2 இராஜாக்கள் 17:6-28
மல்கியா 6:1-4
1. இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2. ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
4. ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
5. இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
6. நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளுள், கடைசியானவர் மல்கியா. அவர், நெகேமியாவின் காலத்தில், ஒரு சிறுகூட்ட மக்கள் எருசலேமை மீண்டும் கட்டியெழுப்பியபோது, தேவனுடைய வார்த்தையை அறிவித்தார். ஆபிரகாமின் காலத்துக்கு ஆயிரத்தறுநூறு ஆண்டுகள் கடந்தபின்பும், நமது மனுக்குலப் பிரச்சினை மாறவேயில்லை. தேவஜனங்கள், இன்னும் தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்துக்கொண்டிருந்தார்கள். மல்கியாவுக்குப் பிறகு நானூறு ஆண்டுகளாக, வேதாகமக் கதையில் குறிப்பிடத்தக்கதான எதுவுமே நிகழவில்லை.
நாம் பழைய ஏற்பாட்டின் இறுதிப்பகுதிக்கு வரும்போது, ‘இத்தனை ஆண்டுகள் கடந்தபின்பு, தேவனுக்கும் அவரது ஜனங்களுக்குமிடையேயான உறவு, எந்த நிலையில் நிற்கின்றது?’ என்ற கேள்வியைக் கேட்பது தகுந்தது. மல்கியா, இதற்கு ஒரு திருப்திகரமான பதிலை நமக்குத் தரவில்லை.
மல்கியாவின் புத்தகம் முழுவதிலும், தேவனுக்கெதிரான ஒரு வித எதிர்ப்பு நிலவுகிறது.
தேவன், தமது அன்பை உறுதிப்படுத்துவதில் தொடங்குகிறார்: “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 1:2). ஆனாலும் தேவஜனங்கள், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தங்கள் கைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு, “எங்களை எப்படிச் சிநேகித்தீர்?” என்று கேட்கிறார்கள் (1:2).
அதன்பின்பு தேவன், தமது நாமத்தை அசட்டைபண்ணும் ஆசாரியர்களிடம் பேசுகிறார். ஆனால் அவர்களோ, “உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம்?” (1:6), என்கிறார்கள்.
பின்பு தேவன், தசமபாகப் பிரச்சினையை எழுப்புகிறார். “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்” (3:8), என்கிறார். ஆனால் தேவஜனங்களோ, “எதிலே உம்மை வஞ்சித்தோம்?” (3:8), என்கிறார்கள்.
அதன்பின் தேவன், தமது ஜனங்கள் தம்மைக் குறித்துக் கடினமாய்ப் பேசினதினிமித்தம், “நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது” (3:13), என்று அவர்களைக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அவர்களோ, போலியான அப்பாவித்தனத்துடன், “உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம்?” (3:13), என்கிறார்கள்.
இந்த விவாதம், எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லை என்பதே, இந்தப் புத்தகம் முழுவதிலும் ஊடுருவிச் செல்கிறது. தேவன், மனந்திரும்புகிற பிரச்சினையை எழுப்பும்போது, “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (3:7), என்கிற வார்த்தையைக் கொடுக்கிறார். அதைப் பற்றியும், “நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும்?” (3:7), என்கிற, எதிர்ப்புடன்கூடிய பதிலே வருகிறது.
குற்றத்துக்குக் காரணமான பிரச்சினைகள், வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டு, நேர்மையாகக் கையாளப்படும்போது, உறவுகள் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆனால், தம் மக்களுடன் ஒப்புரவாகிறதற்குத் தேவன் தமது கரங்களை நீட்டும்போது, அவர்களோ, பிரச்சினைகள் ஒன்றுமில்லை என்று தெரிவிப்பதிலேயே நின்றனர்.
தேவனிடமிருந்து விலகியதும் அல்லாமல், மக்கள் தாங்களே ஒருவருக்கொருவர் முரண்படுகிற நிலையில், பழைய ஏற்பாடு முடிவடைகிறது. தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும், அழகானதொரு உறவை அனுபவித்தார்கள். அவ்வுறவில், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பானது, அவர்கள் மீது தேவன் வைத்ததான அன்பைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.
