2 இராஜாக்கள் 17:6-28
யோவான் 14:1-7
1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
5. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
இயேசு பரமேறியபோது, இரண்டு தேவதூதர்கள் சீஷர்களிடம், "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்," என்றார்கள் (அப்போஸ்தலர் 1:11). கிறிஸ்து மீண்டும் வரப்போகிறதான அந்த மாபெரும் நாளுக்காகக் கிறிஸ்தவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விசுவாசியும் அந்த நாளில் பங்குகொள்வார். ஏற்கெனவே மரித்தவர்கள், அவரோடுகூட வருவார்கள். பின்பு, இன்னும் உயிரோடிருக்கும் நாமும், கர்த்தருக்கு எதிர்கொண்டுபோய், ஆகாயத்தில் அவரைச் சந்திப்போம் (1 தெசலோனிக்கேயர் 4:14, 17).
இயேசு, தாம் மீண்டும் வரப்போகிறதைப் பற்றி அடிக்கடிப் பேசினார். ஆனால், அவர் மரிப்பதற்கு முந்தைய இரவில் பேசியதைவிடத் தெளிவாக, வேறு ஒருபோதும் பேசியதில்லை. அது, எல்லாமே தவறாகப் போவதுபோலத் தோன்றியதோர் இராப்போஜனமாகும். கடைசி இராப்போஜனத்தின் சம்பவத்தை நாம் சற்றுத் திரும்பிப் பார்ப்போமானால், இன்றைய நமது போராட்டங்களுக்கெல்லாம், இயேசுவின் வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்டுபிடிப்போம்.
அந்த மாலை வேளையின் முற்பகுதியிலேயே இயேசு, பந்தியில் இருப்போர்களுள் யாரோ ஒருவர், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறார் என்று சொன்னதன் மூலம், தமது நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர்கள்: “ஆண்டவரே, நானோ, நானோ?” என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள் (மத்தேயு 26:22). யாருமே, “ஆண்டவரே, அது யுூதாசோ?” என்று கேட்கவில்லை. அவர், மிகமிக நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவராயிருந்தார். யுூதாஸை அவர்கள், பணத்துக்கே பொறுப்பாளராக நியமித்திருந்தார்களே! நீங்கள் ஒரு நபரை நம்பாத பட்சத்தில், அவரிடம் உங்கள் பணத்தைக் கொடுப்பதில்லை.
இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்த யோவான், அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று அவரிடம் கேட்டார். அதற்கு இயேசு, “நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான்,” என்று சொன்னார் (யோவான் 13:26). சொன்னபின்பு, அந்தத் துணிக்கையைத் தோய்த்து, யூதாசுக்குக் கொடுத்தார்.
இயேசுவைக் காட்டிக்கொடுக்க, யூதாஸ் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்பொழுது அவரது மனதில் இறுதித் தீர்மானம் செய்யப்பட்டது. யோவான், “அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான்” (யோவான் 13:27), என்று நமக்குக் கூறுகிறார். நிகழ்வுகளின் வரிசைப்படுத்துதலைக் கவனியுங்கள். சாத்தான், தனது கிரியைகளுக்காகப் பூரணமாய்த் திறந்துவிடப்பட்டிருந்த ஒரு மனத்திற்குள் புகுந்தான். அதன்பின்பு, யூதாஸ் புறப்பட்டுப்போனான். யோவான், “அப்பொழுது இராக்காலமாயிருந்தது” (யோவான் 13:30), என்று சொல்கிறார்.
இன்னும் மோசமான செய்திகள் வர இருந்தன. இயேசு, “பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்” (13:33), என்று சொன்னார். கிறிஸ்துவைப் பின்பற்றிச் செல்வதற்காகச் சீஷர்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். அவர்கள், எல்லாவற்றிலும் அவரையே சார்ந்திருந்தார்கள். இப்பொழுதோ, மூன்று ஆண்டுகளே கடந்திருந்த நிலையில் அவர், இன்னும் கொஞ்சக்காலம் மட்டுமே தாம் அவர்களோடு இருக்கப்போவதாக, அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார்.
இந்த உலகிலேயே உங்களுக்கு மிகவும் முக்கியமானவராகிய ஒரு நபர், இன்னும் கொஞ்சக்காலம் மட்டுமே உங்களோடிருப்பார் என்று கூறப்படுவது, ஒரு மனிதரால் தாங்கிக்கொள்ளவே முடியாத, மிகவும் கடினமான அனுபவங்களுள் ஒன்று ஆகும். கடைசி இராப்போஜனத்தில் சீஷர்கள் சந்தித்தது இதைத்தான்.
