2 இராஜாக்கள் 17:6-28
1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4. உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
7. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
10. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
11. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
இயேசு சிலுவையின்மேல் நிறைவேற்றியவற்றின் மூலம், நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டுள்ளோம். ஆனால், நாம் நீதிமான்களாக்கப்பட்டோம் என்று, எவ்வாறு நாம் நிச்சயித்துக்கொள்ள முடியும்? நாம் நிச்சயத்தோடிருக்கத் தேவன் விரும்புகிறாரா? ஆம் எனில், அது எவ்வாறு சாத்தியமாகும்? இன்றைய நமது பாடப்பகுதி, ". . . நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்" (ரோமர் 5:1), என்பதுடன் தொடங்கி, "அதுவுமல்லாமல், . . . நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்" (ரோமர் 5:11), என்பதுடன் அது முடிவடைகிறது. இந்த வசனங்கள், விசுவாசம்கொள்வது முதல் மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதுவரையிலான, ஒரு விசேஷித்த பாதையில் நம்மைக் கொண்டுசெல்கின்றன.
ரோமர் 5:1-11
உங்கள் வர்த்தகப் பங்காளரைத் தொடர்ச்சியாக அழைத்து, அவர் இன்னும் உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறாரா, என்று நீங்கள் கேட்கவேண்டியதாயிருந்த, ஒரு தொழில் கூட்டுறவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அல்லது, உங்கள் வாழ்க்கைத்துணையானவர் உங்களை நேசிக்கிறாரா, இல்லையா என்று, நீங்கள் நிச்சயமாக அறிந்திராத ஒரு திருமணத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எந்த உறவும் நீடித்திருக்கலாம்; ஆனால், எதுவுமே மகிழ்ச்சியாக அனுபவிக்கப்பட முடியாது.
தேவன், தம்முடனான உங்களது உறவை, நீங்கள் அனுபவித்து மகிழவேண்டுமென்று விரும்புகிறார். அதன் அர்த்தம், அதில் நீங்கள் நிச்சயத்தோடு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார் என்பதாகும். ஆனால் ஒரு கிறிஸ்தவரின் மனதில், மகிழ்ச்சியைக் கொன்றுபோடுகிற விதமாக அடிக்கடி எழுகின்ற, மூன்று கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் தேவனுடன் உங்கள் உறவை அனுபவித்து மகிழவேண்டுமானால், அவற்றுக்கு எப்படிப் பதில் கூறவேண்டுமென்பதை அறிந்திருக்கவேண்டும். அந்தப் பதில்கள் எல்லாமே, ரோமர் 5-ல் காணப்படுகின்றன.
நான் தேவனுடன் சமாதானமாயிருக்கிறேன் என்று, வேதாகமம் எனக்குக் கூறுகிறது. ஆனால் அது உண்மையாயின், பின்பு ஏன் நான் என் வாழ்வில் இவ்வளவு அதிகமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கவேண்டும்? நீங்கள் ஒரு சுகவீனத்தை, ஒரு குடும்பப் பிரச்சினையை, அல்லது வாழ்க்கையில் வேறு ஏதேனும் ஒரு ஏமாற்றத்தைச் சந்திக்கும்போது, இத்தகைய ஒரு காரியத்தை, உங்களுக்கு நேரிடும்படியாக தேவன் ஏன் அனுமதிக்கவேண்டும் என்று நீங்கள் சிந்திக்கலாம்.
உங்கள் வாழ்க்கையின் மிகக்கடினமான காரியங்களைத் தேவன், சிறந்த, மதிப்புவாய்ந்த ஒன்றைச் சாதிப்பதற்குப் பயன்படுத்துவார்: “. . . உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்” (ரோமர் 5:3-4). உங்கள் வாழ்வில் வேதனை மிகுந்ததாய் இருப்பதை, உங்களை மேன்மேலும் இயேசுவைப்போலாக்குவதற்குத்
தேவனால் பயன்படுத்த முடியும்.
தேவன், பிரச்சினைகளே அற்றதொரு வாழ்வை ஒருபோதும் நமக்கு வாக்குப்பண்ணவில்லை. இயேசு, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்,” என்றார் (யோவான் 16:33). உங்கள் வாழ்வில் பிரச்சினை இருப்பதற்கு, தேவன் உங்களுக்கு எதிராய் இருக்கிறார் என்று அர்த்தமல்ல. கிறிஸ்துவிலே, தேவன் நம் சார்பில் இருக்கிறார்: “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32).
