2 இராஜாக்கள் 17:6-28
எரேமியா 7: 1-13
1. யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
2. உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
3. வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.
4. அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
5. மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6. அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
7. கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
8. அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
10. கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
11. அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.
12. எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.
13. இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
பழைய ஏற்பாட்டில் தேவன், வெறும் சட்டதிட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றில்தான் அதிக கவனம் செலுத்தினார் என்றும், ஆனால் புதிய ஏற்பாட்டில், அவை எதுவும் வேலை செய்யவில்லை என்று கண்டதால் அவர், இருதயத்தை மையப்படுத்தி ஒரு புதிய மதத்தை அறிமுகப்படுத்தினார் என்றும் சிலர் ஓர் எண்ணம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொடக்கமுதலே தேவன், "நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்,. . . அன்புகூருவாயாக" (உபாகமம் 6:5), என்று சொல்கிறார். நீங்கள் செய்கிற எதுவும் தற்செயலான ஒரு காரியம் அல்ல. உங்கள் இருதயத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அந்த விதமான நபராக நீங்கள் வடிவமைக்கப்படுகிறீர்கள்.
ஜானின் கிரெடிட் கார்டு கடன், கட்டுப்பாட்டை மீறிப்போய்விட்டது. அவரது மனைவி, ஓர் ஆலோசகரைச் சந்திக்கும்படி அவரை வலியுறுத்தினாள். ஆகவே, ஆர்வமின்றி, அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆலோசகர், அவரது வரவு மற்றும் செலவினங்களை மதிப்பீடு செய்தார். அது, அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஆலோசகர், ஒரு திட்டத்தை முன்வைத்தார். அது, ஜானின் வாழ்க்கைமுறையில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்படிச் செய்தால், அந்தப் பிரச்னையைத் தீர்க்கப் பத்தாண்டுகள் ஆகும்.
ஜான், அந்தப் புள்ளிவிவரங்களைக் கண்டு, சோர்ந்துபோனார். அவர், “என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரிகிறது. ஆனால் அதைச் செய்ய, நான் விரும்பவில்லை என்பதுதான் பிரச்சினை,” என்று சொன்னார். மற்றும், ஏன் இத்தனை சிரமமானதாக இருக்கிறது என்பதை, ஜானின் தடுமாற்றமான நிலைமை விளக்குகிறது. என்ன செய்யவேண்டுமென்று அறிந்திருப்பது எளியது் அதைச் செய்வதற்கான இருதயத்தைக் கொண்டிருப்பதுதான் கடினம்.
தேவன், தமது கட்டளைகளை நமக்குக் கொடுத்து, நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்குக் காண்பித்திருக்கிறார். கட்டளைகள், புரிந்துகொள்வதற்குக் கடினமானவையல்ல. அவற்றுக்குக் கீழ்ப்படிகிற இருதயம் இருக்கிறதா என்பதுதான் பிரச்சினை. ஆனால் தேவன், உண்மையானதும், ஆழமானதும், நீடித்திருப்பதுமான மாற்றத்தை நம் வாழ்க்கையில் சாத்தியமாக்குகிற வாக்குத்தத்தத்தை, நமக்குக் கொடுத்திருக்கிறார்.
தீர்க்கதரிசி எரேமியாவிடம் தேவன், தாம் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்வதாகக் கூறினார். இந்தப் புதிய உடன்படிக்கையின் மையப்பொருளே, இருதயத்தில் ஒரு மாற்றம் என்பதுதான்: “… நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது: நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழு(துவேன்), …” (எரேமியா 31:33). சமீபத்தில் ஒரு போதகரிடம் ஒருவர், “போதகரே, நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே, ஆலயத்துக்குக் கூட்டிச்செல்லப்பட்டேன்் அதனால் நான் ஒரு பயனும் அடையவில்லை. அங்குச் சொல்லப்பட்டது என்னவென்று நான் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொண்டபோதோ, அது என்னை மோசமாகவே உணரவைத்தது. அது மிகவும் சலிப்பூட்டுவதாயிருந்தது. அத்துடன், அது என் வாழ்வுடன் எவ்விதத்தில் பொருந்துகிறது என்று என்னால் அறியமுடியவில்லை. மொத்தக் காரியமும், என் மீது சுமத்தப்பட்ட கடமைகளாகவே இருந்தன. எனக்கு வாய்ப்புக் கிடைத்தவுடனேயே, அவற்றை நான் செய்யாமல் விட்டுவிட்டேன்,” என்றார்.
