2 இராஜாக்கள் 17:6-28
அப்போஸ்தலர் 2 : 1-41
1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.
6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8. அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
12. எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13. மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
15. நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
19. அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
20. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
21. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
25. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
26. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
27. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
28. ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29. சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.
30. அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,
31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
33. அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
34. தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும்,
35. நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
36. ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
39. வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
40. இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
இயேசு, தாம் பரமேறுவதற்குமுன்பு தமது சீஷர்களிடம், இன்னும் சில நாட்களில் அவர்கள், "பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்" பெறுவார்கள். என்று கூறினார் (அப்போஸ்தலர் 1:4). பின்பு அவர், ". . . நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்," என்றார் (1:8). அவர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டியதாயிருக்கவில்லை. பத்தே நாட்களுக்குப் பின், பல நாடுகளிலிருந்து வருகைதந்திருந்த மக்கள் கூட்டத்தின் நெரிசலில் எருசலேம் நிரம்பியபோது, இயேசுவின் வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சபையின் வருகைப் பதிவுகள் தற்போது 120 உறுப்பினர்களாக உள்ளன என்று, தலைவர் தெரிவித்தார். அவர்களால் ஒரு கட்டிடத்தை வாங்க முடியாததால், அவர்கள் நகரத்தில் வாடகைக்கு இருந்த இடத்தின் இரண்டாவது மாடி அறையிலேயே, கூடிவந்தனர்.
அவர்களது ஜெபக்கூடுகையில் நல்லதொரு ஆவிக்குரிய சூழல் நிலவிவந்தது. அத்துடன், வெறுமையாகி இருக்கும் தலைமைத்துவப் பதவியை எவ்வாறு அவர்கள் நிரப்பவேண்டும் என்பதைப்பற்றி அநேகக் கலந்துரையாடல்களும் நிகழ்ந்துவந்தன. ஆனால், மற்றொருபுறம், அப்படி ஒன்றும் பெரிய அளவில் நடந்துவிடவில்லை.
அவர்களின் சமூகத்தை அடையும் பணி, அவர்களுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியது. அவர்களிடம் மிகக்குறைந்த பணம்தான் இருந்தது. மிகக்குறைவான மக்கள்தான் அங்கே இருந்தனர். மேலும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வெளியே அவர்களுடைய செய்திக்கு மிகக்குறைவான ஆதரவே இருக்கக்கூடிய கலாசாரம் நிலவியது. அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தின் தொடக்கத்தில், திருச்சபை அப்படித்தான் இருந்தது.
ஆனால், பெந்தெகொஸ்தே நாளிலோ, முதல் விசுவாசிகளின்மேல், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார். அதன்பின்பு திருச்சபையானது, முற்றிலும் வேறுபட்டதொன்றாக மாறிவிட்டது.
“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” (2:2). ஓர் ஒலிம்பிக் தடகள வீரரைப் பற்றிச் சிந்தியுங்கள். மூச்சுக்காற்று அவரது நுரையீரலை நிரப்பி, அவரது உடலுக்கு ஆற்றலைத் தருவதால், பெரிய அளவில் காற்றை உள்ளிழுக்கும் வேகமான துடிப்பு, அவரது மார்புத் தசைகளினூடாக இயங்குகின்றது. பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது அதுதான்.
பண்டைய உலகில் அநேக மொழிகள், “காற்று,” “மூச்சு,” மற்றும் “ஆவி,” ஆகியவற்றைக் குறிப்பிட, ஒரே சொல்லையே பயன்படுத்தின. அதிக ஓசையுள்ளதாகவும், நீண்ட நேரம் நீடிப்பதாகவும் இருக்கிறதே தவிர, மற்றபடி காற்றின் ஒலி, மூச்சின் ஒலியை ஒத்ததாகவே இருக்கிறது.
வேதாகமத்தில் வழக்கத்துக்கு மாறான ஒன்றை நீங்கள் காணும்போது, “இதேபோன்ற ஒன்றை, இதற்குமுன்பு நாம் எங்கே பார்த்திருக்கிறோம்?” என்று கேட்டுக்கொள்வது உதவியாக இருக்கும். அப்படியே, “இதற்குமுன்பு, காற்று அல்லது மூச்சின் ஓசையை நாம் எங்கே பார்த்திருக்கிறோம்?” என்று கேட்டால், அதற்குத் தெளிவான இரண்டு பதில்கள் உள்ளன.