இதை அறிந்திருப்பது, உங்கள் வாழ்க்கையின் மிகக்கடினமான நாட்களினூடேயும், நிலைத்திருக்கப்பண்ணும்படி உங்களைப் பலப்படுத்தும். உங்கள் கண்ணீரின் மத்தியிலும், நீங்கள் தேவனை நோக்கிப் பார்க்கலாம். ஆனால், நம்பிக்கையோடு அப்படிச் செய்ய உங்களால் கூடும். உங்கள் நம்பிக்கையும் பொய்த்துப் போகாது.
பவுல், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8), என்று நமக்குக் கூறுகிறார். ஆனால், இயேசுவின் மரணம் எவ்வாறு தேவனுடைய அன்பை விளங்கப்பண்ணுகிறது? தமது அன்பைச் சிறந்த விதத்தில் வெளிப்படுத்துவதுபோலத் தோன்றக்கூடிய அநேகக் காரியங்களைத் தேவனால் நமக்குக் கொடுக்க முடியும். வேதாகமம், “புற்றுநோயிலிருந்து நமக்குச் சுகமளித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்,” என்று சொல்லியிருந்தால், நாம் அதனை அவரது அன்பின் வெளிப்பாடாக அங்கீகரிப்போம். ஆனால் இயேசு ஒரு சிலுவையின்மேல் மரிப்பது, எவ்வாறு தேவனுடைய அன்பின் அடையாளமாக இருக்க முடியும்?
நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே, நிலவொளியில், ஒரு காரில் அமர்ந்திருக்கும் ஒரு தம்பதியினரைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் தனது கரத்தை, மனைவியின் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, அவரது காதில், “நான் உன்னை நேசிக்கிறேன்,” என்று மெதுவாகச் சொல்கிறார்.
மனைவியோ, அவரைச் சந்தேகத்துடன் பார்த்து, “நிஜமாகவே நேசிக்கிறீர்களா? எனக்குச் சில வேளைகளில் குழப்பமாயிருக்கிறது,” என்கிறார். கணவர், “சரி, நான் அதை நிரூபிக்கிறேன்,” என்று சொல்கிறார். சொன்னதுடன், அவர் காரை விட்டிறங்கி, விளிம்புவரை சென்று, ஒரே பெரும் பாய்ச்சலில் குதித்துவிடுகிறார்.
பள்ளத்தாக்கினுள் அவர் விழும்போது, “நான் உன்னை நேசிக்கிறேன்…” என்று அவர் சத்தமிட்டுக் கத்துகிறார். இது ஒரு மறக்க முடியாத அனுபவமாயிருக்கலாம். ஆனால், இது அன்பின் ஒரு அடையாளம் அல்ல. அந்த மனிதரின் மரணம், அந்த ஸ்திரீக்கு எதையும் சாதித்துத் தரவில்லை.
இயேசுவின் மரணம், அன்பின் ஒரு வெளிப்பாடாகும். ஏனெனில் அது, முடிவில்லாத மதிப்புமிக்கதொன்றை, நமக்காகச் சாதித்துக் கொடுத்திருக்கிறது: இயேசுவின் மரணத்தின் மூலம், நமது பாவத்தின் கடன் செலுத்தப்பட்டது. மற்றும், தேவனுடைய கோபமும் சமாதானப்படுத்தப்பட்டது.
நமது மாபெரும் தேவையின் தருணத்தில், தமது மாபெரும் பரிசைத் தந்ததன் மூலம் தேவன், நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணியிருக்கிறார். ஆகவே, தேவன் மெய்யாகவே உங்களை நேசிக்கிறாரா, என்று சந்தேகிக்கக்கூடிய சோதனைக்கு நீங்கள் உள்ளாகும்போது, உங்கள் வாழ்வின் சூழ்நிலைகளைப் பார்க்காதீர்கள். சிலுவையை நோக்கிப் பார்த்து, இயேசு உங்களுக்காக நிறைவேற்றி முடித்திருப்பதை மனதில் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாதிருக்கக்கூடிய ஒரு பயணத்தை நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. பாஸ்போர்ட்டுகள் உங்கள் கையில் ஆயத்தமாய் இருக்கின்றன. மற்ற அனைத்துப் பதிவுகளும் செய்யப்பட்டுவருகின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், விமான நிலையத்துக்குப் போகவேண்டியது மட்டும்தான். ஆனால், இன்னும்கூட அநேகக் காரியங்கள் தவறாகப் போகலாம்! நீங்கள் புறப்படுவதற்கு முந்தின இரவில், நீங்கள் சுகவீனமடையக்கூடும். படிக்கட்டுகளில் இறங்கி வரும்போது, நீங்கள் தடுமாறி உங்கள் காலை உடைத்துக்கொள்ளக்கூடும். அதன்பின்பு நிகழக்கூடிய தொல்லை தரும் விஷயங்கள் எப்படிப்பட்டவை என்று நாம் எளிதாகவே கற்பனை செய்துகொள்ளலாம்.
