2 இராஜாக்கள் 17:6-28
8. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
9. முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
10. இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.
11. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
12. ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
13. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
14. மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
15. எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
16. இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.
17. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
ஆதாமும், ஏவாளும் பாவத்தில் விழுந்துபோனபோது, அதனால் இரண்டு நீண்டகாலப் பின்விளைவுகள் ஏற்பட்டன: பாவம், அவர்களுக்கெதிரான ஒரு தண்டனையைக் கொண்டுவந்ததுடன், அது அவர்களுக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இவையிரண்டிலுமிருந்தே நமக்கு இரட்சிப்புத் தேவையாயிருக்கிறது. பாவத்தின் வல்லமையை நம்மால் எப்படி மேற்கொள்ள முடியும் என்பதைப்பற்றித்தான் இந்தப் பாடம் அமைந்துள்ளது. நாம் மூன்று கதாபாத்திரங்களைச் சந்திக்கப்போகிறோம். அவர்கள்: பகைக்கிறவர், உதவியற்றவர் மற்றும் நம்பிக்கையுடையவர் என்பவர்களாவர். அவர்களுள், உங்களோடு அதிகம் பொருந்துவது யார் என்பதைத் தீர்மானிக்க முயற்சியுங்கள். பின்பு நாம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றும் நமக்கும், தேவன் சொல்ல இருப்பது என்ன என்றும் காண்போம்.
ரோமர் 7:21-8:17
ஜான், போதை மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்துச் சில ஆண்டுகள் கடந்திருந்தன. அவர், தான் அதை மீண்டும் செய்யப்போவதில்லை என்று சொன்னார். ஆனால் அவர், அதைத் தன்னால் நிறுத்த முடியவில்லை என்பதைக் கண்டார். அவர், தான் அதற்கு அடிமையாகிவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். ஆனால் அவரது நண்பர்கள், அதுதான் உண்மையென்பதை அறிந்திருந்தார்கள்.
பின்பு ஒரு நாள், ஜான் போதைப் பொருட்களுடன் வசமாகப் பிடிபட்டார். காவல் துறை வலுவான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது, நீதிமன்றமும் கடுமையான அபராதத்தை விதித்தது. அபராதத் தொகை, செலுத்தப்படவேண்டியிருந்தது. ஆனால் ஜானிடம் அதற்கான பணம் இல்லை.
கலங்கிப்போன அவரது தாயார், அவர் சார்பில் அந்த அபராதத்தைச் செலுத்தினார். ஆனால் அதன்பின்பு அந்தத் தாயார், தான் சரியானதைத்தான் செய்தாரா என்று குழம்பினார். அவர், “அந்த அபராதத்தைச் செலுத்தியதால், அவன் தன் பழக்கத்தைத் தொடர்வதற்கு நானே வழிவகுக்கிறேனோ என்று நான் அஞ்சுகிறேன்,” என்று சொன்னார்.
அவர் சொன்னது சரிதான். ஜான் போதைக்கு அடிமையான ஒருவர். போதை மருந்துகள், அவரது வாழ்வில் ஓர் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தன. அந்த ஆதிக்கமானது, முறிக்கப்படவேண்டும்.
ஜான் தனது அடிமைத்தனத்தின் வல்லமையை மேற்கொள்ள வேண்டுமானால், போதை மருந்துக்கு, “முடியாது,” என்று சொல்வதற்கான விருப்பம் மற்றும் திறன் ஆகிய இரண்டுமே அவருக்குத் தேவை. ஆனால், ஜானுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே அவர் விரும்பினாலும்கூட, அவருக்கு அதற்கான திறன் உள்ளதா?
ரோமர் 8-ல், தேவனுக்கு விரோதமான ஒரு நபரைப் பவுல் விவரிக்கிறார்: “… மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது” (ரோமர் 8:7). பகைக்கிறவரிடத்தில், தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய விருப்பமோ, திறனோ இருப்பதில்லை.
