2 இராஜாக்கள் 17:6-28
அப்போஸ்தலர் 1:1-11
1. தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,
2. அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.
3. அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
5. ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
6. அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
7. அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
9. இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
10. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:
11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் கடந்தபின், இயேசு பரலோகத்திற்குள் ஏறிச் சென்றார். அவர் செல்வதைச் சீஷர்கள் கண்டார்கள். இயேசு தமது சீஷர்களுக்குப் பிரியாவிடையளித்த காட்சியை, லூக்கா எழுதுகிறார்: "பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்(தார்கள்)…" (லூக்கா 24:50-52). எதனால் "மிகுந்த சந்தோஷம்"?
பிரியாவிடையளிப்பது, ஒருபோதும் அவ்வளவு எளிதானதல்ல. கிளாஸ்கோ விமான நிலையத்தில், தங்களது பெற்றோருக்குப் பிரியாவிடை கொடுத்தபோது, எத்தனை சிரமப்பட்டார் என்பதைப் போதகர் ஸ்மித் இவ்வாறு நினைவுகூர்கிறார்: அவர்கள் நன்கு ஆயத்தமாகியிருந்தார்கள். மேலும், அவர்கள் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்்குக் குடிபெயர்வது, சரியானதொரு தீர்மானமென்று, ஒவ்வொருவருமே ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் தங்களது தாய்நாட்டைவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அத்துடன், என்னதான் ஆயத்தமான நிலையிலிருந்தாலும், பிரியாவிடை கொடுக்கவேண்டுமே! அந்தத் தருணம் வரும்போது, அது ஒருபோதும் அத்தனை எளிதானதாய் இருப்பதில்லை.
அவர்களது விமானம் கிளம்பியபோது, அவர்களுடைய குடும்பத்தாரும், நண்பர்களும் ஒரு விருந்து ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்களெனில், அதைப் போதகரும் அவரது மனைவியும் மிகவும் விசித்திரமான ஒன்றாக உணர்ந்திருப்பார்கள். ஆகவே, இயேசு தமது சீஷர்களை விட்டுப் பிரிந்து சென்றபோது, அவரது சீஷர்கள் அடைந்த சந்தோஷத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?
தமது சீஷர்களை விட்டுப் பிரியப்போவதாக, இயேசு கடைசி இராப்போஜனத்தின் தருணத்தில் பேசியபோது, அவர்கள் எவ்வளவு திகிலடைந்திருந்தார்கள் என்பதை நாம் நினைப்போமானால், இப்பொழுது அதே சீஷர்களின் சந்தோஷம் நமக்கு இன்னும் அதிக விசித்திரமானதாக இருக்கிறது. ஒரு காலத்தில் அவர்களுக்குப் பயப்படத்தக்கதாய்த் தோன்றிய ஒன்று, இப்பொழுது கொண்டாட்டத்துக்கான காரணமாய் ஆகிவிடுமளவுக்கு, இடைப்பட்டக் காலத்தில் ஏதோ நிகழ்ந்திருக்கவேண்டும். அது என்ன என்பதைக் கண்டுபிடிப்பதே, இந்தப் பாடத்தில் நமது குறிக்கோள் ஆகும்.
இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, “அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது” (அப்போஸ்தலர் 1:9), என்று லூக்கா எழுதுகிறார். லூக்கா, ஒரு மேகத்தைப்பற்றி நமக்குக் கூறுகையில், அவர் ஏதோ எருசலேமில் நிலவிய வானிலை நிலவரத்தைப் பற்றியதோர் அறிக்கையைக் கொடுக்கவில்லை! தேவஜனங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, தேவன் தம்மைத்தாமே மேகஸ்தம்பத்தில் வெளிப்படுத்தினார். அவ்வாறே சாலொமோனின் காலத்திலும், மேகமானது (அதாவது, கர்த்தருடைய பிரசன்னமானது), ஆலயத்தை நிரப்பிற்று (1 இராஜாக்கள் 8:10-13). சீஷர்கள், மறுரூபமாகுதலில் இயேசுவின் மகிமையைக் கண்டபோது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்,” என்று, ஒரு மேகத்திலிருந்து பேசுகிற தேவனின் சத்தத்தை, அவர்கள் கேட்டார்கள் (மாற்கு 9:7).
இப்பொழுது, லூக்கா நமக்குக் கூறுகிறார்: “. . . அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது” (அப்போஸ்தலர் 1:9). இதைவிடத் தெளிவானதொன்று இருக்க முடியுமா? இயேசு, பிதாவினிடத்திலிருந்து வந்தார். இப்பொழுதோ, தமது பணியை முடித்தவராக அவர், பரலோகத்திலிருக்கிற தமது பிதாவினிடமே திரும்பிச் செல்கிறார்.
