2 இராஜாக்கள் 17:6-28
அப்போஸ்தலர் 9 : 1-22
1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
4. மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
5. உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.
8. பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
9. நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
11. இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
17. இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.
18. பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
19. இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
20. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
21. அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
22. அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, கிறிஸ்தவத் திருச்சபையானது, எருசலேமில் மிகவும் விரைவாக வளர்ந்தது. ஆனால் தொடக்கத்திலிருந்தே, அப்போஸ்தலர்கள் எதிர்ப்பைச் சந்தித்தார்கள். விசுவாசத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் நிறைந்திருந்தவரான ஸ்தேவான், கல்லெறியுண்டு, கொலை செய்யப்பட்டார். மேலும், "அக்காலத்திலே, எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று" (அப்போஸ்தலர் 8:1). அந்தத் துன்ப காலத்தின் மையப்பகுதியில், சவுல் என்ற பெயர்கொண்ட பரிசேயர் ஒருவர் இருந்தார்.
தேவனால், தம்முடைய மிகக் கசப்புக்குரிய எதிரிகளையும் கூட தனது மிக நெருங்கிய நண்பர்களாக மாற்ற முடியும். மிகக் கடினமான இருதயத்தைக் கூட, அவர் மாற்ற வல்லவராயிருக்கிறார். இதை நாம், திருச்சபையின் மாபெரும் எதிரியாயிருந்த ஒருவர், எவ்வாறு அதன் முன்னணி அப்போஸ்தலராக மாறினார் என்கிற சம்பவத்தில் காண்கிறோம்.
தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவரான சவுல், கிறிஸ்தவர்களை அழிப்பதையே தன் பணியாகக் கொண்டிருந்தார். அதைப் பற்றி அவர், தேவனுக்கு ஊழியம் செய்வதாகவே நம்பினார் (அப்போஸ்தலர் 9:1-2). “அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமிபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்” (அப்போஸ்தலர் 9:3-4).
கண்களைப் பார்வையிழக்கச் செய்யும் பிரகாசமுள்ள வெளிச்சத்தைச் சவுல் கண்டார். மேலும் அவர், கேட்கத்தக்க ஓசையுடனான ஒரு குரலொலியையும் கேட்டார். இது மனோரீதியான ஓர் அனுபவம் அல்ல. அவரோடுகூடப் பயணம் செய்தவர்கள், அந்தச் சத்தத்தைக் கேட்டார்கள். மேலும், கண்களைப் பறிக்கும் அந்த வெளிச்சமும் கூட, ஏதோ ஒரு மாயத் தோற்றம் அல்ல. அது அவரது விழித்திரையையே எரித்து, அவரைப் பார்வையற்றவராக்கிவிட்டது.
ஒருவேளை நீங்கள், “இதைப்போன்ற எதுவும், எனக்கு ஒருபோதும் நிகழ முடியாது,” என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். இருப்பினும் பவுலோ, “. . . திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டு . . . என்னிடத்தில் அவர் (இயேசு கிறிஸ்து) எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்” (1 திமோத்தேயு 1:16), என்று சொல்கிறார். தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில், பவுலுக்கு நேர்ந்த அனுபவம், எந்த விதத்தில் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு மாதிரியாக, அல்லது ஒரு முறைமையாக இருக்கிறது?
ஒரு கிறிஸ்துவராக மாறவேண்டுமானால், நீங்கள் ஒலிக்கக்கூடிய ஒரு குரலைக் கேட்டு, ஒரு பரலோக வெளிச்சத்தினால் பார்வை பறிக்கப்படவேண்டும் என்னும் பொருளில், பவுல் நிச்சயமாகச் சொல்லவில்லை. ஆனால், நாம் கிறிஸ்துவர்களாக மாறவேண்டுமானால், நமது வாழ்கையில் என்ன நிகழவேண்டும் என்பதற்கு தர்சு பட்டணதவராகிய சவுலின் மனமாற்றம், ஒரு மாதிரியாயிருக்கிறது.