வேதாகமக் கதையின் தொடக்கத்தில் தேவன், ஆதாமுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதினார் என்பதைப்பற்றி நாம் வாசிக்கிறோம். தேவன், புூமியின் மண்ணிலிருந்து உயிரற்ற ஓர் உடலை வடிவமைத்தார். பின்னர், இந்த எலும்புக்கூட்டின் உருவத்துக்குள், தேவன் சுவாசத்தை ஊதினார். ஆதாமுக்குத் தேவன், உயிர்ப்பிக்கும் ஒரு ஜீவ சுவாசத்தைத் தந்தார். முதல் மனிதர், ஜீவனுள்ள நபராக ஆனார்.
பின்பு இயேசு, தாம் பரலோகத்திற்கு ஏறிச் செல்லும் முன்பாக, சீஷர்கள்மேல் ஊதி: “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,” என்று சொன்னார் (யோவான் 20:22). இப்படிச் செய்ததால் இயேசு, பெந்தெகொஸ்தே நாளன்று நிகழப்போவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆகவே, ஒரு சில நாட்கள் கடந்தபின்பு, சீஷர்கள் பலத்த காற்றைப்போன்றதொரு சத்தத்தைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக அதை, இயேசு தங்கள்மேல் ஊதியதான நிகழ்வுடன் தொடர்புபடுத்தி, இயேசு அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலே இது என்று அடையாளம் கண்டுகொண்டார்கள்.
பலத்த காற்றின் சத்தத்தைக் கேட்டதும், “அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது” (அப்போஸ்தலர் 2:3).
கூடியிருந்த விசுவாசிகள்மேல், வல்லமைவாய்ந்ததோர் அக்கினிப் பந்து அல்லது அக்கினிஸ்தம்பம் காணப்பட்டது. அந்த அக்கினி அவர்களை நெருங்கி வரவர, அது தனித்தனியான அக்கினிச் சுடர்களாக, அல்லது “அக்கினி நாவுகளாகப்” பிளவுபட்டு, அவ்வறையில் இருந்த ஒவ்வொரு நபரின்மேலும் அமரும்படியாக இறங்கியது. இதில் வியப்புூட்டும் காரியம் என்னவெனில், அவர்களுள் ஒருவரும் எரிந்துபோகவில்லை.
மீண்டும், இதை நாம் புரிந்துகொள்வதற்குச் சிறந்த வழி என்னவெனில், வேதாகமத்தில் இதைப்போல ஒன்றை நாம் இதற்குமுன்பு எங்கே கண்டிருக்கிறோம் என்று கேட்டுக்கொள்வதாகும். பழைய ஏற்பாட்டில் ஒரு முட்செடியின்மேல் நின்று, அது வெந்துபோகாதபடி எரிந்துகொண்டிருந்த அக்கினிஜுவாலையிலே, மோசேக்குத் தேவன் தோன்றி அவருக்கு, எகிப்திலே தேவஜனங்களை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து நடத்திவரும் பொறுப்பை நியமித்தார். இப்பொழுதோ, தேவன் தமது திருச்சபைக்குப் புதிய பொறுப்பை நியமிக்கும்படி, அக்கினியிலே வந்துகொண்டிருந்தார்.
அக்கினி இறங்கியபோது அங்கிருந்த 120 பேர்களுள், நீங்களும் இருப்பதாகக் கற்பனை செய்ய முயற்சியுங்கள். நீங்கள் ஏறெடுத்துப் பார்த்து, அக்கினியானது அந்த அறையின் மத்தியப் பகுதியின் மீது மெல்ல இறங்கி, உங்கள்மேல் வருவதைக் காண்கிறீர்கள். தேவனின் பிரசன்னம், அவரது ஜனங்களின் மீது இறங்கி வருகிறது என்பதை, நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்கள். பிரமிப்பான உணர்வினால் நீங்கள் ஆட்கொள்ளப்படுகிறீர்கள். மோசேக்குத் தோன்றிய தேவனானவர், மீண்டும் தமது பிரசன்னத்தை அறியப்பண்ணுகிறார். அந்த அறையில் நீங்களும் இருக்கிறீர்கள்.
