2 இராஜாக்கள் 17:6-28
மாற்கு 4:35 – 5:20
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
1. பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
2. அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
3. அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.
4. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.
5. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6. அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு:
7. இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
8. ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.
9. அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
10. தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
11. அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
12. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
14. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
15. இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
16. பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள்.
17. அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
18. அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
19. இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
20. அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இயேசு சோதிக்கப்பட்டபின், அவர் கலிலேயாவிலே வந்து, தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: "காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று் மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்" (மாற்கு 1:15), என்று மாற்கு நமக்குக் கூறுகிறார். ஒரு ராஜ்யம் என்றால், அங்கே ஒரு ராஜா இருக்கிறார் என்று பொருள். மேலும், இந்த ராஜா வந்திருக்கிறார் என்பதே, இங்கு நற்செய்தி ஆகும். இந்தப் பாடத்தில் நாம், இயேசுவை ஏக சக்கராதிபதியாக வெளிப்படுத்திக் காண்பிக்கும் நான்கு கதைகளைப் பார்த்து, இது ஏன் இன்று நமக்கு நற்செய்தியாக இருக்கிறது என்றும் காண்போம்.
போதகர் ஸ்மித் ஐந்து வயதுச் சிறுவனாயிருந்தபோது, அவரது தந்தை அவரை, எடின்பர்க்குக்கு வெளியிலிருந்ததொரு பழைய மோட்டார் வாகனக் கிடங்கிற்கு அழைத்துச் சென்றார். அந்த இடம் முழுவதும், பழைய கார்கள் மற்றும் டிரக்குகளால் நிரம்பியிருந்தது. அத்துடன், நல்ல கற்பனை வளம் நிறைந்த ஒரு குழந்தை விளையாடுவதற்கேற்ற, அற்புதமானதொரு இடமாகவும் அது இருந்தது.
அவரது தந்தை, அவர்களது காருக்குத் தேவைப்படும் உதிரிப் பாகங்களைப் பெறுவதற்காக, அங்குச் செல்வது வழக்கம். அதன் அமைப்பு இதுதான்: அங்கிருக்கும் கார்களிலிருந்து, உங்களுக்குத் தேவைப்படும் பாகங்களைக் கழற்றி எடுத்துக்கொண்டு, பின்பு அவற்றுக்கான கட்டணத்தை, அவ்விடத்தின் நுழைவு வாயிலில், நீங்கள் திரும்பும்போது செலுத்திவிடலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால், சிலர் தங்களுக்குத் தேவையான பாகங்களைக் கழற்றி, சுற்றுச் சுவர் மதிலுக்கப்பால் எறிந்துவிட்டு, நுழைவு வாயிலைக் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே கடந்து சென்று, அதன்பின்பு மதிலுக்கு வெளியேயுள்ள திறந்தவெளியிலிருந்து, அவர்கள் தூக்கியெறிந்த பாகங்களைப் பொறுக்கியெடுத்துக்கொண்டு போய்விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, அவ்விடத்தின் உரிமையாளர்கள், சுற்றுச் சுவர் மதிலை ஒட்டிய உள்பகுதியில், “நுழையத் தடை” செய்யப்பட்ட ஒரு பகுதியை உருவாக்கி, காவல் நாய்களை உள்ளே கொண்டுவந்து, கம்பங்களில் கட்டிவிட்டார்கள். நீங்கள் அந்த மதிற்சுவரை நெருங்கிச் செல்லாதவரையில், நீங்கள் மிகவும் பாதுகாப்பில் இருக்கிறீர்கள்.
ஒரு நாள் போதகர் ஸ்மித்தின் தந்தையார், பழுதாய்ப் போனதொரு காரில் வேலையாயிருந்தபோது, சிறுவன் ஸ்மித், ஒரு டிரக்கைக் கண்டு, அதன்மேல் ஏறி, வண்டியின் உள்ளே சென்றுவிட்டார். டிரக் ஓட்டுகிறதான ஒரு கற்பனை உலகில் அவர் தன்னை மறந்துபோயிருந்தபோது, திடீரென்று அங்கிருந்த நாய்களில் ஒன்று, தன் சங்கிலியிலிருந்து அவிழ்க்கப்பட்டதாய், அவரை நோக்கிப் பாய்ச்சலாய் ஓடி வந்தது.
