2 இராஜாக்கள் 17:6-28
ரோமர் 1:16-32
16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
18. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
30. புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
31. உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
தரிசு பட்டணத்தவராகிய சவுலின் மனமாற்றம், தேசங்கள் அனைத்திற்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு வழிநடத்தியது. புதிய ஏற்பாட்டிலுள்ள இருபத்தொன்று நிருபங்களில் பதின்மூன்று, அப்போஸ்தலராகிய பவுலால் எழுதப்பட்டன. முழு வேதாகமத்திலும் சுவிசேஷத்தின் மிகத் தெளிவான விளக்கம், ரோமர் புத்தகத்தில் நமக்குக் கொடுக்கப்படுகிறது. அடுத்த ஐந்து பாடங்களிலும், இயேசு கிறிஸ்துவில் தேவன் நமக்காகச் செய்திருப்பவற்றை, அதிகமாக நாம் கண்டறிவோம்.
ரோமர் 1:16-32
வேதாகமத்தின் வழியே நமது பயணத்தில், தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இதன் பொருள், தாம் உண்டாக்கிய அனைத்தினுடைய நன்மையையும் தேடும்படியாகவே, தேவன் நிச்சயமான தீர்மானத்தோடிருக்கிறார் என்பதாகும். வேதாகமம், தேவன் பரிசுத்தராயிருக்கிறார் என்றும் நமக்குக் கூறுகிறது. இதன் பொருள், தமது அன்பிற்குரிய காரியங்களை அழிக்கக்கூடிய எதற்கும் நிச்சயமாக எதிரானவராயிருக்கிறார் என்பதாகும். நீங்கள் ஒரு நபரை நேசிக்கும் அதே நேரத்தில், அந்த நபருக்குக் கேடு தரும் ஒன்றை வெறுக்காமல் இருக்க முடியாது.
புற்று நோயினால் மரிக்கும் தறுவாயிலிருந்த தங்கள் மகனைப் பராமரித்துக்கொண்டுவந்த, ஒரு தம்பதியினரைத் தன்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது என்று போதகர் ஸ்மித் கூறுகிறார். ஒரு நாள் மாலை, அந்தச் சிறுவனின் தாயார் போதகரிடம், “இந்தப் புற்று நோயை நான் வெறுக்கிறேன்,” என்று சொன்னார்கள். அதை அவர்கள், மிகுந்த வேதனையுடன் சொன்னார்கள் என்பதை, எல்லாராலும் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தப் புற்று நோய், அவர்களது மகனை அழித்துக்கொண்டிருந்தது. தனது அன்புக்குரிய மகனை அழிக்கும் ஒரு காரியத்தை, அவர்கள் வெறுத்தார்கள்.
அன்பும், வெறுப்பும், பெரும்பாலும் இயல்பான பங்காளர்களைப்போலவே, வேதாகமத்தில் ஒருமித்துக் காணப்படுகின்றன: “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” (ரோமர் 12:9). இவை, ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாம் தீமையை வெறுக்கவில்லையெனில், நன்மையை நாம் விரும்பவில்லை என்பதாகும். மெய்யான அன்பு, நேசிக்கப்படுகிற ஒருவரை அழிப்பதாயிருக்கிற அனைத்தையும் வெறுக்கிறது.
தேவன் அன்பாகவே இருக்கிறார். மற்றும் அவர் பரிசுத்தராய் இருக்கிறார். மேலும் அவர், ஏகசக்கராதிபதியாயும் இருக்கிறார். இதற்கு, அவர் அனைத்தின் மீதும் பரிபூரணமான அதிகாரமுடையவராயிருக்கிறார் என்பது பொருளாகும். அவரது பிரசன்னமாயிராத இடம் என்று ஒன்று இல்லை. அவரால் நிறைவேற்ற முடியாத எந்தவொரு பணியும் இல்லை. அதற்கு, அவர் யாரையும் அனுமதி கேட்கவேண்டிய ஒரு தேவையுமில்லை.
