2 இராஜாக்கள் 17:6-28
23. அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
24. இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
25. மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
26. பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
27. அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
28. நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
நமக்காக இயேசு, ஒரு கிரியையைக் கடந்த காலத்தில் செய்துமுடித்தார்; நிகழ்காலத்திலும் ஒரு கிரியையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்; வருங்காலத்திற்கும் ஒரு கிரியையை வைத்துள்ளார்.; இயேசுவின் செய்துமுடிக்கப்பட்ட கிரியையானது, நமது பாவங்களுக்காக அவர் தமது ஜீவனையே ஒரு பலியாக ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்பதாகும். இதை அவர், "ஒரே தரம்" செய்துமுடித்தார் (எபிரெயர் 7:27). இயேசுவின் வரப்போகும் கிரியையானது, அவரது மகிமையான இரண்டாம் வருகையைச் சுற்றியே சுழல்கிறது. இயேசுவின் தொடரும் கிரியையை, நாம் இந்தப் பாடத்தில் விளக்கமாய்ப் பார்ப்போம்.
எபிரெயர் 7:23-28
தாய்மை என்பது, ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறதான, வலி மிகுந்த ஒரு தொடக்க நிகழ்வையும், அதன்பின் அவள் அந்தக் குழந்தையைப் பேணிப் பராமரிக்கிறதான, தொடரும் ஒரு காரியத்தையும் உள்ளடக்கியதாகும்.
நீங்கள் ஒரு தாய் எனில், இது எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சகித்துக் கடந்து சென்ற, உங்கள் பிரசவ வேதனையின் நேரத்துக்குப் பின்னர், நீங்கள் மிகவும் களைத்துச் சோர்ந்து அங்கே படுத்துக் கிடக்கிறீர்கள்; சில நிமிடங்களுக்குள் செவிலியர், ஒரு சின்னஞ்சிறு ஜீவனுள்ள பொட்டலத்தை உங்கள் கைகளில் திணித்து, “இந்தச் சிறு பிள்ளைக்குப் பாலூட்டவேண்டும்!” என்று உங்களிடம் சொல்கிறார்.
குழந்தையைப் பெற்றெடுத்து முடித்தாலும், அந்தக் குழந்தையைப் பராமரிப்பதும், அதற்குத் தேவையானவற்றை வழங்குவதுமான பணிகள் பின்தொடர்கின்றன. ஒரு தாயின் பணி ஒருபோதும் முடிவடைவதே இல்லை!
அதேபோல், நமது மாபெரும் பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்துவின் ஊழியமும், செய்துமுடிக்கப்பட்ட ஒரு கிரியையையும், தொடர்கிறதான ஒரு கிரியையையும் கொண்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட கிரியையானது, அவர் சிலுவையிலே பாடுபட்டு, மரித்தபோது, நமது பாவங்களுக்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்ததான, வேதனை மிகுந்த நிகழ்வாகும்.
தொடரும் பணியானது, அவர் சிலுவையிலே நிறைவேற்றி முடித்தவற்றை நமக்குப் பயன்படுத்தி, நம்மைப் பரலோகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டுசேர்ப்பதற்கு, நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிற ஊழியமாகும். தொடரும் கிரியையானது, அக்கறையும், பாதுகாப்பும் மற்றும் போஷிப்புமான, கிறிஸ்துவின் ஊழியமாகும். வேதாகமம் இதை, அவரது பரிந்து பேசுதல் என்று குறிப்பிடுகிறது.
பழைய ஏற்பாட்டில் அநேக ஆசாரியர்கள் இருந்தனர்: “அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்” (எபிரெயர் 7:23).
ஆரோன் மரிக்கும் தறுவாயில், அவர் தன் சகோதரரான மோசேயுடனும், தனது குமாரன் எலெயாசாருடனும்கூட, ஓர் என்னும் மலைமேல் ஏறினார்; மோசே, ஆரோனின் ஆசாரிய வஸ்திரங்களைக் கழற்றி, அவற்றை அவரது குமாரனுக்கு அணிவித்து, எலெயாசார் பிரதான ஆசாரியரின் ஸ்தானத்தைப் பொறுப்பேற்பார் என்று சுட்டிக்காட்டினார் (எண்ணாகமம் 20:22-29).