அவர்கள் ஒன்றாக, நிம்மதியாக இருந்தார்கள். அவர்கள் ஒருவரிலொருவர் கொண்டிருந்த நம்பிக்கையானது, பூரணமாயிருந்தது. ஆனால், தீமையைப் பற்றிய அறிவு, அவையனைத்தையும் மாற்றிவிட்டது. ஆதாம், தான் செய்த தவறுக்காகத் தன் மனைவி மீது பழி கூறினார். அப்போதுதான் முதன்முறையாக, மனுஷனுக்கும், மனுஷிக்குமிடையே சந்தேகம் உருவாகி வளர்ந்தது. தீமையைப் பற்றிய அறிவு, முதல் திருமணத்தில், பிரிவினையைக் கொண்டுவந்துவிட்டது.
ஒருவரும், தங்கள் திருமண நாளன்று, தங்களது திருமணம், மணமுறிவில் போய் முடியும் என்று கற்பனை செய்வதில்லை. ஆனால் நமது காலத்தைப்போலவே, மல்கியாவின் காலத்திலும், திருமணங்கள் முறிவுக்குள்ளாகிப் பிரிந்தன: “கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்் உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே” (2:14).
தோட்டத்தில் பரிபூரணமான வாழ்வின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்ட, மனுஷன் மற்றும் மனுஷியுடன், பழைய ஏற்பாட்டின் கதை தொடங்கியது. அது, உண்மைத்தன்மையும், அன்பும் நிறைந்ததொரு உறவை, நிலைவரப்படுத்திக்கொள்ள முடியாத மனுஷர்கள் மற்றும் மனுஷிகளுடன் முடிவடைகிறது.
ஒரு திருமண வாழ்வில், உடைந்துபோன நம்பிக்கையுடன் தொடங்கிய பிரிவினையானது, குடும்பங்கள், சமுதாயங்கள் மற்றும் தேசங்கள் எல்லாம் பிளவுபட்டுப்போகக்கூடிய அளவுக்கு, மோதல்கள் நிறைந்ததொரு உலகிற்கு வழிவகுத்துவிட்டது.
ஏதோ, தேவனிடத்திலிருந்து விலகுதல் மற்றும் ஒருவர் மற்றவரிடமிருந்து பிரிந்திருத்தல் ஆகியவை போதாது என்பதுபோல், உலகில் பிறந்த ஒவ்வொரு நபரின் மீதும் ஒரு பயங்கரச் சாபம் இருக்கிறது. தீமையின் மீதான தேவனின் சாபம், மல்கியாவின் புத்தகம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது: “நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்” (2:2). “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்” (3:9).
பழைய ஏற்பாட்டின் கடைசி வசனமானது, ஒரு சாபத்துடன் முடிவடைகிறது: “நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” (4:6).
ஆகவே பழைய ஏற்பாட்டின் முடிவில், தேவனிடத்திலிருந்து விலகியிருத்தல், நாம் ஒருவருக்கொருவர் பிரிந்து மோதிக்கொள்ளுதல், அல்லது நம் அனைவர் மீதும் இருக்கும் பயங்கரமான சாபம் ஆகிய நமது பிரச்சினைகளைக் கையாள்வதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பாவமாகிய பிரச்சினை, பழைய ஏற்பாட்டில் வியாபித்திருக்கிறது. ஆனால், வேதாகமக் கதையின் மையமானது, ஒரு வாக்குத்தத்தத்துடன் துடிக்கிறது. பாவம் உலகில் பிரவேசித்தபோது, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரான ஒருவர், தீயவனையும், அவனது கிரியைகளையும் அழிப்பார் என்று, தேவன் வாக்குப்பண்ணினார் (ஆதியாகமம் 3:15).
தேவன் தம் ஜனங்களிடத்தில், பிரச்சினையைப் பற்றி மட்டும் அல்லாமல், அந்த வாக்குத்தத்தத்தைப் பற்றியும் நினைப்பூட்டுவதற்கு, மல்கியாவை அனுப்பினார்: “… நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” (மல்கியா 4:2).
தேவஜனங்களின் காயங்கள் அனைத்தும் குணமாக்கப்படும் அந்த நாள் வரும், அப்பொழுது அவர்கள், கன்றுகள் கட்டவிழ்த்துவிடப்படும்போது அவை அனுபவிக்கும் விடுதலையை, அனுபவிப்பார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டின் முடிவில், நாம் இன்னும் இந்த வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுவதற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்.
