நியாயாதிபதிகள் 2:1-23
1. கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
2. நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3. ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
4. கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
5. அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.
6. யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.
7. யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
8. நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
9. அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
10. அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
11. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,
12. தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.
13. அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.
14. அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.
15. கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
16. கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.
17. அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
18. கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
19. நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.
20. ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,
21. யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
22. அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
23. அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில் மோசே அலைந்து திரிந்தான். அவன் மரித்த பின், அவனுடைய ஸ்தானத்தில் யோசுவாவைத் தேவன் எழுப்பினார். யோசுவா, வல்லமையும், தைரியமும் வாய்ந்ததொரு தலைவனாயிருந்தான். அவன், தேவஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நடத்தினான். நியாயாதிபதிகளின் புத்தகம், கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்ட தேவஜனங்களின் கதையைச் சொல்லத் தொடங்குகிறது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், “தேவனை மறுவரையறைசெய்தல்,” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், பத்திரிகையாளர் லிசா மில்லர், கடவுளைக் குறித்த தனிப்பட்டவிதமான வரையறைகளின் விளக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்:
தேசமெங்கிலும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தேவனை மறுவரையறை செய்துகொண்டிருக்கிறார்கள். சர்வாதிகாரமுள்ள அல்லது தந்தைமையைச் சார்ந்த ஒரு தெய்வத்தைப் பற்றிய பாரம்பரியக் கருத்துக்களில் அதிருப்தி அடைந்து, மக்கள் தங்களது சுய ஆன்மீகத் தேவைகளுக்கேற்ப, நூதனமான, தனிப்பட்டவிதமான கடவுட்கோட்பாடுகளைத் தழுவிக்கொள்கிறார்கள்…
பலவகைப்பட்ட சமயங்களின் தாக்கங்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, சிறிது யோகாசனம் மற்றும் உளவியல்ரீதியான பரிகாரம் அல்லது வேறு எது அவர்களை ஈர்க்கிறதோ அவையெல்லாவற்றுடனும் சேர்த்து ஒரு ஆன்மீக வாழ்க்கையைப் புனைந்துகொள்கிறார்கள்.
“மக்கள், புதிய பொருட்களைச் சந்தையில் தேடி அலைவதுபோல, இந்தப் புதிய கடவுள்களைத் தேடுகிறார்கள்,” என்று கூறுகிறார், நியூயார்க்கிலுள்ள யூனியன் இறையியல் கல்லூரியின் துணைப் பேராசிரியர் ரேண்டல் ஸ்டையர்ஸ். மேலும் அவர், “இது தனிமனிதவாதத்தின் உச்சக்கட்ட வடிவம்,” என்றும் கூறுகிறார்.
பின்பு மில்லர், அமெரிக்காவின் மையப்பகுதியிலிருந்து ஓர் உதாரணத்தை எடுத்துரைக்கிறார்.
கென்ஸஸிலுள்ள ஆஸ்கலூஸாவைச் சேர்ந்த, 43 வயதுடைய ஒரு வழக்கறிஞர், கென் ஸ்வேகார்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பான, லுத்தரன் குடும்பப் பின்னணியில் வளர்ந்துவந்த அவர் கடவுளை, ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா போன்றவர் எனவும், தேவைகளைச் சந்திக்கிற ஒருவர் எனவும், மற்றும் ஒரு நியாயாதிபதி எனவும் கற்பனை செய்துகொள்வது வழக்கம் என்கிறார். ஆனால், பெரியவரான பிறகோ, சபையைப் பற்றிய விரக்தியில், ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் அதிகாலையில் எழும்பும்போது, சபைக்குப் போக மனதில்லாமல், மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கிவிட்டார். இன்று அவருக்குக் கடவுள் என்றால், தனிமையாயிருந்து, “ஏரி ஒன்றில், சூரியோதயத்தின்போது, மூடுபனி மேலெழும்புவதைப் பார்ப்பதும், தண்ணீரின் சலசலப்பைக் கேட்பதும்தான்.” இரண்டு மற்றும் மூன்று வயதுடையவர்களாக இருக்கும் அவரது பிள்ளைகளுக்கு இன்று அவர் கடவுளைப் பற்றிக் கற்றுத்தரும்போது, “அவர்களை வெளியில் அழைத்துச்சென்று அவர்களிடம், ‘இங்குதான் அது இருக்கிறது’ என்று சொல்லலாமென்றிருக்கிறேன்,” என்கிறார்.