ஒரு காலத்தில், பவுலே பகைக்கிறவனாய் இருந்தான். அவன், “கர்த்தருடைய சீஷர்களைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறினான்,” கிறிஸ்தவ விசுவாசிகளைச் சீற்றத்துடன் துன்புறுத்துவதை, முன்னின்று நடத்தினான் (அப்போஸ்தலர் 9:1). அதுதான் பகைமை! ஆனால் பவுல் தமஸ்குவுக்குச் செல்லும் சாலை வழியே பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தபோது, உயிரோடெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனுக்குத் தோன்றி, அவனிடம், “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” (அப்போஸ்தலர் 9:4), என்று கேட்டார். கிறிஸ்தவர்களுக்கெதிரான, பவுலின் கொடூரமான கோபம், உண்மையில் கிறிஸ்துவுக்கெதிராக அவனது இருதயத்தில் இருந்த ஆழ்ந்த கோபத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
இன்றைய நம் சமுதாயத்தில் பகைக்கிறவர்களைச் சந்திக்க, நீங்கள் ஒன்றும் அதிக தூரம் தேடிப் போகவேண்டிய அவசியமில்லை. அவர்கள், தேவனைக்குறித்துப் பொதுவில் குறிப்பிடுதலைப்பற்றிக் கோபமடைகிறார்கள். அத்துடன் அவர்கள், நாமனைவரும் கணக்கொப்புவிக்கவேண்டிய, ஒரு தேவன் இருக்கிறார் என்கிற ஒரு கருத்தினாலேயே மனம் புண்படுகிறார்கள்.
கனிவான மற்றும் நியாயமான மக்கள், தேவனுக்கடுத்த காரியங்கள் என்று வரும்போது, பகைக்கிறவர்களாக மாற முடியும். தேவனுடைய நாமம் உச்சரிக்கப்படுகிறவரை ஒரு கலந்துரையாடலானது, முற்றிலும் நாகரிகமான ஒன்றாக இருக்க முடியும் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது, ஒரு சுவிட்சைத் தட்டிவிட்டவுடன் ஆத்துமாவிற்குள் இருக்கும் ஆழ்ந்த பகைமை வெளிப்படுத்தப்படுவதைப்போல் இருக்கிறது.
ரோமர் 7-ல், நாம் இன்னொரு கதாபாத்திரத்தைச் சந்திக்கிறோம். அவரை நாம், “உதவியற்றவர்,” என்று அழைப்போம். பகைக்கிறவர் மற்றும் உதவியற்றவர் ஆகிய இரண்டுபேருக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவெனில், பகைக்கிறவர் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை வெறுக்கும்போது, உதவியற்றவர் அதை நேசிக்கிறார். “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்,” என்று அவர் சொல்கிறார் (ரோமர் 7:22).
உதவியற்றவருக்குப் பிரச்சினை என்னவெனில், தேவனின் நியாயப்பிரமாணத்தை அவர் நேசிக்கிற அதே நேரத்தில், அதற்குக் கீழ்ப்படிய அவரால் முடியவில்லை. அவர், “நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை” (7:18), என்று சொல்கிறார்.
உதவியற்றவர், தனக்குத்தானே ஒரு புதிராக இருக்கிறார். அவர் செய்ய விரும்புகிறதை அவர் செய்வதில்லை. அத்துடன், அவர் ஒருபோதும் செய்ய விரும்பாததையே செய்துவிடுகிறார் (7:15). இந்த வல்லமையற்ற நிலை, முற்றிலுமாக நிர்ப்பந்தமான உணர்வுக்குள் அவரைத் தள்ளிவிடுகிறது. அவர், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (7:24), என்று சொல்கிறார்.
ரோமர் 8-ல் நாம், மூன்றாவதாக ஒரு கதாபாத்திரத்தைச் சந்திக்கிறோம். அவரை நாம், “நம்பிக்கையுடையவர்,” என்று அழைத்துக்கொள்வோம். உதவியற்றவரைப் போலவே, நம்பிக்கையுடையவரும் தேவனுக்குப் பிரியமான ஒரு வழியில் வாழவே விரும்புகிறார். ஆற்றல் பகுதியில்தான், அவர்களுக்கிடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு அடங்கியுள்ளது.
