2 இராஜாக்கள் 17:6-28
மத்தேயு 11 : 25-30
25. அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26. ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
வேதாகமத்தில் தேவன், தாம் ஒருவரே என்று வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பழைய ஏற்பாடு, பல்லாண்டுகளுக்குப் பின்னர் பதில்களைச் சொல்லக்கூடிய சில கேள்விகளை எழுப்புகிறது. எடுத்துக்காட்டாக, சிருஷ்டிப்பின்போது தேவன், "நமது சாயலாக… மனுஷனை உண்டாக்குவோமாக…" (ஆதியாகமம் 1:26), என்று சொல்கிறார். தேவன், தாம் ஒருவரே என்று மிகவும் தெளிவாகக் கூறும்போது, நாம் என்ற பன்மைப் பதம் ஏன் வருகிறது? புதிய ஏற்பாட்டில் தேவன், தாம் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார் என்று வெளிப்படுத்துகிறார். தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவான் 4:8). ஒன்றுமே இல்லாதபோது, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கிடையே அன்பு பெருகிப் பாய்ந்தோடியது (யோவான் 17:24).
அந்த வயது முதிர்ந்த போதகர், ஆங்காங்கே சிதறியிருந்த சபையினரைத் தன் அரை நிலா வடிவமான கண்ணாடியின் வழியாக, ஊடுருவிப் பார்த்தபோது, தனது புருவம் சுருங்க, அந்த வாரம் முழுவதும் தான் தியானித்துக்கொண்டிருந்த செய்தியைத் தொடங்கினார். அவர் மெதுவாக, “முதலாவது, நான் ஆராய முடியாதவற்றை ஆராயப்போகிறேன்,” என்று சொன்னார். தொடர்ந்து சற்றுக் கூடுதல் நம்பிக்கையோடு, “நான் விளக்க முடியாதவற்றை விளக்கப்போகிறேன்,” என்றவர், “மேலும் கடைசியாக . . .” என்று, வார்த்தைகளைத் தேடுவதுபோல் சற்று நிறுத்திப் பிறகு, “நான் அறிவுக்கெட்டாதவைகளைக் கூறப்போகிறேன்,” என்று சொன்னார்.
“இதைப்பற்றி எல்லாரும் உடனே புரிந்துகொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘தேவன் ஒருவரே, அவர் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார்,’ என்கிற போதனை, முழு கிறிஸ்தவ மார்க்கத்திற்குமான, மிகவும் தனித்தன்மை வாய்ந்ததும், ஆனால் அதே நேரத்தில், மிகவும் கடினமானதுமான ஒன்றாய் இருப்பினும், அதைப்பற்றி நான் பிரமிப்புடனே எழுதுகிறேன்,” என்று போதகர் ஸ்மித் குறிப்பிடுகிறார்.
தேவனின் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மீன்களால், மனிதத் தன்மையைக்குறித்து மிகக்குறிப்பிட்ட அளவே புரிந்துகொள்ள முடியும். அதைப்போலவே, தேவனின் தன்மையைப் புரிந்துகொள்வதும் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகும்.
நாம் உண்மையிலேயே தேவனை அறிந்துகொள்ளவேண்டுமானால், அவரை நாம், பிதா, குமாரன் மற்றும் ஆவியானவராகவே அனுபவித்தறியவேண்டும். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் முடிவில், இயேசு தம் சீஷர்களிடம், அவர்கள் புறப்பட்டுப் “போய்… சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடு(க்கவேண்டுமென்று)” (மத்தேயு 28:19), கூறுகிறார்.
ஞானஸ்நானங்கொடுத்தல் என்ற வார்த்தையின் நேரடியான பொருள், மூழ்கி எழும்புதல் அல்லது நனைத்தல் என்பதாகும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பதே, பிதாவுக்குள் நனைந்தும், குமாரனுக்குள் மூழ்கியும் மற்றும் ஆவியானவருக்குள் ஊறியும் இருப்பதைப்பற்றியதுதான். ஒரு விசுவாசியினுடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும், ஊடுருவியிருக்கிறார்கள். குமாரனை விலக்கிவிட்டுப் பிதாவையோ, ஆவியானவரையல்லாமல் குமாரனையோ உங்களால் அறிந்துகொள்ள முடியாது.