பழைய ஏற்பாடு முழுவதிலும், ஒரு பிரதான ஆசாரியருக்குப் பிறகு மற்றொருவர் வந்தார். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணியாற்றினார்கள்; ஆனால் அவர்கள் பணியைத் தொடரமுடியாதபடி, மரணம் அவர்களைத் தடுத்தது. எப்படியும் ஒரு நாள், அவர்கள் அனைவரும் தங்கள் ஆசாரிய வஸ்திரங்களைக் களைந்துவிடவேண்டியதுதான்.
பழைய ஏற்பாட்டில், அநேகப் பலிகளும்கூட இருந்தன. பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள், முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் “நாடோறும் பலிகளைச் செலுத்த”வேண்டியிருந்தது (7:27), என்று எபிரெயர் நிருபம் நமக்குக் கூறுகிறது. ஒவ்வொரு முறை புதியதொரு பாவம் செய்யப்படும்போது, அங்கே புதியதொரு பலி நிறைவேற்றப்படவேண்டும். ஆகவே ஆசாரியர்களின் பணியும், ஒருபோதும் முடிவடைவதே இல்லை.
இந்தக் குறிப்பு, ஆசாரியர்கள் தங்கள் ஊழியத்தை நடத்திக்கொண்டுவந்த ஆசரிப்புக் கூடாரத்தின் அமைப்பின் மூலம், சித்திரித்துக் காட்டப்பட்டது. முந்தின பாகத்தில், குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன (எபிரெயர் 9:2). அங்கே என்ன இல்லை என்பதைக் கவனியுங்கள். இந்தப் பகுதியானது, விளக்கேற்றப்பட்டு, மிக அழகாக ஒளியுற்றிருந்தது. அங்கே ஒரு மேஜையும், சில அப்பங்களும் இருந்தன; ஆனால் நாற்காலி இல்லை. ஆசாரியர்கள், ஒருபோதும் அங்கு உட்கார்ந்திருக்கமுடியாது. ஏனெனில், அவர்களது வேலை ஒருபோதும் முடிவடைவதே இல்லை. எப்பொழுதுமே பரிகரித்துத் தீர்த்துவைக்கவேண்டிய மற்றுமொரு பாவமும், ஒப்புக்கொடுக்கப்படவேண்டிய மற்றுமொரு பலியும், அங்கே வந்துகொண்டே இருந்தன.
பழைய ஏற்பாடு முழுவதும், அநேக ஆசாரியர்களும், அநேகப் பலிகளும் என்கிற கதைதான் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. பாவம் என்பது, ஒருபோதும் தீர்க்கப்படமுடியாத பிரச்சினையாக இருந்தது; பலிகளைச் செலுத்துவது என்பது, ஒருபோதும் முடிவில்லாத பணியாக இருந்தது.
ஆனால் இப்பொழுது தேவன், என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற ஒரே பிரதான ஆசாரியரை நமக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு, “என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்” (எபிரெயர் 7:24). இயேசு, மரணத்தின் வழியே கடந்து சென்று, அதன்மேல் வெற்றிசிறந்தார். அவர் முடிவில்லாததொரு வாழ்வின் வல்லமையில் வாழ்கிறார். பிரதான ஆசாரியருக்குரிய வஸ்திரங்கள், இயேசுவிடமிருந்து ஒருபோதும் அகற்றப்படுவதில்லை! அவரே என்றென்றைக்கும் நம்முடைய பிரதான ஆசாரியராவார்.
இயேசு, வேறு எந்தவொரு ஆசாரியரைப்போன்றவரும் அல்லர்: “அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்” (7:27).
