2 இராஜாக்கள் 17:6-28
யோவான் 20 : 19-31
19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
24. இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
30. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
பல்வேறு கூற்றுகளால் நிரம்பியுள்ள இந்த உலகில், சில நேரங்களில் மாயையிலிருந்து சத்தியத்தைப் பிரித்துக் கூறுவது என்பது, கடினமாக இருக்கிறது. ஆகவே, நாம் எப்படி இயேசுவின் கூற்றுகளை மதிப்பிடுவது? இயேசுதான் கிறிஸ்துவாகிய தேவகுமாரன் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கான ஆதாரத்தை, உங்களுக்குச் சுவிசேஷங்கள் தருகின்றன. அவை, வந்து பாருங்கள் என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. நீங்கள் இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை, உண்மையாகப் பார்க்க முயற்சிக்கும்போது, உங்களால் அவரை விசுவாசிக்க முடியும்.
நீங்கள் உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு நகரத்தில் இருக்கிறீர்கள் என்றும், உங்களது அலைபேசியைத் தொலைத்துவிட்டீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் இதற்குமுன் ஒருபோதும் சென்றிராத ஓரிடத்திற்குச் செல்லவேண்டும். உங்களுக்கோ, அங்கே எப்படிச் செல்வது என்று தெரியாது. இரண்டு விதங்களில் நீங்கள் அங்கே செல்லலாம்.
முதலாவது, நீங்கள் செல்லவேண்டிய திசைகளைக் குறித்து விசாரிக்கலாம். யாராவது உங்களிடம், நீங்கள் 29-ஆம் எண் பேருந்தைப் பிடிக்கவேண்டும் என்றும், பழைய சிமெண்ட் வேலைகள் நடக்குமிடத்தைக் கடந்தபின் வரும் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்றும், மூன்றாவது தெருவில் இடது புறமாகத் திரும்பவேண்டும் என்றும், பாலத்தின் மேல் செல்லவேண்டும் என்றும், வயலின் குறுக்காகக் கடக்கவேண்டும் என்றும், சுரங்கப்பாதை வழியே செல்லவேண்டும் என்றும், அதன்பின்பு அவ்விடம், உங்கள் வலது புறத்தில் வரும் என்றும் கூறலாம்.
இரண்டாவது அணுகுமுறை என்னவென்றால், கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்வதாகும். நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்குக் கொண்டுசெல்லுமாறு, நீங்கள் ஓட்டுநரைக் கேட்டு, அங்கே செல்லலாம்.
ஒருவேளை, முதலாவது அணுகுமுறையில், நீங்கள் பேருந்தில் ஏறியவுடனே, உங்களுக்கு வழியைக் கூறியவர் மாரடைப்பு ஏற்பட்டு மரித்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் துயரச் சம்பவம், உங்கள் பயணத்தைத் தடை செய்யாது. ஏனெனில், நீங்கள் போகும் வழியை ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் வாடகைக் காரில் இருக்கிறீர்கள் என்றும், அதில் நீங்கள் பழைய சிமெண்ட் வேலைகள் நடக்குமிடத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது, ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு மரித்துப்போகிறார் என்றும் வைத்துக்கொண்டால், இப்பொழுது நீங்கள் முற்றிலுமாகச் சிக்கிக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு உங்களுக்கும் வழி தெரியாது. நீங்கள் நம்பியிருந்த மனிதரும் உங்களை அங்கே கொண்டுசேர்க்க முடியாது.
கிறிஸ்தவத்தின் மையம், போதனைகளில் அடங்கியதல்ல. மாறாக, நம்மைப் பரலோகத்திற்குக் கொண்டுசெல்லக்கூடிய இயேசுவின் மீது அடங்கியுள்ளது. உங்களை இரட்சிக்கப்போவது, புதிய ஏற்பாட்டின் போதனையல்ல் இயேசு கிறிஸ்துவே உங்களை இரட்சிக்கப்போகிறவர். கிறிஸ்தவம் நிற்பதும், விழுவதும், இயேசு தாம் வாக்குப்பண்ணியதைச் செய்து முடிப்பதையே சார்ந்துள்ளது.
நம்மைப் பிதாவானவரிடம் கொண்டுசேர்க்கத் தம்மால் கூடும் என்று, இயேசு நம்மிடம் கூறுகிறார். வாடகைக் கார் ஓட்டுநரைப்போல, அவர் நம்மை, “ஏறிக்கொள்ளுங்கள்,” என்று அழைக்கும்போது, நாம் ஒரு தீர்மானத்தை எதிர்கொள்கிறோம். “நான் எனது எதிர்காலத்தை, அவர்மேல் ஊன்றக் கட்டுவதற்கு ஆயத்தமாயிருக்கிறேனா?” என்பதே அது.
