2 இராஜாக்கள் 17:6-28
யோவான் 16: 4-15
4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
9. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
பிதாவான தேவனையும், குமாரனான தேவனையும்பற்றிப் போதுமான அளவுக்குத் தெளிவுடன் இருக்கும் சிலர், பரிசுத்த ஆவியான தேவன் என்று வரும்போது, மிகவும் குழம்பிவிடுகிறார்கள். பிதாவானவரையல்லாமல், குமாரனானவர் ஒருபோதும் உலகிற்குள் அனுப்பப்பட்டிருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். குமாரனானவரையல்லாமல், சிலுவையில் தேவ பலியோ, வெறுமையான கல்லறையோ இருக்க முடியாது என்பதையும், மேலும் நாம் இரட்சிக்கப்பட முடியாது என்பதையும் நாம் அறிவோம். ஆனால், பரிசுத்த ஆவியானவர் என்று ஒருவர் இல்லாதிருந்தால் என்னவாகும்? அது எவ்விதமான வித்தியாசத்தை உண்டாக்கும்? திரித்துவத்தின் இந்த மூன்றாம் நபர், எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்?
பிரம்மாண்டமான அளவுக்குப் பெரும் செல்வந்தராயிருக்கும் ஒரு நபரைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் பெயர், சுரேந்தர். பல்லாண்டுகளாக, அவர் கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவித்துவந்துள்ளார்.
சுரேந்தர் மரிக்கும்போது, அவரது வழக்கறிஞர் அவரது உயிலைத் திறக்கிறார். அது, மிக நீளமானதொரு ஆவணப் பத்திரம்; நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு நீள்கிறது. அதன் பயனாளிகள், உலகெங்கிலும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த உயிலைப்பற்றிக் கூறப்படவேண்டும். மேலும், உயிலில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி, அவர்கள் ஒவ்வொருவரும் அதில் வாக்களிக்கப்பட்டுள்ளவற்றைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு, சுரேந்தரின் இல்லத்திற்கு வரவழைக்கப்படவேண்டும். வரப்போகின்ற சில ஆண்டுகளுக்கு, வழக்கறிஞருக்கான மிகக் கடினமானதொரு பணி, காத்திருக்கிறது.
கிறிஸ்து, நமக்காக அற்புதமானதொரு சுதந்தரத்தைப் பெற்றுத் தந்தார் என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது. அவர், தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக, நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்படுவதற்கும், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்குமான வழியைத் திறந்திருக்கிறார். தேவனுடைய உயிலானது, பிதாவினால் கையொப்பமிடப்பட்டுக் குமாரனால் முத்திரையிடப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு கையெழுத்தாகி, முத்திரையிடப்பட்டுள்ள அது, இன்னும் வழங்கப்படவேண்டியதாய் இருக்கிறது
ஒரு பரிசானது, வழங்கப்படவேண்டியிருப்பது ஒரு காரியம் எனில், அது பெற்றுக்கொள்ளப்படவேண்டியிருப்பது வேறொரு காரியம். கிறிஸ்து வழங்குவதை நாம் பெற்றுக்கொள்ளும்வரை, அவர் செய்து முடித்த அனைத்துக் காரியங்களுமே, பயனற்றவையும், மதிப்பில்லாதவையுமாய் இருக்கும். ஆகவே, தேவனுடைய உயில் நம்மிடம் எவ்வாறு வழங்கப்பட முடியும்? ‘பரிசுத்த ஆவியானவரின் மூலமாக’ என்பதே இதன் பதிலாகும். பரிசுத்த ஆவியானவர், சிலுவையிலே இயேசு நிறைவேற்றி முடித்திருப்பவற்றைக் கொண்டுவந்து, தனிப்பட்ட விதத்திலே நமக்குப் பயன்படுமாறு கிரியை செய்கிறார்.
