2 இராஜாக்கள் 17:6-28
மத்தேயு 4 : 1-11
1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2. அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8. மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11. அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
இயேசு தமது பொதுவான ஊழியத்தைத் தொடங்கியபோது, அவர் முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது, பரிசுத்த ஆவியானவர் அவர் மீது இறங்கினார். மேலும், வானத்திலிருந்து கேட்கத்தக்கதான ஒரு சத்தம் உண்டாகி, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று உரைத்தது (மத்தேயு 3:17). பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவராய், இயேசு வனாந்தரத்திற்குள் சென்றார். அங்கே, நாற்பது நாட்களுக்கு நீடித்ததான, கடுமையான சோதனையின் காலக்கட்டத்தை அவர் சகித்தார்.
நூற்றுக்கணக்கான கணினிகள், ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள, ஓர் அலுவலகத்தைக் கற்பனை செய்துபாருங்கள். ஓர் எதிரி, அந்த ஒட்டுமொத்த அலுவலகத்தின் கணினிகளையும் அழித்துப்போடத் திட்டமிட்டிருந்தால், அவர் ஒரு பயங்கர வைரஸை வடிவமைத்துவிட்டால் போதும். அது, ஒருமுறை சர்வருக்குள் செலுத்தப்பட்டுவிட்டால், மொத்தக் கட்டமைப்பிலும் உள்ள ஒவ்வொரு இயந்திரத்துக்கும் தானே சென்றுவிடும். அந்த வைரஸானது, சிறிது சிறிதாக, ஒவ்வொரு கணினியிலும் உள்ள ப்ரோக்ராம்களைச் சிதைத்துவிடும். அதன் விளைவாக, ஒரு சில பகுதிகள் ஓரளவுக்கு நன்றாக வேலை செய்தாலும், எதுவுமே, முன்புபோல் செயல்படாது.
கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வைரஸை அகற்றிச் சீர்ப்படுத்தும் பரிகாரத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாமற்போனால், மொத்தக் கட்டமைப்பும், உள்ளிருந்தே அழிக்கப்பட்டுவிடும். ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பே அந்த வைரஸை, எதிரியின் சார்பில் பரவச் செய்துவிடுவதால், எதிரி தனிப்பட்ட முறையில் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் உள்ள கம்ப்யூட்டருக்குச் சென்று, அதை அழித்துக்கொண்டிருக்கத் தேவையிருக்காது. அனைத்து இயந்திரங்களுமே ஒரே கட்டமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், ஒரு வைரஸே ஒவ்வொரு பகுதியையும் அழித்துவிடும்.
ஆனால், ஒரு கணினி மட்டும் மையக்கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திலுள்ள மற்ற அனைத்து இயந்திரங்களும் சீர்கெட்டிருந்தபோது, இணைக்கப்படாமல் தனியே நிற்கும் அந்த ஒரே ஒரு இயந்திரம் மட்டும், வைரஸின் நாசகாரச் சக்தியிலிருந்து விடுபட்டதாக இருக்கிறது. எதிரி இந்த இயந்திரத்தை அழிக்க விரும்பினால், உள்ளிருந்து அழிக்க முடியாத அதை, அவர் வெளியிலிருந்துதான் தாக்கவேண்டியிருக்கும்.
நெட்வொர்க்குடன் இணைக்கப்படாத கணினியானது, இயேசு எவ்வாறு முழு மனிதராயிருக்கிறார், இன்னும் மனித இனத்தின் மற்ற ஒவ்வொரு உறுப்பினரையும் பாதிக்கும், பாவத்தின் கெடுக்கும் சக்தியிலிருந்து, எப்படி விடுபட்டார் என்பதைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். அவர் தம் சுபாவத்திலேயே, பாவத்தைக் குறித்த நாட்டம் எதுவும் கொண்டிருக்கவில்லை.
இது, இயேசுவுக்கான சோதனைகள் உண்மையானவைதானா, என்ற கேள்வியை எழுப்புகிறது. நாம் நமது சுயமான, தீய இச்சையினாலேயே கவர்ந்து இழுக்கப்படுகிறோம் (யாக்கோபு 1:14). ஆனால், கிறிஸ்து பாவ சுபாவம் அற்றவராயிருந்தபடியால், நமது போராட்டத்தை அவர் எப்படி அறியக்கூடும்?
