2 இராஜாக்கள் 17:6-28
19. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
21. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
22. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
25. தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,
26. கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
27. இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
28. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
29. தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
30. விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
31. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
தேவனுடைய கோபாக்கினையானது, பாவத்துக்கெதிராக வெளிப்படுத்தப்பட்டது என்றும், கிறிஸ்து நம்மைச் சுவிசேஷத்தின் மூலமாக மீட்டெடுக்கிறார் என்றும், நாம் பார்த்தோம். இது இயேசுவுக்கு எப்படிப்பட்டது? அது நமக்கு எப்படிப்பட்டது? நமது பாடங்கள் பலவற்றில், வேதாகமத்தின் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தின் மீது நாம் கவனம் செலுத்திவருகிறோம். ஆனால் இந்தப் பாடத்தில், ரோமர் 3-ல் ஒன்றாகக் காணப்படும், நான்கே வார்த்தைகளில் நாம் கவனம் செலுத்தப்போகிறோம். கிருபாதாரபலி, மீட்பு, நீதிமான்களாக்கப்படுதல் மற்றும் விசுவாசம் என்பவையே அவை. இது உங்களுக்குக் கடினமானதாகத் தோன்றினால், சற்று இருங்கள். நீங்கள் கண்டறியப்போவது, உங்களுக்கு வாழ்வளிப்பதாக இருக்கும்.
ரோமர் 3:19-31
போதகர் ஸ்மித் அவர்களின் முதல் அமெரிக்கப் பயணத்தின்போது, தனது நண்பரால் ‘பேஸ்பால்’ என்னும் விளையாட்டைக் காண, அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நண்பர் அவரிடம் மிகவும் ஆர்வமாக, பேஸ்பால் விளையாட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். போதகருக்கோ, நண்பர் பேசியவற்றைப் பற்றிச் சற்றேனும் தெரிந்திருக்கவில்லை. காரணம், அவர் பயன்படுத்திய வார்த்தைகள், புரியாத புதிராக இருந்தது.
ஒவ்வொரு விளையாட்டுக்கும், தனித்துவமான மற்றும் சிறப்புவாய்ந்த வார்த்தைகள் உண்டு. பேஸ்பால் விளையாட்டை விரும்பும் மக்கள், பேஸ்பாலுக்கான வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இயேசுவை நேசிக்கும் மக்கள், வேதாகம வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அறிந்துகொள்ளும்போது மகிழ்ச்சிகொள்கிறார்கள். இந்தப் பாடத்தில் நாம், நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடிய, நான்கு வேதாகம வார்த்தைகளைக் கற்றுக்கொள்வோம்.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார் (ரோமர் 3:23-24, 26).
நீல் மற்றும் ஸாலி ஆகியோரைப் போதகர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். நீல், அலுவலகத்தில் சந்தித்த அழகான பெண்ணான, ஸாலியுடன் பழக ஆரம்பித்தபோது, தனது இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். அவர், ஒழுங்கற்ற நடக்கைகளுக்குப் பேர்போனவராயிருந்தார். இதனால், ஸாலி அவரிடத்தில் ஒத்துவராதென்று உணரக்கூடிய தருணங்கள் இருந்தன.
ஓர் இரவு நீல், ஸாலியை ஒரு விருந்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே, நிகழ்வுகள் சற்றுக் கைமீறிப் போகிறவையாயிருந்தன. நீல், மது அருந்த ஆரம்பித்தார். அவர்கள் அதிகாலைப் பொழுதில் வீட்டிற்குக் காரில் திரும்பும்போது, காரைக் கட்டுப்படுத்துவது நீலுக்கு மிகவும் சிரமமானதாயிருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அந்தச் சம்பவம் நிகழும்வரை நீல், தெளிவற்ற, போதை நிலையிலேயே காரைச் செலுத்தினார். கார், ஒரு சாலை விளிம்பில் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, தடுமாறிப் பலமுறைகள் உருண்டது. வாகனம் ஒரு நிலைக்கு வந்து நின்றபோது, நீல், ஸாலி ஆகிய இருவருமே சுயநினைவிழந்திருந்தனர்.