நாம் நீதிமான்களாக்கப்படும்போது, தேவனோடு நமக்குச் சமாதானம் உண்டாயிருக்கிறது. ஆனால், நாம் ஏதாவது குளறுபடி செய்துவிட்டால் என்னாகும்? ஒருவேளை நீங்கள்: “நான் இந்தக் கிறிஸ்தவ வாழ்வைக் காத்துக்கொள்ள முடியுமா என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை! நான் எதிர்கொள்ளும் சோதனைகள் எனக்கு மிகவும் கடினமானவையாக இருந்தால், என்னாவது? அவற்றுள் ஏதாவதொன்று, எனது விசுவாசத்தை முற்றிலுமாகத் தகர்த்துப்போட்டுவிட்டால் என்ன செய்வது?” என்று, உங்களிடம் நீங்களே சொல்லிக்கொள்வது எப்படியிருக்கும் என்று அறிந்திருக்கிறீர்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலானது, “. . . நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம், . . .” (ரோமர் 5:9), என்பதாகும். சிலுவையின்மேல் சிந்தப்பட்டதான, இயேசுவின் இரத்தத்தின் மூலம், தேவன் நம்மை நீதிமான்களாக்குகிறார். தேவனோடு சமாதானத்தில் இருப்பதென்பது, உங்களில் இருக்கும் எதையுமே அடிப்படையாய்க்கொண்டது அல்ல. அது, உங்களுக்கு முற்றிலும் புறம்பான வேறொன்றின் மீது ஊன்றியுள்ளதாகும். அதுதான் இயேசுவின் இரத்தம். உங்களது பாதுகாப்பின் அடிப்படை இதுதான். அதன் பொருளை நீங்கள் உணர்ந்துகொள்ள முடிந்தால், அது தேவனில் களிகூர்ந்திருக்க, உங்களுக்கு உதவும்.
கடைசி நாளில், நீங்கள் பரலோகத்தில் இருப்பீர்கள் என்பது, எப்படி உங்களுக்குத் தெரியும் என்று உங்களிடம் யாராவது கேட்டால், நீங்கள் எவ்வாறு பதில் அளிப்பீர்கள்? பொதுவான, ஆனால் போதுமானதாயிராத, மூன்று பதில்கள் இங்குள்ளன.
அது மிகவும் சிறப்பானதுதான். ஆனால், இயேசுவை நேசிப்பதைக் குறித்த பரீட்சையானது, நாம் அவரது கற்பனைகளைக் கைக்கொள்வதாகும் (யோவான் 14:15). நாம் அவரது கற்பனைகளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிவதில்லை என்கிற உண்மையே, நாம் அவரை முழுமையாய் அன்புகூர்வதில்லை என்பதையும் காட்டுகிறது.
கிறிஸ்துவுக்கான நமது அன்பு உண்மையானதுதான், ஆனால் அதன் மிகப்பெரும்பான்மை விழுக்காடு, நமக்கான அன்பாகவே இருக்கிறது. கிறிஸ்துவை நாம் நேசிக்கிறோம் என்பது சத்தியமே. என்றாலும், அவர் மீதான நமது அன்பு, கடைசி நாளில் நாம் அவரது பிரசன்னத்தில் நிற்கும்போது, நம்பிக்கைக்கேதுவான ஓர் ஆதாரமாக இருக்காது!