நம்பிக்கையுடையவரிடம் பவுல், “சரீரத்தின் செய்கைகளை அழிக்கும்படிக்” கூறுகிறார் (ரோமர் 8:13). உதவியற்றவரால் செய்யமுடியாதது அதுதான். ஆனால் நம்பிக்கையுடையவர், முற்றிலும் வேறுபட்டதொரு ஸ்தானத்தில் இருக்கிறார். அவர், தன் வாழ்வில் பாவத்தை எதிர்த்துப் போரிட விருப்பம்கொண்டிருக்கிறார், மற்றும் அதை மேற்கொள்கிற திறனையும், தேவனின் ஆவியானவர் அவருக்குள் வாசம்செய்கிற காரணத்தால், அவர் பெற்றிருக்கிறார்.
உதவியற்றவரும், நம்பிக்கையுடையவரும் ஒரே விதமான போராட்டங்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள், ஒரே விதமான சோதனைகளால் இழுக்கப்படுவதை உணர்கிறார்கள். அவர்கள் இருவருக்கிடையேயான வேறுபாடு போராடுவதில் அல்ல, மாறாக, அதன் முடிவிலேயே அடங்கியுள்ளது. உதவியற்றவர், தவிர்க்கவேமுடியாத தோல்வியைச் சந்திக்கிறார், நம்பிக்கையுடையவரோ, வெற்றியை அனுபவிக்கிறார்.
டிசம்பர் 7, 1941 அன்று பேர்ல் துறைமுகம் தாக்கப்பட்டபோது, வின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டிஷ் பிரதம மந்திரிகளின் புறநகர் வாசஸ்தலமான ‘செக்கர்ஸில்’ தங்கியிருந்தார். செய்திகளைச் கேட்டபின்பு அவர், அமெரிக்காவின் ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டை அழைக்க, அவர், “நாம் அனைவருமே இப்பொழுது ஒரே படகில்தான் இருக்கிறோம்,” என்றார்.
அன்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன், சர்ச்சில் தன் நினைவுகளை இவ்விதமாகப் பதிவுசெய்துவைத்தார்: “அமெரிக்க ஐக்கிய நாடுகள் எங்கள் சார்பில் இருப்பது எனக்கு மாபெரும் மகிழ்ச்சியென்று நான் அறிக்கை வெளியிட்டால், எந்த அமெரிக்கரும் என்னைக்குறித்துத் தவறாக நினைக்கமாட்டார்கள். . . . எப்படியோ ஒருவழியாய் ஜெயித்துவிட்டோம்தான். ஆம், டன்கர்க்குக்குப் பிறகு, ஃபிரான்சின் வீழ்ச்சிக்குப் பிறகு . . . . தன்னந்தனியான யுத்தத்தில் பதினேழு மாதங்களும், கடுமையான மன அழுத்தத்துடனான எனது பொறுப்பின் கீழ் பத்தொன்பது மாதங்களும் சென்றபின்பு, நாங்கள் யுத்தத்தில் வென்றுவிட்டோம். இங்கிலாந்து வாழ்ந்திருக்கும் . . . பிரிட்டன் வாழ்ந்திருக்கும் . . .
“யுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எந்த விதத்தில் முடிவுறும் என்பதை எந்த மனிதனாலும் கூறமுடியாது. இந்தத் தருணத்தில் நானும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. . . . மீதமிருப்பதெல்லாம், மாபெரும் ஆற்றலைப் பயன்படுத்துவதுதான். . . . அநேகப் பேரழிவுகள், அளவிடமுடியாத செலவினங்கள் மற்றும் சோதனைகள் வரவிருக்கின்றன. ஆனால், முடிவைப்பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. . . . நான் படுக்கைக்குச் சென்று, தப்புவிக்கப்பட்டவனும் மற்றும் நன்றியுடையவனுமானவன் எப்படி நிம்மதியாய்த் தூங்குவானோ, அதேபோல் தூங்கினேன்.”
