2 இராஜாக்கள் 17:6-28
லூக்கா 1 : 26-38
26. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
36. இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
38. அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
மனிதகுல வரலாற்றில், தேவனுடைய மாபெரும் இடைபடுதலுக்கான ஒரு அரங்கத்தைப் பழைய ஏற்பாட்டுக் கதை அமைத்துக் கொடுத்தது. வாக்குப்பண்ணப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து என்பவரின் அடையாளங்களைப்பற்றி, அநேகத் தடயங்களைத் தேவன் வழங்கிவிட்டார். இந்த நபர் யாராக இருந்தாலும், உலகிற்குள் அவரது வருகையானது, மனிதகுல வரலாறு அனைத்திலும், மிகச்சிறந்த நிகழ்வாக இருக்கும். தேவன், தாம் செய்வதாக வாக்குத்தத்தம்பண்ணிய அனைத்துமே, அவரால் நிறைவேற்றப்படும்.
பிரமிப்பூட்டும் காட்சிகளுடன்கூடிய, எழில்மிக்கதொரு தீவில் நீங்கள் வசித்துக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.1 கடற்கரைகள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நீண்டவையாய் உள்ளன. அந்தத் தீவு, பரந்து விரிந்ததொரு மக்கள் கூட்டத்தாரின் இருப்பிடமாயிருக்கிறது.
பல்லாண்டுகளாக அந்தத் தீவினர், அதன் தொடுவானத்திற்கு அப்பால் என்ன இருக்கும் என்பதைப் பற்றி வியப்புடன் யோசித்துவந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் அந்தத் தீவைவிட்டுச் சென்றதில்லை. ஆகவே, உண்மையில் அதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை.
அந்தத் தீவினர், காட்டுவிலங்குகள், தாவரங்கள், வானிலை மற்றும் பாறைப் படிமங்களின் உருவாக்கம் ஆகியவற்றைக் கற்பதில், பல மணி நேரங்கள் செலவிட்டனர். மேலும் அவர்கள், குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதிலும்கூட, மிகச்சிறப்பானதொரு விதத்தில் அக்கறை செலுத்திவந்தனர். தீவு சார்ந்த ஆரோக்கியமானதோர் திருமண வாழ்வை வாழ்வது எப்படியென்றும், தீவுக்கேயுரிய விதத்தில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பது எப்படியென்றும், கருத்தரங்குகளெல்லாம் நடத்தப்பட்டுவந்தன.
அந்தத் தீவுவாசிகள் அனைவரும், பல்லாண்டுகளுக்கு முன்பதாக நிகழ்ந்ததொரு மாபெரும் பேரழிவிற்குப் பிறகு, அத்தீவில் தனித்துவிடப்பட்டவர்களின் வம்சாவளியினராவர். அது, அநேக வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருந்தபடியால், அத்தீவில் வசிக்கும் அநேகர் அதைப்பற்றிக் கொஞ்சமே அறிந்திருந்தனர் அல்லது ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
அந்தத் தீவின் மத்தியில் ஒரு எரிமலை இருந்தது. தீவுவாசிகளுள் சிலர், அது ஒரு நாள் வெடிக்கக்கூடும் என்று பயந்தாலும், அநேகர் அது ஒருபோதும் வெடிக்காது என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.
ஒரு காலை வேளையில், கடற்கரையில் நீங்கள் உலாவி வரும்போது, மணலில் ஏதோ மினுங்குவதைப் பார்க்கிறீர்கள். நீங்கள் இன்னும் கிட்டே நெருங்கிச் சென்று பார்க்கையில், ஒரு பச்சை நிறக் கண்ணாடி பாட்டில், கரையில் ஒதுங்கிக் கிடப்பதைக் கவனிக்கிறீர்கள். அதற்குள், “உதவி வந்துகொண்டிருக்கிறது,” என்கிறதான ஒரு செய்தியைக் காண்கிறீர்கள். விசித்திரம். இதைப்போன்றதொன்றை நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை. “உதவி”யா? அத்தனை எழில் மிகுந்த அந்தத் தீவில், எவ்விதமான உதவி தேவைப்படும்?
ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, “உதவி விரைவில் வந்து சேரும்!” என்ற வேறொரு செய்தியுடன், நீங்கள் இன்னொரு கண்ணாடி பாட்டிலைப் பார்க்கிறீர்கள். ஒரே செய்தியுடன் இரண்டு கண்ணாடி பாட்டில்கள். அவை எங்கிருந்து வந்திருக்கக்கூடும்?
அதை ஆராயப்போனால் அதன் முடிவுகள், விசித்திரமானதொரு வகையில் பயமூட்டுவதாக இருக்கின்றன. உண்மையில், நீங்கள் சிறந்ததொரு தீவில் வாழ்ந்துவருகிறீர்கள். அதிலும், மிக முழுமையான மற்றும் திருப்திகரமானதொரு வாழ்க்கையை அனுபவித்துவருகிறீர்கள். ஆனால், அந்தக் கண்ணாடி பாட்டில்களில் இருக்கும் குறிப்புகளோ, அங்கே ஏதோ ஒருவித பிரச்சினை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
ஒருவேளை, அதன் தொடுவானத்திற்கு அப்பால் யாராவது இருக்கக்கூடும். ஒருவேளை, அந்த யாரோ அல்லது ஏதோ, நீங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், அதைக் குறித்துச் செய்யவேண்டியதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும், உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில், அந்தத் தீவின் மறுபுறத்தில் இருக்கக்கூடிய சிறு பிள்ளைகளால்கூட இந்தச் செய்திகள் எழுதப்பட்டிருக்கலாம். அவர்கள் அந்த பாட்டில்களைக் கடலில் எறிந்துவிட்டிருந்தால், அலைகள் அவற்றைச் சுலபமாகக் கரைக்கு அடித்துக்கொண்டுவந்திருக்கும். நடந்தது எதுவாயிருப்பினும், அந்தக் கண்ணாடி பாட்டில்களையும், “உதவி வந்துகொண்டிருக்கிறது,” என்கிற அவற்றின் செய்திகளையும், உங்கள் மனதைவிட்டு அகற்ற முடியவில்லை.
அந்தத் தீவுவாசிகளின் கதை, வேதாகமத்தின் பிரம்மாண்டமான காட்சியை உணர்ந்துகொள்ள நமக்கு உதவக்கூடும். தேவன், தம்மை அறிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் மற்றும் அவரது பிரசன்னத்தில் வாழவுமே, உங்களைச் சிருஷ்டித்தார். ஆனால், மாபெரும் ஒரு பேரழிவு நிகழ்ந்துவிட்டது. பாவமானது, மனிதனுக்கும், தேவனுக்குமிடையேயான உறவில், பிளவை உண்டாக்கிவிட்டது. அதனால் இப்பொழுது நாம், வீழ்ச்சியுற்ற ஓர் உலகில் வாழ்கிறோம். அதன் அனைத்து அழகின் மீதும் ஒரு சாபம் தொங்கிக்கொண்டிருக்கிறது. நாமெல்லாருமே, அந்தத் தீவில் வசிப்பதில் அநேகப் பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். ஆனால், மிகப்பெரிய பிரச்சினை எதுவெனில், அந்தத் தீவே ஒரு நாள் அழிக்கப்பட்டுவிடும் என்பதுதான்.
ஆதியிலிருந்தே, உதவி வருமென்று தேவன் வாக்குத்தத்தம்பண்ணியிருந்தார். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் வாயிலாக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் அதே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். “நம்பிக்கை இழக்காதீர்கள். நான் உதவியை அனுப்பிக்கொண்டிருக்கிறேன். இன்னது என்று நீங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத ஓர் ஆபத்திலிருந்து உங்களைத் தப்புவிக்க, யாரோ ஒருவர் வருவார்,” என்பதுதான் அச்செய்தி. நீங்கள் ஒருபோதும் பார்த்திராத ஒரு தேசத்திற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். ஆனால், யாராவது உங்களை மீட்க வந்தால்தான் உங்களால் அங்குச் செல்ல முடியும். அதற்காகத்தான், இயேசு கிறிஸ்து இந்த உலகிற்குள் வந்தார். வேதாகமக் கதையின் ஆதியிலிருந்தே தேவன் வாக்குத்தத்தம்பண்ணிய உதவி, அவர்தாம்.
