2 இராஜாக்கள் 17:6-28
10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
19. சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
20. நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
நீங்கள் கிறிஸ்தவராக ஆனபோது, நான்கு காரியங்கள் நிகழ்ந்தன. முதலாவது, நீங்கள் தேவனோடு ஒரு புதிய உறவிற்குள் கொண்டுசேர்க்கப்பட்டீர்கள்; அதில் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, உங்களது ஆக்கினைத் தீர்ப்பு அகற்றப்பட்டது. இரண்டாவது, தேவனின் பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்வில் உட்பிரவேசித்ததால், நீங்கள் புதுச்சிருஷ்டியாக மாறினீர்கள். மூன்றாவது, தேவனின் பிள்ளையாக நீங்கள், அவரது குடும்பமாகிய திருச்சபையில் ஓர் அங்கமானீர்கள். மற்றும் நான்காவது, தேவனுடைய கிரியைகளை எதிர்ப்பதையும், அழிப்பதையுமே ஒரே நோக்கமாகக்கொண்டதோர் சத்துருவின் கவனத்தை உங்கள்மேல் திருப்பினீர்கள். அதாவது ஒரு கிறிஸ்தவராக மாறுவதென்பது, ஒரு யுத்தத்தில் ஈடுபடுவதாகும்.
எபேசியர் 6:10-20
“மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல. . . . நமக்குப் போராட்டம். . . .” (எபேசியர் 6:12).
உங்களது பிரதான யுத்தம், மக்களுடனானது அல்ல. உங்கள் வாழ்வில் துன்பத்தைக்
கொண்டுவருகிற மக்கள் இருக்கலாம்; ஆனால், எதிரிகள் அவர்கள் அல்லர். அவர்கள்
எதிரியால் பாதிக்கப்பட்டவர்கள்.
உங்களது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை, உங்கள் வாழ்க்கைத் துணையும்
இல்லை, அது நீங்களும் இல்லை. உங்கள் திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை,
அதை அழிக்க விரும்பும், கண்ணுக்குத் தெரியாத சத்துருவே ஆவான்.
உங்களுக்கான மிகப்பெரிய பயமுறுத்தல், நீங்கள் அனுபவித்திருக்கும் காயங்களிலிருந்தும்,
நீங்கள் சகித்துக் கடந்து சென்றுள்ள தோல்விகளிலிருந்தும், அல்லது நீங்கள்
சந்தித்திருக்கக்கூடிய அநீதிகளிலிருந்தும் வருவதில்லை. உங்களை அழிப்பதற்கு
இவற்றையெல்லாம் பயன்படுத்த விரும்புகிறவன், காணப்படாத அந்தச் சத்துருதான்.
உங்களது யுத்தத்தின் முதலாவது வியு+கம், நிலைநிற்பதுதான். பவுல், ‘நில்லுங்கள் ‘ என்ற
சொல்லை நான்கு முறைகள் பயன்படுத்துகிறார்:
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி,
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:11)
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்(த்துநிற்)கவும், சகலத்தையும்
செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய
சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். (6:13)
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம்
அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப்
பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். (6:16)
தீங்குநாள் வரும்போது – அதாவது, யுத்தம் மிகக் கடுமையானதாய் இருக்கும்போது –
நீங்கள் செய்யும்படித் தேவன் விரும்புவது ஒன்றுதான்: அது அற்புதமான சாட்சியைக்
கொண்டிருப்பதோ, விசேஷித்தவிதமான முன்னேற்றத்தைக் காண்பிப்பதோ அல்ல. மாறாக,
நீங்கள் யுத்தத்தை அதன் மிகத்தீவிரமான கடுமையில் எதிர்கொள்ளும்போது, நீங்கள்
நிற்கவேண்டும் என்பது மட்டுமே.
எனவே, இதை உங்கள் இலக்காக வையுங்கள்: உங்களது நிலையை
உறுதிப்படுத்திக்கொள்ளவும், உங்களது ஸ்தானத்தில் நிலைநிற்கவும், எளிய வகையில்
நோக்கமாயிருங்கள். உறுதியாயிருங்கள், அசைக்கப்படாதிருங்கள். அத்துடன்,
விட்டுவிடாதிருங்கள்!
யுத்தத்தில் நாம் எப்படி நிற்கவேண்டும்? தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத்
தரித்துக்கொள்ளவேண்டும் (6:11).
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்… (6:14).
