2 இராஜாக்கள் 17:6-28
1. பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
3. இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
4. அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
5. அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
8. யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
9. அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
10. பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
13. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
15. நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
17. ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
21. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
முழு வேதாகமமும் ஒரே கதையாகும். அது ஒரு தோட்டத்தில் தொடங்கி, ஒரு நகரத்தில் முடிவடைகிறது; மற்றும் அந்தக் கதை முழுதும், இயேசுவையே சுட்டிக்காண்பிக்கிறது. ஆதியாகமத்தில், ஒரு தம்பதியர் தேவனுடைய ஆசீர்வாதத்தை அனுபவித்தார்கள்; ஆனால் பாவத்தின் வழியாக, அவர்கள் வேதனை, துன்பம் மற்றும் மரணம் ஆகியவற்றால் காயப்படுத்தப்பட்ட உலகிற்குள் மூழ்கடிக்கப்பட்டனர். வெளிப்படுத்தின விசேஷத்திலோ, எண்ணிக்கையிலடங்காத, திரளான கூட்டமான ஜனங்கள், இனி ஒருபோதும் பாவமும், மரணமும் இல்லாத, சந்தோஷமும், சமாதானமுமான உலகிற்குள் கொண்டுவரப்படுகிறார்கள்; தேவன்தாமே நமது கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் நீக்கிவிடுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:1-21
வேதாகமம், தேவன் வானங்களையும், பூமியையும் சிருஷ்டிப்பதில் தொடங்குகிறது. ஆதாம் இழந்த யாவற்றையும்விட அதிகமானவை மீட்டெடுக்கப்படுகிற இடமான, புதிய வானத்தையும், புதிய பூமியையும் தேவன் சிருஷ்டிப்பதில் அது நிறைவடைகிறது.
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. (வெளிப்படுத்தல் 21:1)
யோவான், ஒரு “புதிய பூமியைக்” கண்டார். “புதிய” என்பதற்கு, அது அற்புதமான விதத்தில் வேறுபட்டதாக இருக்கும் என்பது பொருள்; “பூமி” என்பதற்கு, அது மிகப் புதுமையான விதத்தில் நமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும் என்பது பொருள். கிறிஸ்தவ விசுவாசியின் முடிவு, கற்பனையான ஒரு உலகில் கனவுபோன்ற ஒரு வாழ்க்கையல்ல. தேவன், பூமியாகிய இந்தக் கோளை, மறு உருவாக்கம் செய்து, நிரப்பி, இதைப் புதிதாக்குவார். “சிருஷ்டியானது, அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” (ரோமர் 8:21).
புதிய வானம் மற்றும் புதிய பூமியின் சந்தோஷங்கள், நமது எவ்விதமான கற்பனைக்கும் அப்பாற்பட்டவை; ஆனால், இனி வரப்போகின்றவற்றைக்குறித்த ஒரு முன்ருசியை நமக்குச் சித்திரித்துக் காட்டுவதற்காக, நகரம் மற்றும் தோட்டம் ஆகிய இரண்டு காட்சிகளைத் தேவன் பயன்படுத்துகிறார்.
யோவானுடைய தரிசனத்தின் இந்தத் தருணத்தில் வரலாறானது, நாம் அறிந்திருக்கிறபடியே, ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நியூ யார்க், லண்டன், எருசலேம், பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆகிய அனைத்து நகரங்களுமே ஒழிந்துபோயின! தேவனுடைய நியாயத்தீர்ப்பின் உக்கிரமான அக்கினியில், பூமியே வெட்டவெளியாய் ஆனது (2 பேதுரு 3:10).
ஆனால் இப்பொழுது யோவான், பரலோகத்திலிருந்து ஒரு புதிய நகரம் இறங்கிவருவதைக் காண்கிறார்; உடனடியாகவே அவர், அதன் தொடுவான விளிம்பை அடையாளம் காண்கிறார்: “…நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்” (வெளிப்படுத்தல் 21:2). வேதாகமக் கதையில் எருசலேம், முற்றிலும் முக்கியத்துவங்களால் நிறைந்ததாகும். தேவாலயத்தைத் தேவனுடைய பிரசன்னத்தின் மேகம் நிரப்பியபோது, இந்த இடத்தில்தான் தேவன் தமது ஜனங்களைச் சந்திக்கும்படி இறங்கிவந்தார்.