இயேசுவின் பிறப்பானது, முழுக்க முழுக்கத் தேவனின் முன்முயற்சியில்தான் நிகழ்ந்தது. மரியாள், யோசேப்பு என்கிற பெயருடைய ஒரு மனிதருடனான, தனது திருமணத்துக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்த, ஓர் இளம்பெண். அவர், ஒரு கன்னிகையாயிருந்தார். அவரையே, இவ்வுலகிற்குள் இயேசு கிறிஸ்துவைக் கொண்டுவரப்போகிறவராகத் தேவன் தெரிந்துகொண்டார். ஆகவே தேவன், தேவதூதர் காபிரியேலை அனுப்பி, “மரியாளே, பயப்படாதே் நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” (லூக்கா 1:30-31), என்று கூறும்படிச் சொன்னார்.
மரியாள், “இது எப்படியாகும்…?” (1:34), என்று கேட்டார்.
அதற்குத் தேவதூதரின் பதிலானது, வேதாகமத்தின் மிகச்சிறந்த இரகசியத்தின், இதயம்போன்ற மையப்பகுதிக்கே நம்மைக் கொண்டுசெல்கிறது: “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்் ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” (1:35).
மரியாளின் குழந்தை, தேவனின் நேரடியான முன்முயற்சியின் விளைவாகவே பிறந்தது. அதில் யோசேப்பு ஒன்றும் செய்வதற்கு இல்லை. அவர், அந்த முழு அற்புத நிகழ்வுக்கும், ஒரு வெளி நபராக, செயலேதுமற்ற ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தார். நிகழ்ந்துகொண்டிருந்தது என்னவென்று, தேவன் அவரிடம் சொல்லியிருக்காவிட்டால், அதைப் பற்றி யோசேப்பு மிகச்சிறிதளவுகூட அறிந்திருக்கமாட்டார். தேவன் அவரை, இதிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார்; யோசேப்பு இதில் எவ்விதமான பங்களிப்பையும் செய்யவில்லை.
வேதாகமம், வேறு சில அதிசயவிதமான பிறப்புக்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது. ஆபிரகாமும், சாராளும் ஒரு குழந்தைக்காக ஏங்கியிருந்தார்கள். அவர்கள் இருவருமே, குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வயது வரம்பை, மிக அதிகமாகவே கடந்துவிட்டிருந்ததால், ஈசாக்கின் பிறப்பு ஓர் அற்புதமே. யோவான்ஸ்நானன் பிறந்தபோது, சகரியா மற்றும் எலிசபெத்து ஆகியோருக்கு உண்மையில் நிகழ்ந்ததும் அதுவே.
இந்தக் குழந்தைகளெல்லாம், ஒரு தந்தையும், ஒரு தாயும் இணைவதன் மூலம் செயல்படும், தேவனின் விசேஷித்தவிதமான இடைபடுதலின் விளைவாகப் பிறந்தன. ஆனால், மரியாள் ஒரு கன்னிகையாயிருந்தார். அந்தக் குழந்தை கருத்தரிக்கப்படுமுன்பு, மரியாளுடன் யோசேப்பு இணைந்து வாழவில்லை. அப்படியே, குழந்தை பிறக்கும்வரையிலும் அவர்களுக்குள் எந்த உறவும் இல்லை (மத்தேயு 1:25).
மரியாளின் கர்ப்பத்திற்குள் வந்த ஜீவனானது, தேவதூதரின் வார்த்தைகளில் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறபடியே, தேவனுடைய ஒரு சிருஷ்டிக்கும் அற்புதத்தின் வாயிலாக, அங்கே தங்கும்படி வந்தது: “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்” (லூக்கா 1:35).
