2 இராஜாக்கள் 17:6-28
லூக்கா 24:1-12
1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,
3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.
5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7. மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,
9. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
11. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
12. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
மகதலேனா மரியாளும், யோவன்னாளும் மற்றும் அநேக ஸ்திரீகளும், இயேசுவுடனும், பன்னிரு சீஷருடனும் பிரயாணம்பண்ணினார்கள் (லூக்கா 8:1-3; 24:10). அவர்கள், மூன்றாம் நாளில் நிகழப்போவது என்ன என்பதைப்பற்றி, கிறிஸ்து பேசக் கேட்டிருந்தார்கள் (24:6-7). ஆனால், அவர்கள் கல்லறையை நோக்கிச் சென்றபோது, வழக்கத்துக்கு மாறான எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அன்பினால் நடந்த அவர்களது பயணம், விசுவாசமற்றதாயிருந்தது. அவர்கள் கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்ததான எவ்விதமான நம்பிக்கையும், சிலுவையின் துயரத்தினால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. விசுவாசம் போய்விட்டது. மீதமிருந்ததெல்லாம் அன்பு மட்டுமே.
கல்லறையின் முன்பாக அதை அடைத்திருந்த கல்லானது, புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதை, அந்த ஸ்திரீகள் அங்கு வந்தபோது கண்டார்கள். அவர்கள் உள்ளே பிரவேசித்தபோதோ, அவர்கள் திகைத்துப்போகத்தக்கதாக, கல்லறை வெறுமையாயிருந்தது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற முடிவிற்கு, அந்த ஸ்திரீகள் வரவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர்கள், “கலக்கமடைந்தவர்களாக,” நிகழ்ந்தவற்றைக் குறித்து எதுவும் புரியாதவர்களாகவே கல்லறையைவிட்டுப் போனார்கள் (லூக்கா 24:4).
சரீரத்தைக் காணாமல் மரியாள், “இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது,” என்று சொல்லவுமில்லை. அதற்கு யோவன்னாள், “நீ சரியாய்த்தான் சொல்கிறாய் என நினைக்கிறேன். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது,” என்று பதிலுரைக்கவும் இல்லை. அந்த நினைவுகூட அவர்களுக்குத் தோன்றவில்லை.
ஆகவே, இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அவர்கள் எவ்வாறு அறிந்தார்கள்? தேவன் அவர்களுக்குக் கூறினார்.
“அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்1 அவர்கள் அருகே நின்றார்கள். அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்” (24:4-6), என்று கூறினார்கள்.
தேவன் இரண்டு தேவதூதர்களை அழைத்து, “நான் செய்தவைகளை அவர்களிடம் போய்ச் சொல்லுங்கள். இந்த ஸ்திரீகள் என் குமாரனை நேசிக்கிறார்கள். ஆனால், நிகழ்ந்ததைக்குறித்து அவர்கள் எப்பொழுதாகிலும் புரிந்துகொள்ளப்போகிறார்கள் என்பதற்கு, இந்த உலகில் எந்த வழியும் இல்லை. போய், அவர்களிடம் சொல்லுங்கள்,” என்று சொன்னார். கிறிஸ்தவ விசுவாசம், தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதைக் குறித்து, அவர் தரும் விளக்கத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது.
நம் ஆண்டவருடைய தாயாகிய மரியாள், தான் கர்ப்பந்தரித்தபோது என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்று எப்படி அறிந்திருக்கக்கூடும்? தேவன் விளக்கமளித்தார். அதுபோலவேதான், மேய்ப்பர்களுக்கும் நிகழ்ந்தது. முன்னணையில் படுத்திருந்த குழந்தைதான் மனுஷ சரீரத்தில் வந்த தேவன் என்று அவர்கள் அறிந்துகொண்டது எப்படிச் சாத்தியமாயிற்று? தேவன், அவர்களுக்குக் கூறும்படியாகத் தேவதூதர்களை அனுப்பினார்.