பாவமற்றிருப்பதும், சோதிக்கப்படுவதும் சாத்தியமே என்பதை, ஏற்கெனவே நாம் வேதாகமக் கதையிலிருந்து அறிந்திருக்கிறோம். ஆதாமும், ஏவாளும் தோட்டத்தில் இருந்தபோது, சோதனையானது, அவர்களுக்குள்ளிருந்து வரவில்லை. ஆனால், எதிரியானவனின் நேரடித் தாக்குதலின் மூலம், அது வெளியிலிருந்து வந்தது. அது இயேசுவின் சோதனையிலும் அப்படித்தான் இருந்தது.
தோட்டத்தில் சாத்தானின் தாக்குதலை நாம் கண்டபோது, மூன்று உபாயங்களை அவன் பயன்படுத்தினான் என்று நாம் பார்த்தோம். குழப்பம் உண்டாக்குதல், துணிகரத்தைத் தூண்டிவிடுதல் மற்றும் சுய ஆதிக்கத்தை எழுப்புதல் ஆகியவையே அவை.
இது, வெறும் ஒரு பழங்கதையாக இருக்குமானால், அது நாம் ஆர்வம் காட்டுவதற்கு மதிப்பற்றதாயிருக்கும். ஆனால், தோட்டத்தில் நிகழ்ந்த சம்பவமானது, இன்றைய உங்களுடைய மற்றும் என்னுடைய வாழ்க்கையில், நேரடியான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அப்போஸ்தலராகிய பவுல் எழுதியதுபோல், “ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்ட(னர்)” (ரோமர் 5:19).
மனிதர்கள், கடற்கரையில் கிடக்கும் கூழாங்கற்களைப் போன்றவர்களல்லர்; நாம் ஒரு மரத்தின் மீது இருக்கும் இலைகள் போன்றவர்கள். வேரிலிருந்து நோயானது பரவிவருகிறது. பாவத்தின் கருகல் நோய், ஒவ்வொரு இலையிலும் தோன்றுகிறது. நாம், துண்டிக்கப்பட்டப் பகுதிகள் கிடையாது் நாம் ஒரே குடும்பமாயிருக்கிறோம். மேலும், நாம் ஒரே மையக் கிளையிலிருந்து வந்தவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, போதகர் ஸ்மித்தின் தாய்நாடான, இங்கிலாந்து தேசம், பெருமளவில் பரவியதான, கோமாரி நோயினால் (Foot-and-mouth disease) மிகவும் பாதிக்கப்பட்டது. ஒரு பசுவினிடத்தில் அந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த மொத்த மந்தையும் கொல்லப்படுவதற்கு நியமிக்கப்பட்டது.
மனுக்குலத்தின் துயரம் இதுதான்: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கி(றோம்)” (1 கொரிந்தியர் 15:22). மனுக்குலத்தின் தலைவனாக, ஆதாம் பாவம் செய்தார். அவரது பாவம், முழுமந்தைக்கும் மரணத்தைக் கொண்டுவந்தது. இந்த ஒப்புமையைச் சற்று மாற்றிக் கூறவேண்டுமானால், ஆதாமின் பாவத்தின் வழியாக, ஒரு கிருமி மனுக்குலத்தின் ஒருங்கிணைக்கப்பட்டக் கட்டமைப்பில் நுழைந்து, அது தன்னைத்தானே அனைத்து மூலை, முடுக்குகளிலும் பரவச் செய்துகொண்டது என்று சொல்லலாம். அதைத் தடுக்க, ஃபயர்வால் கட்டமைப்புப் பாதுகாப்பு இல்லை.
எப்பொழுதுமே, தேவன்தான் தொடக்க நடவடிக்கையை எடுக்கிறார். ஏதேன் தோட்டத்தில் சாத்தான், ஆதாமையும், ஏவாளையும் தேடி வந்தான். ஆனால், ஆதாம் தோற்ற அதே காரியத்தில், எதிரியானவனை எதிர்கொள்ளவும், அவனை ஜெயங்கொள்ளவும், தேவ ஆவியானவர், இயேசுவை வனாந்தரத்திற்குள் கொண்டுபோனார் (மத்தேயு 4:1).
