1 சாமுவேல் 8:1-22
1. சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
2. அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
3. ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
4. அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
5. இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
6. எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
7. அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.
8. நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.
9. இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
10. அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
11. உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
12. ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
13. உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
14. உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
15. உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
16. உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
17. உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
18. நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
19. ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
20. சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
21. சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.
22. கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.
ஒரு தொடர்ச்சியான தலைமை இல்லாதிருந்ததே நியாயாதிபதிகளின் பலவீனம் ஆகும். மற்ற தேசங்கள் ராஜாக்களையும், நிலையான சேனைகளையும் கொண்டிருந்தன. அத்துடன், ஒரு ராஜா மரித்தபோது, அவரது வாரிசு உடனடியாக முடிசூட்டப்பட்டார். ஆனால், நெருக்கடியான நேரங்களில் தம்மை நோக்கி ஜனங்கள் கூப்பிட்டபோது, தேவன்தாம் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார். ஆகவே, ஜனங்கள் எப்போதும் தேவனையே சார்ந்திருந்தார்கள் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. ஏன் மற்ற அனைவரையும்போல் இஸ்ரவேலும் ஸ்திரத்தன்மையையும், தொடர்ச்சியையும் பெற்றிருக்க முடியவில்லை?
இஸ்ரவேல் இராணுவம் முன்னெடுத்த யுத்தங்களைப் பற்றி ஆராயும்படி நீங்கள் ஒரு தலைமை இராணுவத் தளபதியிடம் கேட்டிருந்தால், அவர், “இந்த யுத்தங்களில் எதுவுமே நம்பும்படியாக இல்லை,” என்றுதான் கூறியிருப்பார். தேவனோ, தமது ஜனங்கள் குறைவான பயிற்சியும், தளவாடங்களும், எண்ணிக்கையும் உள்ளவர்களாய் இருந்தபோதிலும், அவர்களுக்கு வெற்றியளித்தார்.
எடுத்துக்காட்டாக, அரணாண பட்டணமாகிய எரிகோவுக்கு வரும்போது, தேவன் யோசுவாவிடம், எக்காளங்களைத் தொனித்தபடி ஏழு முறைகள் பட்டணத்தைச் சுற்றிவரவேண்டுமென்று கூறினார். தேவஜனங்கள் இதைச் செய்தபோது, பட்டணத்தின் மதில்கள் இடிந்து விழுந்தன. நிச்சயமாகவே, இராணுவ வரலாற்றுக் குறிப்பேடுகளில் காணும் மிக அபூர்வமான வெற்றிகளில் ஒன்று இது!
அதையடுத்து நியாயாதிபதிகளின் புத்தகத்தில், மீதியானியருடன் யுத்தம்பண்ண, 32,000 பேர்கொண்ட ஒரு சேனையை எழுப்பிய கிதியோனைப் பற்றித் தேவன் நமக்குக் கூறுகிறார். தேவன் அந்த எண்ணிக்கையை, மிகவும் அதிகம் என்றார். ஆகவே, கிதியோன் அந்தத் தொகையை முந்நூறாகக் குறைத்தான். அவர்கள் எதிரியின் பாளையத்துக்குள், வெறும் தீவட்டிகளோடும், பானைகளோடும் மற்றும் எக்காளங்களோடும் பிரவேசித்தார்கள். அங்கே மீதியானியர் மத்தியில் தேவன குழப்பத்தை உண்டாக்கினார். அவர்கள் பயந்து, ஓடிப்போனார்கள்.
இஸ்ரவேலின் வெற்றிகள் பெலத்தினாலோ, பராக்கிரமத்தினாலோ உண்டாகவில்லை. ஆனால், தேவ ஆவியானவர் இடைபட்டதாலேயே உண்டாகின. அவர்களை வெற்றிக்கு நேராய் நடத்துகிறவர் தாமே என்பதை, ஆண்டவர் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக்கொண்டே வந்தார். ஆனால், தேவஜனங்கள் திருப்திப்படவில்லை.
