2 இராஜாக்கள் 17:6-28
யோவான் 5:19-29
19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
தேவன் எப்பொழுது பிதாவானார்? அவர் எப்பொழுதுமே பிதாவாகவே இருந்திருக்கிறார் என்பதே இதன் பதிலாகும். அவரே நித்திய பிதாவாக இருக்கிறார். பிதாவின் தன்மை, ஒருபோதும் மாறுவதேயில்லை. கிறிஸ்து எப்பொழுது குமாரனானார்? அவர் எப்பொழுதுமே குமாரனாகவே இருந்திருக்கிறார் என்பதே இதன் பதிலாகும். அவரே நித்திய குமாரனாக இருக்கிறார். மேலும், குமாரனின் தன்மையும், ஒருபோதும் மாறுவதேயில்லை. குமாரனானவர் இல்லாமல் பிதாவானவரும், பிதாவானவர் இல்லாமல் குமாரனானவரும் ஒருபோதும் இருந்ததேயில்லை.
போதகர் ஸ்மித், 1986-ஆம் ஆண்டு, தன் மகன் ஆண்ட்ரூ பிறந்தபோது, தகப்பனானார். ஒரு மகனைப் பெறுவதற்குமுன், அவர் ஒரு தகப்பன் என்று கூற முடியாது. ஒரு மகன் அல்லது மகளின் பிறப்புதான், ஒரு மனிதனைத் தந்தையாகவோ, ஒரு மனுஷியைத் தாயாகவோ ஆக்குகிறது. ஆனால் இயேசு இந்த உலகில் பிறந்தபோது, தேவன் ஒரு குமாரனைப் பெறவில்லை. மாறாக, ஏற்கெனவே “பிதாவின் மடியிலிரு(ந்த)” தமது குமாரனை அனுப்பினார் (யோவான் 1:18).
குமாரனானவர், பிதாவுக்குச் சமமானவர் என்பதை, வேதாகமம் தெளிவுபடுத்துகிறது (5:18). குமாரனான தேவன், நம்மைப்போல் மாம்சமாவதற்குமுன்பு அவர், பிதாவின் மகிமையிலும் (17:5), பிதாவின் ஜீவனிலும் (5:26), பிதாவின் கிரியைகளிலும் (1:3), மற்றும் பிதாவின் அன்பிலும் (17:24), பங்குள்ளவராயிருந்தார். அவர் சுபாவத்திலேயே தேவனாயிருக்கிறார். ஆனால், இப்படித் தேவனுக்குச் சமமாயிருப்பதை, அவர் கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை (பிலிப்பியர் 2:6). அவர், பிதாவுக்குத் தம்மையே அர்ப்பணித்துக்கொள்கிற ஸ்தானத்தில் நின்று, ஒரு அடிமையின் ரூபமெடுத்தார்.
ஒரு தருணத்தில் இயேசு, “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28), என்று சொன்னார். இது, “இந்திய தேசத்தின் குடியரசுத் தலைவர், என்னிலும் பெரியவராயிருக்கிறார்,” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்வதைப் போன்றது. நாம், குடியரசுத் தலைவரைப்போலவே பொதுவான மனிதர்களாயிருக்கிறோம். ஆயினும், அவரது பதவி, சந்தேகமின்றி நம்மைவிட உயர்ந்தது.
ஆகவே, “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்,” என்று இயேசு சொன்னபோது, பிதாவானவர் அதிகத் தெய்வீகமுள்ளவராயிருக்கிறார் என்னும் அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. ஆனால், பிதாவானவர் அதிக மேன்மையான ஸ்தானத்தை வகிக்கிறார் என்னும் பொருள்படவே அப்படிச் சொன்னார். பிதாவானவர், பரலோகத்தில் இருந்தார். இயேசுவோ, சிலுவையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். இதன் காரணமாகவே இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள் . . .” (14:28), என்று சொன்னார். பிதாவினிடத்திற்குப் போவது என்பது, அவரது மகிமையில் பங்குள்ளவராவதற்குத் திரும்பிச் செல்வதைக் குறித்தது.
வேதாகமம், குமாரன் என்னும் வார்த்தையை இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறது. அது, சார்ந்திருக்கும் தன்மையுடைய ஒரு உறவினர் அல்லது பிரதிபலிக்கும் ஒரு தன்மை என்று பொருள் தரலாம்.1
பண்டைய உலகில், ஒரு மகன் தன் தந்தையின் (பாதச்)சுவடுகளைப் பின்பற்றினான். உங்கள் தந்தை ஒரு தச்சராயிருந்திருப்பாரானால், நீங்களும் ஒரு தச்சராயிருப்பீர்கள். மேலும், உங்கள் தந்தை நல்லதொரு தச்சராயிருந்திருப்பாரானால், அவரது தொழிலின் தரம், உங்களது வேலையிலும் பிரதிபலிக்கப்படும், “தந்தையைப்போல் பிள்ளை,” என்கிற பழமொழிபோல்.