தன் வாழ்வில், ஒருமுறைகூட அவர் அதைவிடப் பயந்துபோனதாக அவருக்குத் தோன்றவில்லை. எந்தவொரு சிறு குழந்தையையும் போலவே, அவர் வீறிட்டு அலறினார். அவரது தந்தையார், விரைந்தோடி வந்து, ஒரு கம்பை எடுத்து, சற்றுப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த நாயைக் கட்டுப்படுத்தி விரட்டினார். அவரது தந்தை, அந்த நாயைக் கட்டுப்படுத்தியதன் மூலம், அவரைக் காப்பாற்றினார். அவரால் அந்த நாயைக் கட்டுப்படுத்த முடியாமற்போயிருந்தால், அவரது மகனை அவரால் காப்பாற்ற முடிந்திருக்காது.
கிறிஸ்து, நம் எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற வல்லவராயிருக்கிறார். ஏனெனில், அந்த எதிரிகளின் மீது அவர் அதிகாரமுள்ளவராயிருக்கிறார். ஆகவே அவர்களை, அவர் கீழ்ப்படுத்துகிறார். அவர் ஆண்டவராயிருப்பதே, அவரை நமது இரட்சகராகச் செயல்படுவதற்குத் தகுதிப்படுத்துகிறது என்பது உண்மை. அதனால்தான் வேதாகமம், “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” (ரோமர் 10:13), என்று சொல்கிறது.
சரி, எந்தெந்த எதிரிகளிடமிருந்து நாம் காப்பாற்றப்படவேண்டிய தேவையுள்ளது?
நமது உலகம், நாம் சில நேரங்களில் குறிப்பிடுவதுபோல, “இயற்கைப் பேரழிவுகளால் நிரம்பியுள்ளது. அவற்றுள், நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புக்கள், புயல்கள், காட்டுத்தீ விபத்துக்கள் மற்றும் வெள்ளங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும் நாம், மனுஷீகத் தீமைகளாலும் துன்பத்துக்குள்ளாகிறோம். பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு, கூட்டுக் கொலைகள், பயங்கரவாதக் கிரியைகள், ஆள் கடத்தல் என்று, அதன் பட்டியல் மிகவும் நீண்டு போய்க்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும், மற்றுமொரு அக்கிரமம் நிகழும்போது, “நாம் அதை எப்படித் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும்?” என்றும், “ஒருபோதும் அது மீண்டும் நிகழாது என்பதை எப்படி நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்?” என்றும் நாம் கேட்கிறோம்.
மருத்துவ அறிவியலின் அனைத்து அதிசய முன்னேற்றங்களுக்காகவும், நாம் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கும்போதிலும், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் இதயநோய் போன்ற இன்னல்களை, இன்னும்கூட நாம் எதிர்கொள்கிறோம். இவை, நமது கடைசிச் சத்துரு என்று வேதாகமம் விவரிக்கும் மரணத்துக்கு நேராக நம்மைக் கொண்டுவந்துவிடுகின்றன. தங்கள் அன்புக்குரிய ஒருவருடன், மரணத்துக்கு அருகாமையில் இருந்திருக்கக்கூடிய எவரும், அது எத்தனை பயங்கரமான சத்துரு என்பதை அறிந்திருக்கிறார்கள்.
இயற்கைப் பேரழிவுகள், மனுஷீகத் தீமைகள், நோய்கள் மற்றும் மரணம் ஆகிய இந்த நான்கு இருளின் பரிமாணங்களே நமது செய்திகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாழ்வின் அனைத்துச் சந்தோஷங்களுக்கிடையிலும், “யார் நம்மை விடுவிப்பார்? இத்தகைய இருளை வருவிக்கும் நாசகாரச் சக்திகளைக் கீழ்ப்படுத்தும் அதிகாரத்தை உடையவர் யார்?” என்று கேட்கிறவர்களாகவே நாம் காணப்படுகிறோம்.
