2 இராஜாக்கள் 17:6-28
லூக்கா 23: 26-49
26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
32. குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
35. ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
38. இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44. அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48. இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49. அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நீங்கள் சிலுவையண்டையில் நின்றிருந்திருப்பீர்களானால், இயேசுவின் கரங்கள் மற்றும் பாதங்களினூடாக, ஆணிகள் கடாவப்பட்டு இறங்கும் ஓசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். அவரது இரு பக்கங்களிலும், இரு குற்றவாளிகள் சிலுவையிலறையப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேலும், "இவன் யூதருடைய ராஜா" (லூக்கா 23:38), என்று, பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் அவரது தலைக்கு மேலாக, நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயேசு, ஆறு மணி நேரமளவாகச் சிலுவையில் தொங்கினார். அந்த நேரத்தில் நிகழ்ந்தவை, வேதாகமக் கதையின் இதயம் போன்ற, அதன் மையப் பகுதிக்கு, நம்மைக் கொண்டுசெல்கின்றன.
இயேசு மரித்ததான அந்த நாள், மனித வரலாற்றிலேயே மிகவும் இருண்டதொரு நாள். இருப்பினும், இரட்சிப்புக்கான தேவனின் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டதும், இந்நாள்தான். சிலுவையிலே, நமது பாவம், அதன் முழுப் பயங்கரத்தையும், மற்றும் அதன் மிக கோரமான முகத்தையும் காட்டுவதை எட்டியது. தேவனுடைய கட்டளைகளையெல்லாம் மீறிவிட்டு, இப்பொழுது நாம் தேவகுமாரனைச் சிலுவையிலறைந்துகொண்டிருந்தோம்.
மனித வரலாற்றிலேயே, தேவனுடைய நியாயத்தீர்ப்பு விழுந்திருக்கக்கூடிய ஒரு தருணம் எப்பொழுதாவது இருந்திருக்குமானால், அது இதுதான். ஆனால் இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34), என்று கதறிக் கூப்பிட்டார்.
தேவனுடைய நியாயத்தீர்ப்பு அந்த நாளில் வருமென்று, கிறிஸ்து அறிந்திருந்தார். ஆனால் அவர், “அதை அவர்கள்மேல் விழவிடாதேயும். அது என்மேல் விழட்டும். என்மேல் மட்டுமே விழட்டும். அவர்களது பாவத்தின் மீதான உமது நியாயத்தீர்ப்பின் இடிதாங்கியாக நான் இருக்கட்டும்,” என்று சொன்னார். பூமியின் மீது சாபம் விழுந்தபோது, அது ஆதாமின்மேல் விழாமல் தேவன் தடுத்துக் காத்ததைப்போலவே, சிலுவையைச் சூழ்ந்து நின்றிருந்தவர்களை, அவர்களுடைய மற்றும் நம்முடைய பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பு இயேசுவின்மேல் விழுந்த இந்தத் தருணத்திலும், தேவன் தடுத்துக் காப்பாற்றினார்.
இதுதான் சுவிசேஷத்தின் மையப் பகுதியாகும். நமது பாவங்களுக்காக இயேசு, தேவனுடைய நியாயத்தீரப்புக்குக் கீழாக நின்றார். தண்டனையை நம்மைவிட்டுத் திசைதிருப்ப, அவர் பிதாவை நோக்கிக் கூப்பிட்டு, அந்தத் தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டார். அப்படித்தான், மன்னிப்புக் கடந்து வருகிறது.
இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,” என்று ஜெபித்தபோது, அந்த ஜெபத்திற்குள், அவரைக் குற்றஞ்சாட்டிய ஆசாரியர்களும், அவரைப் பரிகசித்த கூட்டத்தாரும், மற்றும் அவரைச் சிலுவையிலறைந்த போர்ச்சேவகர்களும் அடங்கியிருந்தனர். அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போன சீஷர்களும், அவருக்காகக் காத்திருந்த, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும்கூட, அவரது ஜெபத்திற்குள் அடங்கியிருந்தனர்.
இயேசுவின் ஜெபம், அவரிடத்தில் வருகிறதான ஒவ்வொரு நபருடைய பாவத்தையும் மூடுகிறதாயிருந்தது. அவரைச் சிலுவையில் ஆணிகளால் அறைந்தவர்களின் பாவங்களையே, அவருடைய ஜெபம் மூடக்கூடுமானால், உங்களுடைய அனைத்துப் பாவங்களையும்கூட மூடுவதற்கு, அது போதுமானதாய் இருக்கிறது.