அது மிகவும் அற்புதமானது. ஆனால், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதான உங்களது அர்ப்பணம், அலைக்கழிக்கப்பட்டால், என்னவாகும்? ஒரு பத்தாண்டுகள் கால அளவுக்குள், உங்களது ஆர்வம் குன்றிப்போனால், என்னவாகும்? அதனால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களும் குன்றிவிடும் என்று அர்த்தமாகிவிடுமா, என்ன? கிறிஸ்துவுக்கான தங்களது செயல்பாடுகள் அல்லது ஆர்வமே, பரலோகத்தில் பிரவேசிப்பதற்கான அடிப்படை என்று நினைக்கும் மக்கள், விரைவாய் மாபெரும் பாரச்சுமையின்கீழ் அழுத்தப்படுகிறவர்களாய்க் காணப்படுகிறார்கள். நீங்கள் எதைச் செய்தாலும், எப்பொழுதுமே உங்களது அர்ப்பணிப்பின் அளவு, இன்னும் உயர்ந்ததாய் இருந்திருக்கவேண்டும். தங்களது சுய அர்ப்பணிப்பின் மீதே சார்ந்திருக்கும் விசுவாசிகள், ஆவிக்குரிய சோர்வுக்கான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அது மிகவும் அதிசயமானதுதான். ஆனால், உங்கள் விசுவாசம் எவ்வளவு வலிமைவாய்ந்ததாய் இருக்கிறது? நீங்கள் சந்தேகத்தோடு போராடுகிற தருணங்களே
இல்லையா? உங்களது சொந்த விசுவாசத்தின் மீதே விசுவாசம் வைப்பதான, தவறுக்குள் விழுந்துவிடாதீர்கள். மாறாக, கிறிஸ்துவில் விசுவாசம் வையுங்கள். யாருடைய விசுவாசமும், கேள்விகள், கவலைகள், சந்தேகங்கள் அல்லது பயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. உங்களது சொந்த விசுவாசத்தின்மேல் நீங்கள் விசுவாசம் வைத்தால், உங்கள் விசுவாசம் போதுமானது என்பதில் நீங்கள் ஒருபோதும் நிச்சயத்தோடிருக்க மாட்டீர்கள்.
பற்றாக்குறையான இந்த மூன்று பதில்களில் இருக்கும், ஒரு பொதுவான அம்சத்தை நீங்கள் கவனித்தீர்களா? அவையனைத்துமே, ‘நான்’ என்னும், அபாயகரமான சிறிய வார்த்தையுடன் தொடங்குகின்றன. நான் இயேசுவை நேசிக்கிறேன். நான் அர்ப்பணித்துள்ளேன். நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன். ‘நான்’ என்பதுடன் தொடங்கும் எதனுடனும் இருக்கும் பிரச்சினை என்னவெனில், அது ஒருபோதும் முழுமையானதாயும், ஒருபோதும் எப்படி இருக்கக்கூடுமோ அப்படியும், ஒருபோதும் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியும் இருப்பதில்லை.
நம்மில் தேவனுடைய கிரியை தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை. ஆகவே, நாம் இயேசுவை நேசிக்கிறோம், இயேசுவுக்கு ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம், மற்றும் நாம் இயேசுவில் விசுவாசம் கொள்கிறோம் என்பது அற்புதமானதொரு சத்தியம் என்றபோதிலும், இவற்றுள் ஒன்றுகூட, எப்படி இருக்கவேண்டுமோ, ஒரு நாள் எப்படி இருக்குமோ, அப்படி இப்பொழுது இல்லை. கிறிஸ்துவுக்கான நமது விசுவாசம், ஊழியம் மற்றும் அன்பு ஆகியவை, இன்னும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு வேலையாகவே இருக்கிறது.
நாம் மறுமையில் எப்படியிருப்போமோ, அந்த நிலையை நம்மில் யாருமே இன்னும் அடைந்துவிடவில்லை. அதனால்தான், நம்மில் காணப்படும் எதன் மூலமாகவும், நாம் தேவனுக்கு முன்பாக ஒருபோதும் நம்பிக்கைகொண்டிருக்கவே முடியாது. முழு நிச்சயத்தோடிருக்க ஒரே ஒரு உறுதியான ஆதாரம் மட்டுமே உள்ளது: நாம், “அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்” (ரோமர் 5:9).
போதகர் ஸ்மித் அவர்களின் குடும்பத்தார், அமெரிக்காவில் தங்களது முதல் கிறிஸ்துமஸைக் கொண்டாடிய பின்பு, அவரது குடும்பம் விஸ்கான்சின் மாநிலத்துக்கு ஒரு பயணம் மேற்கொண்டது. ஃபாண்ட் டு லாக் வரை அவர்கள் கடந்து சென்று, அவ்விடத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக, ஏரியின் அருகே அவர்களுடைய காரை நிறுத்தினார்கள். அவர்கள் ஒருபோதும் அவ்வளவு குளிரை உணர்ந்ததில்லை.