புதிய ஏற்பாடு, இயேசுவின் தனித்துவமான அடையாளத்தைப் பற்றி, மூன்று அடிப்படைச் சத்தியங்களை நமக்குக் கற்பிக்கிறது. அவர் தேவனாயிருக்கிறார். அவர் மனிதனாயிருக்கிறார். மற்றும் அவர் பரிசுத்தராயிருக்கிறார் என்பவையே அவை.
மரியாளின் குழந்தை, “உன்னதமானவருடைய குமாரனாக” இருப்பார் (லூக்கா 1:32), என்று, தேவதூதர் மரியாளுக்கு அறிவித்தார். அவர், “தேவனுடைய குமாரனாக” இருப்பார் (1:35). அவர், “நம்மோடிருக்கிற தேவனாக” இருப்பார் (மத்தேயு 1:23).
குமாரனாகிய தேவன் தாம் பிறப்பதற்கு முன்பு, அற்புதமானதொரு வாழ்வை ஏற்கெனவே அனுபவித்துவந்தார். உங்களது வாழ்க்கை, நீங்கள் உங்களுடைய தாயின் கருவில் கர்ப்பந்தரிக்கப்பட்டபோது தொடங்கியது. அந்தத் தருணத்திற்கு முன்பாக, உங்களுக்கு உயிர் வாழ்க்கை இல்லை. உங்களை உயிர்வாழவைக்க, உங்கள் தாய் மற்றும் உங்கள் தந்தையின் இணைப்பைத் தேவன் பயன்படுத்தினார்.
ஆனால் இயேசுவின் விஷயத்தில், அது வித்தியாசமாயிருக்கிறது. அவரது வாழ்க்கை, கன்னிகையின் கர்ப்பத்தில் தொடங்கவில்லை. மாட்டுத் தொழுவத்தில் அவர் பிறக்குமுன், தேவனுடைய நித்திய ஜீவியத்தில் பங்குள்ளவராயிருந்தார்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). பிதாவின் ஜீவனில் பங்குள்ளவராயிருந்தவர், நம்மிடம் வந்தார். அவர், மனித இனத்திலிருந்து தோன்றவில்லை. ஆனால், அவர் மனித இனத்திடம் வந்தார்.
இயேசுவே தேவன் என்கிற அற்புதமான சத்தியம், நற்செய்தியாயிருக்கிறது. ஏனெனில், தேவன்தாம் நம்மைத் தம்முடன் ஒப்புரவாக்கிக்கொள்ள முடியும்.
இயேசுவைத் தேவன் என்று நாம் உணர்ந்துகொண்டதுமே, அவ்வுணர்வின் ஒவ்வொரு அம்சத்திலும், தேவன், மனிதனானார் என்பதை உணர்ந்துகொள்வதும் மிகவும் முக்கியமானது. இது, அதற்கு முன்பும் நிகழ்ந்ததில்லை, அதற்குப் பின்பும் நிகழ்ந்ததில்லை. பழைய ஏற்பாட்டில், காணக்கூடிய வடிவில் தேவன் தோன்றியதான, அநேகச் சம்பவங்கள் இருந்தன. இந்தத் தோற்றங்கள், தேவதரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை, ஒரு நடிகர் வேற்றுடை அணிந்து அல்லது மாறுவேடமிட்டுத் தோற்றமளிப்பதுடன் ஒப்பிடலாம். காட்சி முடிந்தவுடன், நடிகர் தனது வேற்றுடைகளைக் களைந்துவிட்டு, அரங்கத்திலிருந்து போய்விடுவார். ஆனால், இயேசுவின் பிறப்பானது, முற்றிலும் வித்தியாசமானதாயிருந்தது. தேவகுமாரனானவர்தாமே, மனுஷ ரூபமெடுத்தார். அவர், தேவனாயிருப்பதை விட்டுவிடவில்லை. ஆனால், அவர் மெய்யாகவே மனிதனானார். தேவன், எவ்வாறு மனிதனாகியிருக்க முடியும் என்று உங்களால் ஒருபோதும் கிரகித்துக்கொள்ளவே முடியாது. ஆனால், அவர் மனிதனானார் என்பதை அறிந்துகொள்வது, மற்ற அனைத்தையுமே உணர்த்திவிடும். இயேசுவில், தேவன் ஒரு மனிதனானார் என்பதை நீங்கள் காணும்போது, அவரது சாட்சிகள், அவரது அற்புதங்கள் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகிய அனைத்துமே பொருந்திவரத் தொடங்குகின்றன.