மோசேயிடம் அந்த அக்கினி வந்தபோது அவர், தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டார். எனவே நீங்கள், இப்பொழுது யார் மீது அக்கினிஜுவாலைகள் தங்கும்? என்று யோசிக்கிறீர்கள். பேதுருவின் மீதா, யாக்கோபின் மீதா, யோவானின் மீதா, அல்லது ஒருவேளை மூன்று பேர்களின் மீதுமா? அல்லது ஒருவேளை, அப்போஸ்தலர்கள் பன்னிருவரின் மீதுமாகக்கூட இருக்கலாம்.
ஆனால், நீங்கள் அண்ணாந்து பார்க்கும்போது அந்த அக்கினிஜுவாலைகளில் ஒன்று, உங்களை நோக்கி வந்துகொண்டிருப்பதை உணர்கிறீர்கள். நீங்கள் அறையைச் சுற்றிலும் பார்க்க, அக்கினிஜுவாலையானது ஒவ்வொரு நபரின் மீதும் தங்குகிறது! தேவன், இந்த உலகில் தமது நோக்கத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு விசுவாசியையும் நியமித்துக்கொண்டிருக்கிறார்.
பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், மற்றும் ராஜாக்கள் ஆகியோர், ஊழியத்திற்காகத் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவனுடைய அக்கினி, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரின்மேல் மட்டுமல்ல, மாறாக, ஒருபோதும் தலைமைத்துவப் பதவிகளுக்கு ஆசைப்படாத, பெயர் அறியப்படாத விசுவாசிகளின்மேலும் இறங்குகிறது. தேவனுடைய ஆவி, இயேசுவை நேசித்து, அவரைப் பின்பற்றும் அனைவர்மீதும் தங்கியிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்குமே, இவ்வுலகைக் குறித்ததான, தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஒரு பங்கு இருக்கிறது.
திடீரென்றும், தன்னிச்சையாகவும், விசுவாசிகளுள் ஒவ்வொருவரும், தாங்கள் ஒருபோதும் கற்றறிந்திராத மொழிகளில், தங்களால் பேச முடிகிறது என்பதைக் கண்டார்கள்: “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்” (அப்போஸ்தலர் 2:4).
இது, பாபேல் கோபுரத்தில் நீண்ட காலத்திற்கு முன்பு, நடந்ததன் நேரெதிர் மாற்றமாக இருந்தது (ஆதியாகமம் 11:1-9). வேதாகமக் கதையின் தொடக்கத்தில், தேவனுக்கெதிரான மனிதனுடைய அக்கிரமம் வேகமெடுத்தபோது மனிதர்கள், தங்களது பெருமையைப் பறைசாற்றுவதும், தங்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதுமான, ஒரு கோபுரத்துடன்கூடிய ஒரு நகரத்தைக் கட்டினார்கள். தேவன் இறங்கிவந்து, மனுவர்க்கத்திற்குள் பல்வேறுபட்ட மொழிகளின் குழப்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், தேவனற்ற மனிதனின் ராஜ்யத்தினுடைய உத்வேகத்தைச் சிதறடித்தார்.
அந்தக் கட்டிடப் பணித்தளத்திற்கு நீங்கள் ஒரு நாள் காலையில் வருகிறீர்கள் என்றும், அப்படி வரும்போது, ஓர் உடன்பணியாளர் உங்களிடம் பேசுகிறார் என்றும், அவர் கூறுவதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் மதிய உணவிற்காக இடைவேளை எடுத்துக்கொள்ளும்போது, மக்கள் புரிந்துகொள்ள முடியாத ஓசைகளில் உளறுவதால், ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் குழப்பத்திலிருக்கின்றனர் என்பதைக் காண்கிறீர்கள்.
கடைசியில் நீங்கள், உங்களது மொழியைப் பேசுகிற வேறொரு நபரைக் கண்டு, நிம்மதியாகப் பெருமூச்சு விடுகிறீர்கள். நீங்கள், “நான் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசுகிற மற்றொரு நபரைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மற்ற ஒவ்வொருவருமே முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்!” என்று சொல்கிறீர்கள்.
அந்தக் கட்டிடப் பணித்தளமெங்கிலும் மக்கள், பொதுவான ஒரு மொழியின் அடையாளத்தினால் ஒன்றிணைக்கப்பட்ட, சிறுசிறு குழுக்களாகக் கூடுகின்றனர். அவர்கள் அனைவருமே, ‘இந்தப் பைத்தியக் கூட்டத்தை விட்டுச் செல்வதற்கும், தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பேசும் மக்களுடன் புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்குமான நேரம் வந்துவிட்டது,’ என்கிற ஒரே முடிவுக்குத்தான் வருகின்றனர். ஆகவே அவர்கள், பிரிக்கப்பட்டவர்களாகவும், எதிர்கால விரோதங்களின் வித்துக்களைத் தங்களுக்குள் சுமந்தவர்களாகவும், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் மற்றும் மேற்கிலும், சிதறுண்டுபோகின்றனர்.
