, “ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமாக்கினார்” (1 கொரிந்தியர் 1:30). இந்த ஈவுகள் யாவும் அவரில் பிரிக்க முடியாதவாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளன; நீங்கள் கிறிஸ்துவில் இருந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்களுடையவை.
கிறிஸ்துவில் இருப்பது, பாவத்துக்கெதிரான உங்களது யுத்தத்திற்கு உங்களைப் பயிற்றுவிக்கிறது. முன்பு நீங்கள், யுத்தத்தில் தோற்பதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தீர்கள்; ஆனால் இப்பொழுதோ, கிறிஸ்துவில், நீங்கள் வெற்றி பெறுவதற்கென்றே நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள். “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14).
ஒரு யுத்தக் களத்தில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்யுங்கள். உங்களது படைப்பிரிவு கடும் அக்கினிக்கு இரையாகி, நீங்கள் சிறைப்படுத்தப்பட்டுக் கொண்டுபோகப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஒரு பெரிய கூண்டுபோலத் தோற்றமளிக்கும் ஒரு வண்டியில் ஏற்றப்படுகிறீர்கள். அந்தக் கூண்டின் பொறுப்பாளராயிருக்கும் மனிதர் பார்க்கவே அதிபயங்கரமாயிருக்கிறார். அவர் கட்டளைகளைச் சத்தமிட்டுப் பிறப்பிக்கும்போது, உள்ளே இருக்கும் மக்கள் அவர் ஆணையிடுவதை அப்படியே செய்கிறார்கள். நீங்கள் உங்கள் உயிரை மதிக்கிறீர்கள், ஆகவே, நீங்களும் அதையே செய்ய முடிவெடுக்கிறீர்கள்.
அடுத்த ஆண்டு முழுவதும், உங்களது முழு வாழ்க்கையும் அந்தக் கூண்டிலேயேதான். நீங்கள் தூங்குகிறீர்கள், உங்களுக்கு உணவளிக்கப்படுகிறது, நீங்கள் உடற்பயிற்சியும் செய்கிறீர்கள், ஆனால் எந்நேரமும், நீங்கள் உங்களது எதிரியின் அதிகாரத்தின் கீழேயேதான் இருக்கிறீர்கள். அந்தக் கூண்டில் நீங்கள் இருக்கும்வரையில், நிச்சயமாய் அதைப் பற்றி நீங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.
பின்னர் ஓர் இரவில், நீங்கள் என்ஜினின் உறுமலையும், துப்பாக்கி வெடியோசையையும் கேட்கிறீர்கள். உங்கள் படைத்தலைவர், உங்களை விடுவிப்பதற்காகத் தன் அனைத்துத் துருப்புக்களுடனும் வந்திருக்கிறார். அவரது ‘ஜீப்’பில் நீங்கள் ஏறும்போது, அவர் உங்களிடம் ஒரு துப்பாக்கியைத் தந்து: “இதை எடுத்துக்கொள், இப்பொழுது நீ மீண்டும் யுத்தத்தில் நிற்கிறாய்,” என்று சொல்கிறார்.
மறுநாள், அந்தக் கூண்டை இயக்குபவர் வந்து, உங்களைத் தேடுகிறார். அவர், கட்டளைகளைச் சத்தமிட்டுப் பிறப்பிக்கிறார்; ஆனால், நீங்கள் அவர் சொல்வதையெல்லாம் இனியும் செய்துகொண்டிருக்கவேண்டியதில்லை. நீங்கள் அந்தக் கூண்டில் இல்லை. நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள். நீங்கள் கிறிஸ்துவில் இருக்கும்போது, நீங்கள் முற்றிலும் புதியதொரு ஸ்தானத்திலிருக்கிறீர்கள். நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள்; அதன் பொருள், நீங்கள் போரிட ஆயத்தமான நிலையிலிருக்கிறீர்கள். பாவம் எப்பொழுதுமே உங்கள் எதிரியாயிருக்கும்உ; ஆனால், இனியும் அது உங்கள் எஜமானாய் இருப்பதில்லை.
“ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:12-13).
விசுவாசம், உங்களைக் கிறிஸ்துவுக்குள் வைக்கிறது; அங்கே நீங்கள், பயத்தால் நிரம்பியிருக்கும்போதிலும், முற்றிலும் பாதுகாப்பாயிருக்கிறீர்கள்.
போதகர் ஸ்மித்தின் நண்பர், முதன்முறையாய் விமானத்தில் பறந்த தனது அனுபவக் கதையைச் சொல்கிறார்.