புதிய ஏற்பாட்டில், “பர்னபா” என்று அப்போஸ்தலர்கள் புனைபெயர் கொடுத்திருந்த ஒரு மனிதரைப் பற்றி நாம் வாசிக்கிறோம். பர்னபா என்பதற்கு, “ஆறுதலின் மகன்” (அப்போஸ்தலர் 4:36), என்பது பொருள். அப்போஸ்தலர்கள் ஏன் அவருக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று கற்பனை செய்வது கடினமானதல்ல. பர்னபா, சிறந்ததொரு தேற்றுகிறவராக இருந்தார் என்பதை அவர்கள் கண்டார்கள். அவர், ஆறுதலே வடிவானவர்; ஆறுதலளிப்பதற்கே மனித உருவெடுத்து வந்தவர்.
இயேசு மலைப்பிரசங்கத்தில், குமாரன் என்கிற வார்த்தையை அதே விதத்தில் பயன்படுத்தினார். அவர், “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:9), என்று சொன்னார். தேவனே மிகச்சிறந்த சமாதான காரணர். நாம் சமாதானம்பண்ணும்போது, அவரது குணாதிசயத்தை நாம் பிரதிபலிக்கிறோம்.
ஆகவே இயேசுவை வேதாகமம், “தேவகுமாரன்” (யோவான் 5:25), என்று விவரிக்கும்போது, குமாரன் என்னும் வார்த்தையானது, அவர் பிதாவைச் சார்ந்திருக்கும் அவரது உறவினர் என்று பொருள்படவில்லை. மாறாக, பிதாவின் சுபாவத்தைப் பூரணமாகப் பிரதிபலிக்கிறார் என்னும் பொருளையே தருகிறது (எபிரெயர் 1:3). தேவகுமாரனானவர், மானுட சரீரத்தில், தேவனின் பூரண வடிவாய் இருக்கிறார்.
தேவகுமாரனாய் இருப்பதன் முழு மகிமையும் இயேசுவுக்கு எப்படிப்பட்டதாய் இருந்தது என்பது, யோவான் 5-ல் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அங்கே இயேசு, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” (யோவான் 5:19), என்று சொல்கிறார்.
இயேசுவின் நடவடிக்கை, பிதா செய்கிறதாக அவர் காண்பவற்றை மட்டுமே செய்யக்கூடிய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கிறிஸ்து, பிதாவானவர் என்னவெல்லாம் செய்வாரோ, அவற்றைத் தவிர தாம் யாதொன்றையும் செய்வதில்லை, என்று சொல்கிறார். நாம் செய்யும் ஒவ்வொன்றுமே, தேவனுடைய நடவடிக்கையின் பிரதிபலிப்புதான் என்று நாம் சொல்லக்கூடுமானால் நன்றாயிருக்கும் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், நிச்சயமாக நம்மால் அப்படிச் சொல்ல முடியாது. இருப்பினும் இயேசு, அப்படித்தான் சொல்கிறார்: “என் வாழ்வில், தேவனின் நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட அளவில், நீங்கள் ஒரே ஒரு காரியத்தைக்கூடக் காண முடியாது.”
அடுத்து இயேசு, அதைவிட இன்னும் அதிகமாக பிரமிப்பூட்டுகிற அறிக்கையைச் செய்கிறார்: “அவர் (பிதா) எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:19). வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “நான் செய்யும் ஒவ்வொன்றுமே, பிதாவானவர் செய்வதைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிதாவானவர் செய்யும் ஒவ்வொன்றும், நான் செய்வதில் பிரதிபலிக்கப்படுகிறது,” என்று இயேசு சொல்கிறார்.
தேவன் செய்கிறவற்றைப் பிரதிபலிக்கக்கூடிய, சில காரியங்களை நாம் செய்யலாம். நாம் அன்புகூரும்போது, மன்னிக்கும்போது, அல்லது சமாதானம் பண்ணும்போது, நாம் பிதாவின் சுபாவத்தைப் பிரதிபலிக்கிறோம். ஆனால், தேவனுக்கு மட்டுமே உரியவைகளாயிருக்கிற சில காரியங்கள் இருக்கின்றன. தேவன் மட்டுமே ஜீவனைத் தருகிறார். தேவன் மட்டுமே மரித்தோரை எழுப்புகிறார். தேவன் மட்டுமே நியாயாதிபதியாய் இருக்கிறார். இவையெல்லாம் தேவனுடையவைகள். இயேசுவோ, அவற்றையெல்லாம் தாம் செய்வதாகக் கூறுகிறார்: “பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். . . . பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்” (5:21-22).