பல மணி நேரங்கள் கழித்து, நீல் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவரது தலை, பயங்கரமாய் அடிபட்டு வலித்தது. என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்திக்கொள்ள முயற்சித்தபோது, அவரது உடலெங்கும் வலி ஏற்பட்டது. அவர், “ஸாலி எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார். மருத்துவர், “அது ஒரு துயரமான செய்தி. அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒருபோதும் மீண்டும் நடக்கமாட்டார்,” என்று சொன்னார்.
“நான் அவளைப் பார்க்க முடியுமா?”
“முடியாது, அவர் உங்களுடன் பேசமாட்டார்.”
திடீரென நீல், கொடூரக் கனவுகள் நிறைந்த இரவுகள்போன்ற பயங்கரச் சூழ்நிலைகளில் சிக்கியவரானார். சிறிது காலத்திற்குள்ளாகவே, ஸாலியின் வழக்கறிஞரிடமிருந்து அவருக்கொரு கடிதம் வந்தது. தனது நிரந்தரமான செயலிழப்பைக் கருத்தில்கொண்டு, ஸாலி சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருந்தார். நீல், தான் எப்படி இப்படி ஒரு முட்டாளாக இருந்திருக்க முடியும் என்றும், ஒரு சாதாரணச் செயல், இப்படி ஒரு பெரிய பின்விளைவுகளையுடைய, கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் யோசித்துக் குழம்பியவராக, மருத்துவமனையில் கிடக்கிறார். அது ஒரே ஓர் இரவு மட்டுமே. ஆனால், அது அனைத்தையுமே மாற்றிவிட்டது.
நீல், தன்னைத்தானே மீண்டும் நிலைநிறுத்திக்கொள்வது எப்படி என்று குழம்பிக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஸாலியைக் குறித்து, என்ன செய்வதென்றும் அவருக்கு எதுவும் புரியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், மூன்று அம்சங்கள் உள்ளன: முதலாவது, அதில் ஒரு குற்றம் நிகழ்ந்துள்ளது. மது அருந்தியபின் காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்குத் திரும்ப முடிவெடுத்தபோது நீல், நிதானமற்ற நிலையிலும், பொறுப்பற்ற முறையிலும் நடந்துகொண்டார். இரண்டாவது, பாதிக்கப்பட்ட ஒரு நபர், அங்கே இருக்கிறார். ஸாலி கோபமாயிருக்கிறார்; அதுவும் நியாயமே. மூன்றாவது, ஒரு குற்றவாளியும் இதில் இருக்கிறார். குற்றம் சாட்டப்படவேண்டியவர் தானே, என்பதை நீல் அறிந்திருக்கிறார். அவர், தான் செய்திருக்கும் செயலுக்காக, மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடனிருக்கிறார். ஆனால் அது, ஸாலி செயலிழந்துபோய்விட்டார் என்ற உண்மையையும், அவரது வழக்கறிஞர்கள், நீலுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறார்கள் என்ற உண்மையையும், மாற்றப்போவதில்லை.
நீல் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்கிறார். அவரது வழக்கறிஞர், இந்த வழக்கைத் தீர்த்து முடிக்க என்ன செய்யவேண்டியிருக்கும் என்பதைப்பற்றி, ஸாலியின் வழக்கறிஞருடன் பேசுகிறார். அந்தக் கலந்தாலோசனை, ஒரு விஷயத்தை மையப்படுத்துகிறது: ஸாலியை அமைதிப்படுத்த எவ்வளவு கொடுக்கப்படவேண்டும்? எவ்வளவு தொகை போதுமானதாயிருக்கும் என்று நீல் தீர்மானிப்பது, இங்கே முக்கியமில்லை. அதைத் தீர்மானிக்கவேண்டியது, ஸாலிதான். ஏனெனில், அவர்தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆவார்.