யுத்தமானது, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இழுபறியாய் நீண்டுகொண்டே போனது. அது ஒரு கசப்பான போராட்டமாகவே தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் டிசம்பர் 1941-லேயே, “நாங்கள் யுத்தத்தில் வென்றுவிட்டோம்,” என்று சர்ச்சில் சொல்லமுடிந்தது. முடிவு நிச்சயமாயிருந்தது. சர்ச்சில் உதவியற்றவராயிருந்தார். ஆனால் இப்பொழுது அவர் நம்பிக்கையுடையவராகிவிட்டார். அதற்கான வேறுபாடு, ஒரு “மாபெரும் ஆற்றலின்” ஒன்றிணைந்த செயல்பாட்டில் அடங்கியுள்ளது.
உதவியற்றவரின் பிரச்சினை என்னவெனில், அவர் தனது சொந்த வல்லமையின் வரம்பு எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளார். அதனால்தான் அவர், கிறிஸ்தவ வாழ்வை இயலாததொன்றாகக் காண்கிறார். ரோமர் 7-ல், கிறிஸ்துவைப்பற்றி அல்லது ஆவியானவரைப்பற்றி உதவியற்றவர் எதுவுமே சொல்வதில்லை. மாறாக, அவர், தன்னைப்பற்றியும், தேவனுடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையாயிராத, தனது இயலாமைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகிறார்.
ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவராய் இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசம்செய்கிறார். நீங்கள் உதவியற்றவர் அல்ல. எனவே, நீங்கள் உதவியற்றவராய் இருப்பதைப்போல் பேசாதீர்கள். தேவன் உங்களைக் கிறிஸ்துவுக்குள் முற்றிலும் புதிய ஒரு ஸ்தானத்தில் நிறுத்தியிருக்கிறார். நீங்கள் முன்பு சந்தித்த அதே போராட்டங்களை, இப்பொழுதும் சந்திப்பீர்கள். ஆனால், முடிவு வேறு விதத்தில் இருக்கும்.
ஒருவேளை நீங்கள், உங்களால் மேற்கொள்ளமுடியாத ஒரு பாவம் உங்களில் இருப்பதாக உணரலாம். நீங்கள் அதை எதிர்த்துப் போரிட்டுச் சோர்ந்துவிட்டீர்கள். நீங்கள் தோல்வியுற்றதாகவும் உணர்கிறீர்கள்.
தன்னை மிகவும் மேற்கொள்ளக்கூடியதான ஒரு சோதனையைப்பற்றி, என்னுடன் பேசுவதற்கு வரும் ஒருவருடன், நான் அடிக்கடி உரையாடியிருக்கிறேன். அவர், “அது எனக்கு மிகவும் பலம்வாய்ந்த எதிர்ச்சக்தியாயிருக்கிறது. அதை என்னால் மேற்கொள்ளமுடியவில்லை,” என்று சொல்கிறார்.
எனவே நான் அவரிடம், “நான் உங்களைக் கிறிஸ்துவண்டை வழிநடத்தட்டும்,” என்று சொல்கிறேன்.
அப்பொழுது அவர் என்னிடம், “ஐயோ, போதகரே, வேண்டாம், பல்லாண்டுகளாக நான் ஒரு கிறிஸ்தவராகத்தான் இருந்துவருகிறேன்!” என்று சொல்வார்.
“அப்படியானால் சரி, ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவரெனில், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசம்செய்கிறார். நீங்கள் உதவியற்றவர் என எப்படிக் கூறமுடியும்?”
ஏனெனில் ஒரு கிறிஸ்தவர், “நான் உதவியற்றிருக்கிறேன்,” என்று சொல்வது, பிசாசின் பொய்யைத் திரும்பவும் சொல்வதாகும். நீங்கள் உதவியற்றிருந்தால், கிறிஸ்துவிடம் வாருங்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறீர்கள் எனில், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசம்செய்கிறார். ஆகவே நீங்கள் உதவியற்றவர் என்று, உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்வதை நிறுத்துங்கள்.