ஆதாம், தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனால், அவரது பிள்ளைகள் யாவரும் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்து, பரலோகத்திற்குள் வரவேற்கப்பட்டார். அதனால், அவரது பிள்ளைகள் யாவரும் தேவனோடு ஒப்புரவாக்கப்படுவார்கள். முந்தின ஆதாம், நாம் அனைவரும் வெளியேற வழிவகுத்தார். பிந்தின ஆதாமோ, நாம் அனைவரும் உள்ளே வர வழிநடத்துகிறார். அதன் காரணமாகவே, சீஷர்கள் மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது, அவர் இருக்கவேண்டிய மிகச்சரியான இடத்தில் இருக்கிறார் என்று சீஷர்கள் அறிந்திருந்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனைக்குரியதான ஒரு குற்றச்சாட்டில், நீங்கள் சிறையிலிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்குத் தேவையானவர், மிகச்சிறந்த, நல்லதொரு வழக்கறிஞர்.
நீங்கள் நல்லதொரு வழக்கறிஞரைக் கண்டடைகிறீர்கள். அவரை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, அவர் திறமை வாய்ந்ததொரு வழக்கறிஞர் மட்டுமல்ல, சிறந்த மனதுருக்கமுள்ள மனிதரும்கூட என்று அறிந்துகொள்கிறீர்கள். உங்களது சிறையறைக்கு வருகை தரும் அவரது சந்திப்புகள், உங்களுக்கு மிகுந்த ஆறதலைத் தருகின்றன. உங்களுக்கிடையே ஒரு உறவை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளும்போது, உங்களது வாழ்க்கையின் கஷ்டங்களைப் பற்றி, அவரிடம் பேசலாம் என்று நீங்கள் கண்டுகொள்கிறீர்கள்.இது மிகவும் மதிப்பு வாய்ந்ததுதான். ஆனால் உங்கள் வழக்கறிஞரிடமிருந்து, உங்களுக்கு அதிகம் தேவைப்படுவது, உங்களது சிறையறைக்குள் கிடைக்கும் அவரது ஆறுதல் அல்ல. நீதிமன்ற அறைக்குள் உங்கள் சார்பில் வழக்காடவே அவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார்.
பாவிகளாக, நமது மிகப்பெரிய தேவை, பூமியில் ஆறுதல் பெறுவதல்ல. மாறாக, பரலோகத்தில் ஆதரிக்கப்படுவதேயாகும். நமது வழக்கிற்காக வாதாட, நமக்கொரு வழக்கறிஞர் தேவை. எனவே, “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1).
பரலோகத்தின் நீதிமன்ற அறையில் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.1 உங்களைக் குற்றஞ்சாட்டுகிறவனான சாத்தான், உங்களுக்கெதிராக முன்வைக்க, ஒரு வழக்கை வைத்திருக்கிறான். நியாயாதிபதியாகத் தேவன் தமது நியாயாசனத்தில் அமரும்போது, எழும்பி நிற்கின்ற தேவதூதர்களால், நீதிமன்ற அறை நிறைந்துள்ளது. உங்களைக் குற்றஞ்சாட்டுபவன், தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு, தனது வழக்கை முன்வைக்கும்படியாக, கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறான். வழக்கின் சாராம்சம், நீங்கள் பாவம் செய்து குற்றத்துக்குள்ளானவர்் ஆகவே, நீங்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதாகும்.
நீங்கள் பாவத்தில் பிறந்தவர் என்றும், உங்களது சுபாவம் கறைப்பட்டது என்றும் குறிப்பிடுவதுடன் அவன் தொடங்குகிறான். பின்பு அவன், நீங்கள் உங்களது வாலிப நாட்களில் செய்த குறிப்பிட்ட பாவங்களைக் குறித்து, உங்களைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறான். அடுத்ததாக அவன், நீங்கள் பயப்பட்டதும், நிர்விசாரத்தோடிருந்ததும், பெருமையோடிருந்ததும், அற்பத்தனமாயிருந்ததும், மற்றும் பேராசைகொண்டிருந்ததுமான தருணங்களை அடையாளம் கண்டுகொண்டு, உங்கள் வாழ்க்கைக் கதையையே தொடர்ந்து வாசிக்கிறான். கவனித்துக்கொண்டே வரும் நீங்களோ, அவமானத்தால் திணறிப்போனவராய், நடுநடுங்கிப்போய் நிற்கிறீர்கள்.