அதைப்போன்ற அனுபவம் உங்களுக்கு உண்டானால், “தேவனை, இருதயத்திற்குள்ளிருந்து நேசிப்பது என்பது, உண்மையிலேயே சாத்தியமா, என்ன?” என்று, உங்களிடமே நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொள்ளக்கூடும்.
இருதயம் வஞ்சகமானதும் மற்றும் சில நேரங்களில் சரியான குழப்பவாதியுமாய் இருக்கிறது. உங்கள் இருதயம் செல்லக்கூடிய திசையை, உங்களால் கணிக்க முடியாது: “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9).
இருதயம் குழப்பமடைவதற்குக் காரணம் எதுவெனில், பாவம் அதைச் சிதைத்துவிட்டது என்பதுதான்: “… பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது” (17:1). உங்கள் வரவேற்பறைக்குள் உடைத்துப் புகுந்து, அருவருப்பானவற்றைச் சுவர்களில் தெளித்துவிடும் திருடர்களைப்போல,
பாவமானது, உங்கள் இருதயத்துக்குள் புகுந்து, நாசமாக்கும் ஓர் எதிரியாயிருக்கிறது!
பாவமானது, உங்கள் இருதயங்களில் எழுதப்படும்போது, அது உங்கள் குணாதிசயத்தில் பதிக்கப்படுகிறது. அது, பாவத்திலேயே பழகிக்கொள்வதற்கான வல்லமையை உருவாக்குகிறது. அதுதான், உங்களுக்குள் இருக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் மூலாதாரமாயிருக்கிறது. போராட்டத்தின் வீரியம் வேறுபடும். இருதயமானது சிலருக்கு, கெட்ட மற்றும் அசிங்கமான காரியங்களை ஆழமாகப் பதித்துவைத்திருக்கும் இடமாக ஆகியிருக்கிறது. மற்றவர்களுக்கோ, சீர்கெடுக்கும் பாவத்தின் விளைவுகளின் கடுமை, சற்றுக் குறைவாயிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மனித இருதயத்திலும், ஏதோ ஒரு வகையில் பாவமானது, தாறுமாறாகக் கிறுக்கப்பட்டுள்ளது என்பதை வேதம் நமக்கு மிகவும் தெளிவாகச் சொல்கிறது.
மனித இருதயத்தின் பிரச்னையைக் குறித்து, இயேசுவைவிடவும் வல்லமையான விதத்தில், வேறு யாரும் ஒருபோதும் பேசியதில்லை. அவர், “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்,” என்றார் (மாற்கு 7:21-23).
தாவீது ராஜா, தனது வேசித்தனப் பாவத்திற்காக மனம் வருந்தியபோது, அவர் தேவனிடம் இரண்டு காரியங்களைக் கேட்டார். முதலாவது அவர், “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது சுத்தமாவேன்் என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” (சங்கீதம் 51:7), என்று சொன்னார். தாவீது, தான் மன்னிக்கப்படவும், கழுவப்படவும், சுத்திகரிக்கப்படவும்வேண்டுமென்று அறிந்திருந்தார்.
ஆனால், அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. மன்னிப்பைவிடவும் மேலானதொன்று தனக்குத் தேவைப்படுகிறது என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர், “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” (சங்கீதம் 51:10), என்று ஜெபித்தார். தாவீது, தன் இருதயத்தில் கிரியை செய்யும்படித் தேவனிடம் கேட்டார். ஏனெனில், தன் இருதயம் மாற்றப்படாவிட்டால், அது அவரை அதே பாவத்தின் பாதையில் தொடர்ந்து நடத்தும், என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர், “கர்த்தாவே, இதைச் செய்யும்படி என்னை நடத்திய என் இருதயத்தில் கிரியை செய்யும்!” என்று ஜெபித்தார்.