“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவு(மே),” யோவானின் சுவிசேஷம் எழுதப்பட்டது (யோவான் 20:31).
சட்டத்திற்கான நீதிமன்றம் ஒன்றில், நடுவர் குழுவினரில் ஒருவராக நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்போஸ்தலராகிய யோவான், ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தை உங்கள் முன்வைக்க விரும்புகிறார். அதை அவர் முடித்த பின்பு, நீங்கள் ஒரு தீர்ப்பை வழங்குமாறு, உங்களுக்காக அவர் காத்திருப்பார்.
யோவான் உங்களைப் பயமுறுத்தவும் இல்லை, அல்லது அவர் உங்களது உணர்வுகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கவும் இல்லை. அவர், இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை, அதாவது, நேரடியான சாட்சியாகத் தாம் கண்டதும், கேட்டதுமான ஆதாரத்தை, உங்களிடம் அளிக்கிறார். அவர் கேட்பதெல்லாம், அந்த ஆதாரத்தை நீங்கள் கேட்கவேண்டும் என்பதுதான். “வந்து பா(ருங்கள்)” (யோவான் 1:46).
கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளை, ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறுமாறு உங்களைக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? விசுவாசத்தின் சாராம்சத்தை யோவான், இரத்தினச் சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் தருகிறார்: “இயேசுவே கிறிஸ்து” (20:31). எனவே, கிறிஸ்து என்னும் நாமத்தின் பொருள் என்ன என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. நம் ஆண்டவருக்கு, அவரது பிறப்பின்போது இயேசு என்னும் பெயர் வழங்கப்பட்டது என்று நாம் அறிந்திருக்கிறோம். எனில், நாம் ஏன் அவரை இயேசு கிறிஸ்து என்று அழைக்கிறோம்?
நாம் பயன்படுத்தும் கிறிஸ்து என்கிற ஆங்கிலச் சொல், “மேசியா” அல்லது “அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்று பொருள்படும், கிறிஸ்தோஸ் என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. கிறிஸ்து என்பது, தேவனால் அபிஷேகிக்கப்பட்டவரான, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவரைக் குறிப்பிடும் அடைமொழியாகும். அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, பழைய ஏற்பாட்டில், அபிஷேகம்பண்ணப்பட்டவர்களைக் குறித்த விரைவானதொரு கண்ணோட்டம், நமக்கு உதவும்.
வேதாகமக் கதை முழுவதிலுமே, தேவனை நாம் அறிந்துகொள்ளும்பொருட்டு அவர், தம்மையே வெளிப்படுத்துகிறார். அவரிடம் நாம் வரும்பொருட்டு, அவர் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்கிறார். மேலும், அவரது நோக்கங்கள் நிறைவேறும்பொருட்டு, அவர் இவ்வுலகின் மீது ஆளுகை செய்கிறார். பழைய ஏற்பாட்டில், குறிப்பிட்ட சில மக்களைத் தேவன், தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் இராஜாக்கள் ஆகிய இவ்விதங்களில் பயன்படுத்துவார் என்பதன் அடையாளமாக, அவர்கள் “அபிஷேகிக்கப்பட்டனர்.”