புதிய எருசலேம், விஸ்தாரமாயிருந்தது! ஒரு தூதர், “(தான் பிடித்திருந்த) அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது” (21:16; 12,000 ஸ்தாதி அளவென்பது, ஏறத்தாழ 1,400 மைல்களுக்குச் சமமாகும்). வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம், இனிமேல் வரப்போகின்ற மகிமையைச் சிறிதளவு நமக்கு உணர்த்த, உதவிகரமான சித்திரிப்புக்களைப் பயன்படுத்துகிறது என்பதை நினைவுகூருங்கள். மீட்கப்பட்ட தேவஜனங்கள், ஒருவரும் எண்ணக்கூடாததான திரளான கூட்டமானவர்கள் ஆவர் (வெளிப்படுத்தல் 7:9); மேலும், நம் ஒவ்வொருவருக்கும் தாம் ஓரிடம் வைத்திருப்பதாகத் தேவன் நமக்குக் கூறுகிறார்.
நகரத்தின் அளவுகள், மூன்று பரிமாணங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. “அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது” (21:6). வேறு வகையில் சொன்னால், அது மிக நேர்த்தியான ஒரு கனசதுரம். யோவான், அதன் முக்கியத்துவத்தை உடனடியாகவே பார்த்திருப்பார். தேவன் தமது ஜனங்களைச் சந்தித்ததான, தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலமும்கூட, இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாயிருந்த, மிக நேர்த்தியான கனசதுரமாயிருந்தது (1 இராஜாக்கள் 6:20).
பழைய எருசலேம், ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கொண்டிருந்தது. புதிய எருசலேமோ, ஒரு பரிசுத்த ஸ்தலமாகவே இருக்கிறது. பழைய எருசலேமில், ஒரு சிறிய அறை தேவனுடைய மகிமையால் நிறைந்திருந்தது. புதிய எருசலேமிலோ, முழு நகரமுமே அவருடைய மகிமையால் நிறைந்திருக்கும். பழைய எருசலேமில், தேவனுடைய சமூகத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே பிரவேசிக்கமுடியும். புதிய எருசலேமிலோ, தேவனுடைய ஜனங்கள் அவரை என்றென்றைக்கும் அனுபவிக்கலாம்.
இந்த உலகத்தைத் தேவன் படைக்கும்போது, நாம் கீழ்ப்படியாமல், நம்பிக்கைக்கே இடமில்லாதபடித் தொலைந்து போயிருக்கக்கூடிய நிலையிலும், தாம் செய்வது என்னவென்று அவர் அறிந்தே இருந்தார். பாவ மாசற்ற ஒரு படைப்பைவிட, மீட்கப்பட்டதொரு சிருஷ்டிப்பானது, தமது மகிமையை எல்லையற்ற விதத்தில் வெளிப்படுத்தும் என்று அவர் அறிந்திருந்தார். புதிய சிருஷ்டிப்பில், தேவனுடைய மகிமையின் பிரதிபலிப்புக்கள், நம்மிலும் மற்றும் நம்மைச் சுற்றிலும், எங்கு பார்த்தாலும் பிரகாசமாய் ஜொலிக்கும்.
அதிக மன்னிப்பை அடைந்தவர்கள், அதிகமாய் அன்புகூருவார்கள்; இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள், “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் . . . பாத்திரராயிருக்கிறார்,” என்று பாடுவார்கள் (வெளிப்படுத்தல் 5:12). “தேவரீர் . . . பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்” (வெளிப்படுத்தல் 5:9).
தரிசனத்தின் இந்தக் கட்டம்வரை யோவான், புதிய எருசலேமை வெளியிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ, அவர் உள்ளே வருமாறு அழைக்கப்படுகிறார். அவர் உள்ளே பிரவேசிக்கும்போது, காட்சியே மாறிவிடுகிறது; யோவான், எழில் மிகுந்த தோட்டம் ஒன்றைக் கண்டு பிரமித்துப்போகிறார் என்பதில், எவ்வளவும் சந்தேகமில்லை: “… ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியை… எனக்குக் காண்பித்தான்… நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்;” (வெளிப்படுத்தல் 22:1-2).