இயேசு, “நம்மோடிருக்கிற தேவனாக” இருப்பதால், தாமே தேவனிடத்திற்குப் போகிற வழி என்றும், அவரையல்லாது வேறொரு வழியில்லை என்றும், அவர் கூறும்போது, எவரும் ஆச்சரியப்படக்கூடாது. மேலும், இயேசுவில் தேவன் நம்மிடம் வந்திருக்கிறார் என்று நீங்கள் அறியும்போது, அவர் தம்மை ஆணிகளால் சிலுவையிலறையும்படித் தமது எதிரிகளை அனுமதிப்பார் என்பதைப் பற்றி நீங்கள் பிரமிப்படையக்கூடும். ஆனால், அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்போது, நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள். வேறென்ன முடிவை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?
இயேசு கிறிஸ்து, தாம் பரிசுத்தராயிருக்கிறார் என்ற ஒன்றைத் தவிர, மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர் (லூக்கா 1:35). இதன் பொருள், இயேசு ஒருபோதும், ஒரே ஒரு பாவம்கூடச் செய்யவில்லை என்பதாகும். ஆனால், அது இன்னும்கூட ஆழ்ந்த அர்த்தமுள்ளது. அவர் தமது சிந்தனையிலும், தமது நோக்கங்களிலும், தமது பண்பிலும் பரிசுத்தராயிருந்தார். அவரது இயல்பே பரிசுத்தமாயிருந்தது. அவர் பாவத்தை நோக்கி ஈர்க்கப்படவில்லை. பாவம் செய்யும் எந்தவொரு உள் நாட்டமும் அவருக்கில்லை. மனிதகுல வரலாற்றிலேயே, இவ்விதமாய்ச் சொல்லப்படத் தக்கவர்கள் வேறு யாருமே இருந்ததில்லை.
அப்போஸ்தலராகிய பவுல், பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதை, மிகவும் ஊக்கமாக விரும்பிய, ஒரு நல்ல மனிதர். அவர் மிகச் சிறப்பான அந்தஸ்துள்ள குடும்பத்தில் பிறந்து, மிகவும் உயர் தரத்திலுள்ள பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டவர். அவரது பெற்றோர், ஒன்றே ஒன்றைத் தவிர, அவர் விரும்பிய மற்ற அனைத்தையும் கொடுத்தனர். அவர்களால் அவருக்குத் தர முடியாத அந்த ஒன்று, பரிசுத்தமே. அவர் தனது பெற்றோரிடமிருந்து சுதந்தரமாகப் பெற்ற தன்மையானது, பரிசுத்தத்திற்கு வெகு தொலைவிலிருந்தது.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அநேக நற்குணங்களை விட்டுச் செல்கிறார்கள். ஆனால், அவற்றுள் ஒன்றாகப் பரிசுத்தம் இருப்பதில்லை. நாம் அதை நமக்குள் கொண்டிருக்கவில்லை. பிறப்பது எதுவும் பரிசுத்தமானதாக இல்லை. அத்துடன், இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குள் வரும்வரையிலும், பரிசுத்தமானது எதுவும் பிறக்கவும் இல்லை.
