ஆதியாகமம் 1: 1-31
ஆதியாகமம் 1: 1-31
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
நீங்கள் ஒரு புதிய நாடகத்தின் முதல் காட்சிக்காக ஒரு நாடக அரங்கில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். திரை விலகுகிறது, ஆனால் மேடை வெறுமையாயிருக்கிறது. அப்பொழுது நாடகாசிரியர் வெளிப்பட்டுப் பார்வையாளர்களுக்குத் தாம் யாரென்றும், அவர் ஏன் அந்த நாடகத்தை எழுதினார் என்றும், அது எதைப் பற்றியது என்றும் உங்களுக்கு அறிமுகம் செய்கிறார். அந்த நாடகாசிரியர் அங்கே தமது இருப்பைக் குறித்த வாக்குவாதத்தை முன்வைக்காமல், தம்மை அறிமுகம் மட்டும் செய்துகொண்டு, தமது கிரியையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.
பாடம் 1. ஜீவன் ஆதியாகமம் 1:1-31
“ஆதியிலே தேவன் வானத்தையும் புமியையும் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:1) என்று, தேவன் மேடையில் வந்து நின்று தம்மைத்தாமே அறிமுகம் செய்துகொள்வதுடன் வேதாகமம் தொடங்குகிறது. நீங்கள் பார்க்கப்போவது அனைத்தும், முற்றிலுமாக அந்த ஆசிரியரின் படைப்பு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
சிருஷ்டிகர்த்தரானவர், ஒரு உரிமையாளருக்குரிய சகல உரிமைகளும் உடையவராக இருக்கிறார். வர்த்தகச் சின்னங்கள் மற்றும் காப்புரிமைகளால் ஆன ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். நான் “ஜஸ்ட் டூ இட்,” என்று கூறினால், உங்களுக்கு உடனே நைக் சின்னம் நினைவில் எழும். இந்தக் குறியீடு அதன் படைப்பாளிகளுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு, உரிமையாளருக்கேயுரிய உரிமைகள் எப்பொழுதுமே உண்டு. அவ்வாறே, தேவன் உண்டாக்கிய அனைத்தும் அவருக்குச் சொந்தமானவைகளாயிருக்கின்றன.
உங்கள் வாழ்க்கை, பல்லாயிரம் ஆண்டுகால மனித வரலாற்றிலிருந்து தோன்றிய தற்செயலான ஒரு நிகழ்வு என்றால், நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் கணக்கொப்புவிக்கத் தேவையில்லாத, கட்டுப்பாடுகளற்றவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் சிருஷ்டிக்கப்பட்டவரானால், உங்களைச் சிருஷ்டித்தவர் உங்கள் வாழ்க்கையின் முழு உரிமையாளராக இருக்கிறார்.
இவ்விரண்டில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும்: ஒன்று, நீங்கள் வரலாற்றில் தற்செயலான ஒரு நிகழ்வாய் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குப் பிரியமானபடியெல்லாம் செய்ய முழுச் சுதந்திரமும் உள்ளவராயிருக்கிறீர்கள். அல்லது, நீங்கள் சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராய் இருந்தால், உங்களைச் சிருஷடித்தவர் உங்கள் வாழ்க்கையின் மீது சகல உரிமைகளும் உடைய உரிமையாளராயிருக்கிறார்.
இந்தப் பகுதியில் தேவன், உங்களைப் படைத்தவராகவும், அதனால், உங்களுடைய உரிமையாளராகவும் தம்மைத்தாமே அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஆதலால் நீங்கள் உங்களுடையவர்களல்ல. உங்கள் வாழ்க்கை, தேவனிடத்திலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நம்பிக்கை. அதற்காக நீங்கள் ஒன்றும் மதிப்பற்றவர் என்று அர்த்தமல்ல. நீங்கள் ஏதோ பரிணாம வளர்ச்சியின் மூலமாகத் தோன்றினவரல்ல. மாறாக, தேவன் ஒரு நோக்கத்துடன், உங்களை உருவாக்கத் தெரிந்துகொண்டார். உங்களைப் படைத்த தேவனை நீங்கள் அறிந்துகொள்ளும்பொழுது, அந்த நோக்கத்தை அறிந்துகொள்வீர்கள்.