வேதாகமக் கதையானது, ஒரு தோட்டத்தில் தொடங்கியது; அங்கே ஆதாமையும், ஏவாளையும் ஓர் இல்லம், வேலை, உறவு மற்றும் காணக்கூடிய தேவ பிரசன்னம் ஆகிய நான்கு அற்புதவிதமான ஈவுகளுடன் தேவன் ஆசீர்வதித்தார். இந்த ஒவ்வொரு ஈவுமே, பாவம் இவ்வுலகிற்குள் வந்தபோது சிதைக்கப்பட்டுப்போனது. ஆதாமும், ஏவாளும், தோட்டத்தைவிட்டு வெளியே துரத்தப்பட்டார்கள்; மேலும் அவர்கள், பாவம், வேதனை மற்றும் மரணம் ஆகியவற்றால் காயப்படுத்தப்பட்ட ஓர் உலகில், தங்களது இல்லத்தை அமைக்கவேண்டியிருந்தது. ஆசீர்வதிக்கப்பட்டதான ஒரு வேலை, விரக்திக்குரிய ஒன்றாகிவிட்டது. இவ்வுலகத்தின் முதல் குடும்பம், பிளவுண்டுபோனது; ஆதாமும், ஏவாளும், தேவனைத் தரிசித்து நடந்ததற்கு மாறாக, அவரை விசுவாசித்து, அவருடன் நடக்கவேண்டியதாயிற்று.
பாவம் இவ்வுலகிற்குள் பிரவேசித்தபோது, பரதீசு இழக்கப்பட்டுப்போயிற்று. ஆனால், வேதாகமக் கதையின் முடிவில், இழக்கப்பட்டுப்போன ஈவுகள் மீட்டெடுக்கப்பட்டவைகளாய் மட்டுமல்லாமல், தேவனுடைய புதிய தோட்ட நகரத்தில் அவை கற்பனையை மிஞ்சும் அளவிலும் இருக்கின்றன.
நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள் (வெளிப்படுத்தல் 22:2).
பழைய ஏதேனுக்கும், புதிய தோட்டத்துக்குமிடையேயுள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவெனில், நன்மை-தீமை அறியத்தக்கதான கனி மரம், தேவனுடைய புதிய தோட்ட நகரத்தில் இல்லை என்பதாகும். தீமை அங்கே அறியப்படமுடியாது. இந்தத் தோட்டமானது, தீமையின் சூழலிலிருந்து மட்டுமல்லாது, அதன் சாத்தியக்கூறுகளிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளது.
பழைய ஏதேனில், ஜீவவிருட்சத்திலிருந்து புசிக்கிறதற்கு மனுஷனும், ஸ்திரீயும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ, அவர்களுக்கு முழுச்சுதந்திரம் உண்டு; ஜீவவிருட்சமும், பன்னிரண்டு வெவ்வேறு விதமான கனிகளைத் தருகிறது. இந்தக் கனிவகைகள், தேவபிரசன்னத்தில் தொடர்ந்து நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கும், வாழ்வின் வளங்களைக்குறித்துப் பேசுகின்றன. நித்தியமானது, எப்பொழுதுமே சுவாரஸ்யம் குறையாததாய் இருக்கும்.
இந்த உலகில், வாழ்வின் மிகச்சிறந்த சந்தோஷங்கள் யாவும், தேவனுடைய புதிய சிருஷ்டிப்பின் மேலான இன்பங்களுக்கு முன்னோட்டம் போன்றவை. தேவனுடைய புதிய தோட்ட நகரத்தின் இன்பங்கள், ஏதேன் தோட்டத்தில் ஆதாம் அறிந்திருந்த எதையும் மிஞ்சக்கூடியவை. ஆதாம் ஒருபோதும் ருசித்திராத கனிகளை நீங்கள் சுவைப்பீர்கள்; மற்றும் ஏவாள் ஒருபோதும் அறிந்தேயிராத இன்பங்களை அனுபவிப்பீர்கள்.
அங்கே இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள். (வெளிப்படுத்தல் 22:3).
தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார், அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். (வெளிப்படுத்தல் 22:5).
புதிய சிருஷ்டிப்பில், நீங்கள் ஊழியம் செய்வீர்கள், நீங்கள் ஆராதிப்பீர்கள், மற்றும் நீங்கள் அரசாளுவீர்கள். முதல் தோட்டத்தில் ஆதாம், அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திக் காத்துவந்ததன்மூலம் ஊழியம் செய்தார். அவரது அழைப்போ, தேவன் உண்டாக்கியதான அனைத்தின்மேலும் தனது ஆளுகையை நிலைநிறுத்திக்கொள்வதாகும் (ஆதியாகமம் 1:26).