தேவன் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தார். ஒரு ராஜா, தன் ஜனங்களுக்குச் செய்யக்கூடியதான அனைத்தையும், அதற்கு மேலும்கூடச் செய்தார். ஆனால், தேவஜனங்கள் அவரை மாத்திரம் சார்ந்துகொள்ள விரும்பவில்லை. அல்லது, தேவன் தலைவர்களை எழுப்ப, அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்கள் தங்களைத் தொடர்ச்சியாக வழிநடத்த, இரத்தமும்-மாம்சமுமான ஒரு நபரை விரும்பினார்கள்.
கடைசியாகச் சபையின் மூப்பர்கள், நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலினிடத்தில் வந்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று அவனிடம் கேட்டார்கள் (1 சாமுவேல் 8:5). இந்த வேண்டுகோள் தேவனுக்குப் பிரியமானதாயில்லை. கர்த்தர் சாமுவேலை நோக்கி, “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்,” என்று சொன்னார் (1 சாமுவேல் 8:7). ஜனங்கள் ஒரு ராஜாவைக் கேட்டபோது, அவர்கள் நேரடியாகக் கர்த்தரைச் சார்ந்திருந்த ஒரு விசுவாச வாழ்க்கையைவிட்டுத் தூரமாய் விலகினார்கள். ஆனால், தேவன் அவர்களது போக்கிலேயே அவர்களை விட்டுவிட்டார்.
தீர்மானங்களின் முக்கியத்துவம் தேவஜனங்கள் ஒரு மோசமான தீர்மானத்தைச் செய்தார்கள். ஒரு ராஜாவுக்கான அவர்களது விருப்பம் தேவனுக்குப் பிரியமானதாயில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன், சாமுவேல் அதன் பின்விளைவுகளைக் குறித்தும் அவர்களை எச்சரித்தான்: ஒரு ராஜாவானவன், ஜனங்களின் குமாரரையெல்லாம் யுத்தத்திற்கு அனுப்புவான். அவர்களைத் தனது வயல்நிலங்களிலும், அரண்மனையிலும் பணிவிடை செய்யவைப்பான். அவனது சமையலறையில் சமையல்காரிகளாக இருக்கும்படி அவர்களின் குமாரத்திகளை நியமிப்பான். அவர்களது நிலங்களைக் கைப்பற்றுவான். அவர்களுடைய பயிர்களுக்கும், மந்தைகளுக்கும் வரிவிதிப்பான். “நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார்” (8:18).
சாமுவேல் இதைவிட வன்மையானதோர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்க முடியாது. ஆனாலும், தேவஜனங்கள் கேட்க மனதாயில்லை. மாறாக அவர்கள், “அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும், சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்” என்றார்கள் (8:19-20). அவர்கள் மனதளவில் ஏற்கெனவே உறுதி செய்துகொண்டார்கள். ஆகவே, தேவனும் அவர்கள் கேட்டதையே அவர்களுக்குக் கொடுத்தார்.
தவறான தீர்மானங்கள் எப்போதுமே வேதனைமிகுந்த பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால், தேவன் சர்வ வல்லமையுள்ளவராய் இருக்கிறார். அதாவது, என்னதான் மோசமான தீர்மானங்களாயினும், அவை அவருடைய கிருபைக்கு அப்பால் நம்மை நிறுத்திவிட முடியாது. நாமனைவருமே, நம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில், தீய தீர்மானங்களைச் செய்துவிடுகிறோம். மேலும், சிலவேளைகளில் நாம் தொடர்ந்து அதற்காக மனவருத்தத்தோடே வாழ்கிறோம். விரக்தியான ஒரு தொழில் முறை, ஏமாற்றமான ஒரு திருமண வாழ்க்கை அல்லது, “நான் மட்டும் அதைச் செய்யாதிருந்தால்…” என்று உங்களைப் பின்னோக்கிப் பார்த்துச் சொல்லவைக்கும், அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவு, ஆகியவை உங்களது அனுபவமாக இருக்கலாம்.