பவுல், வேதாகமத்தின் சத்தியத்தைப்பற்றி இங்கே பேசவில்லை. அது, “தேவவசனமாகிய
ஆவியின் பட்டயத்தையும்…” (6:17), என்று அவர் பின்பாகப் பேசும்போது வருகிறது. இங்கே
அவர், உண்மைத்தன்மை, நேர்மை மற்றும் நீங்கள் இருக்கும் சூழ்நிலையின் உண்மையை
அல்லது நிஜத்தை எதிர்கொள்வது ஆகியவற்றைப்பற்றிப் பேசுகிறார். தாவீது, “இதோ,
உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்” (சங்கீதம் 51:6), என்று சொல்லும்போது, அவர்
சத்தியமாகிய அரைக்கச்சையைத்தான் குறிப்பிட்டார்.
நீங்கள் கடுமையான யுத்தத்திலே நிற்கும்போது, சத்தியத்தை நிலைநாட்டுவதே எப்பொழுதும்
உங்களது தொடக்க நிலையாக இருக்கவேண்டும். தேவன், வேதாகம வசனங்களின் மூலம்
சத்தியத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதை, வழக்கமாக நீங்கள் காண்பீர்கள்.
வேதாகமத்தைக் கண்ணாடிபோலப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைக்குள்,
சத்தியத்தைப் பேசுகிறவர்களாகிய, நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஞானமுள்ள
ஆலோசகர்களுக்குச் செவிகொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலையை
அறிந்தவர்கள், நீங்கள் தவறவிட்டிருக்கக்கூடிய சத்தியத்தை உங்களுக்கு வழங்கும்படி
அனுமதியுங்கள்.
யுத்தத்தின் கடுமையான சூழலில் இருக்கும் யாருக்காவது நீங்கள் உதவ விரும்பினால்,
இங்குதான் நீங்கள் தொடங்கவேண்டும். இந்தச் சூழ்நிலையைக்குறித்த சத்தியம் என்ன? இங்கு
உண்மை நிலை என்ன? நீங்கள் வழங்கக்கூடிய உதவியானது, பெரும்பாலும் உங்களால்
காணமுடிந்த ஒன்றாகவும், அந்தக் குறிப்பிட்ட நபர் இதுவரை கணித்துப் பார்த்திருக்கமுடியாத
ஒன்றாகவும் இருக்கலாம்.
ஒரு சூழ்நிலைக்கான ஞானமுள்ள ஆலோசனையானது, அதைக்குறித்த சரியான புரிதலுடன்
தொடங்குகிறது; அதனால்தான் யாக்கோபு, “நாம் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப்
பொறுமையாயும்” இருக்கவேண்டும் (யாக்கோபு 1:19), என்று சொல்கிறார். நாம் சத்தியம்
என்னும் கச்சையை அரையில் கட்டிக்கொண்டிருக்கவேண்டும்; ஏனெனில், மேலோட்டமான,
மற்றும் ஆராயப்படாத வாழ்க்கையை வாழ்வதே, பயனற்ற கிறிஸ்தவராக ஆவதற்கு
மிகத்துரிதமான வழியாகும்.
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும்
மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; (எபேசியர் 6:14)
நீதியென்னும் மார்க்கவசமென்பது, நாம் விசுவாசத்திலே கிறிஸ்துவினிடத்தில் வரும்போது,
நம்முடையது என்று கணக்கிடப்படும் கிறிஸ்துவின் நீதியை இங்குக் குறிப்பிடவில்லை. பவுல்,
கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு எழுதுகிறார். கிறிஸ்துவின் நீதி, ஏற்கெனவே
அவர்களுடைய நீதியாயும் இருக்கிறது. கிறிஸ்துவின் நீதி உங்களுடையதாய்க்
கணக்கிடப்பட்டு, நீங்களும் அந்த நீதியினால் உடுத்துவிக்கப்படும்போது, அதை நீங்கள்
தினந்தோறும் எடுத்து, அணிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.
