2 இராஜாக்கள் 17:6-28
நெகேமியா 8:1-18
1. ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
2. அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
3. தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
4. வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
5. எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
6. அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
7. யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
8. அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
9. ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
10. பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
11. லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
12. அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
13. மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
14. அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.
15. ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்களென்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.
16. அப்படியே ஜனங்கள் வெளியேபோய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
17. இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப்போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
18. முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
வேதாகமத்தை நோக்கி மீண்டும் திரும்புமாறு ஜனங்களை அழைப்பதில், யோசியாவின் முயற்சி தோல்வியடைந்தபின் சில ஆண்டுகள் கழித்து, தேவன் தமது சொந்தப் பட்டணத்தை, இடிபாடுகளின் குவியலாகத் தாழ்த்தும்படி, எதிரிகளை அனுமதித்தார். பாபிலோனிய இராணுவம் எருசலேமை முற்றுகையிட்டது. அங்கே பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. தப்பிப் பிழைத்தவர்கள், ஒன்று, உயிர்தப்ப ஓடிப்போனார்கள், அல்லது சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனிலுள்ள முகாம்களுக்கு நடத்திச்செல்லப்பட்டார்கள். ஆனால், தேவன் தம் ஜனங்களைக் கைவிடவில்லை. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சிறுகூட்ட மக்கள் பட்டணத்தைத் திரும்பக் கட்டியெழுப்பும்படித் திரும்பி வந்தார்கள்.
தேவன் தமது நாமத்தை வழங்கியிருந்த பட்டணம் சுட்டெரிக்கப்பட்டுப் பாழடைந்த இடமாயிருந்தது. விசுவாசிகள், ஒரு காலத்தில் தேவனை ஆராதிப்பதற்குத் தங்கள் சத்தத்தையெழுப்பிய அவ்விடத்தில், அமைதி ஆளுகை செய்தது. தேவனுடைய பிரசன்னத்தின் மேகத்தினால் முன்பொரு காலத்தில் நிரப்பப்பட்டிருந்த தேவாலயமானது, முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாபிலோனிய சாம்ராஜ்யம், மேதிய, பெர்சிய ராஜ்யங்கள் எழும்புவதற்கு வழிவகுத்தது. கோரேசு என்னும் புதியதொரு ராஜா, நாடுகடத்தப்பட்ட யுூதர்களில், யாரெல்லாம் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று, தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறார்களோ, அவர்கள் அப்படிச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஆணை பிறப்பித்தார். ஏறத்தாழ ஐம்பதினாயிரம் ஜனங்கள், இந்த அறிவிப்புக்குச் செவிசாய்த்தார்கள் (எஸ்றா 2:64-67).
அத்தனை பெரியதொரு பணியைச் செய்வதற்கு, அவர்கள் சிறு கூட்டமாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள், தேவாலயத்தைக் கட்டியெழுப்புகிற ஒரு தரிசனத்தினால் அனல் மூண்டெரிகிறவர்களாயிருந்து, ஒரு புதிய சமுதாயத்தைத் தேவனுடைய பட்டணத்திலே உருவாக்கினார்கள்.
அவர்களின் தலைவர், செருபாபேல் என்னும் பெயருடைய ஒரு கட்டிட வல்லுநர். அவர் முதலில் எதிர்கொண்ட பணியானது, வீடுகள் கட்டப்படுவதைக் கண்காணிப்பதாயிருந்தது. அவர்களது முற்பிதாக்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குள் வந்தபோது, அவர்கள் கட்டாத வீடுகளையும், நாட்டாத திராட்சத்தோட்டங்களையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்பிவந்தபோதோ, அவர்களே தேவையான ஒவ்வொரு மரத்தையும் அறுக்கவும், ஒவ்வொரு ஆணியையும் அடிக்கவும் வேண்டியிருந்தது. தங்களுக்கான வீடுகளைக் கட்டியபின் தேவஜனங்கள், தேவாலயத்தைத் திரும்பவும் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினார்கள் (எஸ்றா 3).