தங்கள் பணிகள் ஒருபோதும் ஓய்வுபெறாத பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களைப்போல் அல்லாமல், இயேசு ஒரேதரம் தம்மைத்தாமே சிலுவையிலே பலியிட்டார்; மேலும், அவர் பரலோகத்திற்கு ஏறிச் சென்றபின்பு, அவர் உட்கார்ந்தார். “பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய் . . . இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு” (8:1).
பாவத்துக்கான பலியாகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்ததான அவரது பணி முடிவடைந்துவிட்ட காரணத்தால், இயேசு உட்கார்ந்தார்: “முடிந்தது” (யோவான் 19:30). இனி எப்பொழுதுமே பாவத்துக்காக எந்தவொரு பலியும் தேவைப்படாது என்னும்பொருட்டு, நமது பாவத்துக்காக அவர் பாவநிவிர்த்தி செய்தார்.
உங்கள் முதுகின்மேல் நீங்கள் சுமந்துகொண்டிருக்கும், பெரும் பாறாங்கற்களைக்கொண்ட ஒரு மூட்டையைப்போல, உங்கள் பாவங்களை நீங்கள் கற்பனை செய்யுங்கள். பழைய ஏற்பாட்டில், உங்கள் மூட்டையில் ஒரு பாறாங்கல்லின் சுமையை நீங்கள் உணரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் ஆசாரியரிடம் போவீர்கள்; அவர் அந்தக் குறிப்பிட்ட பாவத்துக்காக ஒரு பலியை ஒப்புக்கொடுப்பார். மற்றுமொரு பாவத்துக்கு நீங்கள் உட்படும்போதெல்லாம், நீங்கள் மீண்டும் ஆசாரியரிடம் போகவேண்டும்; உங்களுக்கு மற்றுமொரு பலி தேவைப்படும்.
பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள், உங்கள் மூட்டையிலிருந்து பாறாங்கற்களை வெளியே எடுத்தார்கள். இயேசுவோ, உங்கள் மூட்டையையே உங்கள் முதுகிலிருந்து எடுத்துப்போட்டுவிடுகிறார்! அதை உங்களிடமிருந்து பிரித்தெடுத்துவிடுவதன் மூலம், அவர் உங்களது எல்லாப் பாவத்தையும் தீர்த்துவிடுகிறார். அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் நமக்காகச் சுமந்தார் (1 பேதுரு 2:24).
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது (1 யோவான் 1:8). உங்கள் மூட்டை ஒருபோதும் பாறாங்கற்களின்றி இருப்பதில்லை; ஆகவே உங்கள் வாழ்க்கையில், பாவத்தை நீங்கள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தேவன் உங்களை அழைக்கிறார். ஆனால் உங்களது இரட்சிப்பு, மூட்டையை நீங்கள் முற்றிலுமாய் வெறுமையாக்குவதைச் சார்ந்ததாக இல்லை. அது, கிறிஸ்து உங்கள் முதுகிலிருந்து மூட்டையை அகற்றிப்போடுவதைச் சார்ந்திருக்கிறது.
கிறிஸ்தவர்கள் சில நேரங்களில், நாம் இன்னும் பழைய ஏற்பாட்டுக் காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நினைத்து வாழ்கிறார்கள். நாம் பாவம் செய்யும்போது, ஆக்கினைத் தீர்ப்பின்கீழ் நிற்பதாக நாம் உணர்கிறோம். ஆனால், இயேசு நம் கடந்த கால, நிகழ்கால, மற்றும் வருங்காலப் பாவங்களை, சிலுவையில் அவற்றை ஆணியடித்ததின் மூலம், தீர்த்து முடித்திருக்கிறார் (கொலோசெயர் 2:14).
கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை என்பதற்கு, உங்கள் மூட்டையில் பாறாங்கற்களே இல்லை என்பது காரணமல்ல; மாறாக, அந்த மூட்டையே உங்கள் முதுகிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பதுதான் காரணம். இயேசு அதை உங்களிடமிருந்து எடுத்துவிட்டார். அவர் அதைச் சிலுவையிலே, முற்றுமுடிய தீர்த்து முடித்தார்.