இயேசுவிடமிருந்து பிரிக்கப்படுவதை நினைத்துப் பார்ப்பதற்கே, பேதுருவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் உடனே, இயேசுவுக்காகத் தனது ஜீவனை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். ஆனால் இயேசு அவருக்குப் பிரதியுத்தரமாக, “எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (13:38), என்றார்.
இவ்வளவு மோசமான செய்திகளைச் சந்திக்கவேண்டிய ஒரு நாள், சீஷர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஒரே நாள் மாலையில், நம்பிக்கைக்குரிய ஒரு தலைவர், இரட்சகரைக் காட்டிக்கொடுப்பார், இயேசுதாமே அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிடுவார், மற்றும் அவரது முன்னணிச் சீஷர் தனது விசுவாசத்தை மறுதலித்துப்போவார் என்பதான காரியங்களை, அவர்கள் அறிய நேர்ந்தது.
அதற்கடுத்து இயேசு சொன்னது, நிச்சயமாக நிலைகுலையவைப்பதாகத் தோன்றியிருக்கவேண்டும்: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” (யோவான் 14:1). நிகழ்ந்திருக்கக்கூடிய அனைத்தின் அடிப்படையிலும் பார்க்கும்போது, இயேசு இதைச் சொல்வது எப்படிச் சாத்தியமாகும்?
ஒரு சில முக்கியமான விஷயங்களுக்காகச் சபை கூடி வந்திருக்கும், ஒரு கூடுகையைக் கற்பனை செய்துபாருங்கள். நிர்வாகக் குழுவின் தலைவர், கூட்டத்தை ஜெபத்துடன் தொடங்கியபின், மூன்று முக்கியமான அறிவிப்புகளை அவர் செய்யவேண்டியிருப்பதாகக் கூறுகிறார்.
“முதலாவது, இன்னும் ஒரு சில நாட்களில், நமது தலைமைப் போதகர் இங்கிருந்து செல்லவிருக்கிறார் என்பதை வருத்தத்துடன் நான் அறிவிக்கவேண்டியிருக்கிறது. இரண்டாவது, சபையின் பொருளாளர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிலையில் அவர் பணத்தை என்ன செய்தார் என்பதுபற்றி நமக்கு உறுதியான தகவல்கள் இல்லை. மூன்றாவது, நமது மூத்த மூப்பர் தனது விசுவாசத்தை மறுதலித்திருக்கிறார். மேலும் அவர், இனிமேல் சபையுடன் இணைந்திருக்க விரும்பவில்லை,” என்று அவர் சொல்கிறார்.
இந்தப் பயங்கரமான செய்திகளடங்கிய, மூன்று அறிவிப்புகளால் சபையானது, துக்கத்துக்குள்ளாகியது. ஆனாலும், தலைவர் தொடர்ந்து. “உங்களில் சிலருக்குக் கேள்விகள் எழும்பலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் சொல்ல விரும்பும் முதலாவது விஷயம் என்னவெனில், உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக!” என்று சொல்கிறார்.
யூதாஸ் செய்ததைப்போல, யாராவது உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் முன்மாதிரியாகக் கருதிப் பார்த்துக்கொண்டுவந்த ஒரு தலைவர், பேதுருவைப்போல மறைவான ஒரு பலவீனம் உள்ளவராகக் காணப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் யாரை நம்பி உங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்பிக்கொண்டுவந்திருக்கிறீர்களோ, அந்த நபர் உங்களுடன் இனிமேல் இல்லை என்கிற சூழ்நிலையில், நீங்கள் எப்படிச் சமாளிப்பீர்கள்? இவற்றுக்கான பதில், இயேசுவின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது.
இயேசு அந்த அறையைச் சுற்றிலும் பார்த்து, தமது கண்களால், தமது சீஷர்களின் ஆத்துமாக்களை உற்றுப் பார்த்தார். அவர், “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக் தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (14:1), என்று சொன்னார்.