அவர், பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்திக்கொள்ளவேண்டியவரானார் (ஆதியாகமம் 1:28).
சர்ப்பம் வந்தபோது, ஆதாம் தனது ஆளுகையைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுதோ, ஊழியம் செய்வதற்கும், அரசாளுவதற்குமான ஒரு ஸ்தானத்துக்கு தேவனுடைய ஜனங்கள் மீட்கப்பட்டுவருகிறார்கள். நாம் அரசாளுவதைப்பற்றித் தேவன் பேசும்போது, வாழ்க்கை ஒழுங்குள்ளதாயும், உங்களது கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரப்பட்டதாயும் இருக்கும் என்று அவர் நமக்குக் கூறுகிறார். உங்கள் வேலை, விரக்தியினின்று விடுவிக்கப்பட்டதாய் இருக்கும். இனியும் நீங்கள் காலத்தின் கொடுமைக்கும், கடினமான பணிகளுக்கும், சர்ச்சைக்குரிய உடனூழியர்களுக்கும், அல்லது குடைச்சல் கொடுக்கிற மேலாளர்களுக்கும் கீழ்ப்பட்டவராய் இருக்கமாட்டீர்கள். இனியும் நீங்கள் எதிர்பாராத உணர்ச்சி வெள்ளங்களால் அல்லது சுய விருப்பத்தின் தூண்டுதல்களால் அடித்துச்செல்லப்படமாட்டீர்கள். அத்துடன், இனியும் நீங்கள் மரணத்தின் ஆபத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கமாட்டீர்கள்.
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. (வெளிப்படுத்தல் 21:12-13).
பழைய ஏதேன், ஒரே ஒரு மனுஷனாலும், மனுஷியாலும் மட்டுமே அனுபவிக்கப்பட்டது; ஆனால் இப்பொழுதோ, எண்ணிக்கையிலடங்காப் பெருந்திரளான கூட்டமானது வாசல்கள் வழியாய் உட்பிரவேசித்துக்கொண்டேயிருக்கிறது. மனித வரலாற்றின் வேதனையிலிருந்து, தேவன் இந்த ஜனங்களை மீட்டு, அவர்கள் முன்பு அறிந்திருக்கக்கூடியதைவிட மேலான சந்தோஷத்திற்குள் அவர்களை அவர் கொண்டுவந்திருக்கிறார்.
யோவான், புதிய தோட்ட நகரத்திற்குப் பன்னிரண்டு வாசல்களைக் காண்கிறார். கிழக்கில் சீனா, வடக்கில் ரஷ்யா, தெற்கில் ஆஃப்ரிக்கா மற்றும் மேற்கில் அமெரிக்கா என்று, எத்திசையிலிருந்தும் ஜனங்கள் அந்த நகரத்திற்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். தேவனின் மீட்கப்பட்ட மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட புதிய சமுதாயத்தில், ஒவ்வொரு தேசமும், பிரதிநிதித்துவம் பெறுகிறது.
யோவானின் தரிசனத்தில், ஒவ்வொரு வாசலினருகேயும் ஒரு தேவதூதர் நின்றிருக்கிறார்; அனைத்து வாசல்களும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன (வெளிப்படுத்தல் 21:12, 25). வேதாகமக் கதையின் தொடக்கத்தில், ஜீவவிருட்சத்திற்குப் போகும் வழியை, வீசிக்கொண்டிருக்கும் சுடரொளிப் பட்டயத்துடன் கேரூபீன்கள் காவல்செய்தன. ஆனால் இப்பொழுதோ, கிறிஸ்து அந்த நியாயத்தீர்ப்பின் பட்டயத்தை உடைத்திருக்கிறார்; தேவதூதர்களோ, அவருக்குச் சொந்தமான அனைவரையும் வரவேற்க வாசல்களில் நிற்கிறார்கள்.