இந்த நமது மூன்று நண்பர்களுள், யாருடன் நீங்கள் அதிகம் பொருந்திப்போவதாக அடையாளம் காண்கிறீர்கள்: பகைக்கிறவருடனா, உதவியற்றவருடனா, அல்லது நம்பிக்கையுடையவருடனா? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது மிகவும் முக்கியமானது. அதனால், தேவன் உங்களிடத்தில் சொல்ல இருப்பது என்னவென்பதை நீங்கள் கேட்க முடியும்.
நீங்கள் பகைக்கிறவராய் இருந்தால், தேவன் பொதுவான ஒரு மன்னிப்பை வழங்குகிறார். உங்களது போராயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, மனந்திரும்பும்படி உங்களை அழைக்கிறார் (ரோமர் 2:4). மனந்திரும்புதல் என்பது, தேவனைக்குறித்த உங்களது எதிர்ப்பைக் கைவிடுவதாகும். இயேசு கிறிஸ்து இந்த உலகிற்குள் வந்து, சிலுவைவரையில் சென்றார். அதனால் முன்பொரு காலத்தில் தேவனுக்குப் பகைஞராய் இருந்தவர்கள், அவரது சிநேகிதர்களாய் மாறமுடிந்தது.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (5:8). அவருக்கெதிரான உங்களது அனைத்துப் போராட்டங்கள், அனைத்து எதிர்ப்புக்கள் மற்றும் அனைத்துச் சண்டைகள் ஆகியவற்றினூடாகவும், அவர் உங்களை அன்புகூர்ந்திருக்கிறார். உங்களது பகைமையிலும்கூட, இன்னும் அவர் உங்களை நேசிக்கிறார். அவரிடத்தில் மனந்திரும்புதலோடு திரும்பி வருவீர்களானால், நீங்கள் இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால், அனைத்தையுமே பெறப்போகிறீர்கள்.
உதவியற்றவருக்கான தேவனின் வார்த்தை, சற்று வித்தியாசமானது. உதவியற்றவரை மனந்திரும்பச் சொல்வது அவருக்கு உதவாது. ஏற்கெனவே அவர், சரியானதைச் செய்யவே விரும்புகிறார். அவரது பிரச்சினை எதுவெனில், அவருக்குத் திறன் இல்லை என்பதேயாகும். உதவியற்றவர், “இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று நம்பிக்கையற்றுக் கதறும்போது, “இயேசு கிறிஸ்து” (7:25), என்பதே தேவனுடைய பதிலாக இருக்கிறது.
விசுவாசத்துடன் கிறிஸ்துவிடத்தில் வாருங்கள். இந்த வாழ்க்கையை நீங்கள், உங்களது சொந்த முயற்சியில் வாழ்ந்துவிட முடியாது என்பதை அவரிடம் கூறுங்கள். ஒரு புதிய வாழ்க்கையை வாழும்பொருட்டு, திறனையும், அத்துடன் விருப்பத்தையும் பெற்றிருக்கும்படியாக, அவரது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை உங்களுக்குத் தேவை என்பதை அவரிடம் கூறுங்கள். கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள். தேவன் உங்களுக்குப் புதியதொரு நாமத்தை அருளுவார். அதன்பின் ஒருபோதும் நீங்கள் உதவியற்றவராக இருக்கமாட்டீர்கள். மாறாக, நீங்கள் நம்பிக்கையுடையவராக இருப்பீர்கள்.
நம்பிக்கையுடையவருக்கான தேவனின் வார்த்தையானது, ஆவியின் வல்லமையினாலே சரீரத்தின் தீய செயல்களை அழிக்கவேண்டும் என்பதேயாகும் (8:13). உங்களுக்குள் தங்கியிருக்கும் பாவங்களை எதிர்த்து, உத்வேகமுள்ள நோக்கத்துடனான ஒரு யுத்தத்தைத் தொடங்குங்கள். போரிடக் கற்றுக்கொள்ளுங்கள். அத்துடன், நீங்கள் உதவியற்றிருக்கிறீர்கள் என்பதை ஒருபோதும் சொல்லாதீர்கள். தேவனின் ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறார். கிறிஸ்து, போரிடவும், வெற்றிபெறவும்கூடிய ஒரு ஸ்தானத்தில் உங்களை நிறுத்தியிருக்கிறார்.