நற்செய்தி என்னவெனில், தேவனால் தவறான தீர்மானங்களைச் சீர்ப்படுத்த முடியும். தேவனின் கிருபைக்கு அப்பால் உங்களை நிறுத்தக்கூடிய பாவமும் இல்லை, தேவனின் ஒத்தாசைக்கு அப்பால் உங்களைத் தள்ளக்கூடிய தீர்மானங்களும் இல்லை.
தேவன், தமது ஜனங்கள் ஓர் அரசனை வேண்டிக் கேட்பார்கள் என்று அறிந்திருந்தார். ஆகவே, உபாகமப் புத்தகத்திலேயே, தமது ஜனங்களை வழிநடத்தவேண்டிய நபரைப் பற்றிய தகுதி விவரங்களை ஏற்கெனவே அளித்துவிட்டார்.
முதலாவது, ராஜா தேவனால் அபிஷேகம்பண்ணப்படவேண்டும். “உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்” (உபாகமம் 17:5). இதற்கு இணையான புதிய ஏற்பாட்டுப் பகுதி, திருச்சபையில் முதலாவது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிற, அப்போஸ்தலர் 6-ல் இருக்கிறது. அங்கே திருச்சபையானது, பரிசுத்தஆவியால் நிறைந்திருக்கிற நபர்களைத் தெரிந்துகொள்ளும்படி கூறப்படுகிறது (அப்போஸ்தலர் 6:3). கிறிஸ்தவத் தலைவர்கள், தங்கள் வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தின் முத்திரையைக் கொண்டிருக்கவேண்டும். இதுவே முதன்மையான தகுதி.
இரண்டாவது, ராஜா தேவஜனங்களைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும். “உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது” (உபாகமம் 17:5). மீண்டும் அப்போஸ்தலர் 6-ல், அப்போஸ்தலர்கள் விசுவாசிகளிடம், தலைவர்களைத் தங்களிலேயே தெரிந்துகொள்ளும்படிக் கூறினார்கள் (6:3). தேவஜனங்கள், தங்கள் சொந்தத் திருச்சபையில் நற்சாட்சி பெற்றவர்களையே தலைவர்களாகத் தேடவேண்டும்.
மூன்றாவது, ராஜா விசுவாசத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். “அவன் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்” (உபாகமம் 17:16). ராஜாவானவன், விசுவாசத்திற்கு முன்மாதிரியாக நடக்கவேண்டும். பிற தேசங்கள் இரதங்களிலும், குதிரைகளிலும் விசுவாசத்தை வைத்தன. ஆனால், தேவஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திலேயே விசுவாசம் வைக்கவேண்டியவர்களாயிருந்தார்கள் (சங்கீதம் 20:7). இது புதிய ஏற்பாட்டில் பிரதிபலிப்பதை நாம் மீண்டும் காண்கிறோம். திருச்சபை முதலாவது கண்காணிப்பாளர்களை நியமித்தபோது, அவர்கள் ஸ்தேவானைத் தெரிந்துகொண்டார்கள். காரணம், அவன் “விசுவாசம் நிறைந்தவனாய்” இருந்தான் (அப்போஸ்தலர் 6:5). தேவஜனங்களுக்குள்ளான தலைமைத்துவம், எப்பொழுதுமே ஜீவனுள்ள தேவனை விசுவாசிப்போரின் கரங்களில்தான் இருக்கவேண்டும்.
நான்காவது, ராஜா உத்தமனாயிருக்கவேண்டும். “அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்” (உபாகமம் 17:17). இதே கொள்கை, புதிய ஏற்பாட்டிலும் பிரதிபலிக்கப்படுகிறது: மூப்பனானவன் “ஒரே மனைவியை உடைய புருஷனாய்” இருக்கவேண்டும் (1 தீமோத்தேயு 3:2). தேவனிடத்திலான ஒரு கிறிஸ்தவத் தலைவனின் உத்தமம், அவனது மனைவியிடத்தில் அவன் உத்தமமாயிருப்பதில் வெளிப்படுத்தப்படும்.