பழைய ஏற்பாட்டுக் கதை முன் நகர்ந்து செல்லச் செல்ல, அனைவருக்குள்ளும் தலைசிறந்தவரானதோர் அபிஷேகிக்கப்பட்ட ஒருவரை, ஒரு நாள் தேவன் உலகிற்குள் அனுப்புவார் என்கிற ஓர் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே வந்தது. ஆனால், தேவனால் அபிஷேகிக்கப்பட்ட ஒருவர், ஒரு தீர்க்கதரிசியாக, ஓர் ஆசாரியராக அல்லது ஒரு ராஜாவாக இருக்கக்கூடும் என்பதால், எப்படி மேசியாவைக் குறித்த பல்வேறு விதமான எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன என்பதைப் புரிந்துகொள்வது எளிது. அவர், மக்களை நீதியில் வாழ அழைக்கும் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். மற்றவர்களோ, மெய்யான ஆராதனையை மீட்டெடுக்கப்போகும் ஓர் ஆசாரியரை எதிர்பார்த்தனர். வேறு சிலர், ஓர் அரசியல் எழுச்சிக்குத் தலைமை வகித்து, தேவஜனங்களை ரோமானியப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கிற, ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக மேசியாவானவர் இருப்பார், என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால், இயேசு கிறிஸ்து உலகிற்குள் வந்தபோதோ, அவர் வெறும் ஏதோ ஒன்றை மட்டும் நிறைவேற்றவில்லை. மாறாக அவர், பழைய ஏற்பாட்டின் அனைத்துப் பொறுப்புக்களையுமே நிறைவேற்றினார். பிதாவான தேவன், “நீர் சென்று, அவர்களுடைய தீர்க்கதரிசியாய் இரும். நீர் சென்று, அவர்களுடைய ஆசாரியராய் இரும். நீர் சென்று, அவர்களுடைய ராஜாவாய் இரும்,” என்று, தமது குமாரனிடம் சொன்னார். இயேசு கிறிஸ்து, தேவனால் அபிஷேகிக்கப்பட்ட ஒருவர். மேலும், அவரே தேவனுடைய சத்தியத்தை வெளிப்படுத்துகிற ஒருவர் என்றும், புருஷரையும், ஸ்திரீகளையும் தேவனிடத்தில் ஒப்புரவாக்குகிற ஒருவர் என்றும், தேவனுடைய சத்துருக்களை ஜெயங்கொள்ளுகிற ஒருவர் என்றும் நமக்குக் காட்ட, யோவான் ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.
யோவான், இயேசுவே கிறிஸ்து என்பதற்கான ஆதாரத்தைக் கிரமமாய் அமைத்துத் தருகிறார். அவரே, ஒவ்வொரு இருதயம் மற்றும் வாழ்க்கையின் இரகசியங்களை அறிந்திருக்கிற தீர்க்கதரிசியானவர். அவர், சமாரிய ஸ்திரீயைப் பற்றிய மறைவான உண்மையை அறிந்திருந்தார். இயேசுவைச் சந்தித்த நிலையில், அப்பெண் தனது நண்பர்களிடம், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்் அவரை வந்து பாருங்கள்” (யோவான் 4:29), என்று சொன்னார். ஆனால் இயேசு, ஒரு தீர்க்கதரிசியிலும் மேலானவராயிருக்கிறார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி, “கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருவார் என்று அறிவேன்” (4:25), என்று சொன்னபோது, அதற்கு இயேசு, “உன்னுடனே பேசுகிற நானே அவர்” (4:26), என்று அந்த ஸ்திரீயிடம் சொன்னார்.
இயேசுவே, நமது பாவங்களுக்காகத் தமது ஜீவனையே ஒப்புக்கொடுக்கிற, ஆசாரியரானவர். யோவான்ஸ்நானன் இயேசுவை, “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (1:29), என்று அடையாளப்படுத்தினார். ஆனால் இயேசு, ஓர் ஆசாரியரிலும் மேலானவாராயிருக்கிறார். யோவானின் சீஷரில் ஒருவரான அந்திரேயா, இயேசுவைப் பின்பற்றிச் செல்லத் தொடங்கியபோது, அவர் தன் சகோதரனாகிய பேதுருவைக் கண்டு, “‘மேசியாவைக் கண்டோம்’ (என்று சொன்னார்)் மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்” (1:41).
இயேசுவே, நமது எதிரிகளிடமிருந்து நம்மை விடுவிக்கிற, ராஜாவானவர். ஒரு நாள் அவர், நான்கு நாட்களுக்கு முன்பே மரித்துப்போய்விட்டதான, லாசருவின் கல்லறைக்கு வந்தார். இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” (11:25), என்று சொன்னார். மேலும் அவர், மரித்த மனிதனின் சகோதரியிடம், இதை விசுவாசிக்கிறாரா என்று கேட்டார். அதற்கு அப்பெண், “ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்,” என்றார் (11:27). இயேசு, “‘லாசருவே, வெளியே வா’ என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்” (11:43). அப்பொழுது, “மரித்த (லாசரு) வெளியே வந்தான்” (11:44). இயேசுவே, மரணம் மற்றும் நரகத்தின் கொடுமையிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய ராஜாவானவர்.