தேவனின் ஆவியானவர் இல்லாமல், இரட்சிப்பானது வெறும் ஏட்டளவில் மட்டுமே சாத்தியமானதொன்றாக இருந்துகொண்டிருக்கும். ஆனால் அது, யாருக்குமே நடைமுறையில் சாத்தியப்படுகிற ஒன்றாக, ஒருபோதும் இருக்காது. பரிசுத்த ஆவியானவர் எனப்படுபவர் இருந்திராவிடில், யாருமே பரலோகத்திற்குள் சென்றடையப்போவதில்லை. ஆவியானவர் இல்லாவிடில், இயேசு பெற்றுத் தந்த சுதந்தரம், ஒருபோதும் வாசிக்கப்படாததொரு உயிலைப்போலவும், ஒருபோதும் திறக்கப்படாததொரு பரிசுப்பொருளைப்போலவும், ஒருபோதும் அனுபவிக்கப்படாததொரு சுதந்தரபாகத்தைப்போலவுமே இருக்கும்.
கிறிஸ்து, பாவமன்னிப்பையும், உன்னதத்திலிருந்து வரும் நீதியையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையையும் வழங்குகிறார். ஆனால், பெரும்பாலான மக்கள், கிறிஸ்து வழங்குவது தங்களுக்குத் தேவை என்று உணர்வதில்லை. ஆதலால்தான், நமது அமைதியைக் குலைப்பதே பரிசுத்த ஆவியானவரின் முதல் கிரியையாக இருக்கிறது. “அவர் (பரிசுத்த ஆவியானவர்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:8).
பெயிண்ட் இருக்கும் வாளியைத் திறப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். அநேகமாக, அதன் மூடியைத் திறந்து பார்க்க, நீங்கள் ஒரு ஸ்க்ரூ-டிரைவரை அல்லது வேறு வகையான நெம்புகோல் ஒன்றைப் பயன்படுத்துவீர்கள். அந்த வாளியின் வட்டவடிவ ஓரத்தைச் சுற்றி, நெம்புகோலுக்கு ஆதார மையமாகச் செயல்படும் ஒரு விளிம்பு வட்டம் இருக்கிறது. அந்த விளிம்பு இல்லாவிட்டால், நெம்புகோலுக்குப் பற்றுக்கோடு என்று ஒன்றுமே இருக்காது. ஒரு நெம்புகோலானது, ஒரு ஆதாரப் புள்ளியைக்கொண்டே செயல்படவேண்டும்.
சுவிசேஷமானது, ஒரு நெம்புகோலைப்போல் இருக்கிறது. அது, பாவத்தைக்குறித்த உணர்வின் மீது சார்ந்துகொண்டு, அதைத் தன் ஆதார மையமாகக் கொண்டுள்ளது. ஒரு நபருக்குப் பாவத்தைக்குறித்த உணர்வே இல்லாவிட்டால், சுவிசேஷமானது அந்த நபரின் வாழ்க்கையில் எவ்வகையிலும் செயல்படாது. அது, ஆதார மையமற்றதொரு நெம்புகோல்போல இருக்கும்.
பரிசுத்த ஆவியானவர், நமக்குள் பாவத்தைக்குறித்த ஓர் உணர்வை உண்டாக்கும்போது, சுவிசேஷம் செயல்படுகிறது. அதன் காரணமாகவே, பாவத்தைக்குறித்துக் கண்டித்து உணர்த்துவதன் மூலம், நம் அமைதியைக் குலைப்பதே அவரது முதல் கிரியையாக இருக்கிறது. உங்களது பாவத்தைக் கண்டுணர்வதே, தேவனுடன் சமாதானத்தை அடைய எடுக்கும் முதல் படி ஆகும்.