பின்பு தேவன், எஸ்றா என்னும் பெயர்கொண்ட வேதபாரகரை எழுப்பினார். இந்த எஸ்றா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான் . . . . அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்தது . . . .” (எஸ்றா 7:6). எஸ்றா எருசலேமுக்குள் வந்தபோது, திகைத்தவராய்த் தரையில் அந்த நாள் முடியுமட்டும், செய்வதறியாத மௌனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார் (எஸ்றா 9:2-4). தேவனுடைய பட்டணத்திலிருந்த, தேவனுடைய ஜனங்கள், தேவனுடைய வார்த்தையைப் பற்றி மிகவும் சொற்பமாகவே அறிந்திருந்தார்கள் என்பதை அவரால் நம்பக்கூடாதிருந்தது.
சிறிதுகாலம் சென்றபின், திட்டமிடுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் தாலந்துடையவரான, நெகேமியா என்றழைக்கப்பட்ட ஒருவரைத் தேவன் எழுப்பினார். அவர் எருசலேமுக்கு வந்தபோது, பட்டணமானது பாதுகாப்பின்றி இருப்பதை அவர் கண்டார். ஆகவே, மதிற்சுவர்களைக் கட்டியெழுப்புமாறு தேவன், அவரது இருதயத்தை ஏவினார்.
தேவன், தமது பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படுவற்காக, பல்வேறுபட்ட தாலந்துகள் கொண்டவர்களை எவ்வாறு திரட்டிக் கொண்டுவருகிறார் என்பதற்கு, எருசலேம் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிற கதை, ஓர் அற்புதமான உதாரணமாய் இருக்கிறது. தேவன், ஒரு கட்டிட வல்லுநரையும், ஒரு வேதபாரகரையும், விவேகமாய்த் திட்டமிடுகிற ஒருவரையும் பயன்படுத்தினார். தேவஜனங்கள் ஒன்றுசேர்ந்து, பெரிய காரியங்களைச் சாதித்தார்கள்.
தேவனை அறிந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, ஆனால் அவரது வார்த்தையைக் குறித்து மிகச்சொற்பமாகவே அறிந்திருந்ததான அந்த ஜனங்களுக்கு, வேதாகமத்தைக் கற்பிக்கவேண்டிய சவாலை எஸ்றா சந்தித்தார். உலகப் பிரகாரமான கலாசாரத்தில் தங்களது வாழ்நாட்களைச் செலவழித்திருந்த இந்த ஜனங்கள், தேவனை நேசித்து, அவருக்குக் கீழ்ப்படிகிறதும், அவரை ஆராதிக்கிறதுமான ஒரு சமுதாயத்தினராக, எப்படி உருவாக்கப்பட முடியும்?
ஏறத்தாழ ஐம்பதினாயிரம் மக்களடங்கிய முழுச்சமுதாயத்தையும், பொதுவான ஒரு வீதியில் கூடிவரச்செய்வதே, எஸ்றாவின் வியுூகமாயிருந்தது. அவர்கள் கூடிவந்தபோது, “கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்” (நெகேமியா 8:1).
ஐம்பதினாயிரம் பேர், எப்படி நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டிருப்பார்கள்? அவர்கள் கோஷங்கள் எழுப்பியிருப்பார்கள்! இந்த ஜனங்கள், தேவனுடைய வார்த்தைக்காகப் பெருந்தாகத்தோடு கூடிவந்திருந்தார்கள். அவர்கள் பொறுமையிழந்து: “எங்களுக்கு வேதாகமம் வேண்டும்; வேதாகமத்தை வெளியே கொண்டுவாருங்கள்!” என்று சத்தமிடத் தொடங்கினார்கள். வேதாகம நூல்களை வெளியே கொண்டுவந்து, இந்தப் பெருங்கூட்ட மக்களுக்குத் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பது, எஸ்றாவுக்கு மிகப்பெரியதொரு சந்தோஷமாயிருந்திருக்க வேண்டும்.
ஆசாரியனாகிய எஸ்றா, புருஷராலும், ஸ்திரீகளாலும், “கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய” சபைக்கு முன்பாக, நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்தார் (8:2). சிறு பிள்ளைகளும் அங்கு இருந்தனர் என்பதே அதன் பொருள். பெரியவர்கள் ஆராதிப்பதையும், தேவனுடைய வார்த்தையைத் தீவிரமாகக் கருத்தில் கொள்வதையும் காணக்கூடியதொரு சூழலுக்குள் பிள்ளைகளைக் கொண்டுவருவது, மிக வல்லமையான ஒரு காரியமாகும்.