வேதாகமமானது, ஒரு நாடகத்தைப்போலத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்குமானால், இரண்டு காட்சிகளைக்கொண்ட ஒரு நாடகத்தைப்போல, இரு பகுதிகளாகப் பிரியும். பழைய ஏற்பாட்டு நூல்தான் காட்சி 1. அது முடிவுக்கு வருகிற இப்பொழுது, காட்சி 2-ல் என்ன நடக்கிறது என்று பார்க்கத் திரும்பி வருமுன், ஓர் இடைவேளைக்கு நாம் ஆயத்தமாகிறோம்.
நாம் அரங்கத்தின் வெளிநடையில் பரவலாக நின்று, முதல் காட்சியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்க முற்படும்போது, மக்கள், தாங்கள் பார்த்தவற்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பருமனான, பெரிய உருவம்கொண்ட ஒரு மனிதர், தனது புகையிலைக் குழாயைப் பற்றவைத்தபடி, “அதில் சில பகுதிகள் சற்றுப் பாரமானவை,” என்கிறார். தனது கையில் மதுக்கோப்பையை ஏந்தியபடி ஒரு பெண்மணி, “அதில் சில பகுதிகள் என்னை, அழவேண்டும்போல உணரச்செய்தன,” என்கிறார். மூன்றாவதாக ஒரு நபர், “இரண்டாம் காட்சி, இதைவிடச் சற்று மகிழ்ச்சிகரமான முடிவைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார். மற்றும் ஒருவர், “ஆம், அப்படித்தான் இருக்கவேண்டும். இம்மட்டும் கடந்துவந்த எல்லாவற்றிலும், வாக்குத்தத்தங்களும், முன்னறிவிப்புகளும் கூறப்பட்டுவந்தன் நன்மையானது ஏதோ நடக்கப்போகிறது” என்கிறார். முற்றிலும் விரக்தியிலிருக்கும் ஒரு மனிதர், “சரிதான், அது எதுவாக இருப்பினும், அது இன்னும் நடக்கவில்லை. முதல் காட்சி முழுவதிலும், அடிப்படைப் பிரச்சினையைக் கையாள்கிற மாதிரியான எதுவுமே நிகழவில்லை,” என்கிறார். அவரது மனைவி இடைமறித்து, “ஒன்றுமே நடக்கவில்லை என்பதன் மூலம், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நமக்கு நியாயப்பிரமாணமும், பலிகளும் கிடைத்தன. ராஜாக்களும், ஆசாரியர்களும் கிடைத்தனர். நாம் தேவாலயத்தில், தேவபிரசன்னத்தின் மேகத்தைக் கண்டோம்…” என்கிறார்.
சட்டென அவரை மடக்கி அவரது விரக்தியடைந்த கணவர், “அதனாலென்ன? முக்கியமான பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஜனங்கள் இன்னும் தேவனிடமிருந்து விலகித்தான் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சக மனிதர்களிடம் மோதல்களோடுதான் இருக்கிறார்கள். அத்துடன், அவர்கள் இன்னும் சாபத்தின் கீழேதான் இருக்கிறார்கள்,” என்கிறார்.
இடைவேளை நேரம் முடிவடைவதற்கான மணி ஒலிக்கிறது. அவர்கள் அனைவரும் இரண்டாம் காட்சியைக் காண்பதற்காக, அரங்கத்துக்குள் தங்கள் இருக்கைகளை நோக்கித் திரண்டு வருகின்றனர்.
பழைய ஏற்பாட்டின் முடிவிற்கு வரும்போது, நீங்கள் அதன் நியாயப்பிரமாணங்கள், ஆசாரியர்கள், மற்றும் பலிகளோடுகூட, “தேவனிடமிருந்து நமது விலகியிருத்தலை முடிவுக்குக் கொண்டுவரவும், நமது இருதயங்களை மாற்றவும் மற்றும் பயங்கரச் சாபத்தை நீக்கவும் யாரால் முடியும்?” என்ற கேள்வியும் உங்களிடத்தில் தேங்கி நிற்கும்.
