2 இராஜாக்கள் 17:6-28
2 இராஜாக்கள் 17:6-28
6. ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
7. எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,
8. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.
9. செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
10. உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி,
11. கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
12. இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.
13. நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞான திருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்தும்,
14. அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,
15. அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்து விட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,
16. தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.
17. அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.
18. ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று.
19. யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.
20. ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
21. இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.
22. அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
23. கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
24. அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.
25. அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.
26. அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.
27. அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
28. அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
கர்மேல் பர்வதத்தின்மேல், தேவன் தம்மை அக்கினியின் மூலம் வெளிப்படுத்தியபோதிலும், தேவஜனங்கள் தொடர்ந்து விக்கிரகங்களை ஆராதித்துக்கொண்டுதான் இருந்தார்கள். வடதேசத்தின் அனைத்து ராஜாக்களுமே, தேவனுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்தார்கள். அதன் விளைவாகத் தேவன், எதிரிகள் வடதேசத்து ராஜ்யத்தைக் கைப்பற்ற அனுமதித்தார். அசீரியாவின் ராஜா, வடதேசத்து மக்கள் அனைவரையும் நாடுகடத்தினான். அதன் பிறகு, அவன் அவ்விடத்தில் பிற தேசத்து மக்களைக் குடியேற்றினான். தேவனோ, அனைத்து மக்களையும் ஆசீர்வதிக்கிறதான தமது நோக்கத்தை நடப்பித்துக்கொண்டிருந்தார்.
பாவம் என்பது, நமது கலாசாரத்தில் அநேக ஜனங்களுக்கு, ஏதோ அதிகப்படியான சாக்லேட்டுகள் சாப்பிடுவதைப்போன்று, முற்றிலும் ஏற்புடையதான, சிறிதளவுக்கு சுகபோகங்களைக் கொடுக்கக்கூடிய, காரியங்களை விவரிக்கும் வார்த்தையாகிவிட்டது.
ஒரு ஞாயிறன்று காலையில், முப்பத்தைந்து வயது நிரம்பிய ஒரு குடும்பத்தலைவர், தன் வீட்டிலிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நாம் அவரை, ராபர்ட் என்று பெயரிட்டுக்கொள்வோம். அவர் ஞாயிறு செய்தித்தாளை வாசித்து முடித்துவிட்டு, தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்ததான, அவரது வீட்டின் அடித்தளத்தைச் சுத்தம் செய்யும் பணியை அன்று செய்து முடித்துவிடுவது என்று தீர்மானிக்கிறார். அங்கிருக்கும் பெட்டிகளையெல்லாம் வகைப்படுத்தி அடுக்கும்போது, தன் பாட்டியினுடையதான, பழைய, குடும்ப வேதாகமப் புத்தகத்தைப் பார்க்க நேரிடுகிறது. அவருக்குள் ஏதோ ஓர் உணர்வு, அவர் அதைத் தூக்கி எறிந்துவிடக் கூடாதெனக் கூறுகிறது் அது மிகப் பழைமையானதொன்றுதான்் அத்துடன், அதன் அநேகப் பக்கங்களில், அவரது பாட்டியின் நடுக்கமான கையெழுத்தில் எழுதப்பட்ட குறிப்புக்கள் உள்ளன. அவர் அதைத் திறந்து, “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோத்தேயு 1:15), என்று இருப்பதை வாசிக்கிறார்.
இதை ஏனோ ராபர்ட் மிக விசித்திரமான ஒன்றாகக் காண்கிறார். இயேசு, மிகுந்த சுகபோகமாக வாழ்பவர்களை இரட்சிக்க வந்தார்! ராபர்ட், கேக் ஒன்றைச் சுவைத்து மகிழ விரும்புகிறார். அது கூடாதென்றும் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் உடற்பயிற்சியெல்லாம் செய்து, பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார். ஆகவே, அவரை எதிலிருந்து இரட்சிக்கவேண்டும்? அவர் மேலும் சில பக்கங்களைப் புரட்டி, பாவம் செய்த ஜனங்களின் மீது தேவன் கோபங்கொண்டார் (எபிரெயர் 3:10), என்று வாசிக்கிறார். இதில் ஏதும் அர்த்தம் இருப்பதாக அவர் உணரவில்லை. அவர் மனதிற்குள் பல்வேறு கேள்விகள் எழும்பின. பாவம் ஏன் தேவனைக் கோபப்படுத்தவேண்டும்? ஒரு சிறிதளவு இன்பத்தை அனுபவிக்கும் ஜனங்களிடம் கோபங்கொள்பவர் எப்படிப்பட்ட தேவனாக இருப்பார்?
