2 இராஜாக்கள் 17:6-28
எசேக்கியேல் 34:1-16
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2. மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.
3. நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.
4. நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
5. மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
6. என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
7. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
8. கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
9. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
10. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
11. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
12. ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,
13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.
14. அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
15. என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
16. நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.
குடும்பம், பள்ளி, தொழில், சபை மற்றும் தேசம் ஆகிய அனைத்துமே, அவற்றின் தலைமைத்துவத்தின் தரத்தின் மதிப்பையே பெரிதும் சார்ந்திருக்கும். மோசமான தலைமைத்துவத்தின் விளைவுகளால் நீங்கள் துன்பத்துக்கு உள்ளாகியிருந்தால், இந்தப் பாடம் உங்களுக்குத்தான். இது, முறைகேடான தலைமைத்துவங்களால் தேவஜனங்கள் எவ்வாறு நலிவடைந்து கிடந்தார்கள் என்பதையும், தேவன்தாமே அதில் எவ்வாறு இடைபட்டார் என்பதையும் விவரிக்கிறது. வாழ்க்கையின் ஏதாவதொரு துறையில், தலைமைத்துவம் என்கிற சிலாக்கியம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், தேவன் உங்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும், உங்கள் அழைப்பை நீங்கள் எவ்விதத்தில் நிறைவேற்ற முடியும் என்பதையும் இந்தப் பாடம் உங்களுக்குக் கற்பிக்கும்.
பழைய ஏற்பாட்டில், தனித்துவம் வாய்ந்த மூன்று தலைமைத்துவப் பொறுப்புகள் இருக்கின்றன. அவை, தீர்க்கதரிசி, ஆசாரியர் மற்றும் ராஜா என்பவையாகும். தீர்க்கதரிசிகள், தேவனின் வார்த்தையை ஜனங்களிடத்தில் பேசும்படியாகத் தேவபிரசன்னத்தில் நின்று, தேவனின் வார்த்தையைக் கேட்டார்கள். தீர்க்கதரிசிகள், சத்தியத்துக்குரிய காரியங்களில் தலைமை வகித்தார்கள்.
ஆசாரியர்களின் ஊழியமானது, ஆராதனைக்குரிய காரியங்களுடன் தொடர்புடையதாயிருந்தது. அவர்கள், தேவாலயத்தில் ஜெபங்களையும், பலிகளையும் செலுத்தி, மேய்ப்பருக்குரிய மந்தையை விசாரித்தல் மற்றும் ஆலோசனையின் ஊழியத்தின் மூலமாக, ஜனங்களைத் தேவபிரசன்னத்துக்குள் கொண்டுவந்தார்கள்.
ராஜாக்கள், மக்களை யுத்தங்களிலே வழிநடத்தி, அவர்களை அவர்களது எதிரிகளிடமிருந்து பாதுகாத்தார்கள். அத்துடன் அவர்களுக்கு, மக்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து அனுபவிக்கும்படியாக, அவர்களைச் சரியான வழிகளில் நடத்தவேண்டிய பொறுப்பும் இருந்தது.
மொத்தத்தில், இந்த மூன்று ஊழியங்களுமே, தலைமைத்துவத்துக்கான தேவனின் திட்டத்தை நமக்குக் காண்பிக்கின்றன. தீர்க்கதரிசியானவர், மக்களைச் சத்தியத்திற்குள்ளாக நடத்தவேண்டும்; ஆசாரியரானவர், மக்களைத் தேவனிடத்தில் கொண்டுவரவேண்டும்; ராஜாவானவரோ, மக்களை நீதிக்குள்ளாக நடத்தவேண்டும். தீர்க்கதரிசியின் ஊழியம், வெளிப்படுத்துதலைப் பற்றியது் ஆசாரியரின் ஊழியம், ஒப்புரவாக்குதலைப் பற்றியது் மற்றும் ராஜாவின் ஊழியம், ஆளுகையைப் பற்றியது.