வனாந்தரத்தில் சாத்தானின் தந்திரங்கள் யாவும், ஏதேன் தோட்டத்தில் அவன் பயன்படுத்தியவையே. குழப்பம், துணிகரம் மற்றும் சுய ஆதிக்கம் என்பவையே அவை.
முதலாவது, இயேசுவின் மனதில் தாம் யாரென்பதைக்குறித்தே, சாத்தான் குழப்பத்தை உருவாக்க முயற்சித்தான்: சோதனைக்காரன், “நீர் தேவனுடைய குமாரனேயானால் . . .” (4:3) என்று தொடங்கினான். சாத்தான், “நீர் அதைப்பற்றி மெய்யாகவே நிச்சயமாய் இருக்கிறீரா?” என்று கேட்டான். “தேவன்தாம் உம்முடைய பிதா என்றால், அவர் உம்மைப்பற்றி அப்படி ஒன்றும் நல்ல முறையில் அக்கறை எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லையே? சரி… நீர் அனைத்துக் காரியங்களையும் உம் கைகளில் எடுத்துக்கொள்ளும் – இந்தக் கல்லுகளை அப்பங்களாக மாற்றும்!” என்றான்.
அதன் பின்பு எதிரியானவன், தனது உபாய தந்திரங்களைத் திசைதிருப்பி, அதற்கு மாறான வேறொரு வாக்குவாதத்தைப் பயன்படுத்தினான். கிறிஸ்துவிடம், அவர் யாரென்பதைக்குறித்துக் கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக, இப்பொழுது அவன், அதை உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டான். ஆகவே, தேவகுமாரனாகக் கிறிஸ்துவுக்கு இருக்கும் பாதுகாப்பை, தனது இரண்டாவது சோதனைக்கான அடிப்படையாகப் பயன்படுத்த முயற்சித்தான். “தேவன்தாம் உமது பிதா என்கிற பட்சத்தில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் உமக்கான அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்பதைப் பற்றி நீர் நிச்சயத்தோடிருக்கலாம். ஆகவே, மற்ற யாரும் கனவுகூடக் காணாத சாகசக் காரியங்களை நீர் முயற்சி செய்துபார்க்கலாமே! நீர் இந்தத் தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து தாழக்குதிக்கவுங்கூடச் செய்யலாம். தேவதூதர்கள் அப்படியே உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோய்த் தரையில் விட்டுவிடுவார்கள். எனவே, என்ன தயக்கம்? துரிதமாய் அதைச் செய்யும்!” என்றான்.
மூன்றாவது சோதனையானது, பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவது, இயேசுவுக்கு எத்தனை விலையேறப்பெற்ற ஒன்றாயிருக்கும் என்பதைப் பற்றியே இருந்தது. “இதற்கு நீர் எவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்தவேண்டுமென்று யோசித்துப்பாரும்! இதற்கொரு சுலபமான வழி இருக்கவேண்டுமே! நீர் மட்டும் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், என்னால் இந்த உலகத்தின் ராஜ்யங்களையெல்லாம் உமக்குத் தர முடியும்,” என்றான்.
கிறிஸ்து, தன்னை நசுக்கவே வந்தார் என்பதைச் சாத்தான் அறிந்திருந்தான். எனவே, தன்னைத் திணறடிக்கக்கூடியதோர் எதிரியைச் சந்திக்கும் எந்தவொரு சேனைத் தளபதியும் செய்யக்கூடியதான செயலையே அவனும் செய்தான். அவன், ஒரு தற்காலிகப் போர்நிறுத்த உடன்பாட்டை முன்வைத்தான். கிறிஸ்து, பிதாவின் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்தவராய் நடந்து, சிலுவையை நோக்கிச் செல்லாதவரையில் சாத்தான், உலகமுழுவதும் இயேசுவின் போதனைகளால் நிரம்பியிருப்பதற்குச் சந்தோஷமாய் உடன்பட்டிருப்பான். ஆனால் இயேசு, சமரசப் பேச்சுவார்த்தைக்கே இடமளிக்கவில்லை.
கிறிஸ்து, பாவமற்ற சுபாவமுள்ளவராய் இருந்தபோதிலும், அவர் எதிர்கொண்ட சோதனையானது, நாம் அறிந்ததைவிடக் கடுமையாக இருந்தது.