சவுல், இயேசுவைப் பற்றி அநேகக் காரியங்களை அறிந்திருந்தார். அவர் ஒரு மாபெரும் அறிஞராயிருந்தார். அவரது கவனமெல்லாம், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் மீது இருந்தது. இயேசுவே வாக்குத்தத்தமடைந்த மேசியா என்றும், மேலும் அவர், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டார் என்றும், கிறிஸ்தவர்கள் கூறுவதையும் அவர் அறிந்திருந்தார்.
ஆனால், தனது மனமாற்றத்தைக்குறித்து நினைவுகூரும்போது அவர், “நான் அறியாமலே அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்,” என்று சொல்கிறார் (1 திமோத்தேயு 1:13). கிறிஸ்தவர்கள் விசுவாசித்தது என்னவென்று பவுல் அறிந்திருந்தார். கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும் பவுலுக்குத் தெரியுமே. ஆனால், அவர்கள் ஆராதித்த இரட்சகரை அவர் அறியவில்லை. ஆனால், கண்களைப் பறிக்கும் வெளிச்சத்தினால் சூழப்பட்டுத் தேவகுமாரனானவர் தன்னைப் பெயர்சொல்லி: “சவுலே, சவுலே . . .” (அப்போஸ்தலர் 9:4), என்று அழைப்பதைச் சவுல் கேட்டபோது, அவை அனைத்துமே மாறிவிட்டன.
ஒருவேளை நீங்கள், “இவையனைத்தும் எனக்கு மிகவும் எட்டாதவையாகத் தோன்றுகின்றன. நான் ஒருபோதும் தமஸ்குச் சாலை அனுபவத்தைப் பெற்றதே இல்லை,” என்று சொல்லலாம். ஆனால் ஒரு நாள் நீங்கள், சவுல் கண்டதைப்போலவே, நிச்சயமாய் இயேசு கிறிஸ்துவைக் காண்பீர்கள். அவருக்கு நிகழ்ந்தது உங்களுக்கும் நிகழும். நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்கள். அவர் உங்களைப் பெயர்சொல்லி அழைப்பார்.
கிறிஸ்தவத்தைக் குறித்து, அது நீங்கள் விவாதம் செய்வதற்கான, நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பு, அல்லது நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டியதொரு வாழ்வியல் என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் பவுலோ, “இதைத்தான் நான் தவறவிட்டுவிட்டேன்!” என்று சொல்கிறார். இங்கு நாம் ஒரு நபரைச் சந்திக்கிறோம். அதுவும், யாரோ ஒரு நபரல்ல. தனித்துவமானவரும், மகிமையானவருமான, ஒவ்வொரு உயிருக்கும் உரிமை கோருகிறவராகிய, ஏக சக்கராதிபதியான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரு நபர். அவர் யாரென்பதைக் காண்பது, எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.
பின்பு சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்றார். அதற்கு: “இயேசு நானே,” என்பதுதான் பதிலாக இருந்தது (அப்போஸ்தலர் 9:5). சவுல், தான் ஒரு அமைப்பையோ, ஒரு நம்பிக்கையையோ, ஒரு சமயத்தைச் சார்ந்த இயக்கத்தையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டார். ஆனால், தேவகுமாரனானவருக்கே தான் எதிர்த்து நிற்கிறவராய் இருப்பதைத் திகிலூட்டுமாறு அறிந்துகொண்டார்.
“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” (9:5). சவுல், கிறிஸ்தவர்களைத் (தான்) துன்புறுத்திக்கொண்டிருந்தார். ஆனால் இயேசு அவரிடம், “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டார் (9:4; 26:14). எப்பொழுதுமே, நாம் செய்கிற ஒவ்வொரு பாவமும் இயேசு கிறிஸ்துவுக்கு எதிரான, தனிப்பட்ட விதமான குற்றமாகும். நாம் மற்றவர்களைப் புண்படுத்தும்போது, இயேசுவையே நாம் புண்படுத்துகிறோம். நாம் மற்றவர்களை வருத்தமுறச்செய்யும்போது, இயேசுவையே நாம் வருத்தத்துக்குள்ளாக்குகிறோம். நாம் மற்றவர்களிடமிருந்து முறைகேடாய் நடக்கும்போது, இயேசுவிடமே நாம் முறைகேடாய் நடக்கிறோம்.