மேய்ப்பரைப் பற்றிய சித்திரிப்பானது, தீர்க்கதரிசி, ஆசாரியர் மற்றும் ராஜா ஆகிய மூன்று பொறுப்புகளையும் ஒன்றிணைத்து, வேதாகமத் தலைமைத்துவத்தின் மூன்று பரிமாணங்களையும் உள்ளடக்குகிறதான, ஒரே அழகிய படமாகக் கண்முன் கொண்டுவருகிறது.
மேய்ப்பர், ஆடுகளுக்கு உணவளிக்கிறார் – தேவஜனங்களைத் தேவவசனமாகிய ஆரோக்கியமுள்ள உணவில் நிலைவரப்படுத்துகிறார். மேய்ப்பர், ஆடுகளைத் தேடுகிறார் – காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்து, அதைத் திரும்பக் கொண்டுவருகிறார். மேய்ப்பர், ஆடுகளை வழிநடத்துகிறார் – மந்தைக்குப் பாதையையும், பாதுகாப்பையும் கொடுக்கிறார். ஆகவே, தேவன் மேய்ப்பர்களைப் பற்றிப் பேசும்போது, தமது ஜனங்களை வழிநடத்துவதுடன் தொடர்புடைய அனைத்தையும் பற்றியே அவர் பேசுகிறார்.
பணியாளர்கள் தங்கள் கடமைகளை எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்பதைப் பற்றி, ஆண்டுதோறும் ஒரு மதிப்பீடு அல்லது பரிசீலனை செய்யும் முறை ஒன்று, பெரும்பாலான வேலை ஸ்தலங்களில் உள்ளது. தேவன், இஸ்ரவேலின் மேய்ப்பர்களிடம், மாபெரும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள், அதை எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்பதைப் பற்றிய மதிப்பீடு ஒன்றை அவர், எசேக்கியேல் 34-ல் தருகிறார். அது நல்லதொரு மதிப்பீட்டு அறிக்கையாக இல்லை: “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை: நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்: தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்?” (எசேக்கியேல் 34:2).
தேவன், தமது ஜனங்களின் தலைவர்களுக்கு விரோதமாக, மூன்று முறையீடுகளை வைக்கிறார்: அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள்; அவர்கள் சத்தியத்தைப் புரட்டிப்போட்டார்கள்; மற்றும் அவர்கள் கர்த்தரைப் புறக்கணித்தார்கள்.
தேவஜனங்கள், தொடர்ச்சியான ஒரு அதிகார முறைகேட்டின்கீழே, துன்பப்பட்டார்கள். பல ராஜாக்கள், தீயவர்களாக இருந்தார்கள். சிறந்த ராஜாக்கள்கூட, மாபெரும் சுமைகளை மக்கள் மீது சுமத்துமளவுக்குச் சென்றார்கள். தேவன், தமது மந்தையைப் பராமரிப்பதில் அவர்கள் முற்றிலுமாகத் தவறிவிட்டதை வன்மையாகக் கண்டித்தார்: “நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்” (34:4).
தங்களைத் தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு, ஆனால் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாகத் தங்களுடைய சொந்தக் கருத்துக்களையே கூறிவந்தவர்களையும், தேவன் கண்டித்தார்: “மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!” (13:2-3).
இந்தத் தலைவர்கள், இன்றைய காலச் சூழ்நிலையில் ஜனங்கள் எதைக் கேட்க விரும்புகிறார்கள், என்பதை அறிந்துகொண்டார்கள். அதன்பின், அந்தந்த நேரத்துக்குப் பொருந்தும்படியாகத் தங்கள் செய்திகளை வடிவமைத்துக்கொண்டார்கள். எசேக்கியேலின் காலத்தில், இந்தத் தீர்க்கதரிசிகள், ‘சமாதானம் இருக்காது’ என்று தேவன் சொன்னபோது, “சமாதானம்” என்று சொன்னதன் மூலம், தேவஜனங்களை வழிதப்பிப் போகச் செய்தார்கள் (13:10). தேவன் சொன்னது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவர்களது ஊழியம் சத்தியத்தினால் நடத்தப்படாமல், தேவைக்கேற்ப நடத்தப்பட்டது.