ஒரு யுத்தத்தின்போது, எதிரியின் எல்லை மீது ஜெட் விமானங்களில் பறந்துகொண்டிருக்கும், மூன்று விமானப்படை வீரர்களைக் கற்பனை செய்யுங்கள். அந்த விமானங்கள் சுடப்பட்டுத் தரையிறக்கப்பட்டு, அவர்கள் பிடிபட்டு, அதன்பின் எதிரியால் விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்படுகிறார்கள். ஒவ்வொருவராக, அவர்கள் ஓர் இருட்டறைக்குள் கொண்டுவரப்படுகிறார்கள்.
முதலாம் விமானப்படை வீரர், தனது பெயர், தகுதி மற்றும் வரிசை எண் ஆகிய விவரங்களைத் தருகிறார். அவர், தான் தரவே கூடாதென்று அறிந்திருக்கிற தகவல்களைத் தருமாறு, அவர்கள் அவரை மிகவும் நெருக்குகிறார்கள். எதிரிகள், மிகவும் கொடூரமானவர்கள், மற்றும், அவர்கள் கடைசியில் தன்னைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிடுவார்கள் என்றும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே, ஏன் அந்தக் கொடுமைகளையெல்லாம் கடந்து செல்லவேண்டும்? அவர், தானறிந்தவற்றையெல்லாம் கூறிவிடுகிறார்.
இரண்டாவதாக ஒரு விமானப்படை வீரர், உள்ளே கொண்டுவரப்படுகிறார். அவரும், தன் பெயர், தகுதி மற்றும் வரிசை எண் ஆகியவற்றைக் கொடுக்கிறார். அவர்கள், தகவல்களுக்காக அவரைப் பிழிந்தெடுக்கத் தொடங்குகிறார்கள். அவர், விட்டுக்கொடுக்கக் கூடாதென்று தீர்மானத்துடன் இருக்கிறார். எனவே, கொடுமை தொடங்குகின்றது. கடைசியில் அது, அவரை மேற்கொண்டுவிடுகிறது. அவர் தளர்ந்துபோய், அவர்களிடம் தானறிந்தவற்றையெல்லாம் கூறிவிடுகிறார்.
அதன்பின்பு மூன்றாவதான விமானப்படைவீரர், உள்ளே வந்து, தன் பெயர், தகுதி மற்றும் வரிசை எண்ணைக் கொடுக்கிறார். அவர், “நீங்கள் என்னை உறுதி குலையச்செய்யப்போவதில்லை,” என்கிறார்.
“நாங்கள் நிச்சயமாய்ச் செய்வோம். எப்பொழுதுமே, இந்த அறைக்குள் வந்த ஒவ்வொரு மனிதனையும், நாங்கள் நொறுக்கியிருக்கிறோம். அதற்கான காலம் எவ்வளவு என்பதுதான் அதில் விஷயமே் நீ பார்க்கத்தான் போகிறாய்,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கொடூரம் தொடங்குகிறது. ஆனால், அவர் தளர்ந்துவிடவில்லை. அது இன்னும் தீவிரமாக்கப்படுகிறது. அவரோ, இன்னும் தளராமலிருக்கிறார். எனவே மீண்டும் அது, தாங்க முடியாத அளவுக்கு ஆகும்வரையில் தீவிரமாக்கப்படுகிறது. ஆனால், அவர் இன்னும் உறுதி குலையாதிருக்கிறார்.
கடைசியாக, அவர்கள் கற்ற அத்தனை வித்தைகளையும் முயற்சித்துப் பார்த்தாயிற்று, என்கிறதான ஒரு கட்டம் வருகிறது. அவர்கள், “இது பயனற்றது. நாம் இந்த அறையில் வைத்து விசாரித்ததான, மற்ற யாரைப்போலவும் இம்மனிதன் இல்லை. நம்மால் இவனை உறுதி குலையவைக்க முடியவில்லை,” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இப்பொழுது, இந்த மூன்று விமானப்படை வீரர்களுள், எதிரியின் முழு வலிமையையும் எதிர்கொண்டவர் யார்?