புற்று நோயால் மரித்துக்கொண்டிருந்த அந்த மகனின் தாயார், அவனை அழித்துக்கொண்டிருந்ததை எதிர்த்து நிற்பதில் விடாப்பிடியாய் இருந்தார்கள். ஆனால், அதை மேற்கொள்வதற்கு, அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இல்லை. தேவன், தீமையை எதிர்க்கும் தமது நிலைப்பாட்டில், ஓய்ந்துவிடாதிருக்கிறார். அத்துடன், அதன் நாசகார சக்தியை மேற்கொள்வதற்கும் வல்லவராயிருக்கிறார். தாம் நேசிக்கும் தமது ஜனங்களை அழிக்கும் பாவத்திலிருந்து, அவரால் தப்புவிக்க முடியும். மேலும், அவரது அன்பு ஒருபோதும் குன்றிப்போகாது.
தேவனுடைய கோபம் என்பது, தீமை நிலை நிற்காது என்கிற, அவருடைய தீர்க்கமான தீர்மானமேயாகும். நாம் அதற்காகத் தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும். தேவன் வெறும் ஒரு வெறுப்புப் புன்னகையுடனோ, அதிருப்தியான பார்வையுடனோ மட்டுமே, பயங்கரவாதத்தால் சூழப்பட்டுள்ள உலகத்தைப் பார்த்திருப்பாரானால், சமாதானத்தைக்குறித்து நாம் என்ன நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும்? தீமையும், வன்முறையும் இருக்கக்கூடிய இந்த உலகத்தில் நமது நம்பிக்கை, இடைவிடாமல் அனைத்துத் தீமைகளுக்கும் எதிர்த்து நிற்பவரும், அதை அழிப்பதற்குச் சித்தமும், வல்லமையும் கொண்டவருமானதொரு தேவனிடத்தில்தான் இருக்கிறது.
தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரது தன்மையில் கோபமே கிடையாது. இவ்வுலகில் பாவமே இருந்திராவிடில், தேவனிடத்திலும் கோபமே இருந்திருக்காது. ஆகவே வேதாகமம், தேவன் கோபமாகவே இருக்கிறார் என்று ஒருபோதும் சொல்லுவதில்லை. அவர் நீடிய சாந்தமுள்ளவராய் இருக்கிறார் என்றே அது நமக்குச் சொல்கிறது (சங்கீதம் 103:8).
வேதாகமக் கதையும், தீமையானதோர் உலகை நோக்கி வெளிப்பட்ட அவரது மாபெரும் சாந்தத்தையே விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால் தேவன், கோபத்திற்குத் தூண்டப்பட முடியும். அந்தக் கோபம், தேவபக்தியற்ற தன்மையாலும், அநீதியாலுமே தூண்டப்படுகிறது. “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” (ரோமர் 1:18).
தேவபக்தியற்ற ஒரு நபர், தேவனோடு எதற்கும் உடன்பட்டு நடக்க விரும்பாதவர். அநீதியான ஒரு நபர் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவர். தேவபக்தியற்ற மற்றும் அநீதியான நபர், “நான் உம்மை அறிந்துகொள்ள விரும்பவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படியவும் மாட்டேன்,” என்று தேவனிடம் சொல்கிற ஒருவர்.
இப்படிப்பட்ட அந்த நபர், அதைத் தொடர்ந்து செய்யும்பொருட்டு, சிருஷ்டிப்பின் அழகிலும், மகத்துவத்திலும், தேவன் தம்மைப்பற்றி வெளிப்படுத்தியுள்ள, “சத்தியத்தை அடக்கிவைக்கவேண்டும்”. சக்திவாய்ந்த ஒரு கம்பிச் சுருளின் மீது அழுத்தம் கொடுப்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதை அழுத்தி வைத்திருக்க, உங்கள் முழு எடையையும் அதன் மீது போடவேண்டும். அப்படிச் செய்வதற்குச் சக்தி தேவைப்படுகிறது. ஒரு கணப்பொழுது அதை நீங்கள் விட்டுவிட்டாலும், கம்பிச் சுருள் தளர்ந்துவிடும்.