பரிசுத்த ஆவியானவரின் முதல் பணியானது, எது தவறு என்பதை நமக்குக் காண்பிப்பது ஆகும். அதனால் நாம், நமது தேவையைக் கண்டுணர்ந்து, சுவிசேஷத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாயிருப்போம். இது ஒருபோதும் சௌகரியமானது அல்ல. யாருமே தாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, எழுப்பிவிடப்படுவதை விரும்புவதில்லை. ஆனால், உங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது, உங்களை எச்சரிக்கிற நபருக்கு நீங்கள் நன்றி பாராட்டுவீர்கள். பரிசுத்த ஆவியானவர், நம்மைப் பகைக்கிறவராய் இருப்பதால் அல்ல, மாறாக, நாம் இருக்கும் நிலையை அவர் காண்பதால், நம்மைத் தொந்தரவு செய்கிறார். மேலும் அவர் நம்மை மிகவும் நேசிப்பதால், அந்நிலையிலேயே நம்மை விட்டுவிடாதிருக்கிறார். நீங்கள் இருக்கிற நிலையிலிருந்து, நீங்கள் வெளியேறவேண்டும்! நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காணவில்லையா? பாவமும், நீதியும் மற்றும் நியாயத்தீர்ப்பும்! நீங்கள் அங்கே தரித்திருக்க முடியாது!
போதகர் ஸ்மித்தும், அவரது மனைவி கேரனும், அவர்களது படுக்கையறையில், மூன்று அலாரம் கடிகாரங்கள் வைத்துள்ளனர். முதலாவது, இசையோடுகூட மென்மையாக அவர்களை எழுப்புகிறது. அப்படி முதலாவது எழுப்புகிற ஒலியில், அவர்கள் எழும்பாமல் தூங்கிவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை, சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒலிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சற்றுத் தொந்தரவு செய்யும். அதைவிடவும் சற்றுத் தாமதமாக ஒலிக்கும்படி அமைக்கப்பட்ட மூன்றாவது கடிகாரமானது, மற்ற அனைத்தும் தவறுகிற பட்சத்தில் வரும் கடைசி முயற்சியாகும். அது, பயங்கரமான ஓசையெழுப்பும். காது கேளாதபடி செய்யக்கூடிய அதன் வெடியோசையைக் கேட்குமுன்பே எழுந்துவிட்டால், அந்த நாளானது, எவ்வளவோ நன்றாகத் தொடங்கும். தேவன் ஒரு நபரின் வாழ்வில், பாவத்தை நிறுத்த, மூன்று வழிகளைக் கொண்டிருக்கிறார். நீங்கள் மூன்று எச்சரிக்கை மணிகளைப்போல் அவற்றைக்குறித்து எண்ணிக்கொள்ளலாம். முதலாவது, உங்களது மனச்சாட்சியைத் திறந்து, எது தவறென்று வெளிப்படுத்தி, நீங்கள் அதைச் சரிசெய்துகொள்ள உதவும், தேவஆவியானவருடைய மென்மையான கிரியையாகும்.
அதில் நீங்கள் எழும்பாமல் தூங்கிவிட்டால், பரிசுத்த ஆவியானவர் அதைவிட உரத்த சத்தமாகவும், நேரடியாகவும் பேசக்கூடும். அதுதான் தாவீதுக்கு நேர்ந்தது. தீர்க்கதரிசி நாத்தான் மூலமாகத் தாவீதின் பாவத்தைத் தேவன் அம்பலப்படுத்தினார். அது வெளிக்கொண்டுவரப்பட்டது. மேலும் அந்நிலையில் தாவீது, தேவனை நோக்கி மனந்திரும்பினார்.
தேவனின் இரண்டாவது எச்சரிப்பிலும் ஒரு நபர் தூங்கிவிடுவாரானால், அவரது சூழ்நிலை மிகவும் ஆபத்தானதாகிவிடுகிறது. அதுதான் பார்வோனுக்கு நேர்ந்தது. தேவன், அவரிடத்திற்கு மோசேயை அனுப்பினார். ஆனால் பார்வோன், தான் நேரடியாக எதிர்க்கப்பட்டபோதும்கூட, தேவனின் கட்டளைக்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டார். அவர் தனது இருதயத்தைத் தொடர்ந்து கடினப்படுத்திக்கொண்டு வந்தார். இறுதியில் பார்வோன், தேவனுடைய நியாயத்தீர்ப்பின்கீழ் வந்தார்.