உங்கள் தகப்பன் மற்றும் உங்கள் தாயின் இணைப்பின் மூலமாக வந்த உங்களது ஜீவன், தேவனிடமிருந்து வந்த ஒரு பரிசு ஆகும். அவர்கள் இல்லாமல் நீங்கள் வந்திருக்க முடியாது. தேவன் மட்டுமே தம்மில்தாமே ஜீவனைக் கொண்டிருக்கிறார். வேறு எவரையும் சார்ந்திராதவராக வாழும் ஒரே ஜீவன் அவர் மட்டுமே.
ஆனால் இயேசு, “ஏனெனில், பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்” (5:26), என்று சொல்கிறார். இந்த வார்த்தைகள், திரித்துவத்தின் இரகசியத்தை நாம் ஆச்சரியத்தோடு உற்று நோக்கும்படி உதவுகின்றன. இயேசு, “பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார். அவ்வாறே, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார்,” என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அப்படிச் சொல்வது, தம்மில்தாமே ஜீவனுடையவர்களாயிருக்கும் இரண்டு தேவர்கள் இருக்கிறார்கள், என்று பொருள்பட்டுவிடும். மேலும்
இயேசு, “பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார். அத்துடன், குமாரன் ஜீவனுடையவராயிருக்க அருள்செய்திருக்கிறார்,” என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதும், குமாரன் ஏதோ நம் அனைவரையும்போலவே, சிருஷ்டிக்கப்பட்ட, சார்ந்து வாழ்கிறதான ஒரு ஜீவன் என்று அர்த்தமாகிவிடும்.
இயேசு, “பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோலவே, குமாரனானவரும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்,” என்று சொன்னார். பிதாவானவரும், குமாரனானவரும், தேவனின் ஒரே நித்திய ஜீவனில் பங்குள்ளவர்களாயிருக்கிறார்கள்.2
இவை அனைத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பாருங்கள், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை, நீங்கள் காணத் தொடங்குவீர்கள். ஒரு நாள், மரித்தோரை அவர் உயிரோடெழுப்பி, இறுதி நியாயத்தீர்ப்பை ஜனங்கள் அனைவர்மேலும் கூறுவார். மேலும் அவர், தம்மிடத்தில் வருகிற யாவருக்கும் ஜீவனைத் தர வல்லவராயிருக்கிறார்.
புதிய ஏற்பாடு, இயேசுவின் அடையாளப்படுத்துதலின்மேல் மாபெரும் முக்கியத்துவத்தை வைக்கிறது. அவர் நம்மோடிருக்கும் தேவன். இந்தச் சத்தியம், மையமானதொரு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குமாரனானவர் தேவனாயிருந்திராவிடில், நம்மால் பிதாவை அறிந்துகொண்டிருக்க முடியாது. ஒரு சந்தர்ப்பத்தில் பிலிப்பு இயேசுவை நோக்கி, “பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்,” என்று சொன்னார். அதற்கு இயேசு, “பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:8-9), என்று பதிலளித்தார்.
உங்களுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்றும், அவர் ஒரு சில விஷயங்களில் உங்களைப்போலவே இருந்தாலும், மற்றக் காரியங்களில் மிகவும் வித்தியாசமானவர் என்றும் வைத்துக்கொள்வோம். “நீங்கள் என்னைக் கண்டவர்களானால், என் சகோதரனையும் கண்டீர்கள்,” என்று உங்களால் மற்றவர்களிடம் சொல்ல முடியாது. ஏனெனில், என்னதான் ஒரே பெற்றோரிடமிருந்து தோன்றியிருந்தாலும், நீங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். உங்களை அறிந்திருப்பது என்பது, உங்கள் சகோதரரை அறிந்திருப்பது அல்ல.
குமாரனானவர் தேவனாயிருந்திராவிடில், நம்மால் பிதாவை அறிந்துகொண்டிருக்க முடியாது. நாம் சொல்லக்கூடிய சிறந்ததொரு விஷயம் என்னவெனில், பிதாவோடு இருந்த ஒருவர், நமக்கு அவரைப் பற்றிக் கூற வந்தார் என்பதுதான். அது இயேசுவை, ஒரு தேவதூதர் அல்லது ஒரு தீர்க்கதரிசி என்பதுபோலக் காட்டும். ஆனால் இயேசு, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (14:9), என்று சொல்கிறார்.
