ஆதியாகமம் 3: 1-24
ஆதியாகமம் 3: 1-24
1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
2. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
21. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
22. பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
23. அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
ஆதாம், தன் மனைவியுடனான பரஸ்பர உறவையும், தேவனுடைய சிநேக சகவாசத்தையும் மகிழ்ச்சியாய் அனுபவித்தான். அவனுடைய வேலையும் நிறைவானதாக இருந்தது. அவனது வாழ்க்கை முழுவதுமே ஆசீர்வாதமும், மகிழ்ச்சியுமானதாக இருந்தது. ஆனால், விரைவிலேயே தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு, முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டியவனாக ஆதாம் காணப்பட்டான். மனுஷனும், மனுஷியும் தேவன் தங்களை ஆசீர்வதித்திருந்த இடத்திற்குத் திரும்பி வர வழியேயின்றி, அதற்குப் புறம்பாகிவிட்டனர். அவர்கள் வேதனை, பயம் மற்றும் குற்றவுணர்வு ஆகியவற்றை அனுபவித்தார்கள். மேலும், அவர்கள் அதன்பின்பு தேவனைக் காணவேயில்லை. ஏதோ பயங்கரமான தவறு நடந்துவிட்டது. ஆதியாகமம் 3-ஆம் அதிகாரம் அதைப் பற்றி நமக்குச் சொல்கிறது.
தீமையின் பிறப்பிடம் பற்றிய முழுமையானதொரு விளக்கத்தை வேதாகமம் நமக்கு எப்போதுமே தருவதில்லை. ஆனால், அது பிசாசானவன் ஒரு தேவதூதனாக இருந்து, பெருமையினால் தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு, தேவனுடைய ஸ்தானத்தை அபகரிக்க முயற்சித்தவனாக மாறினான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது (ஏசாயா 14:12-14).
சாத்தானின் கீழ்ப்படியாமை, அவன் தேவனுடைய சமூகத்திலிருந்து விலக்கப்படவும், பூமிக்கு விழத்தள்ளப்படவும் வழிவகுத்தது. இவ்வாறாக, மனித வரலாற்றின் தொடக்கமுதலே, தேவனுடைய கிரியைகளை அழிக்கவேண்டுமென்றே சத்துரு ஒருவன் முனைப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
சாத்தான், பிசாசு அல்லது “பொய்க்குப் பிதா” (யோவான் 8:44) என்று பொதுவாக அறியப்பட்டிருந்த இந்தச் சத்துருவானவன், மனித இனத்தையே தனது கீழ்ப்படியாமையின் கீழ் கொண்டுவர, பெருமுயற்சி செய்தான். அதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தீமையைக் குறித்த அனுபவத்தை அறிமுகப்படுத்துவதே அவனுடைய முதல் இலக்காக இருந்தது.
நம் எதிராளியின் உபாயங்களை அறிந்துகொள்ளுதல்
ஒரு நல்ல பயிற்சியாளர், எதிராளியின் விளையாட்டு உபாயங்களை ஊன்றிக் கவனித்து, அதைக்கொண்டு ஆற்றல்மிக்கதொரு எதிர்விளையாட்டுக்குத் தன்னுடைய அணியை ஆயத்தப்படுத்தத் திட்டமிடுவார். ஏதேனில் சாத்தான், தனது மிகச்சிறந்த யுக்திகளைப் பயன்படுத்தினான். இந்த யுக்திகளை நீங்கள் அறிந்துகொண்டாலே, உங்களால் அவற்றை எதிர்த்துத் தற்காத்துக்கொள்ள முடியும்.
முதல் உபாயம்: குழப்பம்
சாத்தானின் முதல் உபாயம், ஒரு கேள்வியைத் தொடுப்பது: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” (ஆதியாகமம் 3:1). தேவன் எளியதொரு கட்டளையைக் கொடுத்திருந்தார். அதைக் குறித்துக் கேள்வி கேட்பதே சாத்தானின் முதல் செயல்பாடாக இருந்தது. தேவன் சொன்னதைக் கேள்வி கேட்பதன் மூலம், கர்த்தருடைய கட்டளையை எளிதாக அலட்சியம் செய்ய, மனுஷனுக்கும், மனுஷிக்கும் சாத்தான் வழிவகுக்கிறான்.