அப்படியேதான், இயேசு சிலுவையிலறைப்பட்டபோதும் நிகழ்ந்தது. அநேக மக்கள் அவர் மரிப்பதைப் பார்த்தார்கள். ஆனால், தேவன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? கிறிஸ்து, சிலுவையின்மேல் நமது பாவத்தைச் சுமந்துகொண்டு, தமது ஜீவனைப் பலியாக ஒப்புக்கொடுத்தார் என்று, தேவன் நமக்குக் கூறுகிறார்.
அதேபோல், கல்லறை ஏன் வெறுமையாயிருந்தது என்பதைப் பற்றி, அந்த ஸ்திரீகள் புரிந்துகொள்ளவே முடிந்திருக்காது. ஆனால் என்ன நிகழ்ந்தது என்று, தேவன் அவர்களுக்குக் கூறினார். கிறிஸ்தவ விசுவாசமானது, உணர்வுகளிலோ, தூண்டுதல்களிலோ, தனிப்பட்ட விதமான நுண்ணறிவுக் கூறுகளிலோ சார்ந்திருப்பதல்ல. அது, சம்பவிப்பவைகளைக் குறித்துத் தேவன் தரும் விளக்கங்களாக, நமக்கு வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருப்பவற்றை நம்புவதேயாகும். அவர் உயிர்த்தெழுந்தார்!
வரலாறு முழுவதிலும், மனுவர்க்கத்தின் மீது ஒரு பயங்கரமான ஆளுகையைச் செலுத்திக்கொண்டிருந்த ஒரு கொடுங்கோலனைப்போல, மரணம் இருந்துவந்துள்ளது. அதற்குத் தப்பித்துக்கொள்ளக்கூடியவர் ஒருவரும் இல்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே மற்றும் தாவீது, ஆகிய அனைவருமே தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்தார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையுமே மரணம் பிடித்துவிட்டது. இன்றோ, நாளையோ, மரணம் நம் அனைவரையும் தனக்குள்ளே இழுத்துக்கொள்கிறது. கேள்வி என்னவென்றால், ‘நாம் எப்படி அதைவிட்டு விலகி, வெளியேற முடியும்?’ என்பதுதான்.
போதகர் ஸ்மித்தின் ஆரம்பப் பள்ளி வயதில், அவரது வகுப்புக்கே செல்லப் பிராணியாக ஓர் எலி இருந்தது. வார இறுதி நாட்களில், மாணவர்கள் அந்த எலியை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடவேண்டும். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அந்த எலி, அவரது சிவப்பு நிறமான, பிளாஸ்டிக் இரட்டை அடுக்கு லண்டன் பேருந்தினால் கவர்ந்திழுக்கப்பட்டுவிட்டது. சற்று நேரம் அதைச் சுற்றி மோப்பம் பிடித்துப் பார்த்தபின்பு அந்த எலி, அதற்குள் ஏறிப் போகத் தீர்மானித்தது.
அந்த எலி பேருந்தின் முகப்பை அடையும் வரையிலும், இது மிகப்பெரிய பொழுதுபோக்காயிருந்தது. பிறகுதான் அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்த எலியால் முன்னால் நகர முடியவில்லை. மேலும் அது பின்னால் திரும்பவும் அதற்குப் போதுமான இடமில்லை. அது முற்றிலுமாக மாட்டிக்கொண்டது.
அப்பொழுது, அவரது தந்தையார் சொன்னதை அந்தப் போதகர் நினைவு கூர்கிறார்: “மகனே, நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான். இந்தப் பேருந்தை நாம் உடைத்துவிடவேண்டியிருக்கும்!” அவர் ஒரு கத்தியை எடுத்துப் பேருந்தின் கூரையை வெட்டியெடுத்தார். எலி விடுதலையாகிவிட்டது. அது எவ்வளவு பெரியதொரு நிம்மதியாயிருந்தது என்று, நம்மிடம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதென்று போதகர் கூறுகிறார். ஆனால், அவரது பேருந்து பழையபடி இல்லை. மேற்கூரை வெட்டித் திறக்கப்பட்ட, பளிச்சென்ற, சிவப்பு நிற லண்டன் பேருந்து, உண்மையில் இன்னும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது! சொல்லப்போனால், இது அந்த எலிக்கு இன்னும் அதிக சுவாரஸ்யமுள்ளதாக ஆனது. முதலில் அந்த எலி, உள்ளே செல்ல வழி இருந்தது. ஆனால் வெளியேற வழி இல்லை. இப்பொழுதோ, அதனால் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, கூரை வழியாக வெளியே வர முடியும்!