இறுதியாக, என்னதான் நீங்கள் உங்களைக் கிறிஸ்துவுக்குள் ஒரு விசுவாசியாகப் பகிரங்கமாக அறிவித்துக்கொண்டபோதிலும், அடிக்கடி உங்கள் விசுவாசம் பலவீனப்பட்டது என்பதையும், உங்களுக்கு அநேகச் சந்தேகங்கள் தோன்றின என்பதையும் சுட்டிக்காட்டி, அந்தக் குற்றஞ்சாட்டுபவன் தனது வாக்குவாதத்தை நிறைவுக்குக் கொண்டுவருகிறான். அவன் முன்வைக்கும் வாதம், மிகவும் வலுவாக உள்ளது. நீங்களும், தண்டிக்கப்படுவீர்கள் என்று பயப்படுகிறீர்கள்.
அதன்பின்பு, இயேசு முன்னால் வருகிறார். அவர் தமது வக்காலத்தைக் கையில் எடுத்து, உங்களுக்கு ஆதரவாக வாதிடத் தொடங்குகிறார். அவர், “என் கட்சிக்காரர், குற்றச்சாட்டுத் தரப்பினால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார். நாங்கள் எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்த்து வாதிடவில்லை. அவற்றை வலுவிழக்கச் செய்யும் யாதொரு சூழ்நிலையையும் நாங்கள் உரிமை கோரவுமில்லை. குற்றஞ்சாட்டப்பட்டபடியே, எனது கட்சிக்காரர் குற்றவாளிதான்,” என்கிறார். ஆனால், தமது ஆணித்தழும்புள்ள கரங்களை உயர்த்தியவராக அவர், “நான் எனது சொந்த இரத்தத்தினால் சம்பாதித்த, ஒரு முழுமையான மன்னிப்பு, இதோ, என்னிடத்திலுள்ளது,” என்று சொல்கிறார்.
குற்றஞ்சாட்டுபவனிடத்தில், இதற்கு யாதொரு பதிலும் இல்லை. உங்களுக்கெதிரான அவனுடைய வழக்கு முழுவதும் ஒன்றுமில்லாமல்போனது மட்டுமின்றி, அவன் நீதிமன்றத்திலிருந்தே தள்ளப்படுகிறான். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்திருக்கிறார் என்பதே நமது பாதுகாப்பு ஆகும். நம் பாவங்கள், ஏற்கெனவே சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டன. மேலும், ஒரு குற்றச்சாட்டு ஒரு முறை கையாளப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதென்றால், அது மீண்டும் தாக்கல் செய்யப்பட முடியாது. “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோமர் 8:34).
அன்புக்குரிய ஒருவரை இழந்திருக்கும் யாரொருவரும், அவரைப் பற்றிய இறுதி நேர உணர்வுப் பதிவுகள், சக்திவாய்ந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்திருக்கிறார்கள். மக்களை நாம், அவர்களைக் கடைசியாகப் பார்த்த விதத்திலேயே ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். இயேசுவை, அவரது கரங்களை உயர்த்தித் தங்களை ஆசீர்வதித்தவராகவே, சீஷர்கள் கடைசியாகப் பார்த்தனர்: “அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” (லூக்கா 24:51).
பரமேறுதலானது, செய்து முடிக்கப்பட்ட இயேசுவின் பணி மற்றும் தொடர்ந்து செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் அவரது பணி ஆகிய இவ்விரண்டையும் குறித்தே நம்மிடம் பேசுகிறது. பாவத்துக்காகத் தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்ததான பணியை, அவர் நிறைவேற்றி முடித்திருக்கிறார். இனி ஒப்புக்கொடுப்பதற்கு வேறொரு பலியோ, செலுத்தப்படுவதற்கு ஒரு பாவநிவிர்த்தியோ இல்லை. தேவனுடைய கோபாக்கினியைச் சாந்தப்படுத்தி, அவரது ஜனங்களுக்கு மன்னிப்பைக் கொடுப்பதற்கு, இனி வேறு எதுவுமே செய்யப்படவேண்டிய தேவையில்லை. அந்தப் பணி முழுமையடைந்துவிட்டது. அது முடிந்தது!
ஆனால், தொடர்ந்து செய்யவேண்டியதொரு பணியும் இயேசுவுக்கு இருக்கிறது. அவர் பரத்திற்கு ஏறிச் செல்கையில் என்ன செய்துகொண்டிருந்தாரோ, அதேபோன்று, பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறவராக, தம் ஜனங்களின் மீது தமது ஆசீர்வாதத்தைப் பொழிந்துகொண்டிருக்கிறார். நமக்காக “வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவர்” (எபிரெயர் 7:25). இந்தப் பணி, அவர் மீண்டும் வரும்வரை தொடர்ந்துகொண்டிருக்கும்.
இயேசு, பரலோகத்திற்கு ஏறிச் சென்றார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக, அவர் இன்னும் தமது சீஷர்களுடன்தான் இருந்தார். இதைத்தான் கிறிஸ்து, “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” (யோவான் 16:7; மற்றும் அப்போஸ்தலர் 1:4-5-ஐயும் காண்க), என்று சொன்னபோது, குறிப்பிட்டார்.