இயேசு அவர்களிடம், குருட்டுத்தனமானதொரு விசுவாசத்துக்குத் தயாராகும்படியெல்லாம் சொல்லவில்லை. அவர், “தற்போது நீங்கள் செய்யவேண்டுமென்று நான் எதிர்பார்ப்பது இதுதான். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்! என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்!” சீஷர்கள், அவரது அற்புதங்களைக் கண்டார்கள். அவரது வார்த்தைகளைக் கேட்டார்கள். அவரோடேகூட மூன்று ஆண்டுகள் இருந்தார்கள். இப்பொழுது, அவர்கள் இயேசுவைக் குறித்து என்னவெல்லாம் அறிந்திருந்தார்களோ, அவற்றின்மேல் சார்ந்திருக்கவேண்டியிருந்தது. இந்த மாபெரும் இருளின் தருணத்தில் கிறிஸ்து, வெளிச்சத்தில் அவர்களுக்குப் போதித்தவற்றை விசுவாசிக்கும்படியாக, அவர்களை அழைத்தார்.
தம் மீது விசுவாசம் வைத்திருப்பதைச் செயல்படுத்துமாறு அவர்களை அழைத்த பின்னர், இயேசு எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் பேசி, “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு” (14:2), என்றார். இது, பல்வேறு குடும்ப உறவுகள் கொண்டதொரு மாபெரும் குடும்பம், பிதாவின் வீட்டில் ஒன்றாக வசிப்பதைக் குறிக்கிறது.
தமது பிதாவின் வீட்டில், அநேக வாசஸ்தலங்கள் இருப்பதைப் பற்றி இயேசு இங்கே பேசுவதில், ஒரு விசேஷித்த வேடிக்கையான முரண்பாடு அமைந்துள்ளது. இயேசு பிறந்தபோது, பெத்லகேமில் அவருக்கு இடமேயில்லை. சத்திரக்காரருக்குச் சிறியதொரு வீடு இருந்தது. அதன் எல்லா அறைகளும் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. அதன் விளைவாக, “இப்பொழுது கவலைப்படாதிருங்கள்; நான் உங்களது இடத்திற்கு வந்தபோது இருந்ததைப்போல், நீங்கள் எல்லாரும் என் வீட்டிற்கு வரும்போது இராது! பெத்லகேமைப்போல, அது மிகுந்த கூட்டமும், நெருக்கடியுமாய் உங்களுக்கு இருக்காது. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் இருக்கின்றன!” என்று இயேசு தமது நண்பர்களிடத்தில் கூறியபோது, அவரது முகத்தில் ஒரு புன்னகை அரும்பியிருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
அந்த மாலைப் பொழுதின் பிற்பகுதியில் இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்் நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (14:23), என்று சொன்னபோது அவர், வீட்டைப் பற்றி மீண்டும் பேசினார். உண்மையாகவே இயேசு, “நாங்கள் அவனோடே தங்குவோம்,” என்று சொன்னார். தேவன், தாம் திரும்பி வரும்வரை, பரிசுத்த ஆவியானவர் மூலமாக, நம்முடன் “தங்கியிருப்பார்” என்றும், அதன்பின்பு நாம், அவருடன் “தங்கியிருப்போம்” என்றும் இயேசு நமக்குக் கூறுகிறார். ஒரு நாள் நீங்கள் தேவனோடேகூடச் சென்று வாசமாயிருக்கப்போகிற காலம் வரையில், அவர் உங்களோடேகூட வந்து வாசமாயிருப்பார்!
இயேசுவின் சீஷர்களுடைய வருங்கால இல்லம் நிச்சயமானதொன்றாகும். இயேசுவின் ஒளிவுமறைவில்லாத பேச்சைக் கவனியுங்கள்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு் அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2). சீஷர்களின் எதிர்காலம் எவ்விதத்திலாவது நிச்சயமற்றதாய் இருந்திருந்தால், இயேசு அதையும் சொல்லியிருப்பார். ஆனால் பரலோகத்தில் அவர்களது எதிர்காலம், உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்தக் காரணத்துக்காகவே, அவர்கள் கலக்கமடையவில்லை.
பிதாவின் வீட்டைக் குறித்து விவரித்த பின்னர், தமது சீஷர்கள் எப்படி அங்கே போவார்கள் என்று விளக்கினார்: “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (14:2).
நமது வருகைக்காகப் பரலோகத்தை ஆயத்தம் செய்வதில், இயேசு ஓய்வின்றி, 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார் என்று நாம் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. கிறிஸ்து, ஒரு வார்த்தையினாலே, இந்த உலகம் முழுவதையும், ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கினார்; ஒரே ஒரு கட்டளையினால், விசுவாசிகளுக்காகப் பரலோகத்தை ஆயத்தமாக்க, அவரால் முடியும்.