இயேசு மரித்தபோது அவர், மரணத்தில் ஒரு துவாரத்தை வெட்டி, வழியை உண்டாக்கினார். கிறிஸ்துவின் ஜனங்களுக்கு, மரணம் ஒரு சிறைச்சாலை அல்ல. மாறாக, அது தேவனுடைய சமூகத்திற்குள் நம்மை நேராக நடத்துகிற நடைபாதையாகும்.
அனைத்து மதங்களுமே, மரணத்திற்குப் பின்பும் வாழ்வதைக் குறித்து சில புரிதல்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சரீரம் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவத்துக்கே உரிய தனித்தன்மையாகும். சுவிசேஷம் என்பது, இயேசு உயிரோடிருக்கிறார் என்பது மட்டுமல்ல. மாறாக, இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார் என்பதுதான் (லூக்கா 24:6). இந்த வேறுபாட்டைப் பற்றிச் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்.
மனுஷ சரீரமெடுப்பதற்கு முன்பதாகத் தேவகுமாரனானவர், பரலோகத்தில் உயிரோடிருந்தார். அப்படியெனில், அவர் ஏன் சிலுவையிலறையுண்ட தமது சரீரத்தைக் கல்லறையில் அப்படியே விட்டுவிட்டுப் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை? என்ன இருந்தாலும், அது வெறும் மாம்சமும், எலும்பும்தானே! அதற்காக ஏன் கவலைப்படவேண்டும்?
அப்பொழுதும்கூட, உயிர்த்தெழுதலின் நாளன்று தேவதூதர்கள் தோன்றி, “அவரது சரீரம் இங்கே, இந்தக் கல்லறையில் இருக்கிறது. ஆனாலும், கவலைப்படாதீர்கள். அவரது ஆவி, பரலோகத்தில், பிதாவுடன் இருக்கிறது,” என்று சொல்லியிருக்க முடியும். ஒரு கிறிஸ்தவர் மரிக்கும்போது, அடக்க ஆராதனையில், நாம் தெள்ளத்தெளிவாகச் சொல்வதும் இதைத்தானே, என்ன வந்துவிடப்போகிறது?
சரீரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, உயிர்த்தெழுதல் நமக்குக் கூறுகிறது. ஆத்துமாவும், சரீரமும் கலந்த, அற்புதமானதோர் ஒன்றிணைப்புதான் நீங்கள். இயேசு, உங்களின் ஒரு பகுதியை மட்டும் இரட்சிப்பதற்காக, இந்த உலகிற்குள் வரவில்லை. மாறாக, உங்களை முற்றிலுமாக மீட்பதற்காக வந்தார். உங்களைச் சரீரமும், ஆத்துமாவுமாக, புதிய சிருஷ்டியின் சந்தோஷத்திற்குள் கொண்டுவரவே அவர் வந்தார்.
மரணம், உங்களது ஆத்துமாவை உங்களது சரீரத்திலிருந்து பிரிக்கிறது. அதனால்தான் அது அத்தனை பயங்கரமான எதிரியாயிருக்கிறது. அது, தேவன் ஒன்றாகச் சேர்த்துப் பிணைத்ததை, இரண்டாய்ப் பிரித்துக் கிழிப்பதாகும். ஆகவே, உங்கள் சரீரமும், ஆத்துமாவும் புது வாழ்வின் வல்லமையில் மீண்டும் ஒன்றிணைக்கப்படும்போது மட்டும்தான், அந்த மரணம் வீழ்த்தப்படும்.