இருளின் அனைத்துப் பரிமாணங்களின் மீதும், இயேசுவின் ஆளுகையை அழகுற விவரிக்கும் நான்கு கதைகளை, மாற்கு பதிவுசெய்கிறார். ஒவ்வொரு கதையும், இயேசுவே ஆண்டவர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்தக் காரணத்தினிமித்தம், அவரை இரட்சகர் என்று நாம் விசுவாசிக்க முடியும்.
ஒரு மாலைப் பொழுதில் சீஷர்கள், படகொன்றில் கலிலேயாக் கடலைக் கடக்கும்போது, அவர்கள் புயலில் அகப்பட்டுக்கொண்ட நிகழ்வில்தான் இவையெல்லாம் தொடங்கின. இயேசு, புயலே இல்லாத வாழ்க்கையை ஒருபோதும் வாக்குப்பண்ணவில்லை: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33). “நாம் அநேக உபத்திரவங்கள் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்” (அப்போஸ்தலர் 14:22).
பிரச்சினை வந்தபோது சீஷர்கள், இயேசு தங்களைக் குறித்து அக்கறைகொள்ளவில்லை என்று கருதிக்கொண்டார்கள்: “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா? என்றார்கள்” (மாற்கு 4:38). ஆனால் இயேசு, “காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று” (4:39).
மனுஷீக ஆவியானது, பஞ்ச பூதங்களின் மீது அதிகாரம் ஏதும் கொண்டிருக்கவில்லை. மழை, சூறாவளி, எரிமலை அல்லது ஆழிப்பேரலைகள் ஆகியவற்றின்மேல், நாம் வல்லமையுடையவர்களல்லர். ஆனால், இயேசு பேசியபோது, அவர் புயற்காற்றை அமரப்பண்ணினார்.
இயேசுவும் அவரது சீஷர்களும் ஏரியின் அக்கரையில் சென்று சேர்ந்தபோது, உடனடியாகவே அவர்கள், மனநிலை தவறிய ஒரு மனிதனை எதிர்கொண்டார்கள். அவன், கல்லறைகளின் மத்தியில் வாழ்ந்து, இரவும் பகலும் கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான் (5:5).
இந்த மனிதன், பொதுமக்களின் முதல் எதிரியாயிருந்தான். அவனை, அப்பகுதியின் அதிகாரிகள் சிறைப்படுத்தியும்கூட அவன், “சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான். அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது” (5:4). ஆகவே, அங்கிருந்த மக்கள் சமுதாயம் முழுவதும் பயத்திலேயே வாழ்ந்துவந்தது. ஒவ்வொரு இரவும், இந்த மனிதன் மலைகளிலே கூச்சலிடுவதை அவர்கள் கேட்டார்கள். அவனைக் கட்டுப்படுத்த, அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
திடீரென்று வெளிப்பட்ட, இத்தகைய வன்முறையின் பின்னே, அசுத்த ஆவிகள் (அல்லது பிசாசுகள்) இருந்தன என்பது, வேதாகமத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது (5:8, 13). முரட்டுத்தனமான அல்லது சுய-அழிவிற்கேதுவான ஒவ்வொரு நபருக்கும் இதே நிலைதான் என்பது கிடையாது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட மனிதனின் நிலை அப்படியிருந்தது. சாத்தானை, “திருடவும் கொல்லவும் அழிக்கவும்” வருகிற ஒரு திருடனாக, இயேசு விவரித்தார் (யோவான் 10:10). எங்கே திருட்டும், கொலையும், அழிவும் மிகுதியாய்ப் பரவிப் பெருகுகிறதோ, அங்கே அவனுடைய செயல்பாடுகள் அதிகத் தெளிவாகக் காணப்படும்.