இந்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையானது, நியாயாதிபதிகளின் புத்தகம் ஏதோ பழங்காலச் சரித்திரம் என்கிற பனித்திரையை விலக்கி, அதை இருபத்தோராம் நூற்றாண்டின் கதையாகவே கொண்டுவந்துவிடுகிறது.
கானானைச் சுதந்தரித்த அந்தச் சந்ததியினர் மரித்துவிட்டபின்பு, “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத” வேறொரு சந்ததி அங்கே எழும்பிற்று (நியாயாதிபதிகள் 2:10). இது, வேதாகமத்தின் மிகத்துயரமான வசனங்களுள் ஒன்று. இதுதான், ஒரு தலைமுறையானது தேவனை அறியாமலேயே வளர்ந்துகொண்டுவந்தால் நடப்பது என்ன என்பதை நமக்குக் கூறும், நியாயாதிபதிகளின் புத்தகத்துக்கான காட்சிப் பின்னணியை அமைக்கிறது.
இது எவ்வாறு ஒரு தலைமுறையில் நிகழ்ந்திருக்கக்கூடும்? அது ஒருவேளை, ஒரு செழிப்பான தேசத்திலே அந்தப் பெற்றோர்கள், தங்கள் காரியங்களிலே அலுவலாய் மூழ்கிவிட்டதனால்கூட இருக்கலாம். தேவன் தங்கள் சொந்த வாழ்க்கையில், அற்புதமான காரியங்களைச் செய்ததை இந்த மக்கள் பார்த்திருந்தார்கள். ஆனாலும், தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றை முறையாகப் போதிப்பதை அடியோடு புறக்கணித்தார்கள். அதனால், ஒரு சந்ததிக்குள்ளாகவே தேவனைப் பற்றிய அறிவு அற்றுப்போயிருந்தது.
ஆகவே, இந்த நியாயாதிபதிகளில், செழிப்பில் பிறந்து வளர்ந்தவர்களாகவும், ஆன்மீக அர்த்தங்களைத் தேடியலைவதில் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆனால் கர்த்தரையோ, அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையோ அறியாத ஒரு சந்ததியினரைக் காண்கிறோம்.
இஸ்ரவேலின் இந்த அவலநிலை, நமது முன்னுரிமைகளைப் பற்றி நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் யாரென்றும், அவர் என்ன செய்திருக்கிறாரென்றும் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கவேண்டும். இவைதான் இன்றியமையாதவை. இந்த அறிவு இல்லாவிடில், விசுவாசம் சாத்தியமற்றது. அப்போஸ்தலர் பவுல் எழுதுவதைப்போல், “அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” (ரோமர் 10:14). தேவன் யாரென்றும், அவர் என்ன செய்திருக்கிறாரென்றும் அறிவதை மையமாக வைத்தே, நாம் நமது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். நமது பிள்ளைகள் இதை அறிந்தால், அப்பொழுது அவர்கள், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்கு அர்த்தமுள்ள விதத்திலே தங்களை ஒப்புக்கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பார்கள்.
தேவனைக்குறித்த அறிவு அற்றுப்போகிறதற்கு ஒரு தலைமுறை காலமே ஆயிற்று. ஆனால், ஒரு தலைமுறையில் இழக்கப்பட்டது இன்னொரு தலைமுறையில் மீட்டெடுக்கப்பட முடியும்.