உங்களைப் பாவம் செய்யவைக்கச் சாத்தான் சோதிக்கும்போதெல்லாம், குழப்பத்தை உருவாக்குவதே அவனுடைய முதல் உபாயமாக இருக்கும். ஒருவேளை, நீங்கள் செய்ய விரும்பும் பாவம் மெய்யாகவே தேவனால் தடைசெய்யப்படவில்லை என்று ஆலோசனை தருவான். அல்லது, வேதாகமம் இக்காரியத்தைப்பற்றி அவ்வளவு உறுதியாக ஏதும் கூறவில்லை என்றாவது சொல்லிப் பார்ப்பான். இப்படிச் செய்வதால் உங்களது எதிர்க்கும் ஆற்றலை மட்டுப்படுத்த முயற்சிப்பான்.
இரண்டாம் உபாயம்: துணிகரம்
பாவம் மரணத்தில் போய் முடியும் என்று தேவன் தெளிவுபடுத்தியிருக்க (2:17), சாத்தானோ, பாவத்தின் விளைவுகள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாகக் காண்பித்து, “நீங்கள் சாகவே சாவதில்லை” (3:4), என்று பெண்ணிடம் ஒரு யோசனையை முன்வைக்கிறான். இந்த உபாய தந்திரம் எதை நோக்கிச் செல்கிறது என்று அறிவது ஒன்றும் கடினமானதல்ல. அவன், தேவ கிருபையின் மீது ஸ்திரீயானவள் துணிகரம் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறான். அவன், “அதுதான் தேவன் உங்களை நேசிக்கிறாரே, பிறகு எப்படித் தீமையானதை அவர் உங்களுக்கு அனுமதிக்க முடியும்?” என்று கேட்பான். பாவம் செய்யச் சாத்தான் உங்களைத் தூண்டும்போது, நீங்கள் இதைச் செய்துவிட்டு, இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை தருவதன் மூலம் உங்கள் எதிர்க்கும் திறனை மட்டுப்படுத்துவான்.
மூன்றாம் உபாயம்: சுய ஆதிக்கம்
ஆதாமும், ஏவாளும் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவர்கள். ஆனால், அதைவிட ஒருபடி மேலான, சிறந்த நிலைக்கு அவர்களால் போகமுடியும் என்று சாத்தான் ஆலோசனை வழங்குகிறான்: “உங்கள் கண்கள் திறக்கப்படும்… நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (3:5). இதுதான் எதிரியின் உபாய தந்திரங்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்த ஒன்றாயிருக்கிறது. அவன் ஏதோ நம்மைப்பற்றிய உயரிய நோக்கம் வைத்திருப்பதால் அல்ல, மாறாக, தேவன் மீது அவன் கொண்டுள்ள ஆழ்ந்த வெறுப்பின் காரணமாகவே, நாம் தேவனுக்குரிய இடத்தைப் பிடிக்கவேண்டுமென்று நமக்குப் பரிந்துரைக்க ஆவலாயிருக்கிறான். நன்மை எது, தீமை எது என்று சொல்ல நமக்குத் தேவன் தேவையில்லை என்று ஆலோசனை வழங்குவதால் நமது சுயபெருமையைக் கவரும் ஒரு அறைகூவலை அவன் விடுக்கிறான். அவனுடைய செய்தி இன்றும், “உங்களுக்கு நீங்களேதான் தேவன். எது சரியானது என்பதைத் தீர்மானிப்பதும் நீங்களே!” என்பதேயாகும்.
தீமை பற்றிய அறிவு
தேவனுடைய அனைத்துக் கட்டளைகளையும் போலவே, அவரது முதல் பிரமாணமும், அவருடைய அன்பின் அற்புத வெளிப்பாடாக இருந்தது: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17).
தேவன் அனைத்தையும் நன்மையாகவே செய்தார். அவ்வாறே, இந்த மரத்திலிருந்து புசிக்கவேண்டாம் என்று ஆதாமிடம் அவர் சொன்னதும் அவனது பாதுகாப்புக்காகவே. தேவன், இப்படி யோசித்து ஆதாமிடம் சொல்லியிருக்கலாம்: “ஆதாமே, நீ ஏற்கெனவே நன்மையைப்பற்றி அறிந்திருக்கிறாய். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில் தீமை எனப்படும் மற்றொரு உண்மை உண்டு என்பதையும் நீ புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. நீ அதை ஒருபோதும் அனுபவிக்க நான் விரும்பவில்லை. ஆகவே, இந்த மரத்திலிருந்து புசிக்காதே!” ஆனால் ஆதாமும், ஏவாளும் இந்தத் தீமை பற்றிய அறிவு தங்களுக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்றே எண்ணினார்கள். ஆகவே, நாமும் அப்பொழுது முதல் அதனுடனேயே வாழ்ந்துவருகிறோம்.