புதிய ஏற்பாடு, இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது.
இயேசு கிறிஸ்து, நம்மைத் தேவனுடன் ஒப்புரவாக்க இவ்வுலகிற்குள் வந்தார்: “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்…” (1 பேதுரு 3:18).
இயேசு, நம்மை ஒருவரோடொருவர் ஒப்புரவாக்க வந்தார்: “… அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, …” (எபேசியர் 2:14). மேலும் இயேசு, “நமக்காகச் சாபமாகி,” நம்மைச் சாபத்திலிருந்து விடுதலையாக்க வந்தார் (கலாத்தியர் 3:13).
ஆனால் நமது நம்பிக்கை இயேசுவில் மட்டும் காணப்படுமானால், பழைய ஏற்பாடு இருப்பதற்கான பயன்தான் என்ன? சரியான புரிதலுண்டாயிருந்தால், நமக்குத் தேவைப்படுகிற இரட்சகராக, இயேசுவை நாம் அடையாளம் கண்டுகொள்ளவும், விசுவாசத்துடன் அவரை வரவேற்கவும், நம்மைப் பழைய ஏற்பாடு ஆயத்தப்படுத்துகிறது.
பழைய ஏற்பாட்டின் மூலமாக, நம்மிடம் தேவன்,
1. தாம் யாரென்றும், நாம் யாரென்றும்,
2. நமது மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றும்,
3. இயேசு யாரென்றும்,
4. அவர் எதை நிறைவேற்றுவார் என்றும், மற்றும்
5. தம்மை விசுவாசிப்போர்க்கு, அவர் வழங்குவது என்ன என்றும் கூறுகிறார்.
ஆகவே, நாம் பழைய ஏற்பாட்டின் வழியாகப் பயணித்ததிலிருந்து, கற்றுக்கொண்டது என்ன என்று, சற்று மறு ஆய்வு செய்து பார்ப்போம்.
தேவன், சிருஷ்டிகரும், அனைத்திற்கும் சொந்தக்காரராகவும், இருக்கிறார். உங்கள் ஜீவன், அவரது கரங்களிலிருந்து வந்த ஒரு பரிசாகும் (பாடம் 1). நித்திய நித்தியமாய் அவரை அனுபவிக்கவும், ஆராதிக்கவுமே, நீங்கள் சிருஷ்டிக்கப்பட்டீர்கள் (பாடம் 16). உங்களைச் சிருஷ்டித்த தேவன், பரிசுத்தராய் இருக்கிறார் (பாடம் 20). ஒரு சாபத்திற்குக் கீழ்ப்பட்டதொரு உலகத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் (பாடம் 2), தீமையைப் பற்றிய அறிவினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் மற்றும் தேவபிரசன்னத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதுதான் உங்களது மிகப்பெரிய பிரச்சினையாகும்.
தேவனைவிட உங்களை அதிகம் அன்புகூர்வதிலும், பிறரைவிட அதிகமாய் உங்கள் சொந்த நலனில் அக்கறைகொள்வதிலும் உங்களுக்கிருக்கும் நாட்டம், உங்களுக்குள் அதிகமாய் இருந்து, தேவனுடைய நியாயப்பிரமாணங்களை மீறுவதற்கும், அவருக்கெதிராய்ப் பாவம் செய்வதற்கும் உங்களை நடத்துகிறது (பாடங்கள் 7; 17). உங்களுக்கொரு இரட்சகர் தேவை. உங்களுக்குத் தேவைப்படும் அந்த இரட்சகர், இயேசுவே.
அவர், தம்மிடமிருந்து விலகிப்போன இந்த உலகிற்கு வந்த, தேவனின் மகிமையாவார் (பாடங்கள் 25; 27). அவரே, தேவபிரசன்னம் நம் மத்தியில் இறங்கி வந்து தங்கியிருக்கும் உண்மையான தேவாலயம் ஆவார் (பாடம் 15). தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிற ஊழியரும் அவரே (பாடம் 21). கண்ணீர் நிறைந்த இவ்வுலகில், துயரப்பட்ட மனிதராய்ப் பாடுபட்டவரும் அவர்தான் (பாடம் 24). அவர்தான், தமது ஆடுகளுக்காகத் தமது இன்னுயிரையும் ஒப்புக்கொடுத்த, நல்ல மேய்ப்பர் ஆவார் (பாடம் 26). அவரே நமது தீர்க்கதரிசியும், நமது ஆசாரியரும் மற்றும் நமது ராஜாவும் ஆனவர் (பாடங்கள் 14; 9; 12).