இயேசுவிடமிருந்து சில அடிகளுக்கப்பால், தன் வாழ்க்கையைத் துயரமானதொரு விதத்தில் வீணடித்துவிட்ட, ஒரு மனிதர் இருந்தார். குற்றங்களால் நிறைந்த வாழ்வையே தன் வாழ்க்கை முறையாய்க் கொண்டிருந்த அவர், மனித நியாயத்தீர்ப்பை அடைந்து, இப்பொழுது அதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தார். விரைவிலேயே, மரணம் அவரது பாடுகளிலிருந்து அவரை விடுவித்துவிடும். ஆனால் அதன்பின்பு, அவர் தேவ பிரசன்னத்திற்குள் பிரவேசித்து, தேவ நீதியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவரது நிலைமை, நம்பிக்கையற்ற ஒன்றாகக் காணப்பட்டது.
இம்மனிதர், இயேசுவைக் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்துக்கு முன்புதான், அவர் மற்றொரு குற்றவாளியுடன் சேர்ந்துகொண்டு, இயேசுவின் கூற்றுக்களையெல்லாம் பரியாசம் செய்துகொண்டிருந்தார். ஆனால், மரணம் நெருங்கி வரவர, ஏதோ மாற்றம் உண்டாயிற்று. ஒரு பாவி, தேவ சமூகத்திற்குள் பிரவேசிப்பது எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு புதிய உணர்வை அடைகிறவராக அவர் காணப்பட்டார். இனிமேலும் இயேசுவைப் பரியாசம் செய்துகொண்டிருப்பது சரியானதாக அவருக்குத் தோன்றவில்லை.
இயேசு சிலுவையிலறையப்பட்டபோது அவர், தன்னைச் சிலுவையில் ஆணிகளால் அறைந்தவர்கள் மன்னிக்கப்படும்படியாக ஜெபித்தார். ஒருவேளை அம்மனிதர், இயேசுவால் இந்தப் போர்ச்சேவகர்களை மன்னிக்கக் கூடுமானால், அவரால் என்னையும் மன்னிக்கக்கூடும், என்று நினைத்திருப்பார். ஆகவே அவர் இயேசுவிடமாய்த் திரும்பி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” (23:42), என்று சொன்னார். அதற்கு இயேசு, “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (23:43), என்று பதிலளித்தார்.
பரதீசு! இம்மனிதரின் வாழ்க்கையே, அழிவுக்கேதுவான தீர்மானங்களின் ஒரு தொடராயிருந்தது. ஆனால் இயேசு, நித்திய சந்தோஷத்திற்குரிய ஒரு வாழ்வுக்குள், மரணத்தின் வழியாகவே, உடனடியாக இடமாற்றம் செய்வதாக, அவருக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். அந்த நாள் முடிவடைவதற்குள், இயேசு அவரைத் தேவ சமூகத்திற்குள் நடத்திச் செல்வார். உலகம் ஒரு பொருட்டாகவே கருதாத இம்மனிதர் திடீரென்று, ஒரு மனிதப் பிறவி தன் வாழ்நாளில் அறிந்திராத மிகப்பெரிய சந்தோஷத்திற்குள், இயேசுவின் காரணமாகப் பிரவேசிக்கப்போகிறதைக் கண்டார்.
இந்த மனிதரின் கதை, வாழ்க்கையில் எவ்வளவு தாமதமாயினும், விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும், தம்மிடத்தில் திரும்பும் எந்தவொரு நபருக்கும், இயேசு கிறிஸ்து செய்யக்கூடியது என்ன என்பதைக் குறித்த, பிரமிக்கத்தக்கதோர் உதாரணம். பரலோகம், கிறிஸ்துவின் இல்லம். அவர், அதன் திறவுகோல்களை வைத்திருக்கிறார். மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் அவரிடத்தில் திரும்புகிறவர்கள் என்னதான் செய்திருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் அந்த இல்லத்தை அவர் திறந்துவிடுகிறார்.