ஸாலிக்கு ஏற்புடையதாயிருக்கக்கூடிய ஒரு பணத்தொகையை, வழக்கறிஞர்கள் நிர்ணயிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பணத்தைச் செலுத்துவது என்பது, “ஒரு இழப்பீட்டின்” உடன்பாடாய் இருக்கும். ஒரு இழப்பீடு என்பது, பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோபத்தைத் தணிப்பதற்கும், நீதிக்கான தேவையை நிறைவு செய்வதற்கும் செலுத்தப்படும் ஒரு கட்டணமாகும். அதனால் வழக்கானது, தீர்த்துவைக்கப்படும்; மற்றும் அதற்குப் பிறகு, மீண்டும் ஒரு சட்டபூர்வமான நீதிமன்றத்தில் அது தொடரப்படாது.
நமது பாவம், தேவனுக்கெதிரான ஒரு குற்றமாயிருப்பதால், எது அதற்கான இழப்பீடாய் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர் தேவனே ஆவார் என்று ஆகிறது. “தேவனைத் திருப்திப்படுத்துவது எது?” என்பதே கேள்வி.
வேதாகமம், அதற்கான பதிலை நமக்குத் தருகிறது: “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:24-26). தேவன், தமது குமாரனான இயேசு கிறிஸ்துவைக் கிருபாதார பலியாக வழங்குகிறார். சிலுவையின் மீதான அவரது மரணம், தேவனைத் திருப்தி செய்து, நமது பாவத்தினிமித்தம் உண்டான அவரது கோபத்தைத் தணிக்கிறது.
யாருடைய பரிசுத்தத்தை நாம் புண்படுத்தினோமோ, யாருடைய உலகத்தை நாம் சீர்குலைத்தோமோ, மற்றும் யாருடைய கோபாக்கினையை நாம் நம்மேல் வருவித்துக்கொண்டோமோ, அந்தத் தேவன், தமது ஒரே குமாரனை அனுப்பினார். இயேசு கிறிஸ்துவில் தேவன், மனுஷராக வந்து, தமது கோபாக்கினையைத் தாமே ஏற்றுக்கொண்டார்.
மீட்பு என்பது, ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்துவதன் மூலமாக ஒன்றை வாங்குவதாகும். ஒரு சிறு பிள்ளையாகப் போதகர் ஸ்மித், இந்த வேதாகம வார்த்தையைத் தன் மனதைவிட்டு நீங்காமல் தங்கிவிட்டதொரு எளிய கதையின் மூலமாகக் கற்றுக்கொண்டார். அது, ஏதேனும் பொருட்களை உருவாக்க விரும்பியதொரு சிறுவனைக்குறித்த கதையாகும்.
ஒரு நாள் அந்தச் சிறுவனின் தந்தையார் அவனிடம், “நீ ஏன் படகு ஒன்றைச் செய்யக்கூடாது?” என்று கேட்டார். அந்தச் சிறுவனுக்கு அந்த யோசனை மிகவும் பிடித்துப்போனது. ஆகவே அவன், அழகிய மிதக்கும் படகு ஒன்றைச் செய்யும்படித் தன் தந்தையுடன் சேர்ந்து வேலை செய்தான். அவன் அதற்கு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வண்ணம் தீட்டினான். அதற்கு, உயரமான ஒரு வெண்ணிறப் பாய்மரமும் இருந்தது. அது செய்து முடிக்கப்பட்டதும், அந்தச் சிறுவன், அது தன்னுடையது என்று எப்பொழுதுமே அவன் அறிந்திருக்கும்படி, அந்தப் படகின் மீது விசேஷித்த ஒரு அடையாளத்தை வைத்தான்.
அந்தச் சிறுவன், தனது படகை நேசித்தான். அவன் ஏரியில் மிதக்கவிடும்படி, அதை வெளியே எடுத்தபோது, அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால், ஒரு நாள் அந்தப் படகு, மாபெரும் காற்றில் அகப்பட்டு, அடித்துச்செல்லப்பட்டது. அந்தச் சிறுவன், மனம் உடைந்துபோனான்.