உயிர்த்தெழுதலின் சரீரத்தைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய முதலாவது காரியம் என்னவெனில், அது ஒரு சரீரம் என்பதேயாகும்! கிறிஸ்து, சீஷர்களுக்குத் தோன்றியபோது, ஓர் ஆவியைக் காண்கிறதாகத்தான் அவர்கள் முதலில் நினைத்தார்கள் (24:37). ஆனால் இயேசு, அவரது சரீரத்தை நோக்கி அவர்களது கவனத்தை ஈர்த்தார்: “நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே…” (24:39). மாம்சமும், எலும்புகளும்! இது மெய்யாகவே ஒரு சரீரம்!
விடுமுறைக்கு, ஹவாய் செல்வதற்கு நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், பயணத்திற்காகக் கிளம்பவிருக்கும் நேரத்துக்குச் சற்று முன்பாகத்தான், நீங்கள் படிக்கட்டுகளில் விழுந்து, அநேகமாக உங்கள் உடலின் ஒவ்வொரு எலும்பையுமே முறித்துக்கொள்கிறீர்கள். நல்ல கார்ட்டூன்களில் காணப்படுவதுபோல், வாயில் தெர்மோமீட்டருடன், தலை முதல் பாதம் வரை கட்டுப் போடப்பட்டவராய், கடைசியில் நீங்கள் ஒரு மருத்துவமனையில் போய்ச் சேர்கிறீர்கள்.
கணினி நிபுணராயிருக்கும் உங்களது ஒரு நண்பர், முந்தைய பயண ஏற்பாடுகளுக்குப் பதிலாக, நீங்கள் இருக்கும் இடத்திலேயே மாற்று ஏற்பாடாக, உங்களை ஒரு பயணமாகக் கூட்டிச் செல்கிறார். அவரது மடிக்கணினியை உங்களுக்காக ஒழுங்கு செய்து தருகிறார். சும்மா சொல்லக்கூடாது, நிச்சயமாகவே, நீங்கள் ஹானலூலூவின் அற்புதமான காட்சிகளைப் பார்க்கிறீர்கள். “அது மிகவும் எழில் மிகுந்ததாயிருக்கிறது, நான் செல்ல முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஏங்குகிறேன்,” என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
உங்கள் நண்பரோ, “ஆனால், நீங்கள் இருந்த இடத்திலிருந்தே மேற்கொண்ட பிரயாணத்தில், அங்கே சென்றிருந்தீர்களே,” என்று சொல்கிறார்.
அவர் என்னதான் சொன்னாலும், உங்கள் சரீரம் மருத்துவமனையில் சிக்கிக்கொண்டு கிடக்கும் வரையிலும், நீங்கள் ஹவாய்க்குச் செல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்கள் நினைவுகளிலோ, இணையதளம் வழியாகவோ அங்கே செல்வது என்பது நிஜத்தில் அங்குச் செல்வதாகிவிடாது.
தமது ஜனங்களுக்குத் தேவன் வாக்குப்பண்ணும் வாழ்வானது, போலியானதொரு பயணம் போன்றதல்ல. அது ஓர் ஆவிக்குரிய அனுபவம் அல்லது நினைவு ரீதியானதொரு விளையாட்டு அல்ல. உங்களை முழுவதுமாய் இரட்சிக்கவும், தமது சமூகத்திற்குள் சரீரமும், ஆத்துமாவுமாக உங்களைக் கொண்டுவரவும் தேவன், தமது குமாரனை அனுப்பினார். நற்செய்தி என்னவெனில், கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். மேலும், சரீரத்தின் உயிர்த்தெழுதல் என்பது, ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் முன்னால் காத்திருக்கும் மகிமையான எதிர்காலமாகும்.
இயேசுவின் சரீரம் உயர்த்தப்பட்டபோது, அவரது சரீரமும் மாற்றத்துக்குள்ளானது. அதன்பின்பு ஒருபோதும் அவரது சரீரம், முதுமைக்கோ, மரணத்துக்கோ கீழ்ப்பட்டிருக்கவில்லை. அவரது மாம்சம், மறுரூபமடைந்து, நித்தியத்திற்கு ஏற்றதாய் மாறிவிட்டது. அதன் காரணமாகவே, கிறிஸ்தவர்கள், பரலோகத்தை ஆவலாய் எதிர்பார்க்க முடிகிறது.