பின்பு தேவன்: “நமது சாயலாக… மனுஷனை உண்டாக்குவோமாக … என்றார்” (ஆதியாகமம் 1:26). இங்கே “மனுஷன்” என்பது பொதுவான பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது அதில் ஆண், பெண் ஆகிய இருபாலினமும் அடங்கும். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருடித்தார் … ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (1:27) என்று நமக்குக் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் 1:26-ல் காணக்கூடிய “நமது” என்ற பன்மையைக் கவனியுங்கள். இது பிற்காலத்தில் பரிபூரணமாக வெளிப்படுத்தப்படவிருக்கும், தேவனின் தன்மையைப் பற்றிய அற்புதமான ஒரு குறிப்பாகும்.
சிருஷ்டிப்பின் ஐந்தாம் நாளுக்குப் பின்பு, முடிசூட்டுதலின் தருணம் வந்தது. ஒருவகையில், தேவன் இங்குத் தமக்குத் தாமே பேசிக்கொள்வதுபோல, “நாம் அதைச் செய்வோம்! நமது சாயலாக மனுஷனை நாம் உண்டாக்குவோம்” என்கிறார். சாயல் என்பது ஒரு பிரதிபலிப்பு. எனவே, தேவன் அவருக்கேயுரிய தன்மையையும் மகிமையையும் நம்மால் ஓரளவுக்குப் பிரதிபலிக்க முடிகிற வகையில்தான் நம்மை உண்டாக்கியிருக்கிறார் என்று நமக்குச் சொல்கிறார்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது தேவசாயலே. விலங்குகள் தேவனால் உண்டாக்கப்பட்டன. ஆனால், அவற்றுள் எதுவும் தேவனைப்போல் உண்டாக்கப்படவில்லை. அதனாலேயே ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு விலங்குக்கொப்பாக ஒருபோதும் நடத்தப்படக் கூடாது அல்லது நடந்துகொள்ளக் கூடாது. தாங்கள் விலங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் மட்டுமே என்று தங்களைக் கருதிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் தேவன் தங்களைக் குறித்துக் கூறும் மிக முக்கியமான அடிப்படைச் சத்தியத்தை இழந்து போயிருக்கின்றனர். நாம் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவர்கள்!
ஆண்களும், பெண்களும் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள். ஆனாலும், நாம் தேவனல்ல என்பதை எப்பொழுதுமே நினைவில்கொள்ள வேண்டும். தேவன், முதல் மனிதனைப் புமியின் மண்ணிலிருந்து உருவாக்கினார், ஆகவே, ஓர் உயிரியல் அடிப்படையில் விலங்குகளுடன் நமக்கு ஒற்றுமை காணப்படுமானால், நாம் ஆச்சரியப்படக் கூடாது. ஆனாலும் மனித வாழ்வில், வேதியியலையும், உயிரியலையும் தாண்டிய அநேகக் காரியங்கள் உண்டு.
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் புமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதியாகமம் 2:7). தேவன், ஒரு சரீரத்தை வடிவமைத்தார். அது ஜீவனின்றி புமியிலே கிடந்தது. பின்பு தேவன், உயிரற்ற அந்த உடலுக்குள் தமது சொந்த சுவாசத்தை ஊதினார். அவர் மனிதனுக்கு உயிர்ப்பிக்கும் ஜீவ சுவாசத்தைத் தந்தார். அந்த உடல் ஜீவனுள்ள, சுய உணர்வுமுள்ள ஒரு நபராக ஆனது.
தேவன் அந்நாளில் செய்ததுபோலவே, எப்பொழுதுமே செய்துகொண்டிருக்கிறார்: “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர் (தேவன்)…” (அப்போஸ்தலர் 17:25). ஒவ்வொரு மூச்சின் தருணத்திலும் தேவன் உங்களைத் தாங்குகிறார். நீங்களும் அவரையே முற்றிலும் சார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் தேவசாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அவரையே சார்ந்திருக்கிறீர்கள் என்பதையும் உங்களால் உணர முடிந்தால், சிறந்ததொரு கனத்தையும், அதே நேரத்தில், இதயப்பூர்வமான தாழ்மையையும் நீங்கள் கண்டுணர்வீர்கள்.