பவுல் இங்கு எதைக்குறித்துப் பேசுகிறார் எனில், நீதியானதைச் செய்யும்படி நாம்
அனுதினமும் எடுக்கும் தீர்மானத்தைப்பற்றியே ஆகும். யுத்தத்தில் நிற்பதற்குரிய ஒரே வழி,
விலைக்கிரயத்தைப்பற்றிப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பார்வையில் நீதி எதுவெனத்
தீர்மானித்து, அதைச் செய்வதேயாகும். சத்தியம் என்னும் அரைக்கச்சையும், நீதியென்னும்
மார்க்கவசமும், சர்வாயுதவர்க்கப் பட்டியலில் முதலாவதாக நிற்கின்றன; ஏனெனில், எந்தப்
பிரச்சினையிலும், “உண்மை என்ன?” என்பதும், “எது சரி?” என்பதுமே முதலாவதாகக்
கேட்கப்படும் கேள்விகள் ஆகும். ஒரு தகப்பன் தன் மகளிடம், நள்ளிரவுக்குள் வீட்டிற்குத்
திரும்பிவிடவேண்டும் என்று கூறுகிறார். அவள் அதிகாலை 2 மணிக்கு வரும்போது, அவர்
தன் கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடத் தயாராகிறார். ஆனால் முதலாவதாக,
உண்மை என்னவென்று அவர் கண்டறியவேண்டும். ஒருவேளை அவள், அவரது
கட்டுப்பாட்டைப் புறக்கணித்திருக்கலாம்; ஆனால், ஒருவேளை அவளது கார் பழுதாகி
நின்றிருக்கவும் வாய்ப்புள்ளது. உண்மை என்னவென்று கண்டறிவதற்கு அவர்
நேரமெடுத்துக்கொண்டால், சரியானது என்னவென்று கண்டுகொள்ள அவரால் முடியும். அந்தக்
கொள்கை, எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் உண்மையை நிலைநாட்டுகிறது.
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே
தொடுத்தவர்களாயும்; (6:15)
நமது சொந்த சௌகரியங்களைக்குறித்த இயல்பான அக்கறையையே காரணமாகக்கொண்டு,
நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கச்செய்வது, சத்துருவின் தந்திரங்களுள் ஒன்றாகும்.
இந்தத் தந்திரத்தை எதிர்த்து நிற்பதற்கான வழி எதுவெனில், சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம்
என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்துக்கொள்வதுதான். பாதரட்சைகள் என்பவை,
முன் செல்வதற்கானவை; இந்தப் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள்வது என்பதற்கு,
சுவிசேஷத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதில், நீங்கள் பேரார்வம் உடையவர்களாய்
மாறுவீர்கள் என்று பொருள்.
சுவிசேஷமானது, சமாதானத்தின் சுவிசேஷம் என்று விவரிக்கப்படுவதைக் கவனியுங்கள்.
உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஒவ்வொன்றுமே கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள்
நிலைத்திருக்கக்கூடியதான வழி இதோ, இதுதான்: இயேசுவின் நற்செய்தியானது, தமது
இரத்தத்தைச் சிலுவையில் சிந்தியதின் மூலம் அவர், சமாதானத்தை உண்டுபண்ணினார்
என்பதுதான்; அதனால், உங்கள் பாவங்கள் பெருகியிருந்தபோதிலும், உங்கள் வாழ்க்கை
நீங்கள் விரும்புகிற விதத்திலிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தபோதிலும், அவருக்குள்
நீங்கள், தேவனுடன் சமாதானம் பெற்றுள்ளீர்கள். ஆகவே, கிறிஸ்துவின் மூலமாக நீங்கள்
தேவனுடன் சமாதானம் அடைந்திருக்கிறீர்கள் என்ற அறிவில் உறுதியாய்த் தரித்து
நில்லுங்கள்.
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய்,
எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும்
நில்லுங்கள். (6:16)
உங்கள் மனதிற்குள், அழிவுக்கேதுவான எண்ணங்கள், வெறுப்பு மிகுந்த எண்ணங்கள்,
அல்லது தூஷணமான எண்ணங்களும்கூட நுழைந்து, உங்களைத் தொந்தரவுக்குள்ளாக்கும்
அனுபவங்களை எப்பொழுதேனும் பெற்றிருக்கிறீர்களா? அவை வரும்போது, நீங்கள்
வெட்கத்துக்குள்ளாகி, “இந்தக் காரியங்களையெல்லாம் நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்
என்பதை என்னால் நம்பவேமுடியவில்லை,” என்று நீங்கள் சொல்வீர்கள்.
மெய்யாகவே சொல்லவேண்டுமானால், இவற்றை எல்லாம் சிந்திப்பது நீங்களல்ல. இவை,
பொல்லாங்கனின் அக்கினியாஸ்திரங்களாகும். அவை உள்ளிருந்து வருவதில்லை,
வெளியிலிருந்து வருகின்றன; அவை வரும்போது நீங்கள் அவற்றை வெறுக்கின்ற
காரணத்தால், இந்த எண்ணங்கள் வெளியிலிருந்து வருகின்றன என்பதை நீங்கள்
அறிந்துகொள்கிறீர்கள்.