அதைப்போலவே, தொடர்ந்து தேவனை எதிர்த்துக்கொண்டிருப்பதற்கும் சக்தி தேவைப்படுகிறது. தேவனோடு எதற்கும் உடன்பட்டு நடக்க விரும்பாதவர்கள், அவரைத் தவிர்ப்பதற்குக் கடினமாய் உழைக்க வேண்டும். ஏனெனில், அவரது வெளிப்பாடுகள் நம்மைச் சுற்றி எங்கிலும் இருக்கின்றன. அவர் தமது தெய்வீக வல்லமையையும், தமது மகிமையையும், சிருஷ்டிப்பின் மகத்துவத்தில் அறியப்பண்ணியிருக்கிறார் (ரோமர் 1:20).
“தேவகோபம்” என்பது முறையற்றதொரு சீற்றம் அல்ல. கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறவராக அல்லது எரிச்சலுற்ற மனநிலையில் எதையும் செய்வதாய் தேவனைக் கற்பனை செய்யக்கூடாது. தேவனுடைய கோபம், ஜனங்களை அவர்கள் விருப்பப்படுவதற்கே ஒப்புக்கொடுத்துவிடுவதில் வெளிப்படுத்தப்படுகிறது: “அவர்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்” (ரோமர் 1:24-28).
ஒரு தனிநபர் அல்லது சமூகம், “எங்களுக்குத் தேவன் வேண்டாம். நாங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்,” என்று சொல்லும்போது, அவர்களைத் தங்களது சொந்த விருப்பங்களின் முழு உண்மை நிலையிலேயே வாழும்படி அனுமதித்து, தேவன் தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். மணிப்பளிங்கினால் ஆன ஜாடி ஒன்றைக் கையில் பிடித்திருக்கும் ஒரு பெண்மணியைக் கற்பனை செய்யுங்கள். அவர்கள் “அதை விட்டுவிடுகிறார்கள்,” எனில், அது புவி ஈர்ப்பு விசைக்குக் கீழ்ப்பட்டதாகி, கல்லைப் போல கீழே விழுந்து, நொறுங்கும். தேவபக்தி அற்றவர்களையும், அநீதியானவர்களையும், தேவன் “விட்டுவிடுகிற” தருணங்களிலும் அதுதான் நிகழ்கிறது.
உங்கள் இருதயத்தில், அசுத்தத்தை அல்லது இழிவான இச்சைரோகங்களையும் நீங்கள் கண்டால், நீங்கள்: “தேவன் என்னை விட்டுவிட்டாரா? அப்படித் தேவன் என்னை விட்டுவிட்டாரானால், இனி எனக்கு நம்பிக்கையே இல்லை என்று அர்த்தமா?” என்று யோசிக்கலாம்.
யாருமே நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களல்ல. ஆகவேதான் பவுல், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்” (ரோமர் 1:16), என்று சொல்கிறார். தங்களது சொந்தப் பாவங்களின் வல்லமையால் மூழ்கடிக்கப்பட்டுவரும் மக்களைத் தேவன் இரட்சிக்கிற வழி, சுவிசேஷமே.
தேவகோபம் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், அது சிறிதளவுதான். ஒருபோதும் நீதிக்கு முன் நிறுத்தப்படாத தீமைகளாலும், ஒருபோதும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாத பொய்களாலும் மனித வரலாறு நிறைந்ததாயிருக்கிறது. ஆனால், அது எப்பொழுதும் அப்படியே இருந்துவிடாது. தேவன் நம்மிடத்தில் மாபெரும் பொறுமையைக் காண்பித்துவருகிறார். அவரது கருணையின் நோக்கம், நாம் அவரிடத்தில் மனந்திரும்பி வரவேண்டும் என்பதேயாகும்.
“…தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துவைக்கிறாயே” (2:4-5).