சிறிது காலம் கழித்து, அந்தப் பட்டணத்திலுள்ள பொம்மைக் கடை ஒன்றின் வழியே சிறுவன் கடந்து போகும்போது, ஜன்னலில் அழகிய படகு ஒன்றைக் கண்டான். அது, நீலமும், சிவப்புமான வண்ணத்தில் இருந்தது. அதற்கு, உயரமானதொரு வெண்ணிறப் பாய்மரமும் இருந்தது. அந்தச் சிறுவன் அதை நெருங்கி, உற்றுப் பார்க்கையில், அது தன்னுடையது என்று எப்பொழுதுமே அவன் அறிந்திருக்கும்படி, அந்தப் படகின் மீது அவன் வைத்த, விசேஷித்ததான அடையாளத்தை அவனால் காண முடிந்தது.
அந்தச் சிறுவன், தன் வீட்டுக்குச் சென்று, அவன் சேமித்து வைத்திருந்த அனைத்துப் பணத்தையும் சேர்த்துக்கொண்டு, கடைக்குத் திரும்பிச் சென்று, அந்தப் படகை வாங்கிக்கொண்டான். வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில், அந்தப் படகைக் கட்டியணைத்துக்கொண்டு அவன், “இரண்டு முறைகளும் நீ எனக்கே சொந்தம்! நீ எனக்குச் சொந்தம்; ஏனெனில், உன்னை உருவாக்கியது நான். நீ எனக்கேதான் சொந்தம்; ஏனெனில், உன்னை விலை கொடுத்து வாங்கியதும் நானே!” என்று சொன்னான்.
நம் அனைவரிடமும், இயேசு கிறிஸ்து சொல்லக்கூடியதும் அதுதான்! “இரண்டு முறைகளும் நீ எனக்கே சொந்தம். நீ எனக்குச் சொந்தம்; ஏனெனில், உன்னை உருவாக்கியது நான். நீ எனக்கேதான் சொந்தம்; ஏனெனில், உன்னை விலை கொடுத்து வாங்கியதும் நானே.”
மீட்கப்படுவது என்பதன் பொருள் அதுதான். இயேசு கிறிஸ்து, தமது இரத்தத்தைச் சிந்தியதன் மூலமாக, அவரால் நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறீர்கள் (1 பேதுரு 1:18-19).
நீதிமான்களாக்கப்படுதல் என்பது, சட்டபூர்வமான ஒரு சொல்லாகும். அதற்கு, நீதிமான் என்று ஒரு நபர் அறிவிக்கப்பட்டார், என்பது பொருள். நீதிமான்களாக்கப்படுதல் என்பது, ஒரு நீதிபதியால் வழங்கப்படும் ஒரு தீர்ப்பு ஆகும். ஒவ்வொரு நபரும், சர்வ வல்லவரான தேவனுக்கு முன்பாக, ஒரு நாள் விசாரணைக்கு நிற்பார்கள். ஒவ்வொரு வழக்கிலும் அவர், இரண்டு தீர்ப்புக்களில் ஒன்றைக் கூறுவார். அது, நீதிமானாக்கப்பட்டவர் அல்லது ஆக்கினைக்குட்பட்டவர் என்பதாக இருக்கும்.
நீதிமான்களாக்கப்படுதல் என்னும் வார்த்தையானது, கடைசி நாளுக்குரியது ஆகும். ஆனால் வேதாகமம் இங்கே, நீதிமான்களாக்கப்படுதலைப் பற்றி, நிகழ்காலத்தில் பேசுகிறது:
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, . . . அவருடைய கிருபையினாலே . . . நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” (ரோமர் 3:23-24). தேவன் நம்மிடம், “இப்பொழுதே உங்களுடைய வழக்கு தீர்க்கப்பட முடியும்! உங்களைப்பற்றிய, தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பு என்னவாயிருக்கும், என்று யோசித்துக் குழம்பிக்கொண்டிருப்பதிலேயே நீங்கள், உங்கள் வாழ்நாட்காலம் முழுவதையும் செலவிடத் தேவையில்லை. இன்றே, நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்படக்கூடும்!” என்று சொல்கிறார்.