தேவன் ஆதாமுக்கு, அவன் வாழ்வை அற்புதமான விதத்தில் செழிப்பாக்கத் தகுந்த ஒரு இடம், ஒரு நோக்கம், ஒரு துணை, மற்றும் அவை அனைத்திற்கும் மேலாக, தேவனுடைய பிரசன்னம் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தார்.
தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் மனிதக் கண்களுக்குப் புலப்படாதவர் என்பது அதன் பொருள். இருப்பினும், தேவனைக் காணவும், கேட்கவும் மற்றும் அனுபவிக்கவும் முடிகிற வகையில், அவர், ஆதாமுடனும், ஏவாளுடனும் உறவாடிக்கொண்டிருந்ததை வேதாகமத்தின் தொடக்கத்திலேயே நாம் வாசிக்கிறோம். “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்” (ஆதியாகமம் 3:8).
தேவன், காணக்கூடிய வடிவில் தோன்றியதற்கான பல உதாரணங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன. இவற்றை நாம் தேவதரிசனங்கள், தெய்வக்காட்சிகள் என்கிறோம். வேதாகமக் கதையின் பிற்பகுதியில், தேவன் மனிதனாக வருவதைப் பார்க்கவிருக்கிறோம். எனவே, பழைய ஏற்பாட்டில் அவர் காண்கிற உருவெடுத்துத் தோன்றியிருக்கிறார் என்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல.
நம்மோடு ஐக்கியங்கொள்ளவேண்டும் என்று தேவனுடைய இருதயத்தில் இருக்கிற, ஆழ்ந்த ஏக்கத்தையே இந்தத் தோற்றங்கள் நமக்குக் காண்பிக்கின்றன. அது, ஏறக்குறையத் தேவகுமாரன் வரும் வரையிலும் காத்திருக்க முடியாது என்பது போலத்தான். அவர் வானங்களைக் கிழித்திறங்கி, மனித காலம் மற்றும் இடம் ஆகிய எல்லைகளுக்குள் நுழைந்து, முதல் மனுஷன் மற்றும் மனுஷயுடன் தோட்டத்தில் உலாவி வந்தார்.
அது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்! தேவன், அன்றைய நாளில் ஆதாம் செய்தவைகளில் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார். ஏவாளின் மனதில் இருந்தவைகளை ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தார். தேவன், அப்படிப்பட்டதொரு உறவையே நீங்கள் தம்மோடு அனுபவிக்கவேண்டுமென்று விரும்புகிறார்.
அடுத்த பாடத்தில், தேவனுக்கும், மனிதனுக்குமிடையிலான இந்த ஐக்கியம் துண்டிக்கப்பட்டதையும், மனித வரலாற்றின் தலைமுறைகள்தோறும் அது அந்நிலையிலேயே இருந்துவருகிறது என்பதையும் நாம் காணலாம். கிறிஸ்து, அந்தத் துண்டிக்கப்பட்ட உறவை மீட்டெடுக்கவும், மீண்டும் நாம் தேவனோடு நடப்பதைச் சாத்தியமாக்கவுமே இவ்வுலகிற்கு வந்தார்.
நம்மால் தேவனைக் காண முடியாது. ஆயினும் நாம் விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரிடம் வரும்போது, அவர் ஆதாமுக்குக் காணப்படுகிறவராகத் தோன்றியபொழுது இருந்ததைப்போலவே, நமக்கும் அவரது பிரசன்னம் மெய்யானதாக இருக்கிறது. நீங்கள் அடுத்தமுறை ஜெபிக்கும்பொழுது அதைப்பற்றிச் சிந்தியுங்கள்.