பரதேசத்துக்குப் புறம்பாக்கப்படுதல்
தேவ சமூகத்தில் தீமைக்கு இடமில்லை. எனவே, தேவன் ஆதாமையும், ஏவாளையும் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைத் தடுத்துக் காவல்செய்யக் கேரூபீன்கள் எனப்படும் தேவதூதர்களைத் தோட்டத்தின் நுழைவாயிலில் வைத்தார் (3:23-24).
ஆதாமும், ஏவாளும் தேவ ஆசீர்வாதத்தின் ஸ்தலத்திற்குப் புறம்பே இருந்தார்கள். அவர்களது பரிபுரணமான திருமண வாழ்க்கை மிகுந்த சிரமத்துக்குள்ளானதுடன், அவர்களுடைய வேலையும் வெறுப்புக்குரியதாயிற்று. அவர்கள் வேதனை, பயம் மற்றும் நஷ்டத்தை அனுபவித்தார்கள். மேலும், மரணம் அவர்களால் இனி ஒருபோதும் தவிர்க்கவே முடியாத ஒரு பயங்கரமான உண்மையாக இருந்தது. அனைத்திலும் மோசமானது எதுவெனில், அவர்கள் தேவனிடமிருந்து புறம்பாக்கப்பட்டு, உலகத்தில் தனித்து விடப்பட்டார்கள். பரதேசத்தை இழந்துபோனதுடன், பரதேசத்தக்கு மீண்டும் திரும்பக்கூடிய வாய்ப்பையும் இழந்துவிட்டார்கள்.
தேவன் ஆதிப்பெற்றோரை வெளியே துரத்தியபின், அவர் “ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்யக் கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்” (3:24). முன்னும் பின்னுமாகச் சுழன்று பிரகாசிக்கும் சுடரொளிப் பட்டயமானது, தேவனுடைய நியாயத்தீர்ப்பைப் பறைசாற்றுகிறது. அதற்குத் தப்புவதோ, அதைத் தவிர்ப்பதோ சாத்தியமற்றதாயிருந்தது. இந்தக் காட்சி ஆதாமைப் பயமுறுத்துவதாக இருந்திருக்க வேண்டும்.
மனிதனின் நிலை குறித்து வேதாகமம் கண்டறிந்திருப்பது இதுவே: நமக்குத் தீமை பற்றிய அறிவு இருக்கிறது, அத்துடன் நாம் தேவ சமூகத்திலிருந்து புறம்பாக்கப்பட்டுள்ளோம். நம்மால் இந்தத் தீமை பற்றிய அறிவிலிருந்து விடுபடவும் முடியாது, தேவனுடைய பரதேசத்துக்குத் திரும்பவும் முடியாது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
சாபத்துடன் ஆரம்பித்த நம்பிக்கை
ஆதாமும், ஏவாளும் பாவம் செய்த அந்த நாளிலே நம்பிக்கை ஆரம்பமாயிற்று. அதுவும் ஒரு சாபத்துடனே தொடங்கிற்று. தேவன் சர்ப்பத்தைப் பார்த்து, “நீ சபிக்கப்பட்டிருப்பாய்” என்றார் (3:14).
சாபம் என்பது, “ஒரு நபரையோ ஒரு காரியத்தையோ அழிவுக்கு ஒப்புக்கொடுக்கும், கடவுளின் ஒரு பிரகடனம்” ஆகும். ஆகவே, தேவன் சர்ப்பத்தைச் சபித்தபோது, தீமை நிலைநிற்காது என்பதையும், சாத்தானுக்கு அதிகாரம் ஏதுமில்லையென்பதையும் அவர் அறிவிக்கலானார். இறுதித் தீர்மானம் சாத்தானுடையதாக இருக்காது. ஆதாமும், ஏவாளும் இந்தச் செய்தியைக் கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்.