ஆகவே, தேவனுடைய தன்மையை நம்மால் முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியாதென்னும் நிலைமையில், அவரை நாம், அவர் இருக்கிறபடியே அறிந்துகொள்ளவேண்டுமானால், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி வெளிப்படுத்தப்பட்டவற்றை, நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
தேவன் தமது தன்மையைப்பற்றி, நமக்கு வெளிப்படுத்தியிருப்பவற்றை, மூன்று அறிக்கைகளில் நாம் சுருக்கமாகத் தொகுத்துக் கூறலாம்.
முதலாவது, தேவன் ஒருவரே. இது, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில், தெளிவாய் இருக்கிறது. தேவன், “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4), என்று சொல்கிறார். “ஒரே கர்த்தரும் . . . எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு” (எபேசியர் 4:5-6). கிறிஸ்தவர்கள், மூன்று தெய்வங்களில் நம்பிக்கைகொள்வதில்லை. தேவன் ஒருவரே.
இரண்டாவது, தேவன் மூன்று நபர்களாய் இருக்கிறார். புதிய ஏற்பாடு முழுவதிலும், பிதா, குமாரன் மற்றும் ஆவியானவரின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்கள் எழுதப்பட்டுள்ளன. பிதாவானவர், குமாரனை அனுப்புகிறார் (கலாத்தியர் 4:4). குமாரனானவர், பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார் (யோவான் 17:1). ஆவியானவர், குமாரனை மகிமைப்படுத்துகிறார் (யோவான் 16:14). மேலும் குமாரனானவர், ஆவியானவரை அனுப்புகிறார் (அப்போஸ்தலர் 2:33). தேவத்துவத்தின் மூன்று நபர்களையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. பிதாவானவர், சிலுவையில் மரிக்கவில்லை. குமாரனானவர், தம்மைத்தாமே இவ்வுலகிற்குள் அனுப்பிக்கொள்ளவில்லை. ஆவியானவர், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழவில்லை. தேவன் ஒருவரே. அவர், மூன்று நபர்களாய் இருக்கிறார்.
மூன்றாவது, ஒவ்வொரு நபரும், புூரணமாய்த் தேவனாயிருக்கிறார்கள். பிதாவானவர், தேவனாயிருக்கிறார். குமாரனானவர் தேவனாயிருக்கிறார். ஆவியானவரும் தேவனாயிருக்கிறார். கிறிஸ்து, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30), என்றார். அவர், உலகம் உண்டாகிறதற்கு முன்னே, பிதாவின் மகிமையிலே பங்குபெற்றார் (17:5). இயேசு, பிதவானவரிடத்தில் திரும்பிச் சென்றபோதும், அவருடைய பிரசன்னம் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக, அவரது சீஷர்களுடன் இருந்தது (14:16-18). ஆவியானவர் அவர்களுடன் இருந்திருந்தால், கிறிஸ்துவும் அவர்களுடன் இருந்தார். அவ்வாறே, கிறிஸ்து அவர்களுடன் இருந்திருந்தால், பிதாவானவரும் அவர்களுடனே இருந்தார் (14:23).
பிதாவானவர், தேவனாயிருக்கிறார். குமாரனானவர் தேவனாயிருக்கிறார். மற்றும் ஆவியானவரும் தேவனாயிருக்கிறார். ஆனால், மூன்று தெய்வங்களில்லை. ஒரே நித்திய தேவனாகவே இருக்கிறார். அவர், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவராயிருக்கிறார்.
தேவனின் தன்மையை விவரிக்க, மக்கள் பல நூற்றாண்டுகள் காலமாகவே, உதாரணங்களைப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். ஆனால், தேவனின் தன்மையை உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்படி, உதாரணத்துக்குரிய ஒன்று இந்த உலகில் இருந்திருந்தால், நிச்சயமாகத் தேவன் அதை, வேதாகமத்தில் இடம்பெறச் செய்திருப்பார்.