பிதாவானவர், நம்முடைய பாவங்களுக்கான குற்றத்தையும் தண்டனையையும் தம்முடைய குமாரனின்மேல் வைத்தார் என்றும், இது தேவனுடைய அன்பின் வெளிப்பாடு என்றும் வேதாகமம் நமக்குச் சொல்கிறது (ஏசாயா 53:5-6; ரோமர் 5:8).
ஆனால், குமாரனானவர் தேவனாயிருந்திராவிடில் சிலுவையானது, அன்பின் ஒரு பரிசாய் இல்லாமல், கொடுமையின் ஒரு நடவடிக்கையாய் இருக்கும். அப்பொழுது தேவன், தமது சிருஷ்டிப்பில் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மற்ற அனைவருக்கும் வரவேண்டியிருந்த தேவ கோபாக்கினை அனைத்தையும், அந்த நபரின்மேல் ஊற்றியிருப்பார். அது என்ன விதமான நீதியாய் இருக்கும்?
குமாரனானவர் தேவனாயிருந்திராவிடில், ரோமர் 5:8-ஐ நாம் பின்வருமாறு திருத்தி, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் தமது அநீதியை விளங்கப்பண்ணுகிறார்,” என்று எழுதவேண்டியதாய் இருக்கும். ஆனால், குமாரனானவர் தேவனாயிருக்கிறார். சிலுவையிலே, நமது பாவங்ளைச் சுமந்து, நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர், தேவனே.
தேவன் உலகத்தைச் சிருஷ்டிப்பதற்குமுன்பே, புருஷரும் ஸ்திரீகளும் தமது மகிமையில் நித்தியகாலமும் பங்குள்ளவர்களாயிருக்கும்படி, மீட்டுக்கொள்ளத் திட்டமிட்டார். அந்தத் திட்டம், மாபெரும் விலைக்கிரயம் கொண்டதாயிருந்தது. அது, தேவன் தம்மையே கொடுப்பதைக் குறிப்பதாகும். அப்படித் தம்மையே கொடுப்பது, அவருக்கேயுரிய சுபாவம் மற்றும் மகிமை ஆகியவற்றின் உச்சக்கட்டக் காட்சியாயிருக்கும். தேவன் தம்மையே கொடுப்பதென்பது, திரித்துவத்தின் அனைத்து நபர்களையும் உள்ளடக்கியது. பிதாவானவர், குமாரனனாவரை அனுப்புவார். குமாரனானவர், தமது ஜீவனையே ஒப்புக்கொடுப்பார். ஆவியானவர், ஒவ்வொரு விசுவாசிக்கும் தம்மையே கொடுப்பார்.
பிதாவானவர் மற்றும் குமாரனானவரின் பாத்திரங்களைக் எண்ணிப்பாருங்கள். இவர்களுள் எளிதாய்ச் செய்யப்படக்கூடிய பாத்திரம் யாருடையது: தமது குமாரனைக் கொடுப்பவருடையதா, அல்லது தமது ஜீவனையே ஒப்புக்கொடுப்பவருடையதா? இந்தக் கேள்வி, பதில் கூற முடியாதது. உங்களுக்காகவும், எல்லாருக்காகவும், தம்மையே கொடுப்பதும், பலியாய் ஒப்புக்கொடுப்பதுமானவற்றின் முடிவில்லாத விலைக்கிரயத்தைச் செலுத்துவதில், பிதாவானவரும், குமாரனானவரும், ஒன்றாகவே இருந்தனர்.
குமாரனானவர் தேவனாயிருந்திராவிடில், நீங்கள் ஒருபோதும் உங்களது இரட்சிப்பைக் குறித்த நிச்சயத்தோடிருக்க முடியாது.
போதகர் ஸ்மித், தனது கிரெடிட் கார்டை மேம்படுத்த விரும்பியதால், சமீபத்தில் தனது கிரெடிட் கார்டு நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். இதை, தான் தொலைபேசியின் வழியாகவே செய்து முடித்துவிட முடியுமா, என்று கேட்டார். அந்தப் பிரதிநிதி மிகவும் உதவிகரமானவராக இருந்தார். தான் கேட்டபடியே செய்ய முடியும் என்றும் உறுதியளித்தார்.
சில நாட்கள் சென்றபின், அவருக்கு ஒரு கடிதம் வந்தது.