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் நீதியை, அவரே தமது வாழ்வில் நிறைவேற்றினார் (பாடம் 18). அத்தகையப் பரிபூரண ஜீவியத்தை ஒப்புக்கொடுத்ததில், நம்மேல் வந்திருக்கவேண்டிய நியாயத்தீர்ப்பை, அவர் தம்மேல் சுமந்துகொண்டார் (பாடம் 4). தமது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம், பாவநிவிர்த்தி செய்தார் (பாடங்கள் 6; 8). ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை, அவரே நிறைவேற்றுகிறார் (பாடம் 5). என்றென்றைக்குமான, சதாகாலங்களிலும், தாவீதின் சிங்காசனத்தின் மீது, ஆளுகை செய்யப்போகிறவரும் அவர்தான் (பாடம் 13).
இயேசு, உங்கள் பாவங்களை மன்னிக்கவும், உங்களைத் தேவனோடு ஒப்புரவாக்கவும், ஆயத்தமாய் இருக்கிறார். உங்களை விடுதலையாக்கும் இரட்சகர் அவர்தான் (பாடம் 11). அவரால், உங்கள் இருதயத்தை மாற்ற முடியும் (பாடம் 23). மேலும், அவரால் உங்களுக்குப் புதிய தைரியத்தையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்க முடியும் (பாடங்கள் 10, 28, 19). இந்த இரட்சிப்பை இலவசமாய் உங்களுக்கு வழங்கி (பாடம் 3), அன்பாய் அவர் உங்களை அழைக்கிறார் (பாடம் 22).
சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால், பழைய ஏற்பாடு, இயேசுவின் மீது விசுவாசம் வைக்க உங்களை வழிநடத்தும். அவரை வரவேற்க நீங்கள் ஆயத்தமா?
அனைத்து மதங்களும் கடவுளை நோக்கித்தான் நம்மை நடத்துகின்றன என்கிற கருத்தை ஏற்பது என்பது, சுலபமாகத்தான் இருக்கும். ஆனால், பழைய ஏற்பாடு அதற்கு எதிரானதைப் போதிக்கிறது. எந்த மதமும் நம்மைத் தேவனிடத்திற்குக் கொண்டுவர முடியாது. ஏன், பழைய ஏற்பாட்டின் மதமுமேகூட, அதைச் செய்ய முடியாது. பழைய ஏற்பாட்டின் முழுமையும், இயேசு ஏன் நமக்குத் தேவைப்படுகிறார் என்று நமக்குக் காண்பிக்கவும், அவரது வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தவுமே கொடுக்கப்பட்டது. பாவப் பிரச்சினையைத் தீர்க்கவும், தேவனின் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றவும் வந்த தமது குமாரனில், நமது உண்மையான நம்பிக்கையைக் காணும் பொருட்டுத் தேவன், பொய்யான நம்பிக்கைகள் அனைத்தையும் அழிக்கிறார்.
1. முதல் காட்சியின் முடிவில், நீங்கள் அரங்கத்தின் வெளிநடையில் இருந்திருந்தால், நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்?
2. தேவனிடமிருந்து வெகு தூரமாகிவிட்ட மக்களுடன், பழைய ஏற்பாடு முடிவடைகிறது. நீங்கள் தேவனிடமிருந்து தூரமாகிவிட்டதாக உணர்ந்த தருணம் இருந்திருக்கிறதா?
3. மற்றவர்களுடனான உறவில் நீங்கள் விரிசல்களை அனுபவித்தது எப்போது? மனித உறவில் விரிசல்கள் மிகப் பரவலானவை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
4. பழைய ஏற்பாட்டின் மதத்தில் இருந்த சில வரம்புகள் யாவை?
5. இயேசுவால், உங்களைத் தேவனோடு ஒப்புரவாக்கவும், உங்களுக்குச் சமாதானத்தைக் கொண்டுவரவும், கூடுமென்று நீங்கள் நம்புகிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?