பொதுவாகத் திரித்துவத்தைக் குறித்த உதாரணங்கள், சத்தியத்தின் ஒரு பகுதியைக் காண, நமக்கு உதவுகின்றன. ஆனால் அதே நேரத்தில், அதன் வேறொரு பகுதியைத் சிதைத்து அல்லது மறைத்துவிடுகின்றன. சிலர், ஒரே நபர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடிப்பதைப் போன்றது, என்கிற உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒருவர், ஒரு கணவராகவும், ஒரு தகப்பனாகவும் மற்றும் ஒரு போதகராகவும் இருக்கலாம். ஆனால், ஒரே நபர் இந்த மூன்று பாத்திரங்களையும் நிறைவேற்றுவதால், இந்த உதாரணம் போதுமானதாக இல்லை. தேவன், மூன்று நபர்களாய் இருக்கிறார். பிதாவானவர், குமாரனானவர் அல்ல. குமாரனானவரும், ஆவியானவர் அல்ல.
ஒருமுறை போதகர் ஸ்மித், ஸ்காட்லாந்திலுள்ள ஒரு மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, ஒரு மூடுபனி மேகம் இறங்கிவந்து, கீழே இருந்த பள்ளத்தாக்கில் இருந்த சிறு பட்டணத்தின் மீது தங்கியது. அவரால் அந்தப் பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அதைச் சுற்றியிருந்த அனைத்தையும் பார்க்க முடிந்தது.
அந்தக் காட்சி, தேவனின் தன்மையைப் பற்றி நினைக்கும்போது அவருக்கு உதவியாக இருப்பதாகப் போதகர் ஸ்மித் குறிப்பிடுகிறார். திரித்துவத்தின் சத்தியமானது, மூடுபனியில் மூடப்பட்டுள்ளது. ஒரே தேவன், எப்படி மூன்று ஆள்தத்துவங்களாக இருக்க முடியும் என்பதை, நம்மால் விளக்க முடியாது. ஆனால், சத்தியத்தின் எல்லைக்கு அப்பால் இருப்பது என்ன என்பதை, நம்மால் தெளிவாக அடையாளங்காண முடியும். எடுத்துக்காட்டாக, தேவனைவிடக் கிறிஸ்து சற்றுக் குறைவானவர் என்றோ, பல தெய்வங்கள் இருக்கிறார்கள் என்றோ, யாராவது சொன்னால், இது சத்தியத்திற்குப் புறம்பானதாய் இருக்கிறது என்பதை, நம்மால் உடனடியாக வேதத்திலிருந்து கண்டறிய முடியும். மூடுபனியானது, சத்தியத்தையே மூடுகிறது. ஆனால், சத்தியத்திற்குப் புறம்பே இருப்பதை, நம்மால் தெளிவாகக் காண முடியும்.
தேவனின் தன்மையானது, ஒரு மறைபொருளாய் இருக்கிறது. ஆனால், அது முரண்பாடான ஒன்று அல்ல. தேவன் ஒருவரே என்றும், மூன்று தெய்வங்கள் இருக்கிறார்கள் என்றும் கிறிஸ்தவர்கள் நம்பியிருந்தால், அது முரண்பாடாய் இருக்கும். அல்லது, மூன்று நபர்கள் இருக்கிறார்கள் என்றும், ஓரே நபர்தான் இருக்கிறார் என்றும் நாம் நம்பியிருந்தால், அது முரண்பாடாய் இருக்கும். ஆனால், மூன்று ஆள்தத்துவங்களாக இருக்கும் ஒரே தேவன் இருக்கிறார் என்று சொல்வது, முரண்பாடானதொன்று அல்ல. அது ஒரு மறைபொருள்.
இந்த மறைபொருளுக்கு நீங்கள் எப்படிப் பதிலளிக்கவேண்டும்?
முதலாவது, அதிலிருந்து விலகி ஓடிவிடாதீர்கள். அப்படி நீங்கள் தேவனைப்பற்றி உங்களுக்குப் புரியாததிலிருந்து விலகிவிட்டால், அவரது மகிமையின் ஆழங்காண முடியாத அற்புத மகத்துவத்தை நீங்கள் இழந்துபோவீர்கள்.
இரண்டாவது, அதை விளக்குவதற்கு முயற்சிக்காதீர்கள். “இப்பொழுது இவையெல்லாம் முழுமையாக, சரியாக எனக்குப் புரிகின்றன. அதை நான் ஏன் முன்பே கண்டுபிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை,” என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை, நீங்கள் ஒருபோதும் அடையவேமாட்டீர்கள். அந்நிலையை அடைய, உங்களைத் தேவன் ஒருபோதும் விடவேமாட்டார்.