இயேசு இந்தச் சமுதாயத்தினரிடையே வந்தபோது அவர், அந்த மனிதனைவிட்டுப் புறப்பட்டுப் பன்றிக் கூட்டத்திற்குள் போகுமாறு அசுத்த ஆவிகளுக்குக் கட்டளையிட்டார். அசுத்த ஆவிகள் அவருக்குக் கீழ்ப்படியத்தான் வேண்டியிருந்தது. அவை அந்த மனிதனைவிட்டு வெளியேறியதும், அம்மனிதன் முற்றிலுமாக மாறிவிட்டான். அந்தப் பட்டணத்திலிருந்த மக்கள் இதைக் கேள்விப்பட்டவுடனே, என்ன நிகழ்ந்தது என்று பார்ப்பதற்காக, அவர்கள் வெளியே வந்தார்கள். அங்கே அவர்கள், முன்பு பிசாசுகள் பிடித்திருந்த அந்த மனிதன், “வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக்” கண்டார்கள் (மாற்கு 5:15).
இயேசு, ஏரியின் மறுகரைக்குத் திரும்பி வந்தபோது, மாபெரும் மக்கள் கூட்டம் காத்திருந்தது. அவர்களுக்குள், “பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள” ஒரு பெண்மணி இருந்தார் (5:25). அவர், அநேக வைத்தியர்களிடம் ஆலோசனை பெறுவதற்காகத் தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்துவிட்டார். அவர்களது முயற்சிகளுக்குப் பின்னும், அந்தப் பெண்மணியின் நிலைமை சற்றும் மேம்படவில்லை.
இந்தப் பெண்மணி, தான் இயேசுவிடம் செல்ல முடிந்தால், குணமாக்கப்படுவோம் என்று நம்பினார். அவர் எப்படியோ கூட்டத்தில் முண்டியடித்து, இயேசுவைத் தொட்டபோது, உடனடியாகத் தன் சரீரத்தில் மாற்றத்தை உணர்ந்தார்: “உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று் அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்” (5:29).
ஒவ்வொரு நபருமே, என்றாவது ஒரு நாள், மருத்துவர்களால் இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கக்கூடிய நிலைக்கு வருகிறார்கள். அதேபோன்றதொரு நிலைமையில்தான் இந்தப் பெண்மணியும் இருந்தார். இயேசு, வியாதியின் மீது அதிகாரமுடைய கர்த்தர்.
ஜெப ஆலயத்தலைவராயிருந்த, யவீரு என்னும் பெயருடைய ஒருவர், இயேசுவிடம் வந்து, அவரிடம் ஊக்கமாக வேண்டிக்கொண்டார்: “என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்” (5:23). இயேசு அவருடன் சென்றார். ஆனால், தீர்க்க முடியாத வியாதியுடனிருந்த பெண்மணிக்கு அவர் ஊழியம் செய்ததில், அங்கே சற்றுத் தாமதம் ஏற்பட்டுவிட்டது.
அவர் அந்தப் பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, யவீருவின் வீட்டிலிருந்து சில நபர்கள், அவரது மகள் மரித்துப்போனாள் என்ற துயரச் செய்தியுடன் வந்தார்கள். அவர்கள், “இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர்?” என்றார்கள் (மாற்கு 5:35). அவர்களது சொற்களிலுள்ள குறிப்பைப் பாருங்கள்: அந்தச் சிறுமி உயிருடனிருந்தவரையில், இயேசு அவளைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கைக்குச் சிறிதளவாவது இடமிருந்தது. ஆனால், அவள் இறந்துவிட்ட பின்போ, எல்லா நம்பிக்கையும் போய்விட்டது. ஆனால் இயேசு யவீருவிடம், “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு,” என்று சொன்னார் (5:36).
இயேசு யவீருவின் வீட்டிற்கு வந்தபோது, இறுதிச் சடங்குகளும், அவற்றிற்கான சந்தடியும் ஏற்கெனவே தொடங்கியிருந்தன. அவர் புலம்புகிறவர்களையெல்லாம் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் அந்தச் சிறுமியின் தகப்பனும், தாயும் மட்டுமே எஞ்சியிருந்தனர். இயேசு, சிறுமியின் கையைப் பிடித்து: “‘தலீத்தாகூமி’ என்றார்் அதற்கு, ‘சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்'” (5:41). அங்கிருந்த அனைவரும் முற்றிலுமாக ஆச்சரியப்பட்டுப் பிரமிக்கும்படியாக, அந்தச் “சிறுபெண் எழுந்து நடந்தாள்” (5:42).