இயேசு, காலை ஒன்பது மணியளவில் சிலுவையிலறையப்பட்டார். அவரது பாடுகளின் முதல் மூன்று மணி நேரங்களின்போது, அவர் தமது எதிரிகளுக்காக ஜெபித்து, விசுவாசத்தில் தம்மை அணுகிய ஒரு குற்றவாளியின் ஜெபத்திற்குப் பதிலளித்தார். பின்பு, நண்பகல் வேளையில், “பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று” (23:44). மேலும், அதையடுத்த மூன்று மணி நேரங்களுக்குக் கிறிஸ்து, தமது பாடுகளின் கொடுமையான பகுதிக்குள் பிரவேசித்தார்.
அந்த அந்தகாரத்தில் நிகழ்ந்தவை என்ன என்பது, நாம் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது. ஆனால், தேவன் நமக்குக் கூறியிருப்பவை காரணமாக, நாம் அறிந்திருக்கிற சில காரியங்கள் உள்ளன.
இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது பாவங்களைச் சுமந்தார். “அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேதுரு 2:24). “பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21). “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). இயேசு, தம்முடைய மரணத்திற்குள் உங்களது பாவங்களைச் சுமந்தார். அதினிமித்தம், நீங்கள் அவற்றை உங்களது மரணத்திற்குள் சுமந்து செல்ல மாட்டீர்கள்.
நம் பாவங்களைச் சுமந்துகொண்டார் என்பதற்கு, நம்மேல் வரவேண்டிய தண்டனையை, இயேசு சுமந்தார் என்பது பொருள்: “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” (ஏசாயா 53:5). நரகத்தின் முழுக்கொடுமையையும் இயேசு, சிலுவையில் சகித்தார். அவர், அடர்ந்த காரிருளில், பிசாசின் வல்லமைகளால் சூழப்பட்டுத் தன் சுய நினைவோடு பாடுகளை அனுபவித்தார். அவர் பாவத்தின் குற்றத்தைச் சுமந்து, தேவ கோபாக்கினையைத் தம்மேல் இழுத்துக்கொண்டு, இவையனைத்தோடுங்கூட, பிதாவின் அன்பு என்கிற ஆறுதலிலிருந்து பிரிக்கப்பட்டவராய்த் தன்னந்தனியே இவற்றையெல்லாம் சகித்தார்.
நரகம் என்ற ஒன்று மெய்யாகவே இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி, மக்கள் அடிக்கடிப் பேசுவதுண்டு. நரகம், சிலுவையைப்போலவே அவ்வளவு நிஜமானது. கிறிஸ்து, காரிருளில் நரகத்தின் முழுப்பரிமாணத்திற்குள்ளும் பிரவேசித்தார். நரகம் என்பது எப்படிப்பட்டது என்று நீங்கள் ஒருபோதும் அறியாதிருக்கும் பொருட்டே, அவர் இதைச் செய்தார்.
தமது பாடுகளின் ஆழத்தில், இயேசு மிகுந்த சத்தமிட்டு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயு 27:46) என்று கூப்பிட்டார். இந்தத் துயரத்தின் ஆழத்தை எந்த வார்த்தைகளாலும் விவரிக்கவே முடியாது. பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும், எப்பொழுதுமே ஒரே ஜீவனையும், ஒரே அன்பையும், ஒரே நோக்கத்தையும், ஒரே சித்தத்தையும் பகிர்ந்துவந்தார்கள். ஆனால், தேவகுமாரன் நம்முடைய பாவங்களைச் சுமக்கிறவராக ஆனபோது, பிதாவுடைய அன்பின் ஆறுதல்கள், அவருக்கு எட்டாத தொலைவுக்குச் சென்றுவிட்டன. அவர், முற்றிலும் தனிமையாக, வானத்துக்கும் பூமிக்கும் நடுவில், அவையிரண்டினாலும் புறக்கணிக்கப்பட்டவராகத் தொங்கினார்.
மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, இயேசுவின் மீது ஊற்றப்பட்ட நியாயத்தீர்ப்பு, நிறைவேறித் தீர்ந்தது. நீதி திருப்தி செய்யப்பட்டது. இயேசு, “முடிந்தது” (யோவான் 19:30), என்று ஜெயமாய் முழங்கினார். நமது பாவங்களுக்கான, தேவனின் நீதியுள்ள நியாயத்தீர்ப்பு, இயேசுவின்மேல் விழுந்தது. அவர் அதை உறிஞ்சிக்கொண்டார். அவர் அதைத் தம்மேல் வடிந்தோடவிட்டார். அவர் அதை முற்றிலுமாய் வெளியேற்றித் தம்மேல் வாங்கிக்கொண்டார். நரகமானது, இயேசுவை விசுவாசிப்போர் யாவருக்காகவும், அவர்மேல் தானே எரிந்து, கருகிப்போனது.