உங்கள் இருதயமே, உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டு மையம். நாம் சில நேரங்களில், “நாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம்,” என்பதைக் குறித்துப் பேசுகிறோம். நமது வாழ்வின் தீர்மானங்களை நிர்ணயிக்கும் உந்துதல், இருதயத்திலிருந்துதான் தொடங்குகிறது. எனவே, நாம் இருதயத்தைப் பற்றிப் பேசும்போது, ஒரு நபருடைய ஆள்தத்துவத்தின் மையப்பகுதியைப் பற்றிப் பேசுகிறோம்.
தமது நியாயப்பிரமாணத்தைத் தேவன், நமது இருதயங்களில் எழுதப்போவதாகச் சொன்னபோது, நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறதான, ஓர் அடிப்படை மாற்றத்தை அவர் விவரித்தார். தேவன் உங்களை அழைத்திருக்கிற விதமான வாழ்க்கையை நீங்கள் வாழப்போகிறீர்கள் என்றால், வெளிப்படையான பிரமாணங்கள், உள்ளான வாஞ்சையாக மாறும் பொருட்டு, அவரது பிரமாணமே உங்களது இருதயத்திற்குள் அதன் வடிவமைப்பாயிருக்கும்படி, உருவாக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
“நீ செய்யக்கடவாய்,” என்று தேவன் சொல்வதாலேயே, நீங்கள் ஒரு நீதியுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. தேவன் விரும்புகிற விதமான நபராக நீங்கள் மாறவேண்டும் எனில், “நான் செய்வேன்,” என்று விடுதலையுடன் சொல்லக்கூடிய நிலைக்கு உங்களைக் கொண்டுவரும் உள்ளான மாற்றம் நிகழவேண்டும். ‘அது எப்படி நிகழக்கூடும்?’ என்பதுதான் கேள்வி.
சிலர், கடுமையான ஒழுங்குமுறை மற்றும் பின்விளைவுகளைக் குறித்த பயம் ஆகியவை, நற்குணத்தைக் கொண்டுவரும் என்று நினைக்கிறார்கள். பயத்திற்கென்று ஓரிடம் இருக்கிறது. அது, நடக்கையை மாற்ற முடியும்் ஆனால், இருதயத்தை அது மாற்ற முடியாது. சீனாய் மலையில் தேவன், நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோது, ஜனங்கள் முற்றிலுமாகப் பயந்துபோய் இருந்தார்கள்.
ஆனால், சில வாரங்களுக்குள்ளாகவே, அவர்கள் பொன் கன்றுக்குட்டியைச் சுற்றிவந்து, நடனமாடிக்கொண்டிருந்தார்கள் (யாத்திராகமம் 32). அவர்கள் இருதயத்தை மாற்ற, பயம் எதையும் செய்யவில்லை.
மனிதரின் நிலைமைகளுக்கான தீர்வு, பிரதானமாகச் சமுதாய ரீதியானதும், பொருளாதார ரீதியானதுமே, என்று நினைக்கிற வேறு சிலரும் இருக்கிறார்கள். மக்களுக்குப் போதுமான அளவு பண வசதி இல்லாவிட்டாலோ, மிகவும் தாழ்ந்த சுய மதிப்பீட்டினால் சிரமப்படும்போதோ, அவர்களுக்கு நம்பிக்கை ஏதும் இருக்காது. பொருளாதார உதவி மற்றும் சமுதாய மறுசீரமைப்பு போன்ற திட்டங்கள் மட்டுமே இவற்றை மாற்றியமைக்கும் வழி என்பதே, இதற்காக முன்வைக்கப்படும் வாதம் ஆகும்.
இதிலும் ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தேவன் தம் ஜனங்களைப் பாலும், தேனும் ஓடுகிற தேசத்திற்குக் கொண்டுவந்து, அவர்களை விடுதலை, செழிப்பு மற்றும் நல்வாய்ப்புக்களால் ஆசீர்வதித்தபோது, அவர்களின் வனாந்தர வாழ