அன்புக்குரிய ஒருவரை இழந்திருக்கும் யாருக்குமே, இது மிக அழகானதும், ஆழ்ந்த உணர்வைத் தருவதுமானதொரு கதை வடிவம் ஆகும். யவீருவின் மகள் சுகவீனமாயிருந்தாள். இயேசு வருவதற்குத் தாமதாகிப் போனது. அப்படித் தாமதமாகும்போது, அந்தப் பெண் இறந்துவிட்டாள். ஆனால் இயேசு வந்தபோது, அவள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாள்.
இயேசு, அவரது ராஜ்யம் வரும்போது நாம் அறிந்துகொள்ளப்போகும் முழு ஆசீர்வாதங்களைப் பற்றிய, ஒரு துளியளவு கண்ணோட்டத்தை நமக்குக் காண்பிக்கிறார். இந்த உலகத்தில், மரிப்பதும், தாமதங்களும் இருக்கும். ஆனால், இயேசு வல்லமையிலும், மகிமையிலும் மீண்டும் வரும்போது. உயிர்த்தெழுதல் வரும்.
மனுஷீக இருளின் பரிமாணங்கள் அனைத்தின் மீதும், இயேசு அதிகாரம் உள்ளவராயிருக்கிறார். அவர், பேரழிவுகளையும், பிசாசுகளையும், வியாதிகளையும் மற்றும் மரணத்தையும்கூடக் கீழ்ப்படுத்த வல்லவராயிருக்கிறார். இந்த எதிரிகளின் மீது அதிகாரமுள்ள கர்த்தராயிருப்பதால், அவற்றின் நாசகாரச் சக்தியிலிருந்து நம்மை மீட்க வல்லவராயிருக்கிறார்.
அப்படியெனில், அவர் ஏன் அதைச் செய்வதில்லை?
அதற்கான பதிலை, மாற்கு நமக்குத் தருகிறார். இயேசு, பிசாசு பிடித்திருந்த மனிதனை விடுவித்தபோது, அவ்வூர் ஜனங்கள், “தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்” (5:17). ஒருவேளை அவர்கள், “இந்தச் சமுதாயத்தில் உள்ள மிகப்பெரிய சமூகப் பிரச்சினையை நீர் தீர்த்துவைத்துவிட்டீர். எங்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் இருப்பதால், தயவுசெய்து நீர் இங்கே தங்கிவிடும்! மேலும், இந்தப் பிரச்சினையை உம்மால் தீர்க்கக் கூடுமானால், அவற்றையும் உம்மால் தீர்க்கக் கூடும்,” என்று சொல்லியிருப்பார்கள் என்று, நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள், இயேசுவைப் போகும்படிச் சொன்னார்கள்.
ஆகவே, இயேசு போய்விட்டார்.
நாயைக் கீழ்ப்படுத்த வல்லமையுள்ள ஒருவர், பழைய மோட்டார் வாகனக் கிடங்கிலிருந்து வெளியேறினால், அங்கு மாட்டிக்கொண்ட சிறுவனுக்கு என்ன நேரிடும்?
நாம், கிறிஸ்துவை நிராகரிக்கிற உலகில் வாழ்கிறோம்: “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11).
இயேசுவை நிராகரித்தல், சிலுவைக்கு நேராய் நடத்தியது. அதுதான், நமது உலகம் தேவனை எதிர்ப்பதன் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். மகிமையின் கர்த்தரை நாம் நிராகரித்தோம். நாம் அவரைப் பரிகசித்து, அவர்மேல் துப்பி, அவரைச் சிலுவையில் ஆணிகளால் அறைந்தோம். இயேசுவை நிராகரிக்கிறதோர் உலகமானது, இயற்கைப் பேரழிவுகள், பிசாசுகள், வியாதிகள் மற்றும் மரணம் ஆகிய சாபங்களின் கீழே, தொடர்ந்து வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிற உலகமாய் இருக்கிறது.