எனவே, ஞாயிறன்று அவரது காலை நேரத்தை வீட்டில் செலவிடத் தீர்மானித்தது சரியானதே என்று மீண்டும் உறுதிசெய்துகொண்டவராய், ராபர்ட் வேதாகமத்தை மூடிவிடுகிறார். அவர் தன் மனைவி மற்றும் தன் பிள்ளைகளை நேசிக்கிறார். ஆனால், அவரது பாட்டியார் ஏன் வேதாகமத்தை மிகவும் அற்புதமானதொரு புத்தகமாக நினைத்தார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எப்பொழுதுமே பாவமானது, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று தோன்றும் விதங்களில் மறுவரையறை செய்யப்படுகிறது. ஆனால், பாவம் ஒன்றும் தீங்கற்ற இன்பம் அல்ல. பாவமானது, தேவனுக்கு விரோதமான முரட்டாட்டமாகும். அத்துடன், பாவம்தான் உங்களது மிகப்பெரிய பிரச்னை என்பதை நீங்கள் காணும்போது, இயேசு உங்களுக்குத் தேவைப்படுவதை நீங்கள் கண்டுணர்வீர்கள்.
பாவம், அழிவுக்கேதுவானதொரு சக்தியாகும். அது ஒரு வாழ்க்கையை, ஒரு குடும்பத்தை அல்லது ஒரு சபையை அழித்துவிட முடியும். அது எவ்வாறு ஒரு தேசத்தையே அழித்தது என்பதை, 2 இராஜாக்கள் 17 நமக்குக் கூறுகிறது. சாலொமோனின் மரணத்திற்குப் பின்பு, வடதேசத்திலிருந்த பத்துக் கோத்திரங்களும், தாவீதின் ராஜ வம்சாவளிக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணியிருந்த ஆசீர்வாதத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு, தென்தேசத்திலிருந்த இரண்டு கோத்திரங்களிடமிருந்து பிரிந்து, தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார்கள். வடதேசத்தில், பத்தொன்பது ராஜாக்கள் இருந்தார்கள். அவர்கள் அத்தனைபேரும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்தார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, வடதேசத்தின் ராஜ்யத்தை எதிரிகள் கைப்பற்றத் தேவன் அனுமதித்தார். ஜனங்கள் நாடுகடத்தப்பட்டு, அந்தப் பகுதி முழுவதுமே பாழ்நிலமாக மாறிவிட்டது.
வடதேசத்தின் பத்துக் கோத்திரங்களின் முதல் ராஜா, அவனது ஜனங்கள் தேவனை ஆராதிக்க எருசலேமுக்குப் போகக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தான். எனவே அவன், தாண் மற்றும் பெத்தேலில் தனது சொந்த மதத்தை நிறுவினான். அங்கு அவன் இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளை அமைத்தான்.
மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த மதமானது, பணக்காரர்கள் செழுமையுடன் வாழ்ந்த கலாசாரத்திற்கு வழிவகுத்தது, மற்றும் ஏழைகளை முற்றிலும் புறக்கணித்தது. வீதிகள் வன்முறையால் நிரம்பியிருந்தன. தேவஜனங்கள் தங்களுக்குத் தேவைப்படாத குழந்தைகளை, நெருப்பில் சுட்டெரிக்கப்பட ஒப்புக்கொடுத்துவிடும் ஒரு அருவருப்பான பழக்கத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும், வன்முறையை, கொலையை, பேராசையை அல்லது குழந்தைகளின் மீதான கொடூரத்தைக்கூடத் தேவன் தமது ஜனங்களுக்கெதிரான முதல் குற்றச்சாட்டாக வைக்கவில்லை. தேவனின் முதல் முறையீடு என்னவெனில், தமது ஜனங்கள் அந்நிய தேவர்களைத் தொழுதார்கள் என்பதேயாகும் (2 இராஜாக்கள் 17:7).
முதல் நான்கு கட்டளைகள் அனைத்தும் தேவனைப் பற்றியவை மட்டுமே: “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். . . . உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. . . . ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” (யாத்திராகமம் 20:3-8). தேவனை மையப்படுத்திய வாழ்வே, நமது முதல் அழைப்பாகும். இதை வேதாகமம், “தேவபக்தி” (எ.கா., 1 தீமோத்தேயு 4:7), என்று குறிப்பிடுகிறது. மேலும் இந்த முன்னுரிமையானது, இயேசுவின் போதனையின் மூலமாக உறுதிப்படுத்தப்படுகிறது. பிரதான கற்பனையைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, இயேசு: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,” என்று பதிலளித்தார் (மத்தேயு 22:37).