இந்த அஸ்திரங்களுக்கு நீங்கள் எப்படி எதிர்த்து நிற்கவேண்டும்? விசுவாசத்தின் கேடகத்தைப்
பிடித்துக்கொள்ளுங்கள். விசுவாசமானது, தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்றும்,
உங்களுக்கெதிராக அணிவகுத்து நிற்கும் அனைத்தையும்விட, அவர் பெரியவர் என்றும்
நம்புகிறது.
ரோமானியப் படைவீரர்கள், இரண்டு வேறுபட்ட கேடகங்களினால் தங்களைப்
பாதுகாத்துக்கொண்டார்கள். கைக்குக் கை மோதும் எதிரெதிர் மோதலில், முன் கையில்
அணிந்துகொள்ளப்பட்ட, ஒரு சிறிய, வட்டவடிவக் கேடகம் பயன்படுத்தப்பட்டது; ஆனால் அது,
சரமாரியான, அக்கினியாஸ்திரங்களின் தாக்குதலிலிருந்து, பாதுகாப்பை வழங்கவில்லை.
இங்குச் சித்திரிக்கப்படுவது, கலவரத்தின்போது காவல்துறையினர் கையாளும், பெரியதான,
நான்கடி உயரமும், இரண்டடி அகலமுமான, செவ்வக வடிவிலான ஒரு கேடகத்தினுடைய
அமைப்பாகும். படைவீரர்களின் ஒரு சிறு குழுவானது, ஒன்றாக இணைந்து நின்று, குழு
முழுவதையும் சுற்றி ஏறத்தாழ ஓர் ஆமை ஓட்டைப்போல, ஒரு பாதுகாப்பு அரணை
அமைக்கும்படித் தங்களது கேடகங்களைத் தாங்கிநிற்பதான ஒரு வியு+கத்தை, ரோமானியர்கள்
யோசித்து உருவாக்கியிருந்தார்கள்.
யுத்தத்தில் நீங்கள் தனித்து விடப்படவேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். வேறு
ஒருவருமே அறிந்திராத, உங்கள் மனதிலும் மற்றும் உங்கள் குடும்பத்திலும் ஏற்படும்
தாக்குதல்களை எதிர்த்து, தன்னந்தனியாய் நின்று உங்களைப் போராடவைப்பதை அவன்
மிகவும் வாஞ்சிப்பான். ஆனால் தேவனோ, நீங்கள் தனித்துப் போராடுவதை ஒருபோதும்
விரும்புகிறவரல்ல. உங்கள் சார்பில் நிற்கக்கூடிய, உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம்,
உங்களது போராட்டத்தைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள். விசுவாசக் கேடகத்தைப்
பிடித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பான அரணின்கீழ், மற்ற விசுவாசிகளுடன் உங்களையே
பிணைத்துக்கொள்ளுங்கள்.
இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் . . . . எடுத்துக்கொள்ளுங்கள். (6:17)
இயேசு கிறிஸ்துவுக்காக, வாழ்நாள் முழுவதும் பயனுள்ள ஓர் ஊழியத்தில் நீங்கள்
நிலைத்துநிற்க வேண்டுமானால், மனச்சோர்வை நீங்கள் மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
உங்களது வேலையின் முடிவில், உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடிய தருணங்கள்
இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதாகத் தோன்றாது; நீங்கள்
சந்திக்கிற பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வே இல்லாததுபோல் தோன்றலாம். களைப்பு
உங்கள் புத்திக்கூர்மையை இருளாக்கிவிட, நீங்கள் விரக்தியடையத் தொடங்கலாம்.
வேதாகமம், கடந்தகால, நிகழ்கால மற்றும் வருங்கால வேறுபாடுகளில், இரட்சிப்பைப்பற்றிப்
பேசுகிறது. இரட்சணியமென்னும் தலைச்சீராவைப்பற்றி எழுதுகையில் பவுல், வருங்கால
இரட்சிப்பைக்குறித்த நம்பிக்கையையே குறிப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:8).
பவுல் தனது உபத்திரவங்களை, பிற்காலத்தில் வெளிப்படப்போகும் மகிமையுடன் அருகே
வைத்துப் பார்த்து, யுத்தத்தில் நிலைத்து நின்றதான விலைக்கிரயம், உண்மையில்
விலைமதிப்பற்றது என்னும் முடிவுக்கு வருகிறார். “மேலும் காணப்படுகிறவைகளையல்ல,
காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான
நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ
நித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:17-18).