நியாயாதிபதிகளின் புத்தகம், சுழற்சி முறையிலான, ஒரே மாதிரியான சம்பவங்கள், பலமுறை திரும்பத்திரும்பப் பல நூற்றாண்டு காலங்களுக்கு நிகழ்வதைப் பதிவுசெய்கிறது.
முதலாவது, ஜனங்கள் கர்த்தரை விட்டுவிட்டு, விக்கிரகங்களிடமாய்த் திரும்பினார்கள்: “அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து.… தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு…” (நியாயாதிபதிகள் 2:11-12).
இரண்டாவது, தேவன் கோபமூண்டவராகித் தமது ஜனங்களை அவர்களது பகைஞரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்: “அவர்கள் கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்….அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி ….கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து….” (2:12-14).
மூன்றாவது, ஜனங்கள் சகாயம் வேண்டித் தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள். தேவனும் ஓர் யுத்த ஸ்தானாபதியை, அல்லது நியாயாதிபதியை, அவர்களை இரட்சிக்கும்படி எழும்பப்பண்ணினார்: “கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்” (2:16).
நான்காவது, அந்த நியாயாதிபதி மரித்தபோது, ஜனங்கள் மீண்டும் தங்களது முந்தைய வழிகளுக்கே திரும்பினார்கள். அதே பழைய வாழ்க்கைச் சுழற்சிமுறை அப்படியே திரும்பவும் ஆரம்பித்தது. இவ்வாறு, தேவனுடைய ஜனங்கள், விக்கிரகாராதனை, நியாயத்தீர்ப்பு, தேவனை நோக்கிக் கூப்பிடுதல், இரட்சிப்பு, அதன்பின்பு மீண்டும் விக்கிரகாராதனைக்கே திரும்புதல் (2:18-19), என வட்டப் பாதைகளிலேயே சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
பழைய ஏற்பாட்டை வாசித்துவரும்போது, அதனூடே விக்கிரகாராதனை என்னும் கருப்பொருளை நீங்கள் தொடர்ச்சியாய்க் கடந்துவர நேரிடும். அது ஏதோ சம்பந்தமில்லாததுபோல் தோன்றலாம். ஆனால், அது அத்தனைமுறை குறிப்பிடப்பட்டிருப்பது, அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளிவந்த கட்டுரை, விக்கிரகாராதனையின் ஓர் உதவிகரமான வரையறையை நமக்கு வழங்குகிறது: “[ஜனங்கள்] தேவனை மறுவரையறை செய்துகொண்டிருக்கிறார்கள்….[அவர்கள்] தங்களது சுய ஆன்மீகத் தேவைகளுக்கேற்ப, நூதனமான, தனிப்பட்டவிதமான கடவுட்கோட்பாடுகளைத் தழுவிக்கொள்கிறார்கள்.”
விக்கிரகாராதனையானது, சக்திவாய்ந்த கவர்ச்சிகரமானது. காரணம், அது கட்டுப்படுத்துகிற ஸ்தானத்தில் உங்களை வைக்கிறது. நீங்கள், ஜான் வேய்ன் மற்றும் ஹாரிஸன் ஃபோர்டு ஆகிய இரண்டின் ஒருவிதக் கலவையாகிய ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரை, “வேய்ன் ஃபோர்டு” என்று அழைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். வேய்ன், ஒரு முதன்மைத்துவம் வாய்ந்த நபராக இருப்பார் எனத் தீர்மானித்து, நீங்கள் கணினியின் முன்பு அமர்ந்து, அவரைப் பற்றி எழுதத் தொடங்குகிறீர்கள். வேய்ன், கரடுமுரடானவர், மற்றும் வாட்டசாட்டமானவர். அவர் கறுப்பு மீசை வைத்திருக்கிறார்… இல்லை, சற்று இருங்கள்! நீங்கள் நீக்கு விசையை அழுத்துகிறீர்கள். அவர் பழுப்பு நிற மீசை வைத்திருக்கிறார்.
பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளிலே, வேய்ன் ஒரு கரடியைச் சந்திப்பதை நீங்கள் விவரிக்கிறீர்கள். ஆனால், அதன்பின்பு உங்களுக்குக் கதையில் சற்றுக் காதல் தேவைப்படுகிறது. ஆகவே, நீங்கள் வேய்னுக்கு ஒரு மென்மையான பக்கத்தை வைக்கிறீர்கள். அந்தக் கரடுமுரடான வெளிப்புறத்தோற்றத்தின் கீழாக, வேய்ன் தன் வாழ்நாளெல்லாம், உண்மையான அன்பைத் தேடியலைந்துகொண்டு வந்திருக்கிறார்.
அந்தக் கதையை நீங்கள் உருவாக்கிக்கொண்டே வரும்போது, கட்டுப்பாடு முழுவதும் உங்கள் கைகளில் இருக்கிறது. வேய்ன் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கிறார். நீங்கள் விரும்புகிறபடி அவரை எப்படிப்பட்டவராகவும் உருவாக்க உங்களால் முடியும். அவர் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புவதையெல்லாம் அவரும் செய்வார். விக்கிரகாராதனையின் கவர்ச்சி இதுதான். ஜீவனுள்ள தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக, அநேக மக்கள் தங்களது சுய ஆன்மீகத் தேவைகளுக்குப் பொருந்துகிற ஒரு கடவுளை உருவாக்கிக்கொள்வதையே தெரிந்துகொள்கிறார்கள்.
ஒரு புதினத்தை எழுதுவதில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்னவோ மிக நல்லதுதான். ஆனால், நிஜ மனிதர்களில் இதை முயற்சித்துப் பாருங்கள், நடத்தை அவதூறு வழக்குக்காக நீங்கள் உங்களை நீதிமன்றத்தில் நின்றுகொண்டிருக்கக் காண்பீர்கள்! விக்கிரகாராதனை சக்திவாய்ந்த கவர்ச்சிகரமானது. ஆனால், அது மிகுந்த அவமரியாதையும்கூட.
நமது விக்கிரகாராதனைக்கு, “நான் இருக்கிறவராகவே இருக்கிறேன். நீ என்னை மறுவரையறைசெய்ய முடியாது. அப்படி நீ செய்ய முயற்சித்தால், நான் எனது பாதுகாவலை உன்னிடமிருந்து அகற்றிவிட்டு, உன் எதிரிகளிடம் உன்னை ஒப்புக்கொடுத்துவிடுவேன்,” என்று சொல்வதன் மூலம் தேவன் பதில் கொடுக்கிறார். நாம் விக்கிரகங்களைப் பின்பற்றிப்போனால், நமது சுய தீர்மானங்களின் பின்விளைவுகளுடனே நாம் வாழும்படி நம்மை விட்டுவிடுவார். ஆயினும், கதையின் முடிவு அதுவல்ல என்பதற்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
விக்கிரகங்கள் கவர்ச்சிகரமானவையாய் இருக்கலாம். காரணம், நாம்தான் அவற்றை வடிவமைக்கிறோம். ஆனால், அவற்றுக்கு வல்லமையில்லை. காரணம், நமது சுய கற்பனையின் கணிப்புகள் என்பதற்கு மேலாக அவற்றில் ஒன்றுமில்லை. ஆகவே, தேவனுடைய ஜனங்கள் தங்கள் எதிரிகளால் கீழ்ப்படுத்தப்பட்டபோது, அவர்கள் தேவனிடமாய்த் திரும்பிச் சகாயம் வேண்டி, அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள். தேவன் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார். கர்த்தருடைய