இயேசு, “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்,” என்று சொன்னபோது, அவர் போவதால், அந்த ஸ்தலம் ஆயத்தம்பண்ணப்படும் என்ற அர்த்தத்தில்தான் சொன்னார். கிறிஸ்து, தமது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலின் மூலமாக, விசுவாசிப்போர் யாவருக்கும் பிதாவினுடைய வீட்டின் மகிமைக்குள் பிரவேசிப்பதற்கான வழியைத் திறந்துவிட்டார். அவரது மரணமும், உயிர்த்தெழுதலும், அந்த ஸ்தலத்தை ஆயத்தமாக்கி, விசுவாசிப்போர் யாவருக்கும் சேர்த்து, மொத்தமான முன்பதிவு செய்துவிட்டன. இதன் காரணமாகவே இயேசு, “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக,” என்று சொல்கிறார்.
“நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (14:3). இயேசு, “நான் இந்த மரணத்தின் வேதனையினூடாகக் கடந்து சென்று, அதன்பின்பு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும்படிப் பரலோகத்திற்கு ஏறிச் சென்றபின், நான் நிச்சயமாகவே உங்களை அங்கே கொண்டுசேர்ப்பேன்,” என்று சொன்னார்.
நீங்கள் ஒரு விலையேறப்பெற்ற மோதிரத்திற்காக, உங்களது ஆயுட்காலச் சேமிப்பையும் செலவு செய்யவேண்டியிருந்தால், காசோலையை எழுதிக் கொடுத்துவிட்டு, மோதிரத்தையும் விலைக்கு வாங்கிவிட்டு, அதன்பின்பு, அந்த மோதிரத்தைப் பணம் செலுத்திய மேஜையின்மேலேயே விட்டுவிட்டு வந்துவிடுவீர்கள் என்பது யோசித்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. விலையைச் செலுத்திவிட்ட நிலையில் அந்த மோதிரம், உங்களது பொக்கிஷமாகும். அதை நீங்கள் உங்களது இல்லத்திற்குக் கொண்டுவருவீர்கள்.
இதனால்தான் இயேசு தம் சீஷர்களிடம், அவர்கள் இருதயம் கலங்கக்கூடாது என்றும், மாறாக, தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கவேண்டும் என்றும் கூறினார். அவர்கள், யூதாஸ் வெளியேறுவதைப் பார்த்துவிட்டார்கள். அவர்கள், பேதுரு தவறிவிடுவார் என்பதைக் கேட்டுவிட்டார்கள். மேலும், இயேசு அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டுவிட்டது. அவர்களது உலகமே புரண்டு விழுந்துவிட்டதைப்போல் அவர்களுக்குக் காணப்பட்டது. ஆனாலும் அப்படி ஆகவில்லை. இயேசு அவர்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப் போய்க்கொண்டிருந்தார். ஆகவே, அவர்களையெல்லாம் அவர், தமது வீட்டிற்குக் கொண்டுவருவார் என்பதைக் குறித்து, அவர்கள் நிச்சயத்தோடிருக்க முடிந்தது.
பரலோகத்தைக் குறித்த மகிமையான எதிர்பார்ப்பு, கண் காணாத தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், நமது அன்றாட வாழ்வின் பிரச்சினைகளுக்கிடையே நம்மை நிலைநிறுத்த, அந்த வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
போதகர் ஸ்மித், தங்களது குளியலறையைப் புதிதாக மறுவடிவமைத்தபோது, மரக்கட்டைகளும், குழாய்களும் வெளியில் தெரியும்படியாகக் காணப்பட்டன. மேலும் உட்புறக் கூரையில், புதிய விளக்குக்கான ஒரு துவாரமும் இருந்தது. அந்த இடம் புழக்கத்தில்தான் இருந்தது. ஆனால், எதுவுமே அது இருக்கவேண்டிய விதத்தில் இல்லை. தன்னுடைய மனைவி அவ்விடத்தின் நிலைமையைப் பார்த்தபோது, அவர் ஒரு நிறைவுபெறாத வேலையைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார் என்றும், இதைப்போலவே அது எப்பொழுதும் இருக்கப்போவதில்லை என்றும் அவர் அவருக்கு நினைவுூட்டினார். அவர், ‘உன் இருதயம் கலங்காதிருப்பதாக,’ என்று அவருடைய மனைவியிடம் சொன்னார்.