முதல் நான்கு கட்டளைகளில் நம்மைத் தேவபக்திக்கு அழைத்தபின்பு தேவன், மற்றவர்களுடனான நமது உறவில், நீதியோடிருக்க அழைக்கிறார்: “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. . . . கொலை செய்யாதிருப்பாயாக. விபசாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. . . . பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:12-17).
மற்றவர்களுடனான நமது உறவுகளில், அவருடைய அன்பைப் பிரதிபலிக்கத் தேவன் நம்மை அழைக்கிறார். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:39), என்கிற இரண்டாவது கற்பனையைச் சொன்னபோது, கிறிஸ்து இதை உறுதிப்படுத்தினார்.
நீதியானது, தேவபக்தியின் அஸ்திபாரங்களின்மேல் கட்டியெழுப்பப்படுகிறது. ஆகவே, ஜனங்கள் தேவனைப் புறக்கணிக்கும்போது, நீதி அவர்கள் கைகளிலிருந்து எட்டாத தூரத்திற்கு நழுவிவிடுகிறது. ஜீவனுள்ள தேவனிடமிருந்து ஒரு தேசம் வழி விலகும்போது, அதன் விளைவாக ஒழுக்க நெறிகளில் குழப்பம் ஏற்பட்டுப் பாவமும், பொல்லாப்பும் கட்டவிழ்த்துவிடப்படும்.
வடதேசத்தின் ராஜ்யத்தில், ஜனங்கள் தேவனைப் புறக்கணித்ததுடன் பாவம் தொடங்கியது. அவர்கள் தங்கள் குழந்தைகளைத் தீக்கிரையாக்கியதுடன் அது நிறைவடைந்தது. வேதாகமத்தின் தேவனை அவர்கள் புறக்கணித்ததே, அவர்கள் வேதாகமத்தின் ஒழுக்க நெறிகளை இழந்துபோனதன் காரணமாகும். தேவபக்தி இல்லாமல், நீங்கள் நீதியுடையவர்களாயிருக்க முடியாது.
ஞாயிறன்று காலையில் தனது வீட்டின் அடித்தளத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த நமது நண்பர் ராபர்ட், தனது குடும்பம் நீதியின் பலன்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புகிறார். தனது திருமணம் வெற்றிகரமானதாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறார். அத்துடன், தன்னுடன் வியாபாரத்தில் ஈடுபடுவோர், நேர்மையோடிருக்கவும், தங்கள் வாக்கைக் காப்பாற்றவும் வேண்டுமென்றும் விரும்புகிறார். மக்கள் நல அலுவலர்கள் பொய் சொல்லக் கூடாதென்று எதிர்பார்ப்பதுடன், தன் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்.
ராபர்ட்டுக்கு, நீதியின் அனைத்துப் பலன்களும் வேண்டும். ஆனால், அவருக்குத் தேவன் வேண்டாம். அதுதான் அவரது முதலாவதும், மிகப்பெரியதுமான பாவம். ராபர்ட், தேவன் இல்லாதவராயிருக்கிறார். அவர் தனக்கும், தன் குடும்பத்திற்கும் சிறந்தவைகளை நாடும், ஒரு வெற்றிகரமான குடும்பத் தலைவன். ஆனால், அவரது வாழ்வில் தேவனுக்கு இடமே இல்லை.
நமது முதல் உள்ளுணர்வு தேவனை நேசிப்பதல்ல. மாறாக, அவரை வெறுப்பதேயாகும். அவரது வல்லமை நமது சுதந்திரத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவும், அவரது பரிசுத்தம் நமது பெருமையைப் புண்படுத்துவதாயும் இருக்கிறது. தேவன் நமது இருதயங்களை மாற்றாவிடில், நாம் அவரை எப்பொழுதுமே வெறுப்போம். பாவம் நிறைந்த சிந்தை, தேவனுக்கு விரோதமான பகை (ரோமர் 8:7).
ஆனால், தேவன் அளவற்ற பொறுமையுள்ளவர். அவர், இருநூறு ஆண்டுகளுக்கு நியாயத்தீர்ப்பை நிறுத்திவைத்துக்கொண்டு, தமது ஜனங்களைத் தேவபக்திக்கும், நீதிக்கும் திரும்ப அழைக்கும்படி, தீர்க்கதரிசிகளை அனுப்பினார். ஆனால், அவர்கள் செவிகொடுக்கவில்லை (2 இராஜாக்கள் 17:14). மாறாக, “கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்தார்கள்” (17:11).