ஜனங்களைத் தேவனிடத்தில் கொண்டுவருகிற ஊழியம் ஆசாரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களோ, தேவனோடு ஜனங்கள் சமாதானமடையும்படி உதவுவதற்குப் பதிலாக, ஜனங்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்வதற்கு உதவுவதிலேயே கவனம் செலுத்தினார்கள். அவர்கள் ஜெப ஊழியத்தை நடத்தவுமில்லை் தேவனோடு எப்படிச் சமாதானமாயிருப்பது என்று ஜனங்களுக்குக் காண்பிக்கவுமில்லை: “அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்தவஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, . . . அவர்கள் நடுவிலே நான் கனவீனம்பண்ணப்படுகிறேன்” (22:26).
தேவன், இஸ்ரவேலின் மேய்ப்பர்களைக் கண்டபோது, அதிகாரம் பயங்கரமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும், அவர்கள் தங்கள் விருப்பம்போல் சத்தியத்தைப் புரட்டுவதையும், தேவனையே புறக்கணிப்பதையும் அவர் கண்டார். இவை அனைத்தின் விளைவாக, தேவனின் மந்தை நிறைவாகப் போஷிக்கப்படவில்லை் ஆடுகள் முறையாகக் கவனிக்கப்படவில்லை் மற்றும் அவை, பாதுகாக்கப்படவும் இல்லை.
தேவன், தமது ஜனங்களிடையே நிலவிய சூழ்நிலையைச் சகிக்க முடியாததென்று கண்டார். ஆகவே, அவர் அதில் இடைபடத் தீர்மானித்தார்: “என் ஆடுகளை நான் மேய்த்து, . . . என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (34:15). தேவன், “நானே என் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசியும், ஆசாரியரும், ராஜாவுமாக இருப்பேன். நானே அவர்களுக்குச் சத்தியத்தைப் பிரத்தியேகமாகப் போதிப்பேன். நான் என் ஜனங்களிடத்தில் வந்து, நானே அவர்களைப் பராமரிப்பேன். நானே அவர்களைத் தனிப்பட்ட விதத்தில் பாதுகாத்து, அவர்களை நீதியுள்ள பாதைகளில் நடத்துவேன்,” என்றே கூறியிருக்கிறார்.
தேவன் அதை எவ்வாறு செய்வார்? அறுநூறு ஆண்டுகள் முன்னோக்கி, என்ன நடந்தது என்று பாருங்கள். அங்கே இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறந்துவிட்டார். தேவஜனங்கள், “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல” இருந்ததைக் கண்டு (மத்தேயு 9:36), அவர்கள்மேல் மனதுருகினார். அவர், “நானே நல்ல மேய்ப்பன்” (யோவான் 10:11), “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்” (10:8), என்றார். அவர்கள், ஆடுகளைச் சுரண்டிப் பிழைத்தார்கள். ஆனால் இயேசுவோ, ஆடுகளுக்காகத் தன் ஜீவனையே கொடுத்தார் (10:11). அவர்கள், ஆடுகளைக் கொன்றார்கள். ஆனால் இயேசுவோ, அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவே வந்தார் (10:10).
இயேசுவே, ஆடுகளைப் போஷிக்கிறவரும், ஆடுகளைத் தேடுகிறவரும் மற்றும் ஆடுகளை நடத்துகிறவருமான நல்ல மேய்ப்பர். அவர், உங்களைச் சத்தியத்தில் போஷிப்பார். நீங்கள் வழி தவறிச் செல்லும்போது, அவர் உங்களைத் திரும்பக் கொண்டுவந்து, மீட்டெடுப்பார் (லூக்கா 15:5-6). அவர் உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பார். அத்துடன், மரிக்கும்போது, அவர் உங்களை நித்திய ஜீவனுக்குள் கொண்டுசேர்ப்பார்: “என் ஆடுகள் . . . அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” (யோவான் 10:27-28).
முறைகேடான தலைவர்களின்கீழே துன்புற்றிருக்கும் மக்களிடத்தில், இயேசு விசேஷித்த மனதுருக்கம் கொண்டுள்ளார். ஏனெனில், முறைகேடான மேய்ப்பர்களின்கீழ்த் துன்பப்படுவது என்னவென்று அவரே அறிந்திருக்கிறார். திரள் கூட்டமான மக்கள் இயேசுவை நோக்கி ஈர்க்கப்பட்டபோது, அந்நாட்களின் மதத் தலைவர்கள், தங்கள் மந்தையை இழந்துவிடுகிற ஆபத்தை உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள், இயேசுவைக் கைது செய்தார்கள். நல்ல மேய்ப்பர், இஸ்ரவேலின் மேய்ப்பர்களால் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார்.