பாபேலில் பாஷைகள், மனிதனின் அக்கிரமத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஒரு அடையாளமாகவே இருந்தன. மொழிகள் குழப்பத்தை விளைவித்தன. மக்கள், இனி ஒருபோதும் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆகவே, அவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் பெந்தெகொஸ்தே நாளோ, அதற்கு முற்றிலும் எதிரிடையாயிருந்தது. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் எருசலேமிலே கூடிவந்திருந்தார்கள் (அப்போஸ்தலர் 2:5). தேவனின் ஆவியானவர் இறங்கிவந்தபோது விசுவாசிகள், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை, உலகெங்கிலுமிருந்து வந்திருந்த மக்கள் கேட்டுப் புரிந்துகொள்ளத்தக்கதாகத் தாங்களாகவே, தம்மியல்போடு, தாங்கள் ஒருபோதும் கற்றறிந்திராத மொழிகளில் பேசுகிறதைக் கண்டார்கள்.
பாபேலில், குழப்பத்திற்கும், மக்கள் சிதறடிக்கப்படுவதற்கும் ஏதுவாயிருந்த பாஷைகள், தேவனிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்பாயிருந்தன. பெந்தெகொஸ்தே நாளிலோ, புரிந்துகொள்ளுதலுக்கும், மக்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுவதற்கும் வழிநடத்துகிறதாயிருந்த பாஷைகள், தேவனிடமிருந்து வந்த ஆசீர்வாதமாயிருந்தன. பாபேலில், மனிதனின் நகரத்தைக் கட்டும் பணி நிறைவேற்றப்படுவது தடுக்கப்படுவதற்கு, பாஷையின் சாபத்தைத் தேவன் பயன்படுத்தினார். பெந்தெகொஸ்தே நாளிலோ, கிறிஸ்துவின் ராஜ்யத்தைக் கட்டும் பணி நிறைவேற்றப்படுவது துரிதமாக்கப்படுவதற்கு, பாஷையின் வரத்தைத் தேவன் பயன்படுத்தினார். புூமியிலுள்ள, ஒவ்வொரு பாஷைக்காரர்களின் கூட்டத்திலும் இருக்கும் ஜனங்களுக்கு, இயேசுவின் சுவிசேஷத்தை அறிவிப்பதே, தேவனுடைய நோக்கமாயிருந்தது. சுவிசேஷத்திற்கு, பாஷை ஒருபோதும் தடையாயிராது.
பெந்தெகொஸ்தே நாளில், ஊழியம் சார்ந்ததொரு திருச்சபை பிறந்தது. தேவன் தமது ஜனங்களுக்குள், தம் ஜீவனை ஊதினார். தமது நோக்கத்தை இவ்வுலகில் நிறைவேற்ற, அவர்களை அவர் ஆயத்தமாக்கியபோது, அவரது பிரசன்னம் வந்து, அவர்கள்மேல் தங்கியது.
கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும், தங்களுடைய சொந்த மொழிகளில், தேவனுடைய மகத்துவமான கிரியைகளை, இவர்கள் பறைசாற்றுவதைக் கேட்டுப் பிரமிப்படைந்தார்கள் (2:11). என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதை அவர்களால் கிரகிக்கக்கூடாதிருந்தது. ஆகவே பேதுரு, கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தினார். அவர், சிலுவையிலறையுண்ட இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பிதாவானவரின் வலதுபாரிசத்திற்கு உயர்த்தப்பட்டார். மேலும் இப்பொழுது, தமது ஜனங்களின்மேல் பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தார் என்று கூறினார். இதுவே, கூட்டத்தினர் கண்டதையும், கேட்டதையும் குறித்த விளக்கமாய் இருந்தது.
பேதுரு, இயேசுவைப்பற்றிச் சொன்னவற்றை ஜனங்கள், தெளிவாக விசுவாசித்தனர். ஆகவே அவர், அடுத்த படி என்ன என்பதை அவர்களுக்குக் கூறினார்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” (2:38-39).
பேதுருவின் அழைப்பிற்கு, மூவாயிரம் ஜனங்கள் பதிலளித்தார்கள். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று, தாங்கள் ஏற்கெனவே அறிந்திருந்த அவர்களது மொழியிலேயே, மக்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தைக் கொண்டுசென்றனர்.