நமது பாவங்களுக்காகத் தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்ததன் மூலம், மன்னிப்பை வெளியாக்கிப் பரதீசைத் திறந்ததனால், செய்யும்படியாகப் பிதா தமக்கு அளித்திருந்த அனைத்தையும், இயேசு செய்து முடித்துவிட்டார். யுத்தம் முடிந்துவிட்டது் ஜெயங்கொள்ளுதலும் நிகழ்ந்துவிட்டது. மீதமிருப்பதெல்லாம், இயேசு தமது ஜீவனை ஒப்புக்கொடுக்கவேண்டியது மட்டுமே. அவர் மகா சத்தமாய்க் கூப்பிட்டு: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்று சொன்னார் (லூக்கா 23:46).
யாரேனும் மரிக்கும்போது, அவர்களது பெலன் குன்றிவிடுகிறது மற்றும் அவர்களது குரல் பெலவீனமாகிவிடுகிறது. மரிக்கும் தறுவாயில், யாருமே மகா சத்தமாய்ப் பேசுவதில்லை. ஆனால் இயேசு பேசினார்.
இயேசு மரணத்தைக் கண்டு, கலங்கிவிடவில்லை. அவர், “ஒருவனும் அதை (என் ஜீவனை) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான் . . . . அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு” (யோவான் 10:18), என்று சொன்னார். கிறிஸ்துவின் ஜீவன், எடுக்கப்படவில்லை. மாறாக, அது கொடுக்கப்பட்டது. அவர் தம்மைத்தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார் (கலாத்தியர் 2:20).
மரணத்தைக் குறித்து, நாம் அனைவரும் நடந்து கடக்கவேண்டியதொரு காரிருளின் பள்ளத்தாக்கென்று, வேதாகமம் கூறுகிறது. காரிருளின் பள்ளத்தாக்குகள், பயமுறுத்தும் இடங்களாகும். அதிலும் குறிப்பாக, எதிரிகள் அங்கே பதுங்கியிருப்பார்களானால், சொல்லவே வேண்டாம். ஆனால், கிறிஸ்து மரணப் பள்ளத்தாக்கினூடே கடந்து சென்று, எதிரிகளையெல்லாம் அப்புறப்படுத்தியிருக்கிறார். இன்றளவும்கூட, மரணம் ஓர் இருண்ட இடம்தான். ஆனால், இயேசுவுக்குச் சொந்தமான அனைவருக்குமே, அது பாதுகாப்பான இடமாகும்.
நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், உங்களது மரணத் தறுவாய் நெருங்கும்போது, இயேசுவுடன் இணைந்து, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்று உங்களால் சொல்ல முடியும். நீங்கள் பிதாவின் கைகளில் பாதுகாப்பாக இருப்பீர்கள். மரணமானது, உணர்வற்ற நிலைக்கோ, ஒரு மிக நீண்ட ஆயத்தமாகுதலின் காலப்பகுதிக்கோ நடத்திச் செல்லாது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோவதென்பது, கர்த்தரிடத்தில் குடியிருப்பதாகும் (2 கொரிந்தியர் 5:8).
அநேக மக்கள், தேவன் தங்களுக்கு எதிராய் இருக்கிறார் என்ற உணர்வுடனேயே, வாழ்க்கையைக் கடந்து செல்கிறார்கள். ஆனால், இங்கே நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று இருக்கிறது. அது, பிதாவை உங்களில் அன்புகூரச் செய்யும் பொருட்டு, இயேசு இந்த உலகிற்குள் வந்து, சிலுவையில் மரிக்கவில்லை என்பதேயாகும். பிதா உங்களில் அன்புகூர்கிற காரணத்தால், அவர் இந்த உலகிற்குள் வந்து, சிலுவையிலே மரித்தார். உங்கள் மீதான தேவனுடைய அன்பின் அளவையறியும் ஒரு வழி எதுவெனில், உங்கள் வாழ்வின் சந்தோஷங்களையும், ஆசீர்வாதங்களையும் பட்டியலிட்டுப் பார்ப்பதாகும். எனவே, நீங்கள் நல் ஆரோக்கியம் உடையவராய், உங்களை நேசிக்கும் மக்கள் மத்தியில் வசித்து, நீங்கள் சந்தோஷமாய்ச் செய்கிறதான வேலையும் உங்களுக்கிருந்தால், இந்த வெகுமதிகள் யாவும் தேவனுடைய அன்பின் அடையாளங்கள் என்று, இவற்றிலெல்லாம் நீங்கள் களிகூரலாம்.