உறுதி குலையாதிருந்த அந்த ஒருவரே, எதிரியின் தாக்குதலின் முழு வலிமையையும் அறிந்த ஒரே நபராவார். எனவே, கிறிஸ்துவுக்கு நேர்ந்த சோதனைகள், உங்களுக்கு நேர்ந்தவற்றைவிடவும் குறைவானவை என்று ஒருபோதும் எண்ணிவிடாதீர்கள். சோதனையின் முழு வலிமையையும் கிறிஸ்து மட்டுமே அறிந்திருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து மட்டுமே, எதிரியின் தாக்குதலின் முழு வலிமையையும் தாக்குப்பிடித்து நின்றவர். இயேசு, எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார். ஆனாலும், அவர் பாவமில்லாதவராயிருந்தார் (எபிரெயர் 4:15).
இயல்பிலேயே, நாம் அனைவரும் ஆதாமிடமிருந்து வந்தவர்கள். அந்த வழியில், அவருடன் பிணைக்கப்பட்டிருப்பதைப்போலவே, ஆண்களும், பெண்களும், “கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டிருப்பதும்,” அல்லது, வேதாகமம் கூறுவதுபோல், “அவருடன் ஐக்கியமாக இருப்பதும்,” விசுவாசத்தால் சாத்தியமாகும் (ரோமர் 6:5).
ஆதாமுடன் நாம் இணைக்கப்பட்டிருந்ததன் மூலம், அவருடைய தோல்வியின் பின்விளைவுகள், நமக்கும் பரவியதைப்போலவே, கிறிஸ்துவுடன் நாம் இணைக்கப்பட்டிருப்பதன் மூலமாக, அவரது வெற்றியின் பின்விளைவுகள், நமக்குள்ளும் பரவும். “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” (ரோமர் 5:19).
தோட்டத்தில் முதல் மனுஷன் பாவம் செய்தார். அதன் விளைவாக, முழு மனுக்குலமும் நியாயத்தீர்ப்புக்குள்ளானது. ஆனால், தேவன் நம்மை அங்கேயே, அந்நிலையிலேயே விட்டுவிடவில்லை. தேவகுமாரனானவர், நமது மனித சரீரத்தைத் தரித்தவராய், “இரண்டாம் மனுஷன்” (1 கொரிந்தியர் 15:47) ஆனார். இந்த இரண்டாம் மனுஷன், நமது எதிரியை எதிர்த்து நின்றார். முந்தின ஆதாமின் தோல்வி, அவரது முழுக் குடும்பத்திற்கும் மரணத்தைத் தந்ததைப்போலவே, பிந்தின ஆதாமின் வெற்றி, அவருடையவர்களாயிருக்கிற நம் அனைவருக்கும் ஜீவனைத் தருகிறது (1 கொரிந்தியர் 15:45).
மனுக்குல வரலாறு, ஆதாம் மற்றும் கிறிஸ்து என்னும் இவ்விரு மனிதர்களைச் சுற்றியே சுழல்கிறது. மனுக்குலம் முழுவதும், ஆதாமுடனான கட்டமைப்பில் உள்ளது. அதனால், நாம் மரணத்திற்குள் நம்மை நடத்துகிறதான, பாவம் என்றழைக்கப்படும் நோயினால் துன்புறுகிறோம். தேவன் மட்டும் நம்மை அப்படியே விட்டுவிட்டிருந்தால், நாம் எந்தவொரு நம்பிக்கையும் அற்றவர்களாய் இருப்போம்: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கி(றோம்)” (1 கொரிந்தியர் 15:22). ஆனால், இயேசு கிறிஸ்துவுடன் ஒன்றாய் இணைக்கப்பட்டவர்களாலான, வேறொரு கட்டமைப்பைக் கட்டியெழுப்பத் தேவன் தீர்மானித்தார். அவர்கள், சரீரப்பிரகாரமான பிறப்பினால் அவருடன் இணைக்கப்படவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியானவரால் புதிதாகப் பிறப்பதன் மூலமாக இணைக்கப்படுகிறார்கள்.