ஐந்தாவது, ராஜா பேராசைக்காரனாக இருக்கக்கூடாது. “வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்” (உபாகமம் 17:17). தேவஜனங்களுக்குள் தலைவனாயிருப்பவன், தனக்கே சுகபோகங்களைப் பெருக்கிக்கொள்ளத் தனது பதவியைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பணிவிடைக்காரனாவான். அதேபோல், புதிய ஏற்பாட்டில் பேதுரு, பணத்தின்மட்டில் பேராசைகொள்ளாமல், மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், உற்சாக மனதோடு ஊழியம் செய்யவேண்டுமென்று, மேய்ப்பர்களுக்கும், மூப்பர்களுக்கும் அறிவுறுத்துகிறான் (1 பேதுரு 5:2-3).
ஆறாவது, ராஜா வேதாகமத்தைக் கற்றுத் தேறினவனாயிருக்கவேண்டும். “அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது…. இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு… நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்” (உபாகமம் 17:18-19). இதன் அர்த்தம், ஒரு ராஜாவானவன், உபாகமப் புத்தகம் முழுவதையும் தனக்கென்று சொந்தமாக ஒரு பிரதி எழுதிவைத்துக்கொண்டு, அதைத் தினந்தோறும் வாசிக்கவேண்டியதே அவனது முதல் கடமை என்பதாகும்! அதுபோலவே, திருச்சபையின் கண்காணிப்பாளர்கள், “விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்” (1 தீமோத்தேயு 3:9). தேவஜனங்களுக்குள்ளே தலைவர்களானவர்கள், தேவனுடைய வசனத்தைக் கற்று, கனம்பண்ணி, அதற்குக் கீழ்ப்படியவேண்டும்.
ஏழாவது, ராஜா தாழ்மையுள்ளவனாய் இருக்கவேண்டும். ராஜாவினுடைய “இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும்…” (உபாகமம் 17:18), இருக்கவேண்டும். அவ்வாறாகவே, மேய்ப்பர்களும், மூப்பர்களும், தேவனுடைய மந்தையை, “இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும்” (1 பேதுரு 5:3), ஊழியம் செய்யவேண்டும்.
தலைவர்களுக்கான இந்தத் தகுதி விவரம், போதகர்கள், மூப்பர்கள், ஊழியத் தலைவர்கள் மற்றும் அவர்களை நியமிப்பதில் பங்கேற்கும் அனைவருக்குமே இன்றியமையாததாகும். அது ஊழியத்துக்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், தேவ சித்தம் நிறைவேறுவதைக் காண வாஞ்சிக்கும் ஒவ்வொருவருக்குமே உரியதான தகுதி விவரம் ஆகும்.
நீங்கள் தேவனால் பயன்படுத்தப்பட விரும்பினால், அவரது ஆவியானவரின் அபிஷேகத்தை நாடித் தேடுங்கள். தேவஜனங்களுக்காக உங்களை அர்ப்பணித்துக்கொண்டு, எல்லாவற்றிலும் தேவனை விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களது அனைத்துப் பொறுப்புக்களிலும், குறிப்பாக, உங்களது திருமண வாழ்வில், நம்பகத்தன்மையை வளர்த்தெடுங்கள். பணத்தின் மீதான தேடுதலைப் பலிபீடத்தின் மீது வைத்துவிட்டு, தேவன் உங்களுக்குக் கொடுப்பது எதுவாயினும், அதை மன சந்தோஷத்துடன் பெற்றுக்கொள்ளத் தீர்மானியுங்கள். சுவிசேஷத்தின் மையப்பொருளான சத்தியங்களைக் குறித்த உங்களது கொள்கை உறுதிப்பாடுகளில் தெள்ளத்தெளிவாக இருப்பதுடன், உங்கள் தேவனோடு நீங்கள் தாழ்மையாய் நடந்து, தினந்தோறும் தேவனுடைய வார்த்தையை ஆகாரமாய்க்கொள்ளுங்கள்.
இந்தத் தகுதி விவரப் பட்டியலுக்குப் பொருந்துகிறவர் யார்?