காய்பாவின் முன்னிலையில் இயேசு விசாரிக்கப்பட்டபோது, அவர் முகத்தில் துப்பப்பட்டார், அறையப்பட்டார் மற்றும் முள் முடியால் சூட்டப்பட்டார் (மத்தேயு 26:67). இயேசு ஏரோதுவினிடத்திற்கு அனுப்பப்பட்டபோது, ராஜா அவரைப் பாதுகாக்க எதையுமே செய்யவில்லை. பிலாத்துவின் முன்பாக இயேசு அழைத்துவரப்பட்டபோது, ஆளுநர் சத்தியத்தைக் குறித்து ஆர்வமே காட்டவில்லை (யோவான் 18:38). இயேசுவைப்பற்றிய அவரது முடிவு, நீதியின் அடிப்படையில் அல்லாமல், மேற்கொள்ளுகிறதாயிருந்த மக்களுடைய மனநிலையின் அடிப்படையிலேயே அமைந்தது. பிலாத்து, தன் கைகளைக் கழுவி, சிலுவையிலறைப்படும்படி இயேசுவை ஒப்புக்கொடுத்தார்.
உங்கள் இரட்சகர், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற, சத்தியத்தைப் புரட்டுகிற மற்றும் தேவனைவிடத் தங்கள்மேல் அதிகக் கரிசனையுள்ள மேய்ப்பர்களின்கீழே துன்பப்படுவது என்ன என்பதை அறிந்திருக்கிறார். முறைகேடான தலைமைத்துவத்தின்கீழ், நீங்கள் துன்பப்பட்டிருந்தால், நீங்கள் வந்தடையக்கூடிய ஓர் இரட்சகர் உங்களுக்கு இருக்கிறார்.
நல்ல மேய்ப்பராகிய இயேசு, “நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்” (எசேக்கியேல் 34:16), என்று சொல்கிறார்.
“காணாமற்போனது,” என்பதன் பொருள், நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லை, அத்துடன், நீங்கள் இருக்கவேண்டிய இடத்திற்குத் திரும்பி வரும் வழியும் உங்களுக்குத் தெரியவில்லை என்பதாகும். நீங்கள் காணாமற்போய்விட்டதாக இன்று நீங்கள் உணர்ந்தால், உங்களைத் தேடி, இரட்சிக்கவே இயேசு வந்தார். உங்களையே நீங்கள் அவரிடம் கொடுத்தால், அவர் உங்களைத் திரும்பக் கொண்டுவந்துவிடுவார்.
“துரத்துண்டது,” என்பதன் பொருள், நீங்கள் மற்ற ஆடுகளைவிட்டு வழிவிலகி, அலைந்து திரிகிறீர்கள் என்பதாகும். நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். மேலும், நீங்கள் தனியாயிருப்பதால், ஆபத்தான சூழ்நிலையிலிருக்கிறீர்கள். ஆனால், இயேசுவால் உங்களைத் திரும்பக் கொண்டுவர முடியும்.
“எலும்பு முறிந்தது,” என்பதன் பொருள், உங்கள் வாழ்க்கையில், உண்மையாகவே உங்களைக் காயப்படுத்தக்கூடிய ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது. ஒருவேளை, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த, அல்லது சத்தியத்தைப் புரட்டுகிறவராயிருந்த ஒருவரால் நீங்கள் காயப்பட்டிருக்கலாம். இயேசு இன்று உங்களிடம், “நான் உன் காயங்களைக் கட்டுவேன்,” என்று சொல்கிறார். நீங்கள் இப்பொழுது, “என் காயங்கள் மிகவும் ஆழமானவை!” என்று சொல்லலாம். ஆனால், இயேசுவால் குணப்படுத்த முடியாத எந்தக் காயமும் இல்லை.