ஆதாமுடைய பாவங்களின் பின்விளைவுகள், அவரது கட்டமைப்பு முழுதும் பரவி, அவரது சந்ததியினர் அனைவருக்கும் சீர்கேட்டையும், மரணத்தையும் கொண்டுவருவதைப் போலவே, இயேசுவினுடைய நீதியின் பின்விளைவுகள், அவரது கட்டமைப்பு முழுவதும் பரவி, அவருடன் இணைக்கப்படுகிறவர்கள் யாவருடைய நித்திய கதியையும் மாற்றிவிடுகிறது. “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (15:22).
ஆதாமின் பாவத்தை நாம் கருத்தில் கொள்ளும்போது, தேவனுடைய “கட்டமைப்பு நெறிமுறை,” பேரழிவுக்கேதுவானதாய் இருக்கிறது. ஆனால், இயேசுவின் நீதியை நாம் கருத்தில் கொள்ளும்போது, அது மிகவும் அற்புதமானதாய் இருக்கிறது. ‘ஒரு மனிதனின் வெற்றி, நித்திய ஜீவனுக்கான வழியை அநேகருக்குத் திறந்துவிட முடியும் – அவர்கள் அவருடன் இணைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதுதான் ஒரே நிபந்தனை,’ என்பதே தேவனுடைய கட்டமைப்பு நெறிமுறைக்குப் பொருளாகும். நீங்களும், நானும், சுபாவப்படி ஆதாமில் இருக்கிறோம். நீங்கள், விசுவாசத்தின்படிக் கிறிஸ்துவில் இருக்கிறீர்களா?
நாம் இயேசுவினிடத்தில், மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் வரும்போது பரிசுத்த ஆவியானவர், நம்மை அவருடன் இணைத்துவிடுகிறார். நாம் இன்னும் ஆதாமில்தான் இருக்கிறோம். நாம் அநேக வழிகளில் தவறுகிறோம். அப்படியே நாம் ஒரு நாள் மரித்தும்விடுவோம். ஆனால், நீங்கள் இயேசுவினிடத்தில் வரும்போது, உங்களைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில், நீங்கள் கிறிஸ்துவில் இருக்கிறீர்கள் என்பதே. அதன் பொருள், நீங்கள் அவரது வெற்றியிலும் பங்கடைவீர்கள் என்பதாகும்.
கிறிஸ்து, எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறார் என்பதை, வேதாகமம் தெளிவுறுத்துகிறது (எபிரெயர் 4:15). இயேசுவுக்கான சோதனைகளுக்கும், நம்முடைய சோதனைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு, பாவம் நமக்குள் வாசம் செய்கிறது என்பதும், நாம் நமது சுய இச்சையினாலே இழுக்கப்பட்டுச் சோதிக்கப்படுகிறோம் என்பதுமாகும் (யாக்கோபு 1:14). கிறிஸ்துவுக்கான சோதனைகள், நம்முடையவைகளைவிடக் குறைவானவையல்ல் அவை மிகவும் பெரிதானவை. கிறிஸ்து, அவர்மேல் எதிரியானவன் வீசிய ஒவ்வொரு சோதனைக்கும் எதிர்த்து நின்றார் - வெற்றி பெற்றார். நீங்கள் இயேசுவுடன் விசுவாசத்தில் இணைக்கப்படும்போது, நீங்கள் எதிர்கொள்கிற சோதனைகளை மேற்கொள்ள உங்களால் முடியும்.
1. மனுக்குலம், பாவம் என்னும் வைரஸுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு, நீங்கள் எதை ஆதாரமாகக் காண்கிறீர்கள்?
2. நீங்கள் சோதனைக்குட்பட்டதான ஒரு காலத்தை உங்களால் சுட்டிக்காட்்ட முடியுமா? நீங்கள் அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
3. நீங்கள் எதிர்கொண்ட சோதனைகளை, இயேசு எதிர்கொண்ட சோதனைகளுடன், உங்களது சொந்த வார்த்தைகளில் எப்படி ஒப்பிடுவீர்கள்?
4. ஆதாமுடன் “இணைக்கப்பட்டிருப்பதன்” ஒருசில விளைவுகள் எவை? அவை, இயேசுவைப் பொறுத்தமட்டில் எப்படி?
5. ஒரு நபர், எப்படி இயேசுவுடன் “இணைக்கப்படுகிறார்” என்று நீங்கள் சிந்திக்கிறீர்கள்? ஏன்?