இந்தச் சொற்றொடரை நீங்கள் எவ்வாறு நிறைவு செய்வீர்கள்: தம் மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களை இரட்சிக்க இயேசு வல்லவராயிருக்கிறார், ஏனெனில் ___________________________?
நீங்கள், “ஏனெனில், அவர் நமது பாவங்களுக்காகச் சிலுவையிலே மரித்தார்,” என்று சொன்னால், அது சரியான விடையாகும். ஆனால் எபிரெயர் நிருபம், வேறு ஏதோ ஒன்றைச் சொல்கிறது. இயேசு, “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரெயர் 7:25).
பரிந்து பேசுதல் என்பது, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும், இயேசுவின் ஊழியமாகும். தம் மூலமாகத் தேவனிடத்தில் சேருகிறவர்களை இரட்சிப்பதையே இயேசு இப்பொழுது செய்துகொண்டிருக்கிறார். நீங்கள் பரலோகத்தில் அவரது பிரசன்னத்தில் பாதுகாப்பாக வந்து சேரும்வரையிலும், நீங்கள் எதிர்கொள்ளும் எந்தத் தடைகளையும் நீக்கி, உங்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்தையும், அவர் செய்துகொண்டிருக்கிறார்.
ஒருவேளை, இயேசு சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தபின்பு, நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதைப் பார்ப்பதற்காக அவர் பரலோகத்தில் ஓய்வு பெற்று, வெறுமனே நம்மைக் கண்காணித்துக்கொண்டிருந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர், வெறும் இரட்சிப்பின் ஒரு வழியைத் திறப்பதை மட்டும் செய்துவிட்டு, அதன்பின்பு நாமே அதைப் பின்தொடர்ந்து செல்லும்படி நம்மிடமே விட்டுவிட்டால், எத்தனை பேர் பரலோகத்தைச் சேர்ந்திருப்பார்கள்? ஒருவரும் இல்லை! இரட்சிப்பு, ஏட்டளவில் மட்டும் சாத்தியமாகிற ஒன்றாக இருந்துகொண்டிருக்கும்; ஆனால், உண்மையில் யாருமே இரட்சிக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.
ஆனால், நமக்காக பரிந்து பேசும்படிக்கு ஜீவிக்கிறார்; நீங்கள் அவரில் கொள்ளும் விசுவாசத்தின் மூலமாய்த் தேவனிடத்தில் கிட்டிச்சேரும்போது, இயேசு தாம் சிலுவையில் தமது இரத்தத்தைச் சிந்தினதன் மூலமாகச் சம்பாதித்த அனைத்தையும் உங்கள்மேல் பொழிந்தருளி ஆசீர்வதிப்பார். நீங்கள் அனுபவித்து மகிழ்கிற ஒவ்வோர் ஆசீர்வாதமும், நீங்கள் பெற்றுக்கொள்கிற ஒவ்வொரு கிருபாவரமுமாகிய, மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், தேவனோடுள்ள ஒப்புரவு, அவரது குடும்பத்திற்குள் சுவீகரித்துக்கொள்ளப்படுதல், புதியதோர் இருதயம், அவரது ஆவியானவரின் வரம் ஆகிய அனைத்துமே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிந்து பேசுகிற ஊழியத்தின் மூலமாகவே வருகின்றன.
இயேசு, எப்பொழுதுமே நமக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு ஜீவிக்கிறார். அவர் ஒருபோதும், ஒரு நாள்கூட விடுப்பு எடுத்துக்கொள்வதில்லை! அவர் வேறு யாதொன்றினாலும் கவனம் சிதறுவதும் இல்லை! இயேசுவின் தொடர்கின்ற ஊழியமானது, நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதும், தமது அனைத்துப் பிள்ளைகளும் பாதுகாப்பாகப் பரலோகத்திற்குக் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதுமே ஆகும். இயேசு, உங்களை இரட்சிப்பதற்காக மரித்தார்; அவர் உங்களைக் காத்துக்கொள்ளும்படிக்கு ஜீவிக்கிறார்; மேலும், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.