பரிசுத்தமான ஒன்றாக, பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, இவ்வாறாக மரணத்திற்கு உட்படாத, ஒரு புதிய மனித குலத்தின் பாதையை, இயேசு திறந்திருக்கிறார். அவர் வழியாக, மரணத்தின் மீது ஜெயம் பெற்றவர்களாய், தேவனுடைய பரிசுத்தப் பிரசன்னத்தின் சந்தோஷத்தில் என்றென்றைக்கும் வாழப்போகிற அநேகருக்குள், இயேசுவே முதன்மையானவராக இருப்பார் என்பதே, எப்பொழுதும் தேவனுடைய நோக்கமாக இருந்துவந்துள்ளது.
பழைய ஏற்பாடு முழுவதிலும், உதவி வந்துகொண்டிருப்பதைத் தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவில், அந்த உதவி வந்திருக்கிறது. தேவனுடைய குமாரனானவர், பிரமிக்கத்தக்கதொரு பயணமாகப் புறப்பட்டு வந்தார். அவர்தாமே மனுஷ ரூபமெடுத்து, ஒரு கன்னிகையிடம் பிறந்தார். அவர் இறங்கி வந்து, நம்மிடையே வாசம் செய்து, நமது பாவங்களைச் சுமக்கும்படிச் சிலுவைக்குச் சென்றார். தேவனாக, அவர் நம்மைத் தம்முடனேகூட ஒப்புரவாக்கிக்கொண்டார். மனிதனாக, அவர் நம்மைத் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து விடுவித்தார். பரிசுத்தராக, நாம் பரிசுத்தமானதொரு வாழ்க்கை வாழ, அவர் நமக்கு அதிகாரம் கொடுக்கிறார். மேலும், தமது பரிசுத்தப் பிரசன்னத்தின் சந்தோஷத்திற்குள், ஒரு நாள் அவர் நம்மை வரவேற்பார்.
குறிப்பு: 1 யூஜின் பீட்டர்ஸனின் வொர்க்கிங் தி ஆங்கிள்ஸ் என்னும், ஒரு நூலிலிருந்து பெறப்பட்ட மூலக்கருத்து (கிராண்ட் ராப்பிட்ஸ், எர்ட்மேன்ஸ், 1987), 139 பதொ. பீட்டர்ஸன் இதை, வாக்கர் பெர்சி எழுதிய, த மெஸேஜ் இன் எ பாட்டில் என்னும் கட்டுரை (அ) உவமையிலிருந்து தழுவி எழுதியுள்ளார் (நியூ யார்க்: ஃபரார், ஸ்ட்ரௌஸ் மற்றும் ஜீரூ, 1975).
1. உதவி வந்துகொண்டிருக்கிறது என்னும் வேதாகமத்தின் செய்திக்கு, உங்களது பதில் என்ன? அதனால் நீங்கள் பயமடைந்திருக்கிறீர்களா? ஆர்வமாயிருக்கிறீர்களா? நிம்மதியடைந்திருக்கிறீர்களா? நம்பிக்கையற்றிருக்கிறீர்களா? வேறு ஏதாவது? ஏன்?
2. உலக வரலாற்றில், இயேசுவின் பிறப்பைத் தனித்துவம் வாய்ந்ததாக ஆக்குவது எது?
3. புதிய ஏற்பாடு, இயேசுவின் தனித்துவமான அடையாளத்தைப் பற்றி, மூன்று அடிப்படைச் சத்தியங்களை நமக்குக் கற்பிக்கிறது. அவர் தேவனாயிருக்கிறார். அவர் மனிதனாயிருக்கிறார். மற்றும் அவர் பரிசுத்தராயிருக்கிறார் என்பவையே அவை. அவற்றுள், நீங்கள் நம்புவதற்கு மிக எளிதானதாயிருப்பது எது? மிகக் கடினமானதாயிருப்பது எது? ஏன்?
4. உங்களது வாழ்க்கையைக் குறித்த அனுபவத்தை, இயேசு புரிந்துவைத்துள்ளார் என்று நீங்கள் எந்த அளவுக்கு நன்றாக அறிந்திருக்கிறீர்கள்?
5. தேவகுமாரனுடைய பயணத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களுக்கு மிகப் பிரமிப்பூட்டுவது எது? ஏன்?