ஆனால் வேதாகமக் கதையின் முடிவு, இதுவல்ல. மூன்றாம் நாளில் இயேசு, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அவர் பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது, பிதாவானவர் அவரிடம், “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்” (எபிரெயர் 1:13), என்று சொன்னார்.
இயேசு ஆளுகை செய்துகொண்டிருக்கிறார். ஆனால், அவர் காத்துக்கொண்டும் இருக்கிறார். ஆளுகை செய்தலும், காத்திருத்தலும் ஒன்றோடொன்று முரண்பட்டவைகளல்ல. “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்” (1 கொரிந்தியர் 15:25-26).
ஆகவே, இயற்கைப் பேரழிவுகள், பிசாசுகள், வியாதிகள் மற்றும் மரணம் ஆகிய சாபங்களின்கீழ்த் துயரப்படுகின்ற, ஆபத்தானதோர் உலகில் நாம் தொடர்ந்து வாழ்ந்துவருகிறோம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குச் சொந்தமானவர்கள், அவர் இந்த எதிரிகளையெல்லாம் கீழ்ப்படுத்துகிற நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். நமது ஏகசக்கராதிபதியான கர்த்தரின் ஆசீர்வாதமிக்க ஆளுகையின்கீழ், இயற்கைப் பேரழிவுகளோ, பிசாசுகளோ, வியாதிகளோ, மரணமோ இனி ஒருபோதும் இருக்கப்போவதில்லை.
மக்கள், தாங்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், அவரை ஆண்டவராக ஏற்கவில்லை என்றும் சொல்வதை நான் சில நேரங்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் யூகிப்பது என்னவெனில், இரட்சகர் என்பதை ஆண்டவர் என்பதிலிருந்து எப்படியோ பிரித்துவிட முடியும் என்பதாகும். அதாவது, நாம் மனந்திரும்புதலின்றியே விசுவாசம் கொள்ள முடியும் என்றும், கட்டளைகளின்றியே ஆசீர்வாதங்களைப் பெற முடியும் என்றும், மற்றும் பரிசுத்தத்தை நாடித் தேடாமலேயே பாவ மன்னிப்பைப் பெற முடியும் என்றும் கருதிக்கொள்வதாகும்.
சுவிசேஷத்தை, அடிப்படையிலேயே தவறாகப் புரிந்துகொள்வது என்பது இதுதான். இயேசு வழங்குவதை மட்டும் நாம் பெற்றுக்கொண்டு, அதே நேரத்தில், அவர் கட்டளையிடுவதை நாம் எதிர்ப்பது என்பது முடியாது. கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை எதிர்ப்பதை நாம் விட்டுவிட்டு, அவரது இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளத் தேவன் நம்மை அழைக்கிறார்: “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” (ரோமர் 10:13). கிறிஸ்துவைக் கர்த்தராகக்கொண்டு, உங்களையே அர்ப்பணியுங்கள். அப்பொழுது, அவரே வல்லமையுள்ள இரட்சகர் என்பதைக் கண்டுணர்வீர்கள்.
1. நான்கு எதிரிகளுள் (இயற்கைப் பேரழிவு, பிசாசுகள், வியாதிகள், மரணம்), நீங்கள் இந்தத் தருணத்தில் எதைப் பற்றி மிக அதிகமாகக் கவலைகொண்டிருக்கிறீர்கள்? ஏன்?
2. இந்த எதிரியின் மீது, இயேசு அதிகாரம் உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிவதற்கு, அது எவ்வாறு உதவுகிறது?
3. இயேசு உங்களது இரட்சகராக இருப்பதற்கு, எது அவரைத் தகுதிப்படுத்துகிறது?
4. உங்களது சொந்த வார்த்தைகளில், இயேசு, நமது அனைத்து எதிரிகளையும் ஏன் இப்பொழுது வீழ்த்துவதில்லை என்பதை எப்படிக் கூறுவீர்கள்?
5. “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” (ரோமர் 10:13), என்கிற வாக்குத்தத்தத்திற்கு, நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?