தீமையின் மீதான தேவ சாபத்திற்காக நாம் அவருக்கு நன்றி கூறலாம். தீமையின் மீது தேவனின் சாபமில்லாவிடில், நாம் தீமை பற்றிய அறிவுடன் நிரந்தரமாகச் சிக்கியிருப்போம். ஆனால் இந்தச் சாபம், நம்பிக்கையின் வாசலை நமக்குத் திறக்கிறது. தேவன் தீமையை அழிவுக்கு ஒப்புக்கொடாமல் விட்டிருந்தால், வேறு யாரால் அது கூடும்? மனித வரலாற்றின் முழுவதிலும் நாம் முயற்சித்துத் தோற்றுவிட்டோம். நமது செய்திகளில் தொடர்ந்து வன்முறையும், துஷ்பிரயோகமுமே மேலோங்கியிருக்கின்றன. நம்மால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. ஆனால், தேவன் சாத்தானை நோக்கி, “நீ சபிக்கப்பட்டிருப்பாய்,” என்றார். அந்த நொடிப்பொழுதிலிருந்தே, நமது எதிரியானவனுக்கு அழிவுதான் முடிவென்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
அதன்பின்பு தேவன், இரண்டாம் சாபத்தைக் கூறினார். அவர் மனிதனின் பக்கமாய்த் திரும்பி, “சபிக்கப்பட்டிருக்கும்…,” என்றார். அப்பொழுது ஆதாம் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்திருக்க வேண்டும். தேவன் சர்ப்பத்தைச் சபித்த கையோடு, அந்தப் பயங்கரமான வார்த்தையைப் பேசும்படியாக, இப்பொழுது ஆதாமை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆதாம், தான் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடப்போவதாக நினைத்திருக்க வேண்டும், ஆனால் அவன் ஆச்சரியத்துக்குள்ளாகும்படியாக, ஆதாமிடம், “நீ சபிக்கப்பட்டிருப்பாய்,” என்று கூறுவதற்குப் பதிலாக, “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்,” (3:17) என்று தேவன் கூறினார்.
தேவனைப்பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமானவற்றுள் ஒன்றை நாம் இங்கே கண்டுகொள்கிறோம். அவர் தீமையை அழித்துவிடுவதாக அறிவிக்கும் அதே நேரத்தில், சாபமானது, ஆண் அல்லது பெண்ணின் மீது நேரடியாக விழாமல், பூமியின் மீது விழும்படிக்கு, அவர் அதைத் திசைதிருப்பிவிட்டு, அவர்கள் தேவனோடு ஒப்புரவாக்கப்பட இடமுண்டாக்குகிறார். தேவன் நீதிபரர். சாபமும் எப்படியாவது நிறைவேறியாக வேண்டும். எனவே ஏற்ற காலத்தில் தேவன் தமது குமாரனை அனுப்பி, நமது பாவத்தின் சாபத்தை அவர் மீது திருப்பினார். சிலுவை என்பது அதுதான். கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
ஒரு நாள், கிறிஸ்துவின் வெற்றியின் பலன், இவ்வுலகம் முழுவதையும் மறுரூபப்படுத்தும். சாபத்தைப் பூமியின் மீது திசைதிருப்பியதால், தேவன் படைப்பனைத்தையும் மாயைக்கு உட்படுத்தியுள்ளார் எனினும், அவர், “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” (ரோமர் 8:20), என்று வாக்குத்தத்தமும் செய்திருக்கிறார்.
தொடரும் யுத்தம்
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்திடம், “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்றார் (ஆதியாகமம் 3:15).
“பகை” என்பது, மனித வரலாற்றின் தலைமுறைகள்தோறும் தீமைக்கெதிராக விடாப்பிடியாகத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் யுத்தத்தைச் சுருக்கமாகக் குறிக்கிறது. நாம் எப்பொழுதும் தீமையிலிருந்து விடுபடவே முயற்சிக்கிறோம். ஆனால் விரக்தி, வேதனை, வியாதி மற்றும் மரணம் ஆகியவற்றை அனுபவித்துக்கொண்டுவருகிறோம். நாம் தீமை பற்றிய அறிவுடன் சிக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இரட்சகர் ஒருவர் வந்து தீயவனுக்கு எதிராகப் பெரியதொரு யுத்தத்தில் ஈடுபடுவார் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்கிறார். அவர் சத்துருவின் தலையை மிதித்து நசுக்குவதன் மூலம், அவனுக்கு மரண அடி கொடுப்பார். இந்தக் காரியம் நடக்கும்போது, சத்துருவானவன் தன்னை நசுக்கிய குதிங்காலைத் தீண்டுவான்.
ஒரு விஷப்பாம்பின் தலையை மிதித்துக்கொண்டு நிற்பதாகக் கற்பனை செய்யுங்கள். அது உங்களைக் கடித்து ஒரு காயத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும், காயப்பட்ட உங்கள் பாதம் பாம்பின் மீது உறுதியாக அழுந்தி நின்று அதற்கு அழிவை ஏற்படுத்துகிறது. அந்தப் பிரகாரமாகவே, கிறிஸ்து தமது மரணத்தின் மூலமாக, சத்துருவின் மீது மரணத்துக்கேதுவான கொடுங்காயத்தை ஏற்படுத்தி, அவனது அதிகாரத்திலிருந்து ஆண்களும், பெண்களுமான அனைவரும் விடுவிக்கப்படுவதற்கான வழியைத் திறந்தார் (கொலோசெயர் 2:15 – ஐக் காண்க).