தேவன் நியமித்த இந்தத் தகுதி விவரங்களுக்கு இணையாகப் பழைய ஏற்பாட்டு ராஜாக்களுள் ஒருவர்கூட மதிப்பிடப்படவில்லை என்று அறிவது, உங்களை ஆச்சரியப்படுத்துமோ?
முதல் ராஜாவாகிய சவுல், தன்னிச்சையானவனும், கீழ்ப்படியாதவனுமாயிருந்தான். மூன்றாம் ராஜாவாகிய சாலொமோன், எழுநூறு மனைவியரைக் கொண்டிருந்தான். மேலும் அவன் வயதுசென்றவனானபோது, அவனது மனைவிகள் அவனுடைய இருதயத்தை, மற்றத் தேவர்களிடமாய்ச் சாயப்பண்ணினார்கள் (1 ராஜாக்கள் 11:4). இஸ்ரவேலின் ராஜாக்களிலெல்லாம் மிகச்சிறந்தவன் தாவீதுதான். ஆனாலும், அவன்கூட விபசாரம் மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தான்! தேவனின் நியமனக் கட்டளையை நிறைவேற்றுகிற அளவுக்கு, இஸ்ரவேலின் ராஜாக்களுள் ஒருவர்கூட நெருங்கி வரவில்லை.
தேவஜனங்கள், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு ராஜாவுக்காக, ஓராயிரம் ஆண்டுகள் காலமாகக் காத்திருந்தார்கள். அதன்பின்பு தேவன், அவர்களது எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிக்கக்கூடிய, இரத்தமும்-மாம்சமுமான ஒரு தலைவருக்கான அவர்களின் ஏக்கத்துக்குப் பதிலளித்தார்.
ஒரு ராஜா பிறந்தார், “யூதருக்கு ராஜாவான” அவரைப் பணிந்துகொள்ள, ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி ஞானிகள் வந்தார்கள் (மத்தேயு 2:2).
ராஜாவுக்கான தேவனின் தகுதி வடிவமைப்பை, இயேசு பரிபூரணமாக நிறைவேற்றினார்.
1. அவர் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தார். அவரது ஞானஸ்நானத்தின்போது தேவன், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17), என்று பிரகடனம் செய்தார்.
2. தாவீதின் வம்சத்தில் பிறந்தவரானபடியால், அவர் தேவஜனங்களைச் சேர்ந்தவராயிருந்தார்.
3. அவர் விசுவாசத்தைக் கடைப்பிடித்தார். கெத்செமனே தோட்டத்தில் இயேசு, “உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது” (மத்தேயு 26:42), என்று ஜெபம்பண்ணினார். மேலும், அவரது பாடுகளில் அவர், “நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவரான” பிதாவுக்குத் தம்மையே ஒப்புவித்தார் (1 பேதுரு 2:23).
4. அவர் உத்தமமாயிருந்தார். சாத்தான் அவரைச் சோதித்தபோது, கிறிஸ்துவானவர், சத்துருவுடன் எந்த உடன்பாட்டுக்கும் இணங்க மறுத்தார் (மத்தேயு 4:1-11).
5. அவர் பேராசைப்படவில்லை. கிறிஸ்து தமது சீஷர்களிடம், தாம், “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்” (மாற்கு 10:45), வந்ததாகக் கூறினார்.
6. அவர் வேதாகமத்தைக் கற்றுத் தேறினவராயிருந்தார். தேவனுடைய வார்த்தை அவரது மனதை நிறைத்திருந்தது, அவர் பேசக் கேட்ட அனைத்து மக்களும், அவரது ஞானத்தின் ஆற்றலைக் குறித்துப் பிரமிப்படைந்தார்கள்.
7. அவர் தாழ்மையுள்ளவராயிருந்தார். “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:8). ராஜாவுக்கான தேவனின் தகுதி வடிவமைப்பை, இயேசு நிறைவேற்றினார். ஆனால், ஜனங்கள் எதிர்பார்த்த ராஜாவாக அவர் இல்லை.