ஜனக்கூட்டமானது, ஓர் எதிர்பார்ப்போடு கவனித்தது. எஸ்றா வேதாகமப் புத்தகங்களைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள் (8:5). அப்பொழுது “எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்் ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்” (8:6).
தேவன் தமது வார்த்தையை மோசேயிடம் அளித்தபின், ஓராயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த வேதாகமம் திறக்கப்பட்டு, விளக்கப்பட்டபோது, தேவன் தங்களிடம் பேசுகிறார் என்பதை ஜனங்கள் அறிந்தார்கள். இந்தப் புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டபோது, ஒரு மனிதனின் வார்த்தையைத் தாங்கள் கவனித்துக்கொண்டிருக்கவில்லை; மாறாக, மெய்யாகவே தேவனுடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதை, அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இதைச் சற்றுக் கவனியுங்கள், தேவனிடமிருந்து ஒரு புதிய வார்த்தையைக் கேட்டுக்கொண்டுவருவதற்காக, எஸ்றா ஒன்றும் சீனாய் மலைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளவில்லை. அவர், தேவனின் வார்த்தையானது திறக்கப்படும்போது, தேவனின் சத்தம் கேட்கப்படும் என்று விசுவாசித்து, ஓராயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த நியாயப்பிரமாணப் புத்தகத்தைத் திறந்தார்.
வேதாகமத்தின் மையப்பொருளான வார்த்தையிலிருந்து, எஸ்றாவின் பிரசங்கம் தொடங்கியது. ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்ததான செய்தியை அவர் விவரித்தார். தேவன், தமது சொந்த வார்த்தையை ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார் (ஏசாயா 55:11). ஆகவே, தேவஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படியாகத் தேவனின் வார்த்தைகளால் தன் வார்த்தைகளை நிரப்புவதே, பிரசங்கிப்பவரின் பணியாகும்.
எஸ்றாவின் பணியில், லேவியர்களின் ஒத்தாசை இருந்தது: “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” (நெகேமியா 8:8). லேவியர்கள் கூட்டத்தினரிடையே கலந்து நின்றிருந்தார்கள் என்பதாகத் தெரிகிறது. எஸ்றா, நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியை வாசித்து, அதன் அர்த்தத்தை விவரிப்பார். பின்னர் லேவியர்கள், குடும்பங்களின் அளவிலான சிறு குழுக்களைத் தங்களைச் சுற்றிலும் கூடிவரச்செய்து, வாசிக்கப்பட்டதை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதைக் கேட்டறிவார்கள். அனைவரும் விளங்கிக்கொண்டு தெளிவடையும்போது, எஸ்றா வாசிப்பதைத் தொடர்வார் (8:7-8).
எஸ்றாவின் பிரசங்கத்துக்கும், கேள்விகள் எழுப்பித் தேவனின் வார்த்தையைப் புரிந்து பயன்படுத்துமாறு ஜனங்களுக்கு வாய்ப்பினை அளித்த சிறு குழுக்களின் அமைப்புக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. வாசிப்பது, விவரிப்பது மற்றும் வேதத்தைப் பயன்படுத்துவது ஆகியவையே, தேவஜனங்களைக் கட்டியெழுப்ப எஸ்றாவின் முக்கிய வியூகங்களாயிருந்தன.
எஸ்றா தேவனின் நியாயப்பிரமாணத்தை வாசித்தபோது, ஜனங்கள், தேவன் தங்களை அழைத்திருந்ததான ஜீவியத்தைவிட்டு எவ்வளவு தூரமாய்த் தாங்கள் விலகிப்போனார்கள் என்று உணர்ந்த காரணத்தால், துக்கித்து, அழுதார்கள். ஆகவே, எஸ்றா, நெகேமியா மற்றும் லேவியர்கள் ஆகியோர், “ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அழுதபடியால், ‘இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்் நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம்’ என்றார்கள்” (8:9).