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கிறார். ஆனால் அதே சமயத்தில், பரிசுத்த ஆவியானவரால், தமது விசுவாசிகளின் இருதயங்களிலும் பிரசன்னமாயிருக்கிறார். தேவகுமாரனானவர், பிதாவினிடம் நமக்குப் பிரதிநிதியாக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரோ, பிதாவுக்கும், குமாரனுக்கும் பிரதிநிதியாக, நமக்கு இருக்கிறார். நாம் இயேசுவை ஒருபோதும் கண்டிராதபோதும், அவரது பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மோடிருக்கும் அவரது பிரசன்னம், அவர் தமது சீஷர்களுடன் உலாவி வந்தபோது இருந்ததைப்போன்ற அதே அளவுக்கு, மெய்யானதாய் இருக்கிறது. இயேசு, “புறப்பட்டுப்போய் . . . சீஷராக்(கும்படி)” (மத்தேயு 28:19), நம்மை அழைக்கிறார். நாம், “பூமியின் கடைசிபரியந்தமும் . . . சாட்சிகளாயிரு(க்க)” வேண்டும் (அப்போஸ்தலர் 1:8). அப்படி நாம் அவருடைய நாமத்தினாலே செல்லும்போது, “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20), என்று இயேசு சொல்கிறார்.
இயேசு பரமேறியபோது, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் சீஷர்களிடம், “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” (அப்போஸ்தலர் 1:11), என்றார்கள்.
இயேசு, மேகங்களுக்குள் உயர எடுத்துக்கொள்ளப்பட்டதைப்போலவே, அவர் மீண்டும் வரும்போது, நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்ள்மேல் அவரோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்” (1 தெசலோனிக்கேயர் 4:17). இயேசுவின் பரமேறுதலில் அவருக்கு என்னவெல்லாம் நிகழ்ந்தனவோ, அவை யாவும், அவர் மகிமையில் மீண்டும் வரும்போது, நமக்கு நிகழும்.
கிறிஸ்து மீண்டும் வரப்போகிறதான அந்த மாபெரும் நாளுக்காக, கிறிஸ்தவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே மரித்துப்போனவர்கள் உட்பட, ஒவ்வொரு கிறிஸ்தவரும், அந்த நாளில் பங்கு பெறுவார். ஏற்கெனவே கர்த்தரோடு இருப்பவர்களும், அவர் வரும்போது உயிரோடிருக்கிறவர்களும் என்றென்றைக்கும், சதாகாலங்களிலும் கர்த்தரோடு இருப்பார்கள்.
பரமேறிச் சென்ற உங்களது ஆண்டவர், பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும், அவரது கரங்கள் உங்கள் மீது ஆசீர்வாதமாக உயர்த்தப்பட்டுள்ளன என்றும் அறிந்து, ஒரு விசுவாசியாக, நீங்கள் மாபெரும் மகிழ்ச்சியடையலாம். செய்யும்படி அவர் உங்களை அழைத்திருக்கிற அனைத்தையும் செய்வதற்கான அதிகாரத்தையளிக்கும் அவரது பிரசன்னம், பரிசுத்த ஆவியானவர் மூலமாக, எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறது. மேலும், அவர் மீண்டும் வரும்போது, அவர் தமது நித்தியப் பிரசன்னத்திற்குள் உங்களை எடுத்துக்கொண்டு செல்வார்.
குறிப்பு: 1. சி. ஹெச். ஸ்பர்ஜனின், த கிரேஷியஸ் லிப்ஸ் ஆஃப் ஜீஸஸ்-ஐத் தழுவியது (பிரசங்கம் சூ3081), 1908.
1. நீங்கள் சிரமமானதொரு பிரியாவிடையை எப்பொழுது சந்தித்திருக்கிறீர்கள்? அதை
அத்தனை கடினமாக்கியது எது?
2. இயேசு, சீஷர்களை விட்டுப் பிரிந்து சென்றபோது, அவர்கள் ஏன் சந்தோஷமடைந்தார்கள்?
3. இந்த அறிக்கைக்குப் பதிலளியுங்கள்: “பாவிகளாக, நமது மிகப்பெரிய தேவை, பூமியில் ஆறுதல் பெறுவதல்ல. மாறாக, பரலோகத்தில் ஆதரிக்கப்படுவதேயாகும்.”
4. நீங்கள் பரலோகத்தின் நீதிமன்ற அறையில் நிற்பதைப் பற்றி நினைக்கையில், உங்களது பாதுகாப்பாக இருக்கப்போவது எது?
5. இயேசுவின் பரமேறுதல், எதை முன்னுரைத்துச் சுட்டிக்காட்டுகிறது?