மூன்றாவது, உங்களை அது ஆராதனைக்கு நேராய் வழிநடத்தட்டும். தேவனின் மகிமையிலே, நீங்கள் பிரமித்துப்போனவர்களாய், நித்தியம் முழுவதையும் நீங்கள் கழிப்பீர்கள். ஆகவே, அவர் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருப்பவற்றைக் குறித்து எழும் ஆச்சரியத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உங்கள் ஆராதனை தொடங்கட்டும்.
ஆகவே, தமது தன்மையை யாரும் கண்டறிய முடியாத, இப்படிப்பட்டதொரு, மாபெரும் தேவனிடத்திற்கு, நம்மால் எப்படி வர முடியும்? இயேசு, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6), என்று சொன்னார்.
நமது நாட்டின் குடியரசுத் தலைவரை நீங்கள் சந்திக்க விரும்பினால், நீங்கள் முயற்சிக்கக்கூடிய அநேக அணுகுமுறைகள் இருக்கின்றன. அவரது குடும்பத்தில் யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர் உங்களைக் குடியரசுத் தலைவருக்கு அறிமுகப்படுத்த முடியும். அல்லது உங்களுக்குக் குடியரசுத் தலைவரின் தலைமை அலுவலரையோ, அதிகாரிகளையோ தெரிந்திருந்தால், அவர் உங்களுக்கு அனுமதியை வழங்கக்கூடும். நமது நாட்டின் குடியரசுத் தலைவருக்கு அடுத்த ஸ்தானங்களில், அநேக அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பிதாவாகிய தேவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் யார்?
“குமாரன் . . . தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்” (மத்தேயு 11:27). “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). அது, இயேசு ஒருவர் மட்டுமே, நம்மைப் பிதாவினிடத்தில் கொண்டுவருபவர் (யோவான் 14:6), என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பிதாவாகிய தேவனிடத்தில் நமது உறவு எப்படிப்பட்டது என்று நாம் அறிந்துகொள்ள விரும்பினால், இயேசுவுக்கு அது எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதைப் பார்ப்பதன் மூலம், நாம் தொடங்கவேண்டும்.
பிதாவின் அதிகாரத்திற்கு நாம் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கிறதான ஓர் உறவிற்குள், கிறிஸ்து நம்மை அழைக்கிறார். இயேசுவின் வாழ்க்கையில், இதை நீங்கள் தவறவிடவே முடியாது. அவரது முழு வாழ்க்கையும், பிதாவின் நோக்கங்களுடன் ஒத்து அமைந்திருந்தது. அதிலும் அத்தன்மை, வேறு எப்பொழுதைவிடவும், “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத்தேயு 26:39), என்று இயேசு கெத்செமனே தோட்டத்தில் சொன்னபோது, மிகவும் தெளிவாகக் காணப்பட்டது.
தேவனைப் பிதாவாக நாம் அறிந்திருப்போமானால், விலைக்கிரயத்தைப் பற்றிப் பொருட்படுத்தாமல், அவரது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க ஆயத்தமாய் இருக்கிறோமா என்பதே முதல் கேள்வி. கிறிஸ்தவ வாழ்க்கையானது, “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று சொல்லுகிற நிலைக்கு நீங்கள் வரும்போதுதான் தொடங்குகிறது. பிதாவின் அன்பை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், அவரது அதிகாரத்திற்கு நீங்கள் கீழ்ப்பட்டிருக்கவேண்டும்.
இயேசு நம்மை அழைக்கிறதான இந்த உறவு, பிதாவானவர் தமது சொந்தக் குமாரனுக்காகக் கொண்டிருக்கும் அதேவிதமான அன்பை நாம் அனுபவித்து மகிழும் உறவுமாகும்: “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” (யோவான் 15:9் மேலும் 17:26-ஐக் காண்க). தேவ அன்பின் கொள்ளளவு என்ன? தேவன், தாம் இருக்கிறதில் நித்தியமானவராகவும், தமது வல்லமையில் அளவில்லாதவராகவும் மற்றும் தமது ஞானத்தில் முடிவில்லாதவராகவும் இருக்கிறார். அவரது அன்பு, இந்தப் பூமியில் நாம் அளவிடக்கூடிய எதைவிடவும் அளவு கடந்ததாகவும், மற்றும் பரலோகத்தில் தேவதூதர்கள் அளவிடக்கூடிய எதைவிடவும் அதிகமானதாகவும் இருக்கிறது.