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: “இதோ, மனுஷர்களிடத்தில் தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.” (வெளிப்படுத்தல் 21:3)
இந்தத் தோட்ட நகரத்தில் அதன் மிகச்சிறந்த ஆசீர்வாதமே, தேவனுடைய பிரசன்னம்தான். ஏதேன் தோட்டத்தில் தேவன், குறிப்பிட்ட வேளைகளில் இறங்கிவந்து தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்வார். அவர், மனுஷனோடும், ஸ்திரீயோடும் பகலின் குளிர்ச்சியான வேளையிலே உலாவிவந்தார். தேவன், தோட்டத்திற்குள் ஒரு பார்வையாளரைப்போல வந்தார். அவர் மனுஷன் மற்றும் ஸ்திரீயின்மீது, கட்டாயமாய்த் தமது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொள்ளவில்லை; ஆனால், தம்முடன் விசுவாசமும், கீழ்ப்படிதலுமான ஓர் உறவைத் தெரிந்தெடுத்துக்கொள்ள, அவர்களுக்கு அவர் வாய்ப்பளித்தார். ஆகவே அவர் வந்து, அந்த உறவை வளர்த்தெடுக்கும்படியாக, அவர்களுடன் உலாவினார்.
ஆனால் இப்பொழுதோ, தங்களது மனங்கள் சத்தியத்தினால் வெளிச்சமூட்டப்பட்டவர்களும், தங்களது இருதயங்கள் இயேசுவின் சிலுவையண்டையில் உருகுகிறவர்களுமாகிய, பெருந்திரளான கூட்டமான ஜனங்களின் சமுதாயத்தைத் தேவன் கூட்டிச் சேர்த்திருக்கிறார். அவர்களது சித்தங்களெல்லாம், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையால் இயக்கப்பட்டுவருகின்றன; அவர்களும், விடுதலையோடு தேவனிடத்தில் அன்புகூரும்படி வந்திருக்கிறார்கள். ஆகவே, இனியும் தேவன் ஒரு பார்வையாளரல்ல. தேவனுடைய சிங்காசனம், தோட்ட நகரத்திற்குள் இறங்கிவருகிறது; அதனால் அவரது ஜனங்கள், அவரது பிரசன்னத்தில் என்றென்றைக்கும் வாழ்ந்து, அவரை அனுபவிக்கலாம். கர்த்தர், “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது” (வெளிப்படுத்தல் 21:3), என்று ஜெயத்தின் ஒரு குறிப்புடன் அறிவிக்கிறார்.
நீங்கள் உங்களது சொந்த இல்லம்போல் உணராதபோது, நீங்கள் இந்த உலகில் எந்தக் காலத்திலும் அல்லது இடத்திலும் உணர்ந்ததைவிடவும், அதைப் பரிபூரணமாய் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு நாள் வருகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களது வேலையை விரக்தி நிறைந்ததாகக் காணும்போது, நீங்கள் செய்யும்படித் தேவன் கொடுக்கிற அனைத்திலும் சந்தோஷமும், நிறைவும் காணக்கூடிய ஒரு நாள் வருகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
நீங்கள் அன்பின் சந்தோஷத்தை அனுபவிக்கும்போது, கர்த்தருடைய பிரசன்னத்தில் நீங்கள் அனுபவிக்கப்போகிறதன் ஒரு சிறிய முன்ருசிதான் இது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
உங்களது விசுவாசத்தைக்குறித்து உங்களுக்குக் கேள்விகள் அல்லது போராட்டம் எழும்போது, ஒரு நாள் நீங்கள் தேவனுடைய முகத்தைக் காண்பீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் அவரைக் காணும்போது, நீங்கள் அவரைப்போலவே இருப்பீர்கள்.
1. நகரத்தைக்குறித்த இந்தப் பார்வையானது, புதிய வானம் மற்றும் புதிய பூமியைப்பற்றிய உங்களது எண்ணத்தை எவ்வாறு மாற்றியுள்ளது?
2. தற்சமயம், தோட்ட நகரத்தின் நான்கு சந்தோஷங்களுள் மிகவும் அதிகமாக உங்களைக் கவர்கின்றவை எவை? ஏன்?
3. தேவனின் புதிய சிருஷ்டிப்பைப்பற்றி அறிந்துகொள்வது, இன்று நீங்கள் வாழ்வதற்கு எவ்விதத்தில் உதவுகிறது?
4. தேவன், தாம் ஆயத்தம் செய்துள்ள புதிய வானம் மற்றும் பூமியை, நீங்கள் அனுபவிக்கவேண்டுமென விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?
5. வேதாகமக் கதையினூடே உங்களது பயணத்தை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, எது உங்களுக்கு மிகவும் அதிக உதவிகரமாய் இருந்துள்ளது?