“கோபமுண்டாக்குதல்” என்னும் வார்த்தையைக் கவனியுங்கள். கோபம், தேவனின் தன்மையில் காணப்படவில்லை. தேவன் எப்பொழுதுமே பரிசுத்தர். அவர் எப்பொழுதுமே அன்பானவர். ஆனால், அவர் எப்பொழுதுமே கோபமானவர் அல்ல. பண்டைய புராணக் கடவுள்கள், இயல்பிலேயே கோபமுள்ளவைகளாயும், எப்பொழுதும் எரிந்து, புகைகிறவைகளாயும், தொடர்ந்து சாந்தப்படுத்தப்பட வேண்டியவைகளாயுமே இருந்தன. அவற்றைச் சமாதானப்படுத்தப் படையல்கள் செலுத்தப்பட்டபோதிலும், அவற்றின் கோபம் ஒருபோதும் ஒழிந்தபாடில்லை. அந்தக் கோபம் ஒருபோதும் தீர்க்கப்படவில்லை் அது எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் வேதாகமத்தின் தேவன், முற்றிலும் வேறுபட்டவர்: “கர்த்தர் . . . . நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்” (சங்கீதம் 103:8).
கோபங்கொள்வது என்பது, தேவனின் தன்மையல்ல. ஆனால், அவர் கோபங்கொள்ளத் தூண்டப்பட முடியும். இதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். மற்றவர்கள் தவறாக நடத்தப்படும்போது, சும்மா நின்று வேடிக்கை பார்ப்பவர்களை நாம் போற்றுவதில்லை. ஜனங்கள் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டுக் கொல்லும்போது, அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய ஒரு கடவுளை, நாம் எப்படித் தொழுதுகொள்ள முடியும்?
தேவன், தமது கோபம் தூண்டப்பட்டபோது, என்ன செய்கிறார் என்று கவனியுங்கள்: “ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்” (2 இராஜாக்கள் 17:18). இது, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் குறிப்பதாகும். வேதாகமக் கதையின் முடிவில், இதுவரை வாழ்ந்த ஒவ்வொருவருமே, தேவனுக்கு முன்பாக நிற்பார்கள் என்றும், தேவபக்தியற்றவர்களும், அநீதியானவர்களும், தேவசமூகத்திலிருந்து அகற்றப்படுவார்கள் என்றும் நமக்குக் கூறப்படுகிறது. அது தேவனின் ஆசீர்வாதத்துக்குப் புறம்பான நித்திய நரகமாகும்.
தேவன் தம்முடைய ஜனங்களைத் தம் பிரசன்னத்திலிருந்து நீக்கியபோது, அவர் ஆசீர்வதிப்பதாக வாக்களித்த தேசம், மக்கள் வசிக்காமலும், பாழானதாகவும் இருந்தது. ஆனால் அசீரியா ராஜா, தனது சாம்ராஜ்யம் எங்கிலுமிருந்து ஜனங்களை வரப்பண்ணி, அவர்களை அத்தேசத்திலே குடியேற்றினான் (2 இராஜாக்கள் 17:24).
இப்படிக் குடியேறியவர்கள், எதிர்பாராத ஒரு பிரச்னையை எதிர்கொண்டார்கள். அவர்களில் அநேகர், சிங்கங்களால் தாக்கப்பட்டனர். இந்தப் பிரச்னையைக் குறித்த செய்தி அசீரியா ராஜாவின் செவிகளை எட்டியபோது அவன், அங்கு ஏற்கெனவே வாழ்ந்துவந்திருந்த ஜனங்களின் மத்தியிலிருந்து ஓர் ஆசாரியனை அழைத்து வருவதே, இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கச் சிறந்த வழியாயிருக்கும் என்று நினைத்தான். இந்தப் பிரச்னையை ஏற்படுத்தியது எந்தக் கடவுளானாலும், அவரைச் சமாதானப்படுத்த என்ன செய்யவேண்டுமென்று, அவ்விடத்தைச் சேர்ந்த ஓர் ஆசாரியன் அறிந்திருப்பான் என்று அவன் கருதினான். ஆகவே, ஒரு யுூத ஆசாரியன் இஸ்ரவேலுக்குத் திருப்பி அனுப்பப்படுமாறு அவன் உத்தரவிட்டான். அப்படியே, “அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்” (17:28).
இங்குதான் தேவகிருபை செயலாற்றியது. அவர், தாம் ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணிய இடத்திற்குள், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலுமிருந்து, ஜனங்களைக் கொண்டுவந்ததுடன், இந்த ஜனங்கள் தம்மை அறிந்துகொள்ளத்தக்கதாக, தமது ஆசாரியர்களுள் ஒருவனையும் அங்கே அனுப்பினார்.