பரலோகத்தில், தேவ அன்பு நம் மீது அதன் முழு அளவில் வெளிப்படும்போது நாம், ஆராதனையிலும், ஆச்சரியத்திலும், அன்பிலும் மெய்ம்மறந்து போயிருப்போம். மேலும், அவ்விதமாகவே நாம் இப்பொழுது அன்புகூரப்படுகிறோம் என்று நம்மை அறியப்பண்ணுவது, பரிசுத்த ஆவியானவரின் விசேஷித்த கிரியையாகும் (ரோமர் 5:5).
பிதாவானவரின் அன்பில் பங்குள்ளவர்களாய் இருப்போர், அவரது மகிமையிலும் பங்குள்ளவர்களாய் இருப்பார்கள்: “நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” (யோவான் 17:22). பிதாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பது, அதிக விலைக்கிரயம்போல் தோன்றக்கூடிய நேரங்களும் வரும். ஆனால் இவை, “இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று” (ரோமர் 8:18), பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்.
இயேசுவைப் பொறுத்தவரையில், தேவனைத் தமது பிதா என்று அறிந்திருப்பது, பிதாவானவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பதும், அவரது அன்பை அனுபவிப்பதும் மற்றும் அவரது மகிமையில் பங்குகொள்வதும் ஆகும். இயேசு, தம் வழியாகப் பிதாவினிடத்தில் வருமாறு நம்மை அழைக்கும்போது, அதே விதமான உறவிற்குள்ளாகவே நம்மை அவர் அழைக்கிறார்.
தேவன் ஒருவரே. அவர் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். இது எப்படி இருக்க முடியும் என்பது ஒரு மறைபொருள். ஆனால், நமது புரிந்துகொள்ளுதலின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அளவில், மாபெரும் தேவனாய் அவர் இருக்கிறார் என்பதற்காக நாம் ஆச்சரியப்படக்கூடாது. தேவனை நமது பிதாவாக அறிந்துகொள்வது நமக்கு இயல்பான காரியம் அல்ல. அதனை அறிந்துகொள்ள, நாம் அவருடன் ஓர் உறவிற்குள்ளாக வரவேண்டியது அவசியமாயிருக்கிறது. இதற்காகத்தான் இயேசு கிறிஸ்து, இவ்வுலகிற்குள் வந்திருக்கிறார். அவர், பிதாவை அறியப்பண்ணவும், நம்மைப் பிதாவினிடத்தில் கொண்டுசேர்க்கவும், பிதாவின் அருகாமையிலிருந்து வந்தார்.
1. தேவனின் தன்மையைப்பற்றி, வேதாகமத்தில் நாம் காணும் மூன்று ஆதாரக் குறிப்புக்கள் யாவை? இவற்றுள், உங்களுக்கு மிகவும் பரிச்சயமானது எது? மிகவும் பரிச்சயம் இல்லாதது எது?
2. திரித்துவத்தைக் குறித்த உதாரணங்களைப் பயன்படுத்துவதால் விளையும் நன்மை (மற்றும் அதன் எதிர்விளைவு) என்ன?
3. முரண்பாடு மற்றும் மறைபொருள் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடு என்ன? அதிலிருந்து விலகி ஓடிவிடாதீர்கள், அதை விளக்குவதற்கு முயற்சிக்காதீர்கள், மற்றும் உங்களை அது ஆராதனைக்கு நேராய் வழிநடத்தட்டும் என்பனவாகிய, மறைபொருளுக்குப் பதிலளிக்கப் பரிந்துரைக்கப்படும் இந்த மூன்றில், நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முயற்சித்தது எது? ஏன்?
4. பிதாவாகிய தேவனிடத்திற்குக் கிட்டிச் சேர்வதை, ஒருவர் எப்படி அடைய முடியும்?
5. பிதாவாகிய தேவனுடன் இயேசுவுக்கு இருக்கும் உறவைப் பற்றி, உங்களை மிகவும் அதிகமாகக் கவர்ந்தது எது? மிகக் குறைவாகக் கவர்ந்தது எது? ஏன்?