வேதாகமக் கதையில் முக்கியமான தருணங்களில் தேவன், காணக்கூடிய வகையில் தமது பிரசன்னத்தை அறியப்பண்ணினார். இவற்றை நாம், தேவதரிசனங்கள் என்று அழைக்கிறோம். அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், தேவன் தமது மக்கள் அனைவருக்காகவும் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செய்வதை, குறிப்பிட்ட சிலருக்காகக் காணக்கூடிய வகையில் செய்கிறார் என்பதை அவற்றில் நாம் காண்கிறோம். பெந்தெகொஸ்தே நாளன்று தேவன், தமது ஜனங்கள் மத்தியில் எப்பொழுதுமே தாம் செய்ய விரும்புவதை, காற்று, அக்கினி மற்றும் பாஷைகள் ஆகியவற்றின் மூலமாக, நமக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். தேவன், தமது வல்லமையையும், பிரசன்னத்தையும் நமக்குக் கொடுத்து, அனைத்து மக்களுக்கும் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்ல நம்மை அனுப்புகிறார்.
தேவன் தமது ஆவியைத் தலைவர்களுக்கு மட்டும் தரவில்லை. மாறாகத் தமது அனைத்து மக்களுக்கும் தருகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள ஒவ்வொரு விசுவாசியின்மேலும், சர்வ வல்லவரான தேவனின் பிரசன்னமும், வல்லமையும் தங்கியிருக்கின்றன.
ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒவ்வொரு திருச்சபையும், இந்தப் பூமியிலுள்ள ஒவ்வொரு தேசத்தையும் சேர்ந்த ஜனங்களை ஆசீர்வதிக்கிறதான, தேவனின் மாபெரும் நோக்கத்தில் செயலாற்ற, ஒரு பங்குள்ளவர்களாயிருக்கிறார்கள். சிலருக்கு அது, இயேசுவின் சுவிசேஷம் அறியப்படும்படிக்கு, வேறொரு கலாசாரத்துக்குச் சென்று, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதாய் இருக்கக்கூடும். மற்றவர்களுக்கோ தேவனின் அழைப்பானது, ஏற்கெனவே தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் மொழியில், நாம் தயக்கமின்றிச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு முன்வருவதாயிருக்கும்.
தேவன், நாம் இயேசுவின் சுவிசேஷத்தை மக்களின் சொந்த மொழியிலேயே சொல்வதற்கு, ஒவ்வொரு விசுவாசியைச் சுற்றிலும் மக்கள் குழுக்களை, அற்புதமாக அமைத்துத் தருகிறார். ஒருவேளை நீங்கள், உயர்நிலைப் பள்ளிச் சிறுவர்களுக்குப் புரியும் வகையில் பேசக்கூடியவராயிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் குழுவினருடன், நீங்கள் எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய விதத்தில், தேவன் உங்களை வடிவமைத்துள்ளார். அவர்கள் யாரென்பதைக் கண்டறிந்து, அவர்கள் மத்தியில் சென்றடைந்து, அவர்களுக்கு இயேசுவைப் பற்றிக் கூறுங்கள்.
1. முதல் விசுவாசிகளை மறுரூபமாக்கியது எது? வெகு சிலராயிருந்த மக்கள், தங்களைச் சுற்றிலும் இருந்த உலகத்தின் மீது, அத்தனை பெரிதான தாக்கத்தை, எப்படி ஏற்படுத்த முடிந்தது என்பதைக்குறித்து, வேதாகமத்தின் விளக்கம் என்ன?
2. ஏன் ஒவ்வொரு விசுவாசிக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார்?
3. பெந்தெகொஸ்தே நாளன்று, விசுவாசிகள்மேல் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டபோது, ஏன் அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசுவதற்கான ஆற்றலைப் பெற்றனர்?
4. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் உங்கள் வாழ்வில், என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அல்லது, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் உங்கள் வாழ்வில், என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
5. சுவிசேஷத்தைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், அதற்குப் பதிலளிக்கும்படியாக, எந்த இரண்டு காரியங்களைச் செய்யவேண்டுமென்று, பேதுரு கூறினார்? அதன் விளைவாக, அவர்களுக்கு எந்த இரண்டு காரியங்கள் நிகழுமென்று, அவர் வாக்குறுதியளித்தார்?