உயிர்த்தெழுதலின் சரீரத்தைக் குறித்து, வேதாகமம் நமக்கு நான்கு விளக்கங்களைத் தருகிறது.
அழிவுள்ளதாய் விதைக்கப்படும்; அழிவில்லாததாய் எழுந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:42) லாசரு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். ஆனால், அவர் எப்படிக் கல்லறைக்குள் சென்றாரோ, அதேபோலவே அவர் அந்தக் கல்லறையைவிட்டு வெளியே வந்தார். அவர் அதைத் தொடர்ந்து முதுமையடைந்தார். பாருங்கள், ஒரு கட்டத்தில் அந்தப் பரிதாபத்துக்குரிய மனிதர், மீண்டும் மரிக்கிறதான, துன்பகரமான காரியத்தினூடாக, முற்றிலுமாகக் கடந்து செல்லவேண்டியிருந்தது! ஆனால் இயேசுவோ, அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே உயிர்த்தெழுந்தார் (எபிரெயர் 7:17). உங்களது உயிர்த்தெழுதலின் சரீரமும், அவருடையதைப்போலவே, ஒருபோதும் மரிக்காத சரீரமாயிருக்கும். உங்களது உயிர்த்தெழுந்த சரீரம், ஒருபோதும் முதுமையடையாது. அது ஒருபோதும் வியாதிப்படாது. மேலும், அது ஒருபோதும் அழிந்துபோகாது.
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும்் மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:43) பேதுருவும், யாக்கோபும், யோவானும் இயேசுவோடு மலையின் மீது ஏறிச் சென்றபோது, அவரது எதிர்கால மகிமையின் முற்காட்சியைக் காணப்பெற்றார்கள் (மாற்கு 9:2-8). அவரைச் சூழ்ந்து மின்னித் துலங்கும் ஒரு வெளிச்சமும், ஒரு பிரகாசமும் காணப்பட்டன. அவ்வாறே, உங்களது உயிர்த்தெழுதலின் சரீரத்திலும், நீங்கள் கிறிஸ்துவுக்கேயுரிய மகிமையைப் பிரதிபலிப்பதால், உங்களைச் சூழ்ந்து, அதே மின்னித் துலங்கும் ஒரு வெளிச்சமும், ஒரு பிரகாசமும், ஒரு மகிமையும் காணப்படும்.
பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்் பலமுள்ளதாய் எழுந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:43) நீங்கள் முன்னெப்போதும் இருந்ததைவிட, உங்களது உயிர்த்தெழுதலின் சரீரத்தில், அதிக ஆற்றலும், அதிக உறுதியும், அதிக வேகமும், மேலான ஒத்திசைவும், மற்றும் சிறந்த திறனும் உடையவராய் இருப்பீர்கள்!
ஜென்மசரீரம் விதைக்கப்படும்; ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:44). ஆவிக்குரிய சரீரம் என்பது, பரிசுத்த ஆவியானவருக்கு முற்றிலும் இணக்கமுள்ளதாய் இருக்கும் ஒன்றாகும். நாம் இனி, “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” (மத்தேயு 26:41), என்று ஒருபோதும் சொல்ல மாட்டோம். நமது மீட்கப்பட்ட ஆவிகளைப்போலவே, நமது உயிர்த்தெழுதலின் சரீரங்களும், தேவனுடைய சித்தத்தைச் செய்ய, மிகுந்த ஆவலுள்ளவையாயிருக்கும்.
புதிய வானம் மற்றும் புதிய பூமியில், நீங்கள் ஆர்வமாய் எதிர்பார்க்கவேண்டியது இதுதான்: நித்திய ஜீவனுக்கேற்ப இருக்கக்கூடிய உங்களது சரீரம், ஒருபோதும் அழிந்துபோகாது. அது, மகிமையும், வல்லமையுமானதொரு சரீரம். பரிசுத்த ஆவியானவருக்கு முற்றிலும் இணக்கமுள்ளதாய் இருக்கும் ஒரு சரீரம்.