அன்புள்ள காலின் ஸ்மித், தங்களது கிரெடிட் கார்டு கணக்கு விவரம் குறித்து, சமீபத்தில் தாங்கள் விசாரித்ததற்காக நன்றி. எதிர்பாராதவிதமாக, தாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களால் தங்களது கணக்கை மாற்றித்தர முடியவில்லை. தாங்கள், தங்களது கணக்கை மாற்ற விரும்புவீர்களானால், தயவுசெய்து மேலே கொடுக்கப்பட்ட எங்களது வாடிக்கையாளர் சேவைத் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொள்ளவும்.
போதகருடன் பேசிய பிரதிநிதி சொன்னது நிராகரிக்கப்பட்டது என்பது தெளிவு! அவர், போதகரின் கணக்கு விவரம் தொலைபேசி வழியாகவே மாற்றப்பட முடியும் என்று உண்மையிலேயே நம்பினார். ஆனால் அதைச் செயல்படுத்துவதற்கான அதிகாரம்தான் அவரிடம் இல்லை.
கிறிஸ்துவின் விஷயத்திலும் அதுதான் நிலைமை என்றால், எப்படியிருக்கும்? இயேசு தேவனாயிருந்திராவிடில் அவர், தம்மிலும் அதிகாரமுடைய ஒருவரால், நிராகரிக்கப்படக்கூடியதான வாய்ப்பு, எப்பொழுதுமே இருந்திருக்கும். மேலும், பரலோகத்தின் வாசலில் வந்து நின்றுகொண்டு, பின்பு அதனுள் பிரவேசிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற நிலைமையைத்தான், நாமும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
ஆனால் பிதாவானவர், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் (5:22). குமாரனானவர், தமது சுபாவத்திலேயே தேவனாயிருக்கிறார். அண்டசராசரம் அனைத்தின் உச்ச நீதிமன்றத்துக்குக் கிறிஸ்துவே தலைமை வகிக்கிறார். அதற்கு மேற்பட்டதொரு அதிகாரம் இல்லை. ஆகவே, குமாரன் உங்களை மன்னிக்கப்பட்டவராகத் தீர்த்தால், மெய்யாகவே நீங்கள் மன்னிக்கப்பட்டவர்தான்!
இயேசு, நம்மோடிருக்கும் தேவன். இதன் காரணமாகப் பிதாவானவரை, அவர் மூலமாக நம்மால் மெய்யாகவே அறிந்துகொள்ள முடியும். நம் மீதான தேவனுடைய அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஆகும். தேவன் கிறிஸ்துவுக்குள், இந்த உலகத்தைத் தம்முடனேகூட ஒப்புரவாக்கிக்கொண்டார் (2 கொரிந்தியர் 5:19). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவத்துவமே, நமது இரட்சிப்பின் உத்தரவாதம் ஆகும். இயேசு, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு் அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 5:24), என்று சொன்னார்.
குறிப்பு: 1. புதிய ஏற்பாட்டில் காணப்படும் குமாரன் என்பதைக்குறித்து, பேராசிரியர் டான் கார்ஸன் எழுதியிருப்பதற்காக நான் கடன்பட்டிருக்கிறேன் என்பதை, மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக, த டிஃபிக்கல்ட் டாக்ட்ரின் ஆஃப் த லவ் ஆஃப் காட் (வீட்டன், ஐஎல்: க்ராஸ்வே, 2000), 31பதொ காண்க.
2. இந்தக் குறிப்புக்காக, நான் மீண்டும் டான் கார்ஸனுக்குக் கடன்பட்டிருக்கிறேன். குறிப்பாக, த டிஃபிக்கல்ட் டாக்ட்ரின் ஆஃப் த லவ் ஆஃப் காட்-ல், 37-39.
1. இயேசு எப்பொழுது தேவகுமாரன் ஆனார்?
2. இயேசு, “தேவகுமாரனாயிருக்கிறார்” என்று வேதாகமம் கூறுவதற்கு என்ன அர்த்தம்
என்று, உங்களது சொந்த வார்த்தைகளில் எப்படிச் சொல்வீர்கள்?
3. சிலுவையானது, கொடுமையின் ஒரு செயல் என்று உங்களிடம் சொல்கிற ஒருவருக்கு, நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
4. இந்த அறிக்கைக்குப் பதிலளியுங்கள்: “குமாரனானவர் தேவனாயிருந்திராவிடில், நம்மால் பிதாவானவரை அறிந்துகொண்டிருக்க முடியாது.”
5. 1 (சிறிதளவும் நம்பிக்கையில்லை) முதல், 10 (முழு நிச்சயம்) வரையுள்ள அளவுகோலில், உங்களது இரட்சிப்பில் உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையுடையவராய் இருக்கிறீர்கள்? உங்களது நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன, அல்லது காரணங்கள் எவை?