ஆவியானவர், ஒத்னியேல், ஏகூத், சம்கார், தெபொராள், பாராக், கிதியோன் மற்றும் சிம்சோன் ஆகியோர் மீது இறங்கி, அவர்கள் தேவஜனங்களை இரட்சிக்கும்படி ஏவினார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளிவந்த தனது கட்டுரைக்கு முடிவாக, லிசா மில்லர் பின்வருமாறு எழுதினார்: “ஒப்பீட்டளவில் இவை அமைதியும், செழிப்புமான காலங்கள். ஆகவே, அநேக அமெரிக்கர்கள் கடவுளோடு ஓர் ஆழ்ந்த தொடர்பைத் தேடுகிறபோதும்கூட, உன்னதத்திலிருந்து பாதுகாப்பு அல்லது இரட்சிப்பைத் தேடும்படி மக்களைப் பெரும்பாலும் உந்துகின்ற நெருக்கடியான சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொள்ளாதிருக்கிறார்கள்…. கடினமான காலங்களும், திடீர் இன்னல்களும் இவற்றையெல்லாம் சட்டென்று மாற்றிவிடக்கூடும்…. கடவுளைக் குறித்த மக்களது கருத்துக்கள் எவ்வளவுதான் அகன்றவையாக அல்லது பரந்து விரிந்தவையாக இருந்தாலும், தொடர்ந்து பாதைகள் கடினமாகும்போது, அவர்கள் பிதாவாகிய தேவனிடத்தில் திரும்புகிறார்கள்.”
அது மிகவும் நுண்ணறிவுபூர்வமானது. நியாயாதிபதிகளின் புத்தகத்திலிருந்து நாம் அறியவருவதும் அதைத்தான். தொடர்ந்து முன்செல்வது கடினமாகும்போது, எழும் கேள்வி மிகவும் எளியது: “உங்களுக்கு உதவக்கூடிய ஒரு கடவுள் மெய்யாகவே இருக்கிறாரா?” அதுதான் கேள்வியாக இருக்கும்போது, விக்கிரகங்கள் ஒருபோதும் மனம் கவர்பவையாக இருப்பதில்லை. ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதில்லை என்ற காரணத்தினால் அவை உங்களுக்கு ஒருவகையில் வசதியானவையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், நீங்கள் நெருக்கடியான ஒரு நிலைமையில் இருக்கும்போது, உங்கள் சொந்தக் கற்பனையின் மாயத்தோற்றத்தை நோக்கிப்பார்த்துக் கூப்பிடுவதற்கு, அது உங்களுக்கு எப்படி உதவும்?
நியாயாதிபதிகளின் புத்தகத்தை நீங்கள் தொடர்ந்து வாசித்துவரும்போது, இந்த யுத்த ஸ்தானாபதிகள் விசேஷித்த சாதனைகளைப் புரிந்தபோதும், அவர்கள் குறிப்பிடத்தக்க அளவிலான வரம்புநிலைகளும் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
அவர்களில் பெரும்பாலானோர், நடத்தையில் படுமோசமாகக் குறைவுபட்டிருந்தார்கள். ஏகூத் ஒரு கோழைத்தனமான கொலைகாரன்போல் காணப்படுகிறான் (நியாயாதிபதிகள் 3:12-23). கிதியோன், தேவன் தன்னைச் செய்யச் சொன்னவற்றைக் குறித்து, பலமுறைகள் உறுதிப்படுத்தவேண்டியிருந்த அளவுக்கு விசுவாசத்தில் குறைவுபட்டிருந்தான் (6:36-40). யெப்தா, தன் மகளையே பலிசெலுத்துமளவுக்கு அழிவுக்கேதுவானதொரு தீர்மானத்தைச் செய்தான் (11:30-40). சிம்சோனின் ஒழுக்க நெறிச் சறுக்கல்கள் மிகவும் பிரபலமானவை (நியாயாதிபதிகள் 14-16). இந்தப் புத்தகத்தில் நீங்கள் மெய்யாகவே மெச்சிக்கொள்ளத் தக்கவராக ஒருவர்கூட இல்லை.