இந்த மூன்று எச்சரிப்பு மணிகளையும் கருத்தில் கொள்ளுங்கள்: மனச்சாட்சியைத் திறப்பதான, தேவனுடைய ஆவியானவரின் அமைதியான கிரியை, ஒரு இரகசியப் பாவத்தை அம்பலமாக்கும் தேவன் மற்றும் சர்வ வல்லவரான தேவனின் நேரடியான நியாயத்தீர்ப்பு. இந்த மூன்றில், உங்களை எழுப்பிவிடும்படியாக, தேவன் எதைப் பயன்படுத்த நீங்கள் விரும்புவீர்கள்?
நம் பாவங்களை நமக்குக் காண்பிப்பது, ஆவியானவரின் முதல் கிரியையாகும். அது அவரின் கடைசிக் கிரியையாக இல்லாததற்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர், நமது பாவங்களைக் குறித்து நம்மை விழிப்படையச் செய்கிறார். ஆனால் அவர், அந்நிலையிலேயே ஒருபோதும் நம்மை விட்டுவிடுவதில்லை.
ஒரு கட்டிடமானது, பேரொளி விளக்குகளால் ஒளியூட்டப்படும்போது, அதன் அழகை நீங்கள் காண முடியும். ஆனால் பேரொளி விளக்குகள் இல்லாவிடில், அதன் அழகு இருளில் மறைக்கப்பட்டுவிடும்.1 பரிசுத்த ஆவியானவர், இயேசுவின் மீது ஒளிரும் பேரொளி விளக்கைப்போன்றவர் ஆவார். அவரே, நம்மால் காணக்கூடாதிருக்கும் சத்தியத்தை, நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறவராக இருக்கிறார். இயேசு யாரென்றும், அவர் நிறைவேற்றி முடித்தது என்ன என்றும் நாம் காணும்படியாக, அவர் நமக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றலைத் தருகிறார்.
இயேசு, “சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்” (யோவான் 15:26), என்றும், “அவர் ஜபரிசுத்த ஆவியானவர்ஸ என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” (16:14), என்றும் சொன்னார். பேரொளி விளக்குகளைப்போலப் பரிசுத்த ஆவியானவர், தம்மேல் தாமே ஒளி வீசிக்கொள்வதில்லை் மாறாக, நமது கவனத்தை அவர், இயேசுவின் மீதே திருப்புகிறார்.
பரிசுத்த ஆவியானவர், அருமையானதொரு ஊழியத்தைக் கொண்டிருக்கிறார். நமக்கொரு இரட்சகர் தேவைப்படுகிறார் என்பதை, அவர் நமக்குக் காண்பிக்கிறார். அத்துடன், நமக்குத் தேவைப்படும் அந்த இரட்சகர், இயேசுதான் என்பதையும் நமக்குக் காண்பிக்கிறார். பின்பு அவர், இருவரையும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கிறார். பரிசுத்த ஆவியானவரே, பரலோகத்தின் திருமண இணைப்பாளர் ஆவார். அவர், இயேசு சிலுவையில் நிறைவேற்றி முடித்தவை அனைத்தும் நம்முடையதாகும்படி, நம்மைக் கிறிஸ்துவிடம் கொண்டுவந்து, கிறிஸ்துவை நம்முடன் இணைத்துவிடுகிறார்.
பரிசுத்த ஆவியானவரைப்பற்றிப் பேசும்போது இயேசு, “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (14:16), என்று சொன்னார். இயேசு, “நான் உங்களுக்குத் தேற்றரவை அனுப்புவேன்,” என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர், “நான் உங்களுக்குத் தேற்றரவாளனை அனுப்புவேன்,” என்றே சொல்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு, இயேசுவே சீஷர்களின் ஆலோசகராக இருந்தார். இப்பொழுதோ, தொடர்ந்து இயேசுவைப்போல் அவர்களுக்கு எல்லாமாகப் பரிசுத்த ஆவியானவர் இருப்பார்.