இயேசு, தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் இருக்கிறார் என்று நாம் அறிந்துகொள்ளும்போது, அவரில் விசுவாசம் வைப்பது எப்படிப்பட்டது என்று நாம் புரிந்துகொள்வோம். ஆகவே, இயேசுவில் நம்பிக்கை கொள்வது என்பது, தீர்க்கதரிசியாக அவர் சொல்வதை விசுவாசிக்கிறோம் என்றும், அவரது வார்த்தையைச் சத்தியமானதாக ஏற்கிறோம் என்றும் பொருள்படும். அது, தேவனுடைய பிரசன்னத்திற்குள் நம்மைக் கொண்டுவருகிற ஆசாரியராக அவரை நாம் விசுவாசிக்கிறோம் என்று பொருள்படும். அது, அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டு, அவரது அதிகாரம் மற்றும் ஆளுகையின்கீழ் வாழும்படியாக, நம்மையே அவருக்குச் சமர்ப்பிக்கிறோம் என்று பொருள்படும்.
இயேசுவே கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமானதாகிவிடும். விசுவாசிப்பதால் நீங்கள், “அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை” அடைவீர்கள் (20:31). தாம் ஒருவர் மட்டுமே வழங்கக்கூடியதான, பரிபூரண ஜீவனைப்பற்றி இயேசு: “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (10:10), என்று பேசினார். அதன் அர்த்தம் என்ன?
வேதாகமக் கதையின் தொடக்கத்தில் ஆதாமும், ஏவாளும், பயமும், விரக்தியுமற்ற ஒரு வாழ்க்கையை அனுபவித்தனர். அவர்கள், அழகான சூழ்நிலைகளில், அர்த்தமுள்ள வேலையைச் செய்துவந்தனர். ஆனால் எல்லாவற்றையும்விட அவர்கள், தங்களோடு தோட்டத்தில் உலாவிவந்த தேவனின் பிரசன்னத்தையும், ஐக்கியத்தையும் அனுபவித்தனர். அவர்கள், பரிபூரண ஜீவனைக் கொண்டிருந்தனர். ஆனால், அதை அவர்கள் இழந்துவிட்டனர். நாமோ, அவர்கள் அனுபவித்தது என்னவென்பதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.
விழுந்துபோன இந்த உலகத்தின் அனைத்து வியாதி, ஆபத்து, பேரழிவுகள் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து நம்மை விடுதலையாக்கவும், இப்பொழுது தொடங்கி, நித்திய நித்திய காலமும் தொடரப்போகும் பரிபூரண ஜீவனுக்குள் நம்மைக் கொண்டுவரவும் இயேசு வந்தார். இயேசுவை விசுவாசிப்பதனாலேயே, இந்த ஜீவனை அவருடைய நாமத்தில் நாம் கொண்டிருக்கிறோம்.
சிறிது காலத்துக்கு முன், போதகர் ஸ்மித்தும் அவரது மனைவியாகிய கேரனும், சிறப்புத் தனி வாத்தியக் கலைஞரோடுகூட நிகழ்த்தப்பட்ட, சிகாகோ சிம்ஃபொனி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்கள், ட்ச்சாய்கோவ்ஸ்கியின் இசையமைப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தனர். அது மிகவும் மகத்தானதாயிருந்தது.
தனி வாத்தியக் கலைஞர், தனது வயலினின் வில்லானது, வயலினைத் தீப்பற்ற வைத்துவிடும் என்பதுபோல, அற்புதமாக வாசித்தார். அதன் முடிவிலே, பார்வையாளர்கள் யாவரும் எழுந்து நின்று, கரகோஷம் எழுப்பினர். அது தவிர்க்க முடியாததாயிருந்தது. கரவொலி, மேன்மேலும் தொடர்ந்து நிற்காமல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அது குறைவதாகக் காணோம் என்கிறபோது, தனி இசைக் கலைஞர் தனது வயலினை உயர்த்தி, மற்றுமொரு உபரியான இசையை அவர்களுக்கு வழங்கினார். அது, மொத்த அரங்கத்தையும் அமரவைத்தது.
அவர்கள் இடைவேளைக்காக வெளியில் சென்றபோது, அவர்கள் அனைவரது மனங்களும் உற்சாகத்துடன் இருந்தன. பார்வையாளர் கூட்டம் அனைத்தும், மகிழ்ச்சியினால் ரீங்கரித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த நடை வெளியில், வயதான ஒருவர், அந்தக் கடைசி உபரி இசையால் எரிச்சலடைந்தவராகக் காணப்பட்டார். இவர்கள் அவரைக் கடந்து சென்றபோது அவர், “நான் இங்கே முப்பது வருடங்களாக வந்து சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால், இதற்குமுன்பு நான் அதை ஒருபோதும் கண்டதில்லை. நான் அதை விரும்பவில்லை. அதற்கு எந்தவொரு காரணத்தையும் நான் காணவில்லை,” என்று சொன்னார்.