உங்களது கிறிஸ்தவ வாழ்வு முழுவதும், நீங்கள் எல்லாவிதமான கஷ்டங்களையும், சவால்களையும், சோதனைகளையும், துயரங்களையும் மற்றும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வீர்கள். உங்கள் விசுவாசம் எவ்வாறு ஒழிந்துபோகாதிருக்கும்? கிறிஸ்து, உங்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு எப்பொழுதுமே உயிரோடிருக்கிறார். உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அருளிச்செய்யப்படும்பொருட்டு, அவர் உங்கள் தேவைகளையெல்லாம் பிதாவினிடத்தில் கொண்டுவருகிறார்.
சுவிசேஷங்களில், இதைக்குறித்த அழகானதொரு சித்திரிப்பு இருக்கிறது. பேதுரு மாபெரும் நெருக்கடிக்குள்ளாவார் என்று அறிந்து, இயேசு அவரிடம், “சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்” (மத்தேயு 26:34), என்று கூறினார்.
இயேசுவைப் பின்பற்றுவதன் சவாலைச் சந்திக்கிற, கடினமான சூழ்நிலை தனக்கு எழுவதைப் பேதுரு நிச்சயமாய் அறிந்தார்; ஆனால், பேதுரு அதில் தவறிவிடுவார் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் பேதுருவிடம், “கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” (லூக்கா 22:31-32), என்று சொன்னார்.
இயேசுவை மறுதலித்தபோது, பேதுரு மாபெரும் தோல்வியடைந்தார்; அத்துடன் அவரது கதை முடிந்திருக்கக்கூடும். ஆனால் அவரது விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, இயேசு ஜெபித்தார்; இயேசுவின் ஜெபங்களுக்கான பதிலாகப் பேதுரு மீட்டெடுக்கப்பட்டார்.
பேதுருவுக்காக இயேசு செய்தது, நமக்காக அவர் தொடர்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக்குறித்த அற்புதமானதொரு படமாகும். கிறிஸ்து உங்களுக்காகப் பரிந்து பேசுகிறார். இதற்கு, இயேசு கெத்செமனே தோட்டத்தில் செய்ததைப்போல, அவர் பரலோகத்தில் முழங்காலில் நின்று, ஜெபத்தில் போராடிக்கொண்டிருப்பார் என்பது அர்த்தமல்ல. அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்; அவர் கேட்கிறது எதுவோ, அதைப் பிதா தருகிறார்.
இயேசுவின் பரிந்து பேசுதல்தான், கிறிஸ்தவ வாழ்வைச் சாத்தியமாக்குகிறது. கிறிஸ்து, பிதாவின் பிரசன்னத்தில் அதிகாரத்தோடு பேசுகிறார்; அவரது வார்த்தை, இன்று நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கங்கள் மற்றும் சோதனைகளுக்காகப் பரலோகத்தின் பொக்கிஷசாலைகளைக் கட்டவிழ்க்கிறது.
உங்கள் வாழ்வின் எந்தப் பருவத்திலும் அல்லது சூழ்நிலையிலும் நீங்கள் சுமக்கும் குறிப்பிட்ட பாரங்களைத் தாங்கக்கூடிய ஆற்றலைக் கிறிஸ்து தருகிறார். அவர் உங்கள் சுமையை இரட்டிப்பாக ஆக்கும்போது, உங்கள் ஆற்றலை இரட்டிப்பாக்கவும் அவரால் கூடும்.
இயேசு உங்களுக்காக ஜெபிக்கிறார் என்பதை அறிந்திருப்பது, ஜெபிப்பதற்கு உங்களுக்கொரு புதிய உற்சாகத்தைத் தரும். நமது ஜெபங்கள் பலனற்றவையும், நமது விசுவாசம் பலவீனமானதுமாய் இருப்பதாக உணரும்போது. நாமே ஜெபித்துக்கொண்டிருப்பதைவிட, ஒரு போதகர் அல்லது ஓர் ஆசாரியரை நமக்காக ஜெபிக்கும்படிக் கேட்கலாம் என்றுதான் நாம் விரும்பக்கூடும். ஆனால் இங்கே, நமக்காக ஜெபிக்கிற ஒரு ஆசாரியரை, நாம் ஏற்கெனவே பெற்றிருக்கிறோம் என்றுதான் நமக்குச் சொல்லப்படுகிறது.