நீங்கள் யுத்தத்தில் சோர்ந்துபோயிருந்தால், உங்களுக்கு முன்பாக இருக்கும் நம்பிக்கையின்
மீது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும்
எடுத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:17)
வேதாகமம், ஆவியானவரின் பட்டயம் என்று இங்கே விவரிக்கப்படுகிறது. வேறு வகையில்
சொன்னால், வேதாகமமே பரிசுத்த ஆவியானவர் தமது கிரியைகளை நிறைவேற்றப்
பயன்படுத்தும் கருவியாகும். தேவனுடைய வசனத்தைத் துளித்துளியாய் உங்கள் வாழ்விற்குள்
ஊட்டமாய் இறங்கவிடுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில், நீங்கள்
உங்களது நிலையிலே உறுதியாய்த் தரித்து நிற்கமுடியும்.
நீங்கள் தரித்திருக்கிற சர்வாயுதவர்க்கம், தேவனுடைய சர்வாயுதவர்க்கம் என்பதை நினைவில்
கொள்ளுங்கள். அவரே உங்களுக்குச் சர்வாயுதவர்க்கத்தைக் கொடுக்கிறார். நீங்கள்
கட்டியிருக்கும் சத்தியம், அவர் வெளிப்படுத்துகிற சத்தியம். உங்களை மூடியிருக்கும் நீதி,
அவர் வழங்குகிற நீதி. நீங்கள் தொடுத்து நிற்கிற பாதரட்சையான சுவிசேஷம், அவரது
சுவிசேஷம். உங்களை மறைத்திருக்கும் விசுவாசம், அவரிலுள்ள திட நம்பிக்கை. உங்களை
நிலைநிற்கப்பண்ணுகிற நம்பிக்கை, அவரது இரட்சணியத்தைக்குறித்த எதிர்பார்ப்பு. அவர்
உங்களுக்கு வழங்கும் வல்லமை, அவரது வார்த்தையின் வல்லமை வழியாக வருகிறது.
அதிக முயற்சி கனத்துக்குரியது என்பதைவிட, அதிலும் மேலானவைகள் இருப்பதால்
தேவனுக்கு ஸ்தோத்திரம். யுத்தத்தில் தேவனே உங்களோடிருக்கிறார். உங்கள் இரட்சகர்
உங்களோடிருப்பதால், உங்களால் மேற்கொள்ளமுடியும்! ஆகவே, “கர்த்தரிலும் அவருடைய
சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபேசியர் 6:10).
உங்களைச் சூழ்ந்து எங்கும் யுத்தம் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் எப்படி நிற்கிறீர்கள்? சத்தியத்தை எதிர்கொள்ளுங்கள். நீதியானதைச் செய்யுங்கள். சுவிசேஷத்தின் சமாதானத்தில் இளைப்பாறுங்கள். மற்ற விசுவாசிகளுடனேகூட இணைந்து, விசுவாசத்தைச் செயல்படுத்துங்கள். உங்கள் வருங்கால இரட்சிப்பின் சந்தோஷத்தை எதிர்நோக்கியிருங்கள். தேவனின் வசனத்தினாலே ஒப்புரவாக்கப்பட்டவர்களாய், ஆவியானவரின் வல்லமையிலே முன்னோக்கிச் செல்லுங்கள்.
1. தற்போது, உங்களுக்கான யுத்தம் எங்கே மிகவும் கடுமையானதாக இருக்கிறது?
2. உங்கள் வாழ்க்கையின் யுத்தங்களில், உங்களோடுகூட நின்றிருக்கும் மக்கள் யார் யார்? அவர்கள் உங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கிறார்கள்?
3. உங்களது யுத்தத்தில் இன்னும் அதிக உறுதியாய் நிற்கும்பொருட்டு, நீங்கள் எடுக்கக்கூடிய ஒரு முயற்சி எது?
4. “எந்தவொரு பிரச்சினையிலும், கேட்கப்படவேண்டிய முதல் கேள்விகள், ‘உண்மை என்ன?’ மற்றும் ‘நீதியானது (அ) சரியானது என்ன?'” என்பவை. இது நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினையில், உங்களுக்கு எவ்வகையில் உதவக்கூடும்?
5. உங்கள் யுத்தத்தில் நீங்கள் தொடர்ந்து போரிட, இந்தப் பாடத்தில் உங்களை உற்சாகப்படுத்தியிருப்பது எது?