இயேசு தாம் சிலுவையின் மீது மரித்தபோது, அவர் உங்களுக்காகச் செய்தவையே, நீங்கள் நீதிமான்களாக்கப்படக்கூடும் என்பதற்கான அடிப்படை ஆகும். அவர், கோபாக்கினையைச் சுமந்துகொண்டார் (கிருபாதாரபலி); மற்றும், அவரே விலைக்கிரயமும் செலுத்தினார் (மீட்பு).
நம்மை நீதிமான்களாக்கும்போது, தேவன் இரண்டு காரியங்களைச் செய்கிறார்: முதலாவது, நமது பாவங்களைத் தேவன், இயேசுவின் மீது சுமத்தி, அவற்றை அவருக்கு எதிராக எண்ணுகிறார். மற்றும் இரண்டாவது, இயேசுவின் நீதியைத் தேவன், நம் மீது ஏற்றி, வரவுக் கணக்கு வைக்கிறார்.
போதகரும், அவரது மனைவி கேரனும் திருமணம் செய்துகொண்டபோது, போதகரின் பெற்றோர், இங்கிலாந்தின் லேக் மாவட்டத்திலுள்ளதோர் அதிநவீனத் தங்கும் விடுதி ஒன்றில், ஒரு வாரத்துக்கான கட்டணத்தைச் செலுத்தியிருந்தனர். அவர்களுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவை இருக்கவில்லை; காரணம், வேறொருவரால் முழுக்கிரயமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தேவன், நமது பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்துவதன் மூலமாக, நம்மை இலவசமாய் நீதிமான்களாக்குகிறார். இது நமக்குரிய பரிசாகும். ஏனெனில், நாம் வருவித்துக்கொண்ட குற்றச்சாட்டுக்கள் யாவும், இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செலுத்தப்பட்டிருக்கின்றன.
அதன்பின்பு, இயேசுவின் நீதியைத் தேவன், நம் கணக்கில் வரவு வைக்கிறார்.
சிறிது காலத்திற்கு முன்பு போதகர் ஸ்மித், பிரிட்டனில் அவர் பல்லாண்டுகள் காலமாகப் பயன்படுத்திய, ஒரு கிரெடிட் கார்டு கணக்கை முடித்து விடுவதென்று தீர்மானித்தார். அவர் அங்குச் சென்றபோது, அங்கிருந்த பிரதிநிதி வியப்புற்றவராகக் காணப்பட்டார். அவர், “நீங்கள் இந்தக் கார்டில் 2,000 புள்ளிகள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டார்.
போதகர், “இந்தப் புள்ளிகளை நான் வேறு யாருக்கேனும் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார்.
அவர், “ஓ, முடியும். இதே கார்டை உடைய வேறு யாருக்கும் கொடுக்கலாம்,” என்றார்.
போதகர், அவற்றைத் தனது தந்தையாருக்குக் கொடுத்தார். அவரது தந்தையார், தாம் ஒருபோதும் சம்பாதிக்காத அந்த 2,000 புள்ளிகளுக்குரிய பயன்பாடுகளை அனுபவித்தார்.
இயேசு கிறிஸ்துவில் நீங்கள் விசுவாசித்து அவரிடம் வரும்போது, அவரது நீதியைத் தேவன், உங்கள் கணக்கில் வரவு வைத்துவிடுகிறார். அவர், கிறிஸ்தவ வாழ்வில் உங்களது கிரியைகளினிமித்தமாக அல்லாமல், கிறிஸ்துவின் நீதி உங்களுடையதாக மாறுவதாலேயே உங்களை நீதிமான்களாக்கிறார்.
இயேசு தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றால் நிறைவேற்றியவைதான், நீதிமான்களாக்கப்படுதலுக்கான ஒரே ஒரு அடிப்படை என்பதால், இயேசுவுக்குச் சொந்தமானவர்களைத் தேவன் நீதிமான்களாக்குவார் என்றாகிறது.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார் (ரோமர் 3:23-24, 26).