போதகர், தன்னைத்தானே சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. தன்னைச் சுற்றிலுமிருந்த, பிற நூற்றுக்கணக்கானவர்களை உயர்ந்தெழச் செய்ததான, மகத்தான ஒரு விஷயத்தின் முன்னிலையில் இருந்த ஒரு மனிதர், இங்கே, அதில் சாதாரணமானதற்குமேல் ஒன்றையும் காணவில்லை. அம்மனிதருக்கு என்னதான் பிரச்சினை?
சுவிசேஷங்களினூடாக நாம் பயணித்து வருகையில், மெய்யாகவே மகத்துவமான ஒன்றின் பிரசன்னத்தில் நாம் இருந்து வந்திருக்கிறோம். தேவகுமாரனின் நாமத்தில், நாம் நித்தியஜீவனுக்குள் விசுவாசத்தினால் கொண்டுவரப்படுமாறு, அவர் நம்மைப்போல் மாம்சமெடுத்து, நமது சத்துருவை எதிர்கொண்டு, தமது ஜீவனையே பலியாக ஒப்புக்கொடுத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிச்சென்றதான, இவ்வனைத்துப் பிரமிப்பூட்டுகிற நிகழ்வுகளையும்கொண்ட, தேவனின் திட்டத்தை நாம் கண்டிருக்கிறோம்.
கிறிஸ்துவின் கூற்றுகளையும், அவர் வழங்கும் சுவிசேஷத்தையும் நேருக்கு நேராய் ஒருவர் சந்திக்கப்பெற்றும், அந்த நபர், இயல்பானதற்குமேல் தான் அதில் எதையுமே கேட்காததுபோல், சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவாரானால், அந்நபருக்கு அதைவிடத் துயரமானதொன்று இருக்க முடியாது. சுவிசேஷங்கள், “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும்” (20:31), எழுதப்பட்டன.
கிறிஸ்து என்னும் நாமம், "மேசியா," அல்லது "அபிஷேகம்பண்ணப்பட்டவர்" என்று பொருள்படும். பழைய ஏற்பாட்டில் தேவன், தமது நோக்கங்களை உலகில் நிறைவேற்றும்படியாகத் தீர்க்கதரிசிகளையும், ஆசாரியர்களையும் மற்றும் ராஜாக்களையும் அபிஷேகித்தார். தங்களால் விவரிக்க மட்டுமே முடிந்தவற்றை நிறைவேற்றுகிற ஒருவரை, அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சுவிசேஷங்கள், இயேசுவே கிறிஸ்து என்பதற்கான ஆதாரங்களை நமக்குத் தந்து, அவர் எவ்வாறு முற்காலத்தைய தீர்க்கதரிசி, ஆசாரியர் மற்றும் ராஜா ஆகியோருக்கான பாத்திரங்களைத் தனித்துவமான விதத்தில் நிறைவேற்றுகிறார் என்பதையும் நமக்குக் காண்பிக்கின்றன. தேவன், இயேசு என்னும் நபரில் மாம்சமானார் என்பதும், அவர் மூலமாகவே தேவனின் அனைத்து வாக்குத்தத்தங்களும் நிறைவேற்றப்படுகின்றன என்பதுமே, வரலாற்றின் மையப்பகுதியாகும்.
1. நீங்கள் நடுவர் குழுவில் இருந்திருந்தால், இயேசுவைப்பற்றிய எந்த ஆதாரம் உங்களுக்கு மிகவும் உறுதியானதாக இருக்கும்?
2. “இயேசுவே கிறிஸ்து” என்று கூறும்போது, வேதாகமம் எதைக் குறிக்கிறது?
3. உங்கள் சொந்த வார்த்தைகளில், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வது என்பது எதைக் குறிக்கிறது?
4. உங்களிடம் இருந்ததெல்லாம் இயேசுவின் போதனைகள் மட்டுமே எனில், அது உங்களைப் பரலோகத்திற்குள் கொண்டுசெல்லப் போதுமானதாய் இருக்குமா? ஏன் அல்லது ஏன் இல்லை?
5. நாம் இந்த உலகில் இயல்பாக அனுபவிக்கும் வாழ்க்கையிலிருந்து, இயேசு வழங்கும் பரிபூரண ஜீவன் எவ்வகையில் வேறுபட்டது?