ஏதேனின் இருப்பிடத்தைப்பற்றித் துல்லியமாகக் கூறுவது கடினமாயிருப்பினும், அது மெய்யான ஓர் இடம் என்பதும், கர்த்தர் தாம் சிருஷ்டித்த ஆணையும் பெண்ணையும் அங்கே வைத்தார் என்பதும், நாம் உணர்ந்திருக்கவேண்டிய முக்கியமான விஷயங்களாகும்: “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்” (ஆதியாகமம் 2:8).
தேவன், தமது ஆசீர்வாதத்தை ஆதாம் அறிந்து, அனுபவிக்கக்கூடிய ஓரிடத்தைச் சிருஷ்டித்தார். அவர் அவ்வாறே நமக்கும் செய்கிறார். நாமனைவரும் வாழ்வதற்கான மிகச்சரியான இடங்களை அவர் தீர்மானித்திருக்கிறார் (அப்போஸ்தலர் 17:26-ஐக் காண்க). உங்கள் வீட்டிற்குள், உங்கள் பணியிடத்திற்குள் அல்லது உங்கள் சபைக்குள் தேவன் உங்களோடு நடந்து வந்து, “இதுதான் நான் உனக்காக ஆயத்தம் செய்துள்ள இடம்” என்று கூறுவதாகக் கற்பனை செய்து பாருங்கள். நம்மில் யாருக்குமே நாமிருக்கும் இடம் தற்செயலாக அமைந்ததல்ல. தேவனே நீங்கள் இருக்குமிடத்தில் உங்களை அமைத்திருக்கிறார் என்பதை, ஆதாமைப்போலவே நீங்களும் அறிவீர்களானால், மிகக் கடினமான காலங்களிலும் நீங்கள் ஸ்திரத்தன்மையோடிருப்பீர்கள்.
“வெளிச்சத்துக்குப் பகல்” என்றும் “இருளுக்கு இரவு” என்றும் பேரிட்ட தேவன் (ஆதியாகமம் 1:5), அனைத்திற்கும் பேரிடும் தமது பணியில் பங்குபெறும்படி ஆதாமை அழைத்தார்: “தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார் அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று” (2:19).
ஆரம்பத்திலிருந்தே ஆதாம் வேலை செய்கிறவனாக இருந்தான்: “தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” (2:15). பாவம் உலகத்திற்குள் நுழையும் முன்பே வேலை இருந்தது. பாவம் அழிக்கப்பட்ட பிறகும் அது தொடரும். பாவமானது நமது வேலையைப் பாதித்திருப்பதோடு, அதற்குள் விரக்தியையும் நுழைத்துவிட்டிருக்கிறது. எனினும், வேலையைக் குறித்து முதலாவது சொல்லப்படவேண்டிய காரியம் என்னவெனில், அது தேவனிடத்திலிருந்து வந்த ஒரு அருமையான பரிசு.
தேவன் உங்களுக்கென்று ஒரு வேலையை வைத்திருக்கிறார், அந்த வேலை, தேவனின் வேலையை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்துச் சிந்திப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். தேவன் ஒழுங்கின்மையிலிருந்து ஒழுக்கத்தைப் பிறப்பிக்கிறவர். நீங்கள் ஒரு அலமாரியைச் சுத்தம் செய்யும்போது, வீட்டை ஒழுங்குபடுத்தும்போது, அல்லது ஒரு தொழிலைச் சீரமைக்கும்போது, நீங்கள் தேவனுடைய வேலையைப் பிரதிபலிக்கிறீர்கள். தேவன் அழகானவற்றைச் சிருஷ்டிக்கிறார். நீங்கள் வண்ணப்படக் கலைஞராக, வடிவமைப்பாளராக இருப்பீர்களானால், நீங்கள் தேவனுடைய வேலையைப் பிரதிபலிக்கிறீர்கள். தேவன் பாதுகாக்கிறார். அதைப்போல், பிறரைப் பாதுகாக்கும் காவல் பணியிலுள்ள ஒவ்வொருவரும் அவரது வேலையைப் பிரதிபலிக்கிறார்கள். தேவன் அருளிச்செய்கிறார். அவ்வாறே, யாரெல்லாம் வீடுகளைக் கட்ட, அல்லது பயிர்களை வளர்க்க, விற்க, அல்லது உணவு சமைக்க என்று இப்படி எந்த ஒன்றிற்கும் யாதொரு பங்களிப்பை வழங்குகிறார்களோ, அவர்கள் தேவனின் வேலையையே பிரதிபலிக்கிறார்கள். உங்களுடைய பணி எவ்வாறு தேவனுடைய வேலையைப் பிரதிபலிக்கிறது என்பதைப்பற்றிச் சிந்தியுங்கள். அப்பொழுது, இந்த வேலையைத்தான் தேவன் நீங்கள் செய்யும்படி உங்களுக்கு நியமித்திருக்கிறார் என்று அறிந்து மாபெரும் மகிழ்ச்சியடைவீர்கள்.