நீங்கள் தேவனின் வார்த்தையைத் திறக்கும்போது, உங்கள் வாழ்வில் நீங்கள் அதற்குமுன்பு கண்டிராத பாவங்களைக் கண்டுபிடிப்பீர்கள். மேலும், எந்தக் காரியம் தேவனுடைய இருதயத்தைப் புண்படுத்துகிறதோ, அது உங்கள் இருதயத்தையும் புண்படுத்தும். தேவனுடைய வார்த்தையானது, இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானது. அது உருவக் குத்துகிறது, வெட்டுகிறது மற்றும் காயப்படுத்துகிறது (எபிரெயர் 4:12).
தேவனுடைய வார்த்தை, உங்களுடைய பாவத்தைக் குறித்து உணர்த்தும். ஆனால், அத்துடன் உங்களை அந்த நிலையிலேயே விட்டுவிடுவது தேவனுடைய நோக்கமல்ல. மாறாக, பாவத்தை உணர்த்துவது என்பது, எப்பொழுதுமே ஒரு முடிவைக் குறிக்கிறது. நாம் தேவனுடைய கிருபையை ஓர் ஆழமான விதத்தில் கொண்டாடத் தொடங்குவோம் என்பதே அந்த முடிவு. ஆகவேதான் நெகேமியா, “இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்,” என்று சொன்னார் (நெகேமியா 8:10).
நமது பெலன், நம்முடைய மகிழ்ச்சியில் அல்ல, மாறாகத் தேவனின் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். தேவன் உன்னதமான விதத்திலே, தம்மில்தாமே மகிழ்ந்திருக்கிறார். அவரே, “நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்” ஆனவர் (1 தீமோத்தேயு 6:15).
மகிழ்ச்சியற்றதொரு கடவுளுடன் ஐக்கியங்கொண்டிருப்பதில் யாதொரு சந்தோஷமும் இருக்க முடியாது. உங்களைக் குறித்துத் தேவன் ஒரு கோப முகத்துடனேயே இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அவருடன் ஐக்கியங்கொள்ள ஈர்க்கப்படமாட்டீர்கள். துக்ககரமான ஒரு நபருடன் இணைந்து நடக்க யார்தான் விரும்புவார்கள்?
தேவன் உங்களிடத்தில் நிரந்தரமானதொரு கோபத்துடனேயே இருக்கிறார் என நீங்கள் நினைத்தால், அவர் உங்களருகில் வரும்போதெல்லாம் நீங்கள் ஒளிந்துகொள்வீர்கள். ஆனால், தேவன் நித்தியானந்தமுள்ளவர் என்றும், அவர் தம்மில்தாமே உன்னதமான விதத்திலே மகிழ்ச்சியுள்ளவராயிருக்கிறார் என்றும் நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் அவருடன்கூட நடக்கிறதற்கு ஈர்க்கப்படுவீர்கள். அப்படி நீங்கள் செய்யும்போது, தேவனில் இருக்கிற மகிழ்ச்சியானது, உங்களுக்குள்ளும் பெருகுகிறதாயிருக்கும்.
இரண்டாம் நாளிலே, ஒவ்வொரு குடும்பத்தின் தலைவர்களும் கூடிவந்தனர். வேதாகமம் திரும்பவும் வாசிக்கப்பட்டது. அப்பொழுது, “நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்” (நெகேமியா 8:14).
இந்தப் பண்டிகை, ஒவ்வொரு குடும்பமும் தற்காலிகமானதொரு தங்குமிடத்தை, மரக்கிளைகளால் உருவாக்கி, அதில் ஏழு நாட்களுக்கு வசிப்பதைக் கொண்டிருந்ததொன்றாகும். அது, தேவன் எவ்வாறு தங்களது முற்பிதாக்களை வனாந்தரத்திலே பராமரித்துவந்தார் என்பதை, ஜனங்களுக்கு நினைவூட்டுகிற பண்டிகையாயிருந்தது. மேலும், இந்த உலகத்தில் அனைத்துமே தற்காலிகமானது என்றும், ஆபிரகாமைப்போல, அவர்கள் பரமதேசத்தை எதிர்பார்த்திருந்தார்கள் என்றும் அது அவர்களுக்கு நினைவூட்டுவதாகவும் இருந்தது.
அவர்கள் தன்னியல்பாகப் பிரதியுத்தரம் அளித்தவிதம் என்னைக் கவர்கிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிந்தார்கள்: “அப்படியே ஜனங்கள் . . . . அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் . . . . தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்” (8:16).