அவர் விமானத்தில் ஏறியபோது, மூன்று இருக்கைகள் கொண்ட வரிசையில், நடு இருக்கையில் அமர்ந்தார். ஜன்னலை ஒட்டிய இருக்கையில் வயதான ஒரு பெண்மணி, உண்மையில் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். நடைபாதை அருகே இருந்த இருக்கையில் ஒரு தொழிலதிபர், அதற்கு முன்பு ஆயிரம் முறைகள் அதில் பழகியவர்போல் அமர்ந்திருந்தார். இடையில் அமர்ந்திருந்த போதகரின் நண்பரோ, பயணத்திற்குத் தயாராயிருந்த நிலையிலும், அதற்கு முன்பு விமானப் பயண அனுபவமின்மையால், அவர் சிறிதளவு பயத்துடனே இருந்தார்.
விமானம் புறப்பட்டபோது, தொழிலதிபர் செய்தித்தாளைப் பிரித்துவைத்துக்கொண்டார். போதகரின் நண்பர், தன் இருக்கையின் கைப்பிடிகளை இறுகப் பற்றிக்கொண்டார். வயதான பெண்மணியோ, உமிழ்நீர்ப் பையை எடுத்துக்கொண்டிருந்தார்.
மதிய நேரம், உணவு பரிமாறப்பட்டபோது, தொழிலதிபர்தான் நன்றாகச் சாப்பிட்டார்; போதகரின் நண்பர் தனது உணவில் பாதிதான் சாப்பிட்டார்; வயதான பெண்மணியோ, தன் உணவை வெறுமனே பார்த்ததுடன் சரி, அதை அவர் தொடவேயில்லை.
கதையின் முடிவு இதுதான்: இந்த மூன்று பயணிகளும் ஒரே இடத்திற்கு, ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தனர்! அவர்களுக்கு மிகவும் வித்தியாசமான பயண அனுபவம் நேரிட்டது; ஆனால் அவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான பாதுகாப்பில்தான் இருந்தனர்.
உங்களது நித்திய பாதுகாப்பு, கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக நடக்கிறீர்கள் என்பதன் மீது சார்ந்திருக்கவில்லை; அது, நீங்கள் கிறிஸ்துவில் இருப்பதையே சார்ந்துள்ளது.
ஒரு கிறிஸ்தவர் என்பவர், கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் ஆவார். நீங்கள் கிறிஸ்துவோடு விசுவாசத்தினால் இணைக்கப்பட்டபோது, அதற்கு முன்பதான பழைய மனிதர், மரித்துவிட்டார்; ஒரு புதிய நபர் தோன்றியுள்ளார். உங்களுக்கு இன்னும் கூட அநேகப் போராட்டங்கள் உள்ளன; பல வழிகளிலும் நீங்கள் தோல்வியடையலாம்; ஆனால் கிறிஸ்து உங்களை விடுதலையாக்கியிருப்பதால், நீங்கள் முற்றிலும் புதியதொரு ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவில் உங்கள் ஸ்தானத்தைக் கண்டுணர்வது, கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கான மிக முக்கியமான திறவுகோல்களுள் ஒன்றாகும். பாவம், எப்போதுமே உங்களது எதிரியாய் இருக்கும்; ஆனால் இனிமேலும் அது, உங்களது எஜமான் அல்ல. இப்பொழுது நீங்கள், ஒரு யுத்தத்தைச் சந்திக்கிற ஸ்தானத்தில் இருக்கிறீர்கள்.
1. உங்களுடன் தேவன் கொண்டிருக்க விரும்பும் உறவின் தன்மையை, நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
2. “இப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன், நான் விரும்பும் படியெல்லாம் நான் வாழ்வேன்,” என்று சொல்கிற ஒரு நபருக்கு, நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
3. தேவனுடைய ஆசீர்வாதங்கள் நமக்கு எப்படி வருகின்றன என்பதைப்பற்றி, சாக்ஸும், காற்சட்டைகளும் என்கிற உருவக விளக்கம், நமக்குக் கூறுவது என்னவென்று உங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்குங்கள்.
4. “பாவம், எப்பொழுதுமே உங்கள் எதிரியாய் இருக்கும்; ஆனால் இனியும் அது, உங்களது எஜமான் அல்ல,” என்கிற அறிக்கைக்கு, நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
5. நீங்கள் கிறிஸ்துவில் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள் என்பதை அறிவது, கிறிஸ்தவ வாழ்க்கையின் உங்கள் அனுபவத்தின் மீது, எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?