நாம் குவித்துவைத்துக்கொள்ள விரும்பும் அநேகக் காரியங்கள் உள்ளன. ஆனால், கோபம் அவற்றுள் ஒன்றாக இல்லை. நம்மை அழிக்கிற அனைத்தையும் தேவன் அழித்துவிடுவார். நமக்கும், நம்மை அழித்துவிடக்கூடிய பாவத்துக்குமிடையே ஒரு பிரிவு இருக்கவேண்டும் என்பதே நம்பிக்கைக்குரிய ஒரே நிலையாகும்.
தேவகோபத்தின் ஒரு சில பகுதிகள்தான் இன்று வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், அது மனந்திரும்ப மறுப்பவர்களிடத்தில், அவருடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பு வெளிப்படுத்தப்படப்போகும் அந்த நாளுக்காகக் குவித்துவைக்கப்பட்டுவருகிறது. வேதாகமம், தேவனுடைய கோபம் வெளிப்படுத்தப்பட்ட மூன்றாவதான ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசுகிறது.
தேவன், இயேசுவைத் தமது கோபம் பொழிந்து ஊற்றப்பட்ட ஒருவராகக் காண்பித்தார். நாம் அடுத்த பாடத்தில் காணப்போகிறபடி, “கிருபாதார பலி” என்னும் சொல்லின் பொருள் இதுதான். பவுல், “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தினாலே, தேவன் அவரையே கிருபாதார பலியாக ஏற்படுத்திய, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்” குறித்துப் பேசுகிறார் (3:24-26). நம்மை அழிக்கிறதான அனைத்தையும் இடைவிடாமல் எதிர்க்கும் தேவனின் எதிர்ப்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையின் மீது மரித்தபோது, அவர்மேல் ஊற்றப்பட்டது.
பாவத்தின் மீதான தேவனுடைய கோபம் இயேசுவின்மேல் ஊற்றப்பட்டபோது, அவரில் விசுவாசம் கொள்ளும் அனைவருக்காகவும் அது, வடிந்தோடவிட்டுக் கொட்டித் தீர்க்கப்பட்டது. தேவன், “… விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொ(ள்வேன்) …” (எசேக்கியேல் 7:8), என்று சொல்கிறார். “தீர்க்கப்பட்டது” என்றால், போய்விட்டது என்று பொருள். இது, சிலுவையில் நிகழ்ந்ததின் மையத்திற்கு நம்மைக் கொண்டுசெல்கிறது. பாவத்தின் மீதான தேவகோபம், இயேசு நமது பாவங்களுக்கான கிருபாதார பலியாக ஆனபோது, அவர்மேல் ஊற்றப்பட்டது அல்லது கொட்டித் தீர்க்கப்பட்டது.
இந்தப் பாவங்களை இயேசுவின்மேல் வைப்பதன் மூலம், தேவன் தாம் வெறுக்கும் பாவங்களைத் தாம் நேசிக்கும் ஜனங்களிடமிருந்து பிரிப்பதற்கான ஒரு வழியைக் கண்டார். “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21).
தேவன், “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார்” (ரோமர் 8:32). “ஒப்புக்கொடுத்தார்” என்ற தொடரைக் கவனியுங்கள்! தேவன், தமது குமாரனைவிட்டுத் தமது கரத்தை எடுத்துக்கொண்டுவிட்டார். கிறிஸ்து, பாதாளத்தில் விட்டுவிடப்பட்டார். அவர், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்,” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார் (மத்தேயு 27:46). பிதாவின் நேசத்துக்குரியவராயிருந்த கிறிஸ்து, அவரது கோபத்துக்குரிய பொருளானார். ஏனெனில், பிதாவின் கோபத்துக்குரியவர்களான நாம், அவரது நேசத்துக்குரியவர்களாயிருந்தோம்.