தேவனுடைய வார்த்தைக்கு இந்த ஜனங்களின் கீழ்ப்படிதலானது, பற்றிப் பரவியது! ஒட்டுமொத்தச் சபையாரும் கூடாரங்களைப்போட்டு, அவற்றில் குடியிருந்தார்கள். அதனால், “மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று” (8:17). நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகும்போது, மிகுந்த சந்தோஷம் உங்களுக்கு உண்டாயிருக்கும்.
தேவனுடைய வார்த்தை, எப்பொழுதுமே நமது பாவங்களில் நம்மைத் தாழ்மைப்படுத்தும்் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் காணும்படி நம்மை உயர்த்தும்் மற்றும் நாம் மிகுந்த சந்தோஷத்தைக் கண்டடையத்தக்கதாக, நம்மைக் கீழ்ப்படிதலின் ஒரு ஜீவியத்திற்குள் கொண்டுசெல்லும்.
நெகேமியாவின் காலத்திற்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளின் பின்னர், கூடாரங்களின் பண்டிகையைக் கொண்டாட, இயேசு எருசலேமுக்கு வந்தார் (யோவான் 7:2). அங்கே, “பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்,” என்றார் (யோவான் 7:37).
நீங்கள் தாகமாயிருக்கிறீர்கள் என்றால், அதற்கு, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் சமாதானத்தையும், திருப்தியையும், சந்தோஷத்தையும் இன்னும் நீங்கள் கண்டடையவில்லை என்பது பொருள். இயேசுவின் இந்த அழைப்பு உங்களுக்கானது. அவர், தம்மையே ஓர் ஊற்றாகக் குறிப்பிட்டுப் பேசுகிறார். அவர், “என்னிடத்தில் வந்து, பானம்பண்ணுங்கள்,” என்று சொல்கிறார். விசவாசமானது, வற்றாத நீரூற்றிலிருந்து பருகுவதைப் போன்றது. அதன் வழியாகத்தான் நீங்கள் கிறிஸ்துவையும், அவர் வழங்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறீர்கள்.
ஒரு மனித வாழ்க்கையை மாற்றக்கூடிய, ஒரு முழுச்சமுதாயத்தையே மறுசீரமைக்கக்கூடிய வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு. தேவனுடைய வார்த்தை போதிக்கப்படும்போது, தேவனுடைய சத்தம் கேட்கப்படுகிறது. வேதாகமம் வாசிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவது, நமது பாவங்களை வெளியரங்கமாக்கி, தேவனுடைய கிருபையை வெளிப்படுத்துகிறது. இது மனந்திரும்புதலுக்கும், கீழ்ப்படிதலுக்கும் வழிநடத்தும்போது, நீங்கள் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.
1. தேவன், பல்வேறு வரங்களையுடைய மக்களைத் தமக்கான பணியைச் செய்து முடிக்கக் கூட்டமாய்த் திரண்டுவரச்செய்வதை, எப்பொழுது, எங்கே கண்டிருக்கிறீர்கள்?
2. உங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக நீங்கள் வளர்ந்துவந்தபோது, உங்கள் பெற்றோர்கள் (அல்லது மற்றப் பெரியவர்கள்) ஆராதிப்பதையும், தேவனின் வார்த்தையோடு இடைபடுவதையும் பற்றி, உங்களது அனுபவம் என்ன?
3. இந்த அறிக்கைக்குப் பிரதியுத்தரம் கொடுங்கள்: “தேவனின் வார்த்தை திறக்கப்படும்போது, தேவனின் சத்தம் கேட்கப்படுகிறது.”
4. தேவனுடைய வார்த்தை, உங்களது பாவங்களைக் குறித்து உங்களுக்கு உணர்த்தியதை நீங்கள் எப்போது அனுபவித்திருக்கிறீர்கள்? அது உங்களைச் சந்தோஷத்திற்கு வழிநடத்தியதா? ஏன் அல்லது ஏன் இல்லை?
5. இயேசுவின், “என்னிடத்தில் வந்து, பானம்பண்ணுங்கள்,” என்ற அழைப்பு, இன்று உங்களுக்கு எப்படியானதாகத் தோன்றுகிறது?