திடீரென்று சவுல், தன்னைக் குறித்து முற்றிலும் வேறுபட்டதொரு கோணத்தை கண்டார். அவர், தான் பரலோகத்துக்குச் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். ஆனால் தான், நரகத்துக்கான சாலையில் சென்றுகொண்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். அண்டசராசரங்களுக்கும் ஏக சக்கராதிபதியான, ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டார். தேவனால் அதிகப் பலனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நீதிமான் என்பதற்கு முற்றிலும் மாறாக, தேவனுடைய இரக்கத்திற்குத் தன்னையே ஒப்புக்கொடுத்துவிடவேண்டியதை தவிர, வேறொன்றும் இயலாததொரு பாவியாகத் தான் இருப்பதை அவர் கண்டார்.
பல்லாண்டுகள் காலமாகச் சவுல், தான் ஒரு நல்ல நபர் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டுவந்தார். அவர், தன்னைத்தானே “குற்றமற்றவர்” என்று எண்ணிக்கொண்டார் (பிலிப்பியர் 3:6). ஆனால், கசப்பும், கோபமும் நிறைந்ததொரு நபராகவும், பிறரிடமும், தேவனிடமும் சீற்றம் நிறைந்தவராகவும் தன்னையே அவர் கண்டபோது, அவர் மாறத் தொடங்கினார்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவை அறியவரும்போது, உங்களைக் குறித்த ஒரு புதிய புரிதலை நீங்கள் கொண்டிருப்பீர்கள். தற்பெருமை இல்லாமல் போய்விடும்; தாழ்மை காணப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பது, எல்லையில்லாத நிம்மதியைத் தரும். கிறிஸ்து சவுலிடம், “முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்,” என்று சொன்னார் (அப்போஸ்தலர் 26:14). இங்கே முள்ளென்று சொல்லப்படும் தார்க்குச்சிகள் என்பவை, பிடிவாதமான விலங்குகளைக் கட்டுப்படுத்த, மேய்ப்பர்களால் பயன்படுத்தப்பட்ட, கூர்மையான குச்சிகளாகும்.
ஈட்டிகளைப்போன்ற உலோகக் கூர்முனைகள், வரிசையாகத் தரையிலிருந்து இரண்டடி உயர அளவில், படுக்கைவாட்டில் கிடக்கின்றன என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களருகே ஒரு மனிதர் வருகிறார். அவர் கோபமாக இருக்கிறார். தன்னால் கூடுமானவரையிலும் தன் சக்தியை எல்லாம் திரட்டி, அந்தக் கூர்முனைகளை உதைக்கிறார். ஒரு கூர்முனை அவரது காலணியின் விரல் பகுதியினூடே நுழைகிறது. அந்த மனிதர் வலியில் பின்வாங்கித் தடுமாறுகிறார்.
ஆனால் அவரது வலி, அவரை இன்னும் அதிகக் கோபமூட்டுகிறது. ஆகவே, அவர் மறு முறையும் உதைக்கிறார். இம்முறை கூர்முனையானது, அவரது காலணிக்குள் ஆழமாகத் தைத்துவிடுகிறது. ஆதலால் அவரது பாதத்திலிருந்து, இரத்தம் வழிந்தோடுகிறது. ஆனால் அந்த மனிதரால் அப்படிச் செய்வதை நிறுத்த முடியவில்லை. நீங்களோ, அவர் தனது பாதம் இரத்தம் தோய்ந்து கூழாய்ப்போகும் வரையிலும், மறு முறையும் காலைத் தூக்கி உதைக்கும்போது, முகம் சுளித்து, மனவேதனையை வெளிப்படுத்துகிறீர்கள்.
“சவுலே, சவுலே, . . . முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்.” நாம் தார்க்குச்சிகளை எதிர்த்து உதைக்கும்போது, நீங்கள் அவற்றைக் காயப்படுத்துவதில்லை. அதில் நிகழ்வதெல்லாமே, உங்களையே நீங்கள் காயப்படுத்திக்கொள்வதுதான். எவ்வளவுக்கு அதிகமாய் நீங்கள் அதைச் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது மோசமாக ஆகிறது.