அந்தச் சமயத்தில், பத்து வயதும், எட்டு வயதுமே ஆன அவர்களது மகன்கள், “அப்பா, நாம் பனிக்கட்டியின் மீது செல்வோமா?” என்றனர். நீங்கள் யோசனையற்று இருக்கும்போது, இயல்பாக உங்களின் ஏதோ ஒரு பதிலைச் சொல்லிவிடுகிறீர்கள் என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருக்கிறீர்கள். பிரிட்டனில், குளிர் இருக்கும். ஆனாலும், இந்த அளவுக்கு இருக்காது. ஆதலால், பனிக்கட்டி இருக்குமிடம், பெரும்பாலும் மிக மெல்லிய அடுக்காகத்தான் இருக்கும். எனவே போதகர், “சரி, ஆனால் கவனமாகப் போகவேண்டும்,” என்று சொன்னார். அவர்கள் பனிக்கட்டியின் மீது முன் நகர்ந்து, தங்கள் பாதையைக் கண்டுபிடித்து, ஒருவிதப் பதட்டத்துடன், அங்குலம் அங்குலமாக முன்னோக்கிப் போகிறார்கள் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்பொழுது, ஓர் எஞ்சினின் உறுமல் ஒலி கேட்டது. ஒரு வாகனம்,
ஏறக்குறைய ஆறு உயர்நிலைப் பள்ளி மாணவர்களைச் சுமந்துகொண்டு, கூச்சலிட்டுக்கொண்டு பனிக்கட்டியின்மீது வந்தது. போதகர், அவ்வளவு முட்டாள்தனமாக ஒருபோதும் உணர்ந்ததில்லை.
பனிக்கட்டியின் மீது ஒவ்வொரு அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்த அவர்களுக்கு மிகச்சிறிதளவே நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாகவே இருந்தார்கள். அவர்கள் நின்றுகொண்டிருந்ததான அந்தப் பனிக்கட்டி, கற்பாறையைப்போல உறுதியானதாய் இருந்தது. அவர்களது பாதுகாப்போ, அவர்களது “விசுவாசத்தின்” வல்லமையைச் சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவர்கள் நின்றுகொண்டிருந்த, அந்தப் பனிக்கட்டியின் வலிமையைச் சார்ந்திருந்தது.
நாம், நமது விசுவாசத்தின் வல்லமையால் இரட்சிக்கப்படவில்லை. மாறாக, நமது இரட்சகரின் வல்லமையால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.
தேவனுக்குள் நிச்சயத்தையும், மகிழ்ச்சியையும் நீங்கள் வளர்த்தெடுக்க விரும்பினால், நீங்கள் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, "என் விசுவாசம் எவ்வளவு வல்லமையானது?" என்பதல்ல. மாறாக, "என் இரட்சகர் எவ்வளவு வல்லமையானவர்?" என்பதேயாகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், இந்தத் தருணம் முதல் தேவனுடைய பிரசன்னத்தில் நான் சேரும் நாளளவும், எனது எல்லாப் பாவத்தையும் கழுவிப் போக்குவதற்கும், மற்றும் என் ஒவ்வொரு பலவீனத்தையும், தோல்வியையும், பற்றாக்குறையையும், மூடுவதற்கும் நிறைவுள்ளதும், (அ) வல்லமை வாய்ந்ததுமாய் இருக்கிறதா? அந்தக் கேள்விக்குப் பதில், "ஆம். முழு நிச்சயமாக. கேள்விக்கே இடமில்லாமல்," என்பதாகும்.
1. தற்சமயம், பின்வரும் கேள்விகளில் எது உங்களுக்கு மிகவும் கடினமானதாய் இருக்கிறது: தேவன் உண்மையாகவே கரிசனை கொள்கிறாரா? இது ஏன் எனக்கு நிகழ்கிறது? நான் பரலோகம் சென்று சேர்வேன் என்று எப்படி நான் நிச்சயித்துக்கொள்வது?
2. தேவன், தம்முடனான உங்களது உறவைப்பற்றி, நீங்கள் ஏன் நம்பிக்கையாய் இருக்கவேண்டும் என விரும்புவார் என்று, நீங்கள் நினைக்கிறீர்கள்?
3. 1 (ஒன்றுமில்லை) முதல் 10 (முழு நிச்சயமானது) வரை உள்ள அளவுகோலில், நீங்கள் மரிக்கும்போது பரலோகத்துக்குச் செல்வீர்கள் என்று எந்த அளவுக்கு நம்பிக்கையோடிருக்கிறீர்கள்? உங்களது நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை எங்கிருந்து வருகிறது?
4. உங்களது சொந்த விசுவாசத்தில் விசுவாசம் வைப்பதன் விளைவு என்னவாக இருக்கும்?
இந்த அறிக்கைக்குப் பதிலளியுங்கள்: “முழு நிச்சயத்தோடிருக்க ஒரே ஒரு உறுதியான ஆதாரம் மட்டுமே உள்ளது: ‘நாம், அவருடைய (இயேசுவின்) இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்’ (ரோமர் 5:9).”