ஆனால் ஒருவேளை, அந்தச் சிறப்பான வேலையை நீங்கள் இழந்துவிட்டால்? அல்லது, உங்கள் குடும்பத்தில் யாரேனும் சுகவீனமாகிவிட்டால்? அல்லது, நீங்கள் நேசிக்கும் நபர், உங்கள் மீது பிடிப்பை இழந்துவிட்டால்? பிறகு எவ்வாறு நீங்கள், தேவன் உங்களை நேசிக்கிறார் என்று அறிந்துகொள்வீர்கள்? நீங்கள் உங்களது அனுபவங்களிலிருந்து, தேவனுடைய அன்பை உணர முயற்சி செய்தால், நீங்கள் எப்பொழுதுமே குழப்பத்தில்தான் இருப்பீர்கள். ஆசீர்வாதங்கள் வரும்போது, தேவன் உங்களை நேசிக்கிறார் என்று எண்ணுவீர்கள். கஷ்டங்கள் வரும்போது, அவர் உங்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார் என்று உணர்வீர்கள். அத்துடன், அவரது அன்பைக் குறித்த உணர்வை, அது உங்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும்போது, நீங்கள் இழந்துவிடுவீர்கள்! விழுந்துபோன இந்த உலகத்தில் உங்களது வாழ்க்கை அனுபவங்கள், எப்பொழுதுமே குழப்புகிறவையாகத்தான் இருக்கும். அதற்காகத்தான், நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க வேண்டும். இந்த உலகில், உங்களது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நீங்கள் தேவனுடைய அன்பை அளவிடுவீர்களானால், தேவன் உங்களை அன்பு செய்கிறார் என்கிற நிச்சயமான முடிவிற்கு வர, உங்களால் ஒருபோதும் முடியாது.
தேவன் உங்களை அன்பு செய்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாய் அறிந்துகொள்ளக்கூடிய வழி இதோ: அவர் உங்களுக்காகத் தமது குமாரனைக் கொடுத்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9).
ஆதி காலத்திலிருந்தே, தேவன் செய்யத் திட்டமிட்ட ஒவ்வொன்றும், சிலுவையில் நிறைவேற்றப்பட்டது. இயேசு நம் பாவத்தைச் சுமந்தார். நமக்கான நரகத்தைச் சகித்தார். மேலும் அவர் பிதாவினால் கைவிடப்பட்டார். தமது பாடுகளின் மூலமாக, அவர் நமக்கான மன்னிப்பைப் பெற்றுத் தந்தார். நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கினார். பரலோகத்திற்குள் நாம் நுழைவதை உறுதிப்படுத்தினார்.
நீங்கள் எப்பொழுதாவது, உங்கள் மீதான தேவனுடைய அன்பைக் குறித்துச் சந்தேகம் கொள்கிறவராகக் காணப்பட்டால், சிலுவையை நோக்கிப் பாருங்கள்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).
1. இயேசு சிலுவையிலறையப்பட்ட அந்த நாளில், நீங்கள் அங்கே இருந்திருந்தால், நீங்கள் பார்த்திருக்கவும், கேட்டிருக்கவும்கூடிய சில காரியங்கள் யாவை?
2. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,” என்று இயேசு ஜெபித்தபோது, அந்த ஜெபத்திற்குள் யாரெல்லாம் அடங்கியிருந்தனர்?
3. சிலுவையில் தொங்கிய அந்தக் கள்ளனுக்குத் தாம் செய்ததை, இயேசு யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?
4. இயேசு சிலுவையின்மேல் தொங்கியபோது, அந்த மூன்று மணி நேரங்கள் அளவிலான காரிருள் வேளையில், என்ன நடந்துகொண்டிருந்தது?
5. தேவன் உங்களில் அன்புகூர்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?