நீங்கள் மாபெரும் வல்லமையைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில், இந்தத் தருணத்தில், உத்வேகமுள்ள நோக்கத்துடன் நீங்கள் தாக்குதலைத் தொடுக்கிறதான, குறிப்பிட்ட பாவங்களை உங்களால் அடையாளம் காணமுடியுமா? மாற்றத்துக்கான ஒரு திட்டத்தைச் சாத்தியமாக்குகிற ஆவியின் வல்லமை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, மாற்றத்துக்கான ஒரு திட்டத்தை நீங்கள் உருவாக்கிவிட்டீர்களா?
சத்துருவானவன், உங்கள் ஸ்தானத்தைப்பற்றி உங்களைக் குழப்ப முயற்சிப்பான் என்பதை நினைவில் வையுங்கள். நம்பிக்கையுடையவரிடம், அவர் உண்மையிலேயே உதவியற்றவர் என்று கூறுவதை அவன் மிகவும் விரும்புகிறான். அவ்விதமான பரப்புரைகளால்தான், அவனது மிகப்பல, பெரிய வெற்றிகளெல்லாம் வருகின்றன. எனவே, உங்கள் ஸ்தானத்தை அடையாளம் கண்டுகொண்டு, அதன்பின்பு தேவனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் பகைக்கிறவராக இருந்தால், மனந்திரும்புங்கள் – தேவனின் அன்பு உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் உதவியற்றவராக இருந்தால், வாருங்கள் – கிறிஸ்து உங்களை விடுவிப்பார். நீங்கள் நம்பிக்கையுடையவராக இருந்தால், யுத்தம்பண்ணுங்கள் – பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறார்.
நீங்கள் பெற்றிருக்கும் வல்லமை, முற்றிலுமாய் உங்களது ஆவிக்குரிய நிலைமையின்மேலேயே சார்ந்துள்ளது. கிறிஸ்தவ வாழ்க்கையானது, கிறிஸ்து இல்லாமல் உங்களது சக்திக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் விசுவாசத்துடன் கிறிஸ்துவிடத்தில் வரும்போது, அவர் தமது ஆவியை உங்களுக்குத் தந்தருளுகிறார். அதுதான் உங்களை முற்றிலும் வேறுபட்டதொரு ஸ்தானத்தில் நிறுத்துகிறது.
நீங்கள் அநேகப் போராட்டங்களைச் சந்திப்பீர்கள், அத்துடன் நீங்கள் அநேகத் தோல்விகளோடுங்கூட, வெற்றிகளையும் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் இந்த யுத்தத்தில் தனியாக இல்லை. தேவனின் ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறார். அவர், கிறிஸ்தவ வாழ்வைச் சாத்தியமாகச் செய்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, முழுவதும் மாபெரும் வல்லமையைச் சரியாகப் பயன்படுத்துவதைப்பற்றியதுதான். தேவனின் ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணும்போது, நீங்கள் உதவியற்றவர் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
குறிப்பு: வின்ஸ்டன் சர்ச்சில், த செகண்ட் வோர்ல்ட் வார் (மெரைனர், 1986). 3.475-477.
1. உங்கள் வாழ்க்கையில், நீங்கள் தோல்வியுற்றதாக அடிக்கடி உணர்ந்திருக்கும் ஒரு பகுதி இருக்கிறதா?
2. அந்தப் பகுதியில், பரிசுத்த ஆவியானவர் எப்படி உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்?
3. நீங்கள், பகைக்கிறவருடன், உதவியற்றவருடன், அல்லது நம்பிக்கையுடையவருடன் அதிகம் பொருந்திப் போகிறீர்களா? அது எவ்வாறு?
4. ஒரு “மாபெரும் வல்லமை” உங்களுக்கு உதவியுள்ளது என்று நீங்கள் அறிந்தால், அது உங்களது அன்றாட வாழ்வில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?
5. கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கான திறனை, நீங்கள் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை? உங்களுக்கு அதற்கான விருப்பம் இருக்கிறதா?