விலங்குகளை ஆதாமிடம் கொண்டுவந்ததன் மூலமாகத் தேவன் அவனது அன்றாட வேலையில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டார் (2:19). ஆதாம் தேவனின் உடனூழியனாயிருந்தான். தேவன் அவனோடும், அவன் வழியாகவும் பணியாற்றினார். இப்படித்தான் உலகத்தைக் குறித்த தேவனுடைய நோக்கம் முன்னேறியது. தேவன் உங்களது அன்றாட வேலையில் அக்கறை செலுத்துகிறார். அதில் பங்கேற்கவும் விரும்புகிறார். அதைப்பற்றி உங்கள் அலுவல் மேஜையில், வியாபாரத் தளத்தில், பள்ளியில் அல்லது சமையலறைத் தொட்டியருகில் இருக்கும்போது சிந்திப்பது மிகவும் உகந்ததாயிருக்கும்.
“பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். … தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்” (ஆதியாகமம் 2:18, 22).
கர்த்தர் மீண்டும் ஆதாமுக்குத் தோன்றி, “ஆதாமே, நீ ஒரு நபரைச் சந்திக்கும்படி உன்னிடம் அழைத்துவந்திருக்கிறேன்” என்றார். ஆதாமுக்கு ஆச்சரியத்தில் வாய் பிளந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவன் நிச்சயமாகவே அதிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டான்! அவன், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்றான் (2:23).
கவனியுங்கள், கர்த்தர்தாமே இவ்விருவரையும் ஒன்றிணைத்தார். முதல் திருமண ஆராதனை, சர்வ வல்லமையுள்ள தேவனால் நடத்திவைக்கப்பட்டது. அதை உங்கள் சிந்தையில் சித்திரித்துப் பாருங்கள்: கர்த்தராகிய தேவன் அவளுடைய கரத்தை எடுத்து அவனது கரத்தில் கொடுத்து, “இதோ, நான் உனக்காக உண்டாக்கிய வாழ்க்கைத்துணை. ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருந்து, ஒருவரையொருவர் மனதார நேசியுங்கள்” என்கிறார்.
இந்தத் திருமணம் அதன் பிரச்னைகளை அளவுக்கதிகமாகவே சந்திப்பதை இதனையடுத்து வரும் பாடத்தில் நாம் காணலாம். ஆனால் தங்கள் பிரச்னை என்னவாயிருப்பினும், ஆதாமும், ஏவாளும் தாங்கள் ஒன்றாயிருப்பது தேவன் தங்களை இணைத்திருப்பதால்தான்; என்று அறிந்திருந்தார்கள்.
ஒவ்வொரு திருமணத்திலும் கணவனும், மனைவியும் இந்நிலைக்குத் திரும்பவேண்டிய, இதுபோன்ற காலங்கள் இருக்கும். திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தேவனால் இணைக்கப்படுவதாகும். வேதம் கூறுவதுபோல், “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (2:24).