இயேசு விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்டபோது, பிலாத்து அவரிடம்: “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான். இயேசு எளிமையாக, “நீர் சொல்லுகிறபடிதான்,” என்று சொன்னார் (மத்தேயு 27:11). பின்பு பிலாத்து, இயேசுவைச் சிலுவையிலறையும்படிக்கு ஒப்புக்கொடுத்து, ஜனங்களை நோக்கி: “இதோ, உங்கள் ராஜா!” என்றான் (யோவான் 19:14).
ரோமப் போர்ச்சேவகர்கள், “அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: ‘யூதருடைய ராஜாவே, வாழ்க!’ என்று அவரைப் பரியாசம்பண்ணி,,,” (மத்தேயு – 27:28-29), நிந்தித்தார்கள்.
இயேசு ராஜாவின் மீதான பரியாசம் தொடர்ந்தது. அவரது தலைக்குமேலாக இருந்த மேல்விலாசம், இப்படிச் சொன்னது: “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” (யோவான் 19:19). சிலர் சத்தமிட்டு, “நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள்!” (லூக்கா 23:37), என்றார்கள். மற்றவர்கள், “இவன் இஸ்ரவேலின் ராஜாவானால், இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்” (மத்தேயு 27:42), என்று கத்தினார்கள்.
இந்த நொறுக்கப்பட்ட, உருக்குலைக்கப்பட்ட, சிலுவையிலறையப்பட்ட ராஜாவின் மூலம், இறுதியாகத் தேவசித்தம் நிறைவேற்றி முடிக்கப்பட்டது. தேவன் அவரை உயிரோடெழுப்பி, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் (பிலிப்பியர் 2:11). இயேசுவே, “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” (வெளிப்படுத்தல் 19:16).
உங்களை ஏமாற்றிய ஒரு தலைவரால் உங்களது விசுவாசம் உடைக்கப்பட்டிருந்தால், நீங்கள் விசுவாசிக்கக்கூடிய ஒரு ராஜா இருக்கிறார். அவர் பெயர் இயேசு. கிறிஸ்தவ விசுவாசம் என்பது, கிறிஸ்தவத் தலைவர்களை விசுவாசிப்பது பற்றியது அல்ல. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது பற்றியது. அவரில் விசுவாசம் வைப்பவர்கள், ஒருபோதும் வெட்கமடைவதில்லை (ரோமர் 10:11).
ஒரு தலைவரிடத்தில் இருக்கவேண்டியவையாகத் தேவன் நிர்ணயிக்கிற அனைத்தையும் பூரணப்படுத்துகிற ராஜா, இயேசு ஒருவரே. நமது இந்த ராஜாவின் மூலமாகவே, தேவனுடைய சித்தம் நம் வாழ்விலும், இவ்வுலகிலும் நிறைவேற்றி முடிக்கப்படும். தலைமைத்துவத்தை நாடும் அனைவரும், ராஜாவாகிய கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்து, அவரது முன்னுதாரணத்தைப் பின்பற்றிவரவேண்டுமென்று தேவன் அழைக்கிறார்.
1. தேவஜனங்கள், ஒரு ராஜாவை ஏன் விரும்பினார்கள்? அது தேவனுக்குப் பிரியமில்லாததாயிருந்தது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
2. நீங்கள் ஒரு மோசமான தீர்மானத்தைஃதவறான முடிவை எடுத்துவிட்டு, அது உங்களைத் தேவனுடைய கிருபையைஃஉதவியைவிட்டுத் தொலைவில் நிறுத்திவிட்டதோ என, எப்பொழுதாவது வருந்தியதுண்டா?
3. தேவஜனங்களுக்குள் தலைமைத்துவத்துக்கான தகுதிகளை நீங்கள் பார்க்கும்போது, கர்த்தருக்கு ஊழியம் செய்வதில் அதிக வல்லமையுடன் விளங்கும்பொருட்டு, எதில் நீங்கள் வளர்ச்சியடைய வேண்டியிருக்கிறது?
4. இயேசுவின் காலத்து மக்கள், அவரைத் தங்கள் தலைவராக ஏற்காமல் புறக்கணித்தது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
5. இயேசு உங்கள் தலைவராக இருக்கவேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்கள் என நினைக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?