பிதாவானவரையும், குமாரனானவரையும்போலவே, பரிசுத்த ஆவியானவரும் ஒரு நபரேயாவார். எனவே, நாம் அவரை, வெறும் ஒரு வல்லமை அல்லது சக்தி மட்டுமே என்று நினைத்துவிடக்கூடாது. வேதாகமம், பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் சொல்லுவதையும், பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதையும் பற்றிப் பேசுகிறது (அப்போஸ்தலர் 5:3; எபேசியர் 4:30). நீங்கள் ஒரு வல்லமையினிடத்தில் பொய் சொல்லவும், ஒரு சக்தியைத் துக்கப்படுத்தவும் முடியாது. ஒரு வகையான ஆற்றல், சீஷர்களுக்கு இயேசுவைப்போல் எல்லாமாக ஒருபோதும் இருக்கமுடியாது.
இயேசு தம் சீஷர்களிடம், “நான் என் பிதாவினிடத்திற்குப் போகி(றேன்)” (14:12), ஆனால், “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (14:16), என்று கூறினார். ஆனால் அதன்பின்பு இயேசு, “உங்களிடத்தில் வருவேன்” (14:18), என்று சொன்னார். சீஷர்களுடனிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமானது, கிறிஸ்துதாமே அவர்களுடனேகூட மெய்யாகவே இருந்ததற்குச் சமானமாய் இருக்கும்.
அதன்பின்பு இயேசு, இன்னும் அதிகமாக ஆச்சரியப்படவைக்கக்கூடிய ஒன்றைச் சொன்னார்: “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (14:23). எனவே, ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே பிதாவானவர், குமாரனானவர் ஆகிய இருவருமே வாசமாயிருப்பார்கள்.
குமாரனானவரையல்லாமல் பிதாவானவரையோ, ஆவியானவரையல்லாமல் குமாரனானவரையோ உங்களால் அறிந்துகொள்ள முடியாது. குமாரனானவரின் மூலமாகவே, பிதாவானவர் தம்மையே அறிந்துகொள்ளும்படிச் செய்தார். அவ்வாறே, பரிசுத்த ஆவியானவர்தாமே நம்மை இயேசுவினிடத்தில் கொண்டுசேர்ப்பவர்.
பரிசுத்த ஆவியானவருடனான நமது உறவை விவரிக்க இயேசு, இரண்டு சொற்களைப் பயன்படுத்தினார்: “அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்…” (14:17). பரிசுத்த ஆவியானவர், நம்முடனே இருக்கிறார். இங்கே ஒரு வேறுபாடு இருக்கிறது. ஆகவே, நீங்கள் நினைப்பதையும், சொல்வதையும், ஆவியானவருடைய சிந்தையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறதான பொறிக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். ஞானமுள்ள கிறிஸ்தவர்கள், நாங்கள் சொல்வதை மற்றவர்கள் சோதித்தறிய அனுமதிப்பார்கள். ஆவியானவர் நம்முடன் இருக்கிறார். நம்மைத் திருத்துவதற்கு, அடிக்கடி நமக்கு அவர் தேவைப்படுகிறார்.
மேலும் இயேசு, ஆவியானவர் சீஷர்களுக்குள்ளே இருப்பார் என்றும் சொன்னார். இங்கே ஒரு இணைப்பு (அ) ஐக்கியம் இருக்கிறது. ஆவியானவர், ஒரு வழிகாட்டியைப்போல, நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நமக்குக் காண்பித்து, பின்பு அதன்படிச் செய்ய நம்மை விட்டுவிடுகிறவர் அல்ல. அவர் நமக்குள்ளே வசிக்கிறார். அவரது பிரசன்னமே கிறிஸ்தவ வாழ்வைச் சாத்தியமாக்குகிறது.