“நசல்கொண்டது,” என்பதன் பொருள், நீங்கள் செய்யவேண்டியதைச் செய்வதற்கான பெலன் உங்களுக்கு இல்லை. இந்த வாரத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்று அறியாமல் திகைத்திருக்கிறீர்கள் என்றால், இயேசு உங்களுக்குப் பெலனை வழங்குகிறார்.
தேவகுமாரனால் முழுமையாக உரிமைகொள்ளப்பட்டுக் கையாளப்படுவது என்பது, எத்தனை அற்புதமானது! நீங்கள், “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்,” என்று சொல்லக்கூடுமானால், “நான் தாழ்ச்சியடையேன்” (சங்கீதம் 23:1), என்றும் உங்களால் சொல்ல முடியும்.
ஆனால், அதன்பின்பு தேவன், “புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை நான் அழிப்பேன்,” என்று சொல்கிறார். மேய்ப்பரானவர் தங்களுக்குத் தேவையில்லை என நினைக்கிறவர்கள், “புஷ்டியும் பெலமுமுள்ளவைகள்,” என்று குறிப்பிடப்படுகிறார்கள். தேவன், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற அனைவருக்கும், அவரது ஆளுகையை எதிர்க்கிற அனைவருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்.
தேவனுடைய மந்தையை மேய்ப்பதென்பது, தீர்க்கதரிசி, ஆசாரியர் மற்றும் ராஜா ஆகியோருடைய ஊழியங்களை உள்ளடக்கியதாகும். திருச்சபையில், தலைமைத்துவத்துக்குரிய பொறுப்புள்ளவர்கள் என்று, தேவனால் நம்பிக்கைக்குரியவர்களாக ஏற்படுத்தப்பட்டவர்கள், தங்கள் பதவிகளை முறைகேடாகப் பயன்படுத்தக்கூடாது. தங்களது சொந்தக் கருத்துக்களைப் போதிப்பதும், தேவஜனங்களின் ஆவிக்குரிய தேவைகளைப் புறக்கணிப்பதும் அல்லது அவர்கள் மீது தேவையற்ற பாரங்களைச் சுமத்துவதும், தங்களுக்கு அருளப்பட்ட சிலாக்கியத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகும்.
சிறந்த தலைவர்கள், தேவனுடைய சத்தியத்தைப் போதித்து, தேவஜனங்கள் மீது அக்கறை செலுத்தி, தேவனுடைய மந்தையைத் தேவனுக்குப் பிரியமான பாதைகளில் நடத்துவார்கள். ஆடுகளுக்காகத் தமது ஜீவனைக் கொடுத்த, பெரிய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தாங்கள் கணக்கொப்புவிக்கவேண்டியவர்கள் என்கிற காரணத்தினால், இந்தக் கடமைகளில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் (அப்போஸ்தலர் 20:28).
1. தலைமைத்துவத்துக்கான சிலாக்கியத்தைத் தேவன், உங்களை நம்பி எங்கே ஒப்படைத்திருக்கிறார்? (குடும்பம், பணி, திருச்சபை, சமூகம், இன்ன பிற.,)
2. தீர்க்கதரிசி, ஆசாரியர் மற்றும் ராஜா ஆகியோருடைய பணிகள் எவை? அவற்றுள் எந்தப் பகுதியில் நீங்கள் மிகவும் வலிமையானவர்கள் (அ) தேறினவர்கள் என்று உணர்கிறீர்கள்?
3. முறைகேடான தலைமைத்துவத்தின்கீழ், நீங்கள் தனிப்பட்ட விதத்தில் துன்புற்றிருக்கிறீர்களா? அது உங்களை எவ்வாறு பாதித்தது?
4. இயேசுவினிடத்தில், அவரது உதவியைக் கேட்கும்படி, உங்களை உற்சாகப்படுத்துவதாக நீங்கள் காண்பது என்ன?
5. “காணாமற்போனது,” “துரத்துண்டது,” “எலும்பு முறிந்தது,” அல்லது “நசல்கொண்டது” – இவற்றுள், எது உங்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியது? (அ) எதற்கு நீங்கள் மிகவும் பொருத்தமானவராக இருக்கிறீர்கள்?