தீமையின் வல்லமையை மேற்கொள்வதற்கு மாத்திரமல்ல, பரதேசத்துக்குள் திரும்பச் செல்லும் பாதையை நமக்குத் திறந்துவிடுவதற்காகவுமே கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்தார். தேவனுடைய பரதேசத்துக்கு வெளியே நின்றுகொண்டு, கேரூபீன்களையும், நியாயத்தீர்ப்பின் சுடரொளிப் பட்டயத்தையும் திரும்பிப் பார்ப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படி நீங்கள் பார்க்கும்போது, தேவசமூகத்திலிருந்து ஒருவர் வெளிவந்து, உங்களுடன் நின்றுகொள்கிறார். பின்னர் அவர் திரும்பி, அந்தச் சுடரொளிப் பட்டயத்தை நோக்கி முன்னேறுகிறார். அதைப் பார்க்கும்போதே நீங்கள் பதறுகிறீர்கள். அந்தச் சுடரொளிப் பட்டயம் முன்னும் பின்னுமாகச் சுழன்று பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. அவர் அதைக் கிட்டிச் சேரும்போது அவருக்கு என்ன நேரிடும் என உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தொடர்ந்து நிதானமாகவும், உறுதிகுலையாமலும், நடந்து முன்னேறுகிறார். அந்தப் பட்டயம் அவரைத் தாக்கிக் கொல்கிறது. அது அவரது சரீரத்தை நொறுக்குகிறது. ஆனால், அவரது சரீரத்தை நொறுக்குகையில், அந்தப் பட்டயமே உடைத்து நொறுக்கப்பட்டதாய்த் தரையில் விழுகிறது. அவருடைய மரணத்தால், தேவசமூகம் மற்றும் தேவ ஆசீர்வாதத்திற்குள் திரும்பப் பிரவேசிக்கும் வழி உங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
நாம் தீமை பற்றிய அறிவுடன் வாழ்கிறோம் என்றும், அதனால் தேவ சமூகத்திற்குப் புறம்பாக்கப்பட்டுள்ளோம் என்றும் புரிந்துகொள்ளும்போதுதான், நாம் நமது உலகத்தைக் குறித்து அறிந்துகொள்ள ஆரம்பிக்கவே முடியும். ஆனால், தேவன் நம்மைக் கைவிடவில்லை. தீமையுடனான நம் தொடர் போராட்டத்திற்குள் அவர் தம் குமாரனை அனுப்பினார். சிலுவையில் அவர் மரித்ததின் மூலமாக, அவர் சத்துருவின் வல்லமையை உடைத்து, தேவ சமூகம் மற்றும் தேவ ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிக்கப் புதிதும், ஜீவனுமான மார்க்கத்தைத் திறந்தார்.
1. தேவன் சிருஷ்டித்த அனைத்தும் நல்லதாக இருந்தது என்றால், இன்று இருக்கும் உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதுபற்றி வேதாகமம் தரும் விளக்கம் என்ன?
2. உங்கள் சொந்த வாழ்வின் எப்பகுதியில் சாத்தானின் ஏதேனும் ஒரு உபாய தந்திரம் (குழப்பம், துணிகரம் அல்லது சுய ஆதிக்கம்) கிரியை செய்வதைக் கண்டிருக்கிறீர்கள்?
3. ஆதாமும், ஏவாளும் பாவம் செய்த அந்நாளில், தேவன் கூறிய சாபங்களுள் ஒன்றைப் பற்றிச் சிந்தியுங்கள். அது தேவனைப் பற்றி உங்களுக்குச் சொல்வது என்ன?
4. உங்களைச் சுற்றிலும் இருக்கக்கூடிய மக்கள், தீமைக்கெதிராகச் செய்யும் போராட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? தீமைக்கெதிராக ஒருவர் எவ்விதத்தில் போராட முடியும் என்று நம்புகிறீர்கள்?
5. தமது சமூகத்திற்குள்ளும், ஆசீர்வாதத்திற்குள்ளும் நாம் திரும்பப் பிரவேசிப்பதற்கான ஒரு வழியைத் திறப்பதற்குத் தேவன் என்ன செய்திருக்கிறார்?