இதுதான் நீங்கள் செய்துகொண்டிருப்பதைக் குறித்த ஒரு காட்சியா? முன்பு உங்களை காயப்படுத்தியதையே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறீர்களா? ஏதோ ஓர் உள்ளான நிர்ப்பந்தத்தால் தூண்டப்பட்டு, நீங்கள் உங்களைக் காயப்படுத்துகிற காரியத்தையே தொடர்ந்து செய்கிறீர்களா. அதை எப்படி நிறுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை.
அதை நிறுத்துவதற்குக் ஒரே ஒரு வழிதான் உண்டு. உங்களையே முற்றிலுமாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சமர்ப்பித்துவிடுவதுதான் அது. “ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?” (அப்போஸ்தலர் 22:10). உங்களையே நீங்கள் இயேசுவிடம் சமர்ப்பிக்கும்போது, எல்லையில்லாத நிம்மதியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
சவுல், “நான் . . . இரக்கம் பெற்றேன்,” என்று சொன்னார் (1 தீமோத்தேயு 1:13). நீங்கள் இரக்கம் பெறும்பொருட்டும், தார்க்குச்சிகளை எதிர்த்து உதைப்பதே உங்களது இறுதி முடிவாக இராதபடிக்க, கூர்முனை உலோக ஆணிகள், இயேசுவின் கரங்களிலும், பாதங்களிலும் தைத்துக்காட்டப்பட்டன.
சவுல், பார்வையற்றவராய்த் புழுதியில் கிடந்தார். ஆனால் இயேசு அவரிடம், “நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்,” என்றார் (அப்போஸ்தலர் 9:6).
நீங்கள் ஒரு பாவி என்றும், மற்றும் அவரது கிருபையைச் சார்ந்திருப்பதே உங்களது ஒரே நம்பிக்கை என்றும், இயேசு உங்களுக்குக் காண்பிக்கும்போது, உங்களை அந்தப் புழுதியிலேயே உழன்றுகொண்டிருக்க விட்டுவிடவேண்டும் என்பது அவரது நோக்கமல்ல. மாறாக, அவர் உங்களைத் தூக்கியெடுத்து, இந்த உலகில் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, உங்களை அனுப்புவார்.
சவுல், தமஸ்குவுக்குள் சென்றார். அங்கு மூன்று நாட்களுக்கு அவர், தன்னையே ஜெபத்திலும், உபவாசத்திலும் ஈடுபடுத்திக்கொண்டார் (அப்போஸ்தலர் 9:9, 11). அது, ‘ஆண்டவரே, என்மேல் இரக்கம் வையும். ஆண்டவரே, நான் செய்யும்படி நீர் விரும்புகிறதை எனக்குக் காண்பியும்,’ என்பதாக இருந்தது. சவுலின் ஜெபத்திற்கு, அனனியா என்ற ஒரு நபரின் மூலமாகப் பதில் வந்தது.
உயிர்த்தெழுந்த கர்த்தருடன், நேரடியாக இடைபட்டதோர் சந்திப்பின் மூலமாகச் சவுல், கிறிஸ்துவை அறிய நேர்ந்தது. தேவன், இம்மனிதரின் இருதயத்திலிருந்த பெருமை மற்றும் தவறான அபிப்பிராயம் ஆகியவற்றை, நேரடியானதொரு தலையீட்டால் உடைத்தெறிந்தார். எவரும் அவரிடம் சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை. வேறு யாருமே அவரது மனமாற்றத்தில் ஈடுபடவில்லை.
ஆனால் சவுல், “ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டபோது, ஆண்டவர், “நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்,” என்று சொன்னார். அது: “உன் வாழ்வில், எனது நேரடியான இடைபடுதலால், நான் யார் என்பதை நீ அறிந்துகொள்ளும்படியாக கண் திறக்கப்பட்டிருக்கிறாய். ஆனால் பொதுவாக, அது இப்படி நிகழ்கிற ஒன்றல்ல,” என்று கர்த்தர் அவரிடம் சொல்வதுபோல் இருக்கிறது. தேவன் முறைமைகளைப் பயன்படுத்துகிறார். தமது ஜனங்களின் மூலமாகக் கிரியை செய்வதே, அவரது இயல்பான முறைமை ஆகும்.
“தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான்” (9:10). அவருக்குக் கர்த்தர் தரிசனமாகி, சவுல் ஜெபித்துக்கொண்டிருந்த வீட்டிற்குச் செல்லுமாறு அவரிடம் கூறினார். அனனியாவோ, செல்ல விரும்பவில்லை. அதற்காக நீங்கள் அவரைக் குறை சொல்லவும் முடியாது. மூன்று நாட்களுக்கு முன்பாகத் தன்னை ஆசை தீரக் கொன்றிருக்கக்கூடிய ஒரு மனிதனுக்காக ஜெபிக்குமாறு, தேவன் அவரை அழைத்துக்கொண்டிருந்தார். “ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உமது பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்” (9:13). ஆனால் கர்த்தரோ, “நீ போ . . .,” என்று அனனியாவிடம் சொன்னார் (9:15). அவர் அப்படியே செய்ததற்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம்!
சவுல் பார்வையற்றவராய், மூன்று நாட்களுக்கு முழு இருளில் உட்கார்ந்துகொண்டிருந்தார். கிறிஸ்தவர்களுக்கு எதிரான அவரது பிரச்சாரமெல்லாம், தேவன், பழிவாங்குகிறவரான ஒரு தேவன் என்னும் நம்பிக்கையையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ, தானே தேவனுடைய பழிவாங்குதலுக்குப் பாத்திரவானாக இருப்பதைக் கண்டறிந்தார்.
சவுல், இயேசுவின் சீஷர்களைக் கொலை செய்துகொண்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ, இயேசுவின் ஒரு சீஷர் வந்து, பார்வையற்றிருந்த அந்த மனிதரின் தலையின் மேல் தனது கைகளை வைத்தார். அது மிகவும் அச்சமூட்டுகிறதான ஒரு தருணமாய் இருந்திருக்கவேண்டும் – இவன் எனக்கு என்ன செய்யப்போகிறானோ? ஆனால், சவுல் கேட்ட முதல் வார்த்தைகள்: “சகோதரனாகிய சவுலே . . .” என்பதாக இருந்தன (9:17). சவுல், என் சகோதரனே! அனனியா, அன்புடனும், மன்னிப்புடனும் மற்றும் தயவுடனும் சவுலைச் சூழ்ந்துகொண்டார்.
ஒரு நபர், இயேசுவில் விசுவாசம்கொள்ளும்படி வரும்போது நமது முதல் கடமை, அவரை அன்பினால் சூழ்ந்துகொள்வதாக இருக்கவேண்டும். அதையடுத்து, அவர் சுவிசேஷத்தில் ஊன்றக் கட்டப்படும்படியாக நாம் உதவவேண்டும். இதைத்தான் அனனியா, சவுலுக்குச் செய்தார்.
சவுலின் பார்வையற்ற நிலை, தேவனுடைய நியாயதீர்ப்பின் அடையாளமாக இருந்தது. ஆனால், சவுலின் பார்வை மீட்டெடுக்கப்படுமாறு அனனியா ஜெபித்தபோது, அது சவுலுக்குத் தன்னைவிட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பு எடுக்கப்பட்டுப்போயிற்று என்பதற்கான அடையாளமாக இருந்தது. அது, கிறிஸ்து தனக்கு இரக்கம் காண்பித்துவிட்டார் என்பதற்கும், மற்றும் அவர் தேவனுடன் முற்றிலும் புதியதோர் உறவிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டார் என்பதற்கான ஓர் உத்தரவாதமாய் இருந்தது.
அப்போஸ்தலர் பவுல் என்று நாம் நன்கறிந்திருக்கக்கூடிய சவுலை, அனனியா ஊழியத்திற்கென்று நியமித்தார். நீ, “புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிப்பாய்” (9:15).