நீங்கள் திருமணமானவராக இருந்தால், தேவன் உங்கள் கரத்தையும், உங்கள் வாழ்க்கைத்துணையின் கரத்தையும் எடுத்து ஒன்றாக இணைப்பதாகச் சித்திரித்துப் பாருங்கள். தேவன் அப்படிச் செய்யும்பொழுது, “வாழ்வில் ஒருமித்துப் பயணியுங்கள், ஒருவரையொருவர் நேசியுங்கள், அத்துடன் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று கூறுகிறார். ஏவாளுக்கும், ஆதாமுக்கும் தேவன் இதைத்தான் செய்தார். அவ்வாறே, நீங்கள் திருமணமானவரெனில், தேவன் இதைத்தான் உங்களுக்கும் செய்திருக்கிறார். தேவனே உங்களையும், உங்கள் வாழ்க்கைத்துணையையும் ஒன்றிணைத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வது, மிகக்கடினமான சூழ்நிலைகளிலும் உங்களைக் கரைசேர்க்கும்.
நீங்கள் திருமணவாழ்விற்கான துணையைத் தேடுகிறவரானால், தேவன் ஏவாளையும், ஆதாமையும் ஒன்றிணைத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் உள்ள அழுத்தம் மிகக் கடுமையானதுதான். ஆனாலும், சரியான நபரை உங்களிடமோ, உங்களைச் சரியான நபரிடமோ கொண்டுசேர்க்க நீங்கள் தேவனை நம்பலாம். நீங்கள் முயற்சியே செய்யாமல் இருக்கும்படி நான் ஆலோசனை வழங்கவில்லை. ஆனால், கலக்கமடையவும் தேவையில்லை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் கர்த்தரை நம்பலாம்.
நீங்கள் உட்பட, அனைத்திற்கும் தேவனே உரிமையாளராக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள அவர் விரும்புகிறார். அத்துடன், தேவன் தம்முடைய சாயலில் உங்களை உருவாக்கியிருக்கிறார் என்றும், இதினிமித்தமாகவே நீங்கள் விசேஷித்த கௌரவமும், மதிப்பும் பெற்றிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கவும் அவர் விரும்புகிறார்.
மனித வரலாற்றின் தொடக்கத்தில், தேவன் தம்மை அறிந்து, அனுபவிப்பதை நமது ஆதிப் பெற்றோருக்குச் சாத்தியமாக்கியிருந்தார். அவர், மனிதனையும் அவனது மனைவியையும் ஒன்றிணைத்தார். அவர், அவர்களது இல்லத்திற்கு அவர்களை வழிநடத்தி, அவர்களுக்கான பணியையும் நியமித்தார். அவர்களுக்குத் தேவையானவை அனைத்தையும் வழங்கி, அவர்களது வாழ்வில் தம்மையும் இணைத்துக்கொண்டார். அவர்களுக்குச் செய்ததை, இன்றும் தேவன் தொடர்ந்து செய்கிறார். அவர் செய்வதை நம்மால் பார்க்கமுடிவதில்லை என்பதுதான் ஒரே ஒரு வித்தியாசம். நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (2 கொரிந்தியர் 5:6).
1. தேவன் உங்களைச் சிருஷ்டித்தார் ஆகையால், நீங்கள் அவருக்குரியவர்கள் என்கிற சிருஷ்டிப்பின் விவரத்திற்கு உங்களது பிரதியுத்தரம் என்ன? சந்தேகமா? பயமா? உற்சாகமா? மற்றவை?
2. நீங்கள் தேவனால் ஒரு நோக்கத்தோடுதான் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள், அல்லது பரிணாம வளர்ச்சியில் தோன்றியிருக்கிறீர்கள் என்பது மெய்யாகவே ஒரு பொருட்டானது என நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை எனில், ஏன்?
3. தேவன் நம்மை “அவருடைய சொந்த சாயலில் உருவாக்கினார்” என்று சொல்லும்போது, வேதாகமம் என்ன சொல்ல வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் (ஆதியாகமம் 1:27)?
4. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் நடந்ததுபோல நீங்களும் தேவனோடு நடப்பதை அனுபவிக்க விரும்புகிறீர்களா? ஆம் அல்லது இல்லை எனில், ஏன்?
5. உங்களது இல்லம், உங்களது வேலை, பள்ளி அல்லது உங்களது வாழ்க்கைத்துணை ஆகிய ஒவ்வொன்றும் தேவனிடத்திலிருந்தே உங்களுக்கு வந்த ஒரு பரிசு என்று உறுதியாக அறிந்துகொண்டது, உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?