இயேசுவே உங்களது மாபெரும் பிரதான ஆசாரியர்; அவர் உங்களுக்காக பரிந்து பேசுகிறார். உங்களுக்கும், பிதாவுக்குமிடையே அவர், திறப்பிலே நிற்கிறார்; அவர் உங்கள் சார்பாக, உங்களது விண்ணப்பங்களைப் பிதாவினிடத்தில் கொண்டுவருகிறார். ஆகவே, நீங்கள் தட்டுத்தடுமாறி ஒரு ஜெப முயற்சியை எடுக்கும்போது, இயேசு உங்கள் ஜெபத்தைப் பிதாவின் முன்பாகக் கொண்டுவருகிறார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
இயேசு, “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்” (யோவான் 16:23), என்று சொன்னார். கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்பது என்பது, அவரது சித்தத்தின்படி கேட்பது என்று பொருள்படுகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள், இயேசுவின் சித்தத்திற்கு இசைந்ததான ஒன்றைக்குறித்து ஜெபிக்கும்போது, அவர் உங்கள் விண்ணப்பத்தைப் பிதாவினிடத்தில் கொண்டுசெல்கிறார். கிறிஸ்து உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவராக இருக்கும் நிலையில், அவரது நாமத்தில் நீங்கள் கேட்கும் யாதொன்றுமே உங்களுக்கு மறுக்கப்படாது; ஏனெனில், அவர் பிதாவினிடத்தில் கேட்பது எதுவுமே ஒருபோதும் அவருக்கு மறுக்கப்படாது.
இயேசு கிறிஸ்து, நமது பாவங்களுக்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்ததான, அவரது பணியை நிறைவேற்றி முடித்திருக்கிறார். இப்பொழுது அவர், பரலோகத்தில் நமக்காகத் தமது தொடரும் பணியைச் செய்வதில் ஈடுபட்டுள்ளார். அவர், சிலுவையில் நிறைவேற்றி முடித்ததைப் பயன்படுத்தி நம்மை இரட்சிக்கிறார். கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு, நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குமாறு, அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். மேலும், அவர் நமது விண்ணப்பங்களைப் பிதாவினிடத்தில் கொண்டுசென்று, நமது ஜெபங்கள் கேட்கப்பட்டுப் பதிலளிக்கப்படும் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறார்.
1. நமது பிரதான ஆசாரியராக, இயேசுவினுடைய பணியின் எந்தப் பகுதி உங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது?
2. இயேசு, உங்கள் மூட்டையிலிருந்து பாவமாகிய பாறாங்கற்களை அகற்றினால் அல்லது மூட்டையையே முற்றிலுமாக உங்கள் முதுகிலிருந்து அகற்றினால், அது என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
3. உங்கள் சொந்த அனுபவத்திலிருந்து சிந்தியுங்கள். உங்களை விசுவாசத்திற்குள் கொண்டுவர, இயேசு பயன்படுத்திய முறை என்ன?
4. உங்கள் வாழ்க்கையில் இந்த வாரம் இயேசு உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார் என்று, எங்கே நீங்கள் நினைவுகூரத் தேவைப்படுகிறது?
5. உங்கள் ஜெபங்கள், எங்கே பலவீனமாக மற்றும்ஃஅல்லது தள்ளாடுகிறவையாக இருக்கின்றன என்று, நீங்கள் உணர்கிறீர்கள்? இயேசுவின் பரிந்து பேசுதலைப்பற்றி நீங்கள் கற்றுக்கொண்டிருப்பது, எவ்வாறு உங்களுக்கு உதவும்?