மணிப்பளிங்கினாலான ஜாடியைக் கையில் பிடித்திருக்கும் அந்தப் பெண்மணியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அதைத் தனது வலது கையினால் விட்டுவிடும்போது, அந்த ஜாடி உடைந்து சிதறுவது நிச்சயம் என்றே தோன்றுகிறது. ஆனால் அவர்கள், அதைத் தனது இடது கையினால் பிடித்துக்கொள்ளும்போது, அது காப்பாற்றப்பட்டுவிடும். இயேசு கிறிஸ்துவில், தேவன் நமக்காகச் செய்வதும் அதுதான். நமது அழிவை நோக்கி நம்மை வழிநடத்தும் பாவங்களிலிருந்து, அவர் நம்மைக் காக்கிறார்.
தேவனுடைய கோபத்திற்குள்ளாகி, அவரது பிரசன்னத்திலிருந்து நிரந்தரமாகப் புறம்பே தள்ளப்படுவதென்பது பேரழிவின் உச்சக்கட்டமாக இருக்கும். இதனுடன் வேறு எந்தவொரு துயரமும் ஒருபோதும் ஒப்பாக முடியாது. எனவே, கோபாக்கினை இயேசுவின்மேல் தீர்க்கப்பட்டாயிற்று எனும்போது, நீங்கள் ஏன் உங்களுக்கென்று குவித்துவைக்கப்பட்ட கோபாக்கினையோடு வாழவேண்டும்? இயேசுவின் நீதியை உங்களுடையது என்று தேவன் கணக்கிடத் தயாராக இருக்கும்போது, நீதியைக் குறித்து உங்களுடைய சொந்த, பலவீனமான முயற்சிகளில் நீங்கள் ஏன் விசுவாசிக்கவேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். உங்கள் மீது இரக்கமாயிருந்து, உங்களை ஒரு புதிய மற்றும் மாற்றமடைந்த நபராகச் செய்யும்படிக் கேளுங்கள்.
தேவகோபமானது, தீமைக்கு அவரது பரிசுத்தம் மற்றும் அன்பு ஆகியவற்றின் பதிலுரையாகும். கோபங்கொள்வது என்பது, தேவனுடைய தன்மையில் இல்லை. ஆனால், தேவனுடைய கோபம், அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள சத்தியத்தை அடக்கிவைக்கிற, மனிதர்களுடைய தேவபக்தியற்ற தன்மை மற்றும் அநீதி ஆகியவற்றால் தூண்டப்படுகிறது. தேவன், ஜனங்களைத் தங்களது சொந்தத் தீர்மானத்திற்கே ஒப்புக்கொடுத்துவிடுவதன் மூலம், தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதன் விளைவாக, அவர்கள் அசுத்தப் பாவ இச்சைகள், இழிவான இச்சைரோகங்கள், மற்றும் கேடானதொரு சிந்தை ஆகியவற்றின் வல்லமையால் கட்டப்பட்டுப்போகிறார்கள்.
ஆனால், தேவன், தமது கோபத்திலிருந்து நம்மை விடுவிக்க தமது குமாரனை அனுப்பியுள்ளார். இயேசு சிலுவையின்மேல் மரித்தபோது, அவர் நமக்காகத் தேவனுடைய கோபத்தைச் சுமந்தார். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" (ரோமர் 8:1).
1. நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில், ஒருவரை நேசிக்கிற அதே நேரத்தில், அவரை அழிப்பதான காரியத்தை வெறுப்பதையும் எப்பொழுது அனுபவித்திருக்கிறீர்கள்?
2. தேவன் கோபப்பட முடியும் என்பதை நம்புவது உங்களுக்குக் கடினமாகத் தோன்றுகிறதா? ஏன் அல்லது ஏன் இல்லை?
3. வேதாகமத்தின்படித் தேவகோபம், உலகில் இன்று எப்படி வெளிப்படுத்தப்படுகிறது?
4. “தேவன் என்னைக் கைவிட்டுவிட்டார்,” என்று சொல்கிற ஒரு நபருக்கு, நீங்கள் எவ்வாறு பதில் சொல்வீர்கள்?
5. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1). இந்தப் பிரமிப்பான சத்தியத்திற்கு, நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?