பல தேசங்களிலிருந்தும் வந்த ஜனங்கள், சத்தியத்தை அறிகிற அறிவுக்குள் நடத்தப்பட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் சொந்தத் தேவர்களையும் தொடர்ந்து வணங்கிவந்த காரணத்தினால், காலப்போக்கில் குழப்பத்திற்கு உள்ளாயினர் (17:29). இந்த ஜனங்கள், சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இயேசு சமாரியாவின் வழியாய்க் கடந்து சென்றபோது (யோவான் 4:4), அங்கே தேவபக்தியற்றவளும், நேர்மையற்றவளுமான ஒரு ஸ்திரீயைச் சந்தித்தார். இயேசு, அவளுடைய பாவங்கள் மீது தேவன் கோபமாயிருக்கிறார் என்று பேச்சை ஆரம்பிக்கவில்லை. மாறாக, அவளைத் தேவனுடனான ஒரு சரியான உறவிற்குள் வழிநடத்துவதற்கு ஏதுவான விதங்களில் தனது பேச்சை ஆரம்பித்தார். தேவன், “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுகிறவர்களை” விரும்பித் தேடுகிறார் (யோவான் 4:23), என்று அவர் அவளிடம் கூறினார். தேவபக்தியே நீதிக்கேதுவான வேராயிருக்கிறது. மேலும், தேவனை அறிந்திராத, மற்றும் நேசிக்காத ஒரு நபரிடம், நீதியைப் பற்றிப் பேசுவதில் பெரிதாக எந்தப் பலனும் இல்லை. தேவனை அறிவதைப் பற்றிப் பேசுவதன் மூலம் இயேசு, சமாரிய ஸ்திரீயிடம் பேச்சைத் தொடங்கினார். காரணம், நிலைவரமான மாற்றம் தொடங்குமிடம் அதுதான்.
நமது தேவபக்தியின்மையையும், நீதிக்கேட்டையும் சரிப்படுத்தவே கிறிஸ்து மரித்தார். சிலுவையின் மீது, குமாரன்தான் ஏதோ தேவனற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதைப்போலவும், அவர்தான் அனைத்துவித அநீதிக்குமான குற்றச்சாட்டுக்கு உரியவர்போலவும், பிதாவானவர் அவரை நடத்தினார். பிதாவானவர், தமது குமாரனிடமிருந்து திரும்பிக்கொண்டார். குமாரனானவர், தேவசமூகத்திலிருந்து புறம்பாக்கப்பட்டார். அதனால்தான் அவர், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயு 27:46), என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்.
கிறிஸ்து, “நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (1 பேதுரு 3:18). நீங்கள் விசுவாசத்துடனும், மனந்திரும்புதலுடனும் அவரிடம் வருவீர்களானால், அவர் உங்களைத் தேவபக்தியுள்ளதொரு வாழ்விற்குள் வழிநடத்துவார். அது, உங்களது நீதியின் பாதைக்குத் தொடக்கமாயிருக்கும்.
தேவன் நம்மைத் தேவபக்திக்கும், நீதிக்கும் அழைக்கிறார். நாம் தேவனில் முழு இருதயத்தோடும் அன்புகூரவும், நம்மைப்போல் நம் அயலாரை நேசிக்கவும் வேண்டும். தேவனைக் குறித்த அறிவை நாம் இழந்துவிடும்போது, ஒழுக்கநெறிகள் நிலைநிறுத்தப்பட முடியாது. ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, அவர் நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கி, நம்்மை நீதியின் பாதைகளில் நடத்துவார்.
1. பாவத்தைக் குறித்து நீங்கள் புரிந்துகொண்டுவருவது என்ன? உங்கள் சொந்த வாழ்வில், ஏதேனும் பாவம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
2. தேவபக்திக்கும், நீதிக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன?
3. தேவபக்தியைப் பின்தொடர்வது அல்லது நீதியைப் பின்பற்றுவது ஆகிய இவற்றுள், உங்களது சிறந்த முன்னுரிமை எதற்கு? ஏன்?
4. தேவன், கோபங்கொள்ளத் தூண்டப்படுகிறார் அல்லது கோபம், தேவனின் தன்மைகளில் ஒன்று என்பதில் நீங்கள் காணும் வேறுபாடு என்ன?
5. நீங்கள் இன்னும் அதிக நீதியுள்ள நபராக மாற விரும்பினால், இயேசு உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்?