நியாயாதிபதிகளின் புத்தகத்தை வாசிக்கும்பொழுது, “நமக்கு ஒரு சிறந்த இரட்சகர் தேவை, நமக்குத் தேவைப்படும் அந்த இரட்சகர் இயேசுதான்,” என்று அது உங்களை யோசிக்கவைக்கும். இயேசுவுக்கும், நியாயாதிபதிகளுக்கும் இடையேயான வேறுபாடு மலைக்கவைப்பதாக இருக்கிறது. நியாயாதிபதிகள், மற்றவர்களின் உயிரைப் பறித்துத் தங்களது முத்திரையை நிலைநாட்டினார்கள்; இயேசுவோ, தமது ஜீவனை நமக்காகக் கொடுக்கவே வந்தார். நியாயாதிபதிகள், தேவஜனங்களின் வெளியரங்கமான சூழ்நிலைகளையே கவனத்தில் வைத்தனர்; இயேசுவோ, இருதயங்களின் மீது நோக்கமாயிருந்தார். நியாயாதிபதிகளின் சாதனைகள் தற்காலிகமானவையாகத்தான் இருந்தன; இயேசு தரும் விடுதலையோ, நித்தியகாலத்துக்கும் நிலைத்திருக்கிறது.
நீங்கள் விரும்புவதுபோல் இருக்குமாறு தேவனை வரையறுத்துக்கொள்வது, நியாயாதிபதிகளின் புத்தகத்தைப்போலவே சுற்றுவட்டப்பாதைகளில் சுழன்று செல்வதற்குத்தான் உங்கள் வாழ்க்கையை நடத்திச்செல்லும். அந்தச் சுழற்சியை உடைக்கவே இயேசு வந்தார். அவர்தான் மிகச்சிறந்த இரட்சகர். அவரே, தேவன் யாரென்றும், அவர் என்ன செய்திருக்கிறார் என்றும் உங்களை அறியவைப்பதன் மூலம், நீங்கள் ஒருபோதும் எந்த முன்னேற்றமும் காணாத, பிரயோஜனமற்ற பயணத்திலிருந்து, உங்களைக் காக்கவல்லவராயும் இருக்கிறார்.
விக்கிரகாராதனையானது, தேவனை மறுவரையறைசெய்வதாக இருக்கிறது. நூற்றாண்டுகள் காலமாக, மக்கள் ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாகத் தொழுது பணிந்துகொள்வதைவிட, தங்கள் சொந்தத் தெய்வங்களை உருவாக்கிக்கொள்வதையே மீண்டும் மீண்டும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். நாம் உருவாக்கிக்கொள்கிற தெய்வங்கள், மனம் கவர்பவையாக இருக்கின்றன. காரணம், நாம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவை நம் மனங்களில் இருப்பதோடு சரி. மற்றபடிப் பாவம், மரணம் மற்றும் நரகம் ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்க வல்லமையற்றவையாயிருக்கின்றன. தேவன் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும். அதற்காகத்தான் அவர் தமது குமாரனை உலகிற்கு அனுப்பினார்.
குறிப்புகள்:
1. லிசா மில்லர், “ரீடிஃபைனிங் காட்,” வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஏப்ரல் 21, 2000.
2. மில்லர், “ரீடிஃபைனிங் காட்.”
1. விக்கிரகாராதனை என்பது என்ன?
2. விக்கிரகாராதனை தேவனை மறுவரையறைசெய்தல், ஏன் சிலபேருக்குக் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது?
3. விக்கிரகாராதனைக்குத் தேவன் எவ்வாறு பதில் கொடுக்கிறார்?
4. மனங்கவரும் தங்களது ஆற்றலை, விக்கிரகங்கள் எப்போது இழக்கின்றன?
5. ஏன் எந்தவொரு விக்கிரகத்தையும்விட இயேசு சிறந்தவராயிருக்கிறார்?