உலகத்தை மீட்கிறதான தேவனின் திட்டம், செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை. இந்த உலகத்தில் நமது வாழ்க்கையும், பெரும்பாலும் ஒழுங்கற்ற, குழப்பம் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால் இயேசு, “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக,” என்று சொல்கிறார். நீங்கள் முடிக்கப்படாத ஒரு வேலையைக் காண்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் இப்பொழுது காண்பது, அது இருக்கவேண்டிய விதத்தில் இல்லை.
நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது, நீங்கள் முற்றுப்பெறாத ஒரு வேலையைப் பார்க்கிறீர்கள். புது வாழ்வானது, ஏற்கெனவே உங்களில் தொடங்கியிருக்கிறது. ஆனால், நீங்கள் இன்னும் மாம்சத்தின் இழுபறியுடன் போராடுகிறீர்கள். நீங்கள் யாராக இருக்கப்போகிறீர்களோ, அந்த நபராக இன்னும் நீங்கள் ஆகவில்லை. பேதுருவைப்போல, நீங்கள் உங்களது தோல்விகளையும், வெற்றிகளையும் உடையவராய் இருக்கிறீர்கள். ஆனால், அது எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை. கிறிஸ்து வருகிறார். அவர் தோன்றும்போது, நீங்கள் எப்படி இருக்கவேண்டுமென்று தேவன் உண்டாக்கியிருக்கிறாரோ, அதன் முழுமையில் நீங்கள் இருப்பீர்கள். ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
இன்று கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய, மிக முக்கியமான மற்றும் நடைமுறைக்குரிய ஒரு சத்தியம், இயேசு மறுபடியும் வருகிறாரென்பதாகும். அழிவுக்கேதுவான செய்திகளைச் சந்திக்கக்கூடிய தருணங்கள் உங்களுக்கு நேரிடலாம். தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றும், எதிர்காலம் எப்படித்தான் இருக்கும் என்றும் நீங்கள் யோசித்துக் குழம்பலாம். ஆனால் இயேசு, உங்கள் இருதயம் கலங்காதிருக்கட்டும் என்று உங்களுக்குக் கூறுகிறார். தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கவும், தம்மைப் பற்றி அவர் வெளிப்படுத்தியவற்றின் மீது சார்ந்துகொள்ளவும், அவர் உங்களை அழைக்கிறார். உங்களிலும், இந்த உலகத்திலும் தேவனுடைய கிரியை, இன்னும் முற்றுப்பெறாத ஒரு திட்டமாயிருக்கிறது. ஆனால், இயேசு மகிமையில் மறுபடியும் வரும்போது, அது முழுமையாக்கப்படும்.
1. கடைசி இராப்போஜனத்தின்போது, சீஷர்கள் இருந்த சூழ்நிலையில் உங்களை வைத்துப் பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். துர்ச்செய்திகளுள் எப்பகுதி, உங்களுக்கு மிகவும் கலக்கமளிப்பதாக இருந்திருக்கக்கூடும்? ஏன்?
2. நீங்கள் இருளில் இருந்ததாக உணர்ந்த ஒரு நேரத்தையும், அந்த நேரத்தில், நீங்கள் ஏற்கெனவே இயேசுவைப் பற்றி அறிந்திருந்தவை அனைத்தின்மேலும் நீங்கள் சார்ந்துகொள்ளவேண்டியிருந்ததையும் குறித்து உங்களால் நினைவுகூர முடியுமா?
3. இயேசுவின், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” என்ற வார்த்தைகளுக்கு, உங்களது பதில் என்ன?
4. 1 முதல் (நம்பிக்கையின்மை), 10 வரை (பூரண நம்பிக்கை) வரையுள்ள அளவுகோலில், விசுவாசிகளைப் பரலோகத்தில் கொண்டுசேர்க்க, இயேசு மறுபடியும் வருவார் என்பதைக் குறித்து நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையோடிருக்கிறீர்கள்? ஏன்?
5. தேவனின் முற்றுப்பெறாத கிரியையை நீங்கள் எங்கே காண்கிறீர்கள்? “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக,” என்னும் இயேசுவின் வார்த்தைகளைப் பொருத்திப் பாரப்பது, எங்கே மிகவும் அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?