உயிர்த்தெழுதலின் சரீரமாகிய பரிசானது, தமது பிள்ளைகள் அனைவரையும் ஒன்றுகூட்டிச் சேர்க்கும் நாள் வரையிலும், தேவன் அதைக் கையிருப்பில் வைத்து வைத்திருக்கும் அளவுக்கு, அத்தனை அற்புதமானது.
மரித்தோராகிய, அன்புக்குரிய கிறிஸ்தவர்கள், இயேசுவினுடைய பிரசன்னத்தின் மகிமையைக் களிகூர்ந்து, முழு உணர்வுடன் அனுபவித்துக்கொண்டு, அவருடன் இருக்கிறார்கள். அது, இவ்வுலகில் அவர்கள் அறிந்துவைத்திருக்கக்கூடிய எதைவிடவும், ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் மேலானது. ஆனால், தேவன் தமது முழுக் குடும்பத்தையும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்போகும் நாளிலே, அவர்களுக்காகவும், நமக்காகவும், ஆயத்தமாக வைத்திருக்கக்கூடிய வேறொரு பரிசும் அவரிடத்தில் இருக்கிறது.
கிறிஸ்து மீண்டும் வரும்போது, நமது அன்புக்குரிய கிறிஸ்தவர்கள் அவருடன் வருவார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:14). பின்பு, “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (4:16). மேலும், அவர்களுடைய ஆத்துமாக்கள், நித்திய ஜீவனுக்கென்று, உயிர்த்தெழுந்த சரீரங்களுடன் மீண்டும் இணைக்கப்படும்.
அதே சமயத்தில், இன்னும் உயிரோடிருக்கிறவர்களாகிய விசுவாசிகளும், “கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு”விடுவார்கள் (4:17). அதே மறுரூபமாகுதலை நாமும் அனுபவிப்போம். அதில் நமது சரீரங்கள், நித்திய ஜீவனுக்கேற்றதாய்க் காணப்படும்.
மூன்றாம் நாளிலே, கல்லறை வெறுமையாயிருந்தது. இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். தேவன் அவ்வாறு சொன்னதினிமித்தம், நாம் இதை அறிந்திருக்கிறோம். கிறிஸ்து, மகிமையில் மீண்டும் வந்து, தமது ஜனங்கள் அனைவரையும் ஒன்றுகூட்டிச் சேர்க்கும்போது, நமக்கும் உயிர்த்தெழுதலின் சரீரங்கள் கொடுக்கப்படும். தேவன், உங்களின் ஒரு பகுதியை மட்டுமல்ல, மாறாக, உங்களையே முழுவதுமாக மீட்பார். அதை உங்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்ளும்போது, உங்களுக்கு முன்னாலிருக்கும், சந்தோஷங்களைக் குறித்த, மிக மேன்மையான எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கும்.
குறிப்பு: 1. மத்தேயு, அவர்கள் தூதர்களென்று நமக்குச் சொல்கிறார் (மத்தேயு 28:5). லூக்கா, அவர்கள் எப்படிக் காணப்பட்டார்கள் என்று நமக்குச் சொல்கிறார்.
1. நீங்கள் இன்னும் இயேசுவை நேசித்தாலும், அவரில் விசுவாசம்கொள்வதை உங்களுக்குக் கடினமானதாக ஆக்கிய, ஏதேனும் ஒரு தனிப்பட்ட வகையிலான துயரத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா?
2. இந்த வரையறைக்குப் பதிலளியுங்கள்: “கிறிஸ்தவ விசுவாசம், தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதைக்குறித்து, அவர் தரும் விளக்கத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது.”
3. இயேசு, தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில், நிறைவேற்றியிருப்பது என்ன என்பதை, லண்டன் இரட்டை அடுக்குப் பேருந்தின் கதை, எப்படி விவரிக்கிறது? உங்களது சொந்த வார்த்தைகளில் பதில் சொல்லுங்கள்.
4. இயேசுவின் சரீரம், மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டது என்பதோ, எழுப்பப்படவில்லை என்பதோ என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
5. உயிர்த்தெழுதலின் சரீரத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, தனிச்சிறப்பு வாய்ந்ததாக உங்களுக்குத் தோன்றுவது என்ன?