இயேசு, “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்” (யோவான் 16:7), என்று சொன்னார். இது, இயேசுவுடன் மூன்று ஆண்டுகள் ஒன்றாய் இருந்த சீஷர்களுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும் என்பதைத் தெளிவாய் உணர்த்தியது. இயேசு, “அவர்களுடன்” இருந்தார். ஆனால் இப்பொழுதோ, ஆவியானவர் மூலமாக, அவர் “அவர்களுக்குள்ளே” இருப்பார்.
இயேசுவைப் பின்பற்றிய முதல் சீஷர்களைக்காட்டிலும், நாம் கொஞ்சம் குறைவாகத்தான் பெற்றிருக்கிறோம் என்று நாம் நினைப்பது இயல்பானதுதான். ஆனால், கிறிஸ்தவ விசுவாசிகள் பெற்றிருப்பது அதிகமே. பரிசுத்த ஆவியானவர் – இயேசுவின் ஆவியானவர்தாமே – உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். அது குறைந்ததல்ல, அதிகமே!
பரிசுத்த ஆவியானவரான தேவன், திரித்துவத்தின் மூன்றாம் நபராக இருக்கிறவர். அவரது ஊழியம், நமது இரட்சிப்பிற்கு மையமாக இருக்கிறது. சிலுவை மீது தேவகுமாரனானவரின் கிரியையில்லாமல், நாம் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. மேலும், நமது இருதயங்களில் ஆவியானவரின் கிரியையில்லாமல், நாம் இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டோம்.
நாம் நமது பாவத்தைக் கண்டு, நமக்கு இரட்சகர் தேவைப்படுவதை உணர்ந்துகொள்ளுமாறு, பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தொந்தரவு செய்கிறார். அவ்வாறு செய்யும்போது அவர், நாம் இயேசுவின் மகிமையைக் காணும்படியாக ஒளியூட்டுகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரிடம் வந்திருக்கிறீர்கள் என்றால், தேவனின் ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம்பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 6:19; 12:13). எனவே, நீங்கள் மாற முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
குறிப்பு:
1. பேரொளி விளக்குகளின் எடுத்துக்காட்டுக்காக, நான் டாக்டர் ஜே. ஐ. பேக்கருக்குக் கடமைப்பட்டுள்ளேன். காண்க பேக்கர், கீப் இன் ஸ்டெப் வித் த ஸ்பிரிட் (ஓல்ட் டாப்பன், என்ஜே: ரெவெல், 1984), 65 ப. தொ.
1. நமது இரட்சிப்பில், பரிசுத்த ஆவியானவர் எவ்விதமான பங்காற்றுகிறார்?
2. ஒரு நபரின் வாழ்வில், பரிசுத்த ஆவியானவரின் முதல் கிரியை என்ன? இதைக்குறித்த, உங்களது அனுபவம் எப்படி இருந்திருக்கிறது?
3. ஜனங்களை எழுப்பிவிடுவதில், தேவனின் மூன்று வழிகள் யாவை? தேவன், இவற்றுள் எதையேனும் உங்களது சொந்த வாழ்க்கையில் பயன்படுத்துவதை நீங்கள் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறீர்களா?
4. பரிசுத்த ஆவியானவர், இயேசுவின் மீது ஒளிரும் ஒரு பேரொளி விளக்கைப் போன்றவர். நீங்கள் வேதாகமத்தைக் கற்றதன் மூலமாக, இயேசுவைப் பற்றித் தெளிவாக நீங்கள் கண்டறிந்திருக்கும் ஒரு காரியம் என்ன?
5. இந்த அறிக்கைக்குப் பதிலளியுங்கள்: “அவர் ஜபரிசுத்த ஆவியானவர்ஸ உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பார்,”