விசுவாசமே, இயேசு உங்களுடையவராக மாறுவதற்கான வழிமுறையாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
ஓர் இளம் தம்பதியினரைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; டாம் மற்றும் மேரி என்று, நாம் அவர்களுக்குப் பெயரிட்டுக்கொள்வோம். அவர்கள் திருமணத்துக்குமுன்பு, திடீரென்று ஒரு நாள் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அவர்களால் ஒருவரையொருவர் பார்த்துச் சரியாகப் பேச முடியவில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, காலப்போக்கில், அவர்கள் ஒருவரையொருவர் நன்றாய் அறிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். அவர்களது உறவு மேலும் வலுப்பெறுகிறது.
விசுவாசம் என்பது, இயேசு கிறிஸ்துவோடு நீங்கள் ஒன்றிணைக்கப்படுவதான, ஒரு திருமணத்தைப்போன்றது. உங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது என்பது, இயேசுவுக்கு எப்படிப்பட்டதாய் இருந்தது என்று நினைத்துப்பாருங்கள்: தேவனின் பரிசுத்தக் குமாரனானவர், உங்கள் பாவத்தை, அது அவருக்குச் சொந்தமானது என்பதுபோல எடுத்துக்கொள்ளவேண்டியதாயிற்று. ஆனால் இப்பொழுது, இயேசுவோடு இணைக்கப்பட்டிருப்பது என்பது, உங்களுக்கு எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்று நினைத்துப்பாருங்கள்: நீங்கள், கிறிஸ்துவின் நீதியை, அது உங்களுக்குச் சொந்தமானது என்பதுபோல உரிமைகொண்டிருக்கிறீர்கள்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நீங்கள் விசுவாசம் வைக்கும்போது, அவர் சிலுவையின்மேல் நிறைவேற்றிய அனைத்துமே, உங்கள் சொந்த அனுபவத்தில் செயல்படுவனவாக மாறுகின்றன. அந்தத் தருணத்தில்தான் தேவன் உங்களை, “நீதிமான்,” என்று அறிவிக்கிறார்.
இயேசு, சிலுவையின் மீது செலுத்திய கிருபாதார பலியின் அடிப்படையில் தேவன், பாவிகளை நீதிமான்களாக்குகிறார். இதை அவர், விசுவாசத்தோடு இயேசுவினிடத்தில் வருவோர் அனைவருக்கும் செய்கிறார். நமது கடனைச் செலுத்தித் தீர்த்து, தமது நீதியினால் நமக்கு வரவுக் கணக்கு வைப்பதன் மூலம் நம்மை மீட்கிற கிறிஸ்துவோடு, விசுவாசம் ஒரு நபரை ஒன்றிணைக்கிறது. நீதிமான்களாக்கப்படுதல் என்பது, கிறிஸ்தவ வாழ்வில் உங்களது கிரியைகளைச் சார்ந்ததல்ல. மாறாக, அது இயேசுவையும், உங்களுடையவராயிருந்து, அவர் நிறைவேற்றி முடித்த அனைத்தையும் சார்ந்தது.
1. இந்தப் பாடத்தில், உங்களுக்கு மிகவும் உதவிகரமானதாக நீங்கள் கண்டது என்ன? மிகவும் கடினமானதாக நீங்கள் கண்டது என்ன?
2. உங்களது சொந்த வார்த்தைகளில் “கிருபாதார பலி” என்பது என்ன?
3. உங்களுக்கு உதவும்பொருட்டு, யாரோ ஒருவர் சில தியாகங்களைச் செய்தார் என்பதான ஒரு காலத்தை, உங்களால் நினைவுகூர முடியுமா? “மீட்பு” என்பது, உங்கள் மீதான இயேசுவின் அன்பைப்பற்றி உங்களுக்கு என்ன கூறுகிறது?
4. உங்களைப்பற்றிய தேவனின் கடைசி நியாயத்தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை இப்பொழுது ஏற்படுத்த முடியும்?
5. விசுவாசம் என்பது, இயேசு கிறிஸ்துவிடம் ஒரு அர்ப்பணிப்பை உள்ளடக்கியது. இந்த அர்ப்பணிப்பிற்கு, நீங்கள் ஏன் ஈர்க்கப்படவேண்டும்? எது உங்களைத் தடுத்து நிறுத்தி வைக்கக்கூடும்?