மக்கள் மனமாற்றத்துக்குட்படும்போது, நாம் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் சகோதரர்களாக அல்லது சகோதரிகளாக அங்கீகரிக்கவேண்டும். நாம் அவர்களைச் சுவிசேஷத்தில் ஊன்றக் கட்டவேண்டும். மற்றும், செய்யும்படித் தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற பணியை அவர்கள் கண்டறிந்துகொள்ள, நாம் அவர்களுக்கு உதவவேண்டும். அந்நியர்களை உறுப்பினர்களாகவும், எதிரிகளை நண்பர்களாகவும் மாற்றும்படியாக, இந்த ஊழியத்தைக் கிறிஸ்து பயன்படுத்துகிறார்.
கிறிஸ்துவுக்கான தனது தேவையைக் குறித்துச் சவுல் அறிந்துகொண்டபோது, அவர் சந்தித்த முதல் கிறிஸ்தவர், அவரை அன்பு செய்தார், அவரை மன்னித்தார், அவருக்காக ஜெபித்தார், அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், அவருக்கு உணவளித்தார், அவரை வழிநடத்தினார் மற்றும் அவரை ஆயத்தப்படுத்தினார். தேவன், மனிதர்கள் மூலமாகக் கிரியை செய்கிறார்: பவுல் ஜெபித்தார். அதற்கு அனனியாவின் மூலமாகப் பதில் வந்தது.
மனிதர்கள் மூலமாகத் தேவன் கிரியை செய்கிற யோசனையானது, ஊழியத்திற்கும், திருச்சபையின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கிறது. மற்றொரு நபருடைய தலையீடு இல்லாமலேயே, தேவனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை மறுரூபமாக்க முடியும். ஆனால் அவர், தமது ஜனங்கள் மூலமாகக் கிரியை செய்வதையே தெரிந்துகொள்கிறார். “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 3:9).
இயேசு கிறிஸ்து, எந்த நபருடைய வாழ்வையும் - வெளிப்படையாக அவரைப் பகைத்துவருகிற ஒரு நபரையும் கூட - மறுரூபமாக்க வல்லவராய் இருக்கிறார். இந்த மறுரூபமாகுதல், மனமாற்றத்தில் தொடங்குகிறதான, தேவனுடைய ஒரு கிரியையாகும். இதில் நாம், இரக்கத்திற்கான நமது தேவையைக் கண்டறிந்து, கிறிஸ்துவுக்கு நம்மையே சமர்ப்பிக்கிறோம். நீங்கள் மனமாற்றத்துக்குட்படும்போது, நீங்கள் செய்யும்படியாகத் தேவன் உங்களுக்கென்று வேலையை வைத்திருக்கிறார். நீங்கள் அருகாமையிலுள்ள திருச்சபையுடன் உங்களையே இணைத்துக்கொள்ளும்போது, அந்த வேலை என்னவென்று நீங்கள் கண்டறிய, மற்ற விசுவாசிகள் உதவுவார்கள்.
1. தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் பவுலுக்கு நேர்ந்த அனுபவம், எவ்விதத்தில் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு மாதிரியாக, அல்லது ஒரு முறைமையாக இருக்கிறது?
2. நீங்கள் கிறிஸ்தவத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு, ஆனால் புரிந்துகொள்ளாமற்போன ஒரு காலம் உங்கள் வாழ்வில் இருந்ததுண்டா? அதில் குறைவுபட்டது எது?
3. இந்த அறிக்கைக்குப் பதிலளியுங்கள்: “நீங்கள் இயேசு கிறிஸ்துவை அறியவரும்போது, உங்களைக் குறித்த ஒரு புதிய புரிதலை நீங்கள் அறியவருவீர்கள்.”
4. உங்கள் வாழ்க்கையில், உங்களால் அன்புடன் சூழப்பட்டு, சுவிசேஷத்தைக் குறித்ததொரு தெளிவான அறிவுக்குள் நடத்தப்பட்டு, அல்லது ஊழியம் செய்ய உற்சாகப்படுத்தப்படவேண்டியவர் யார்?
5. “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 3:9), என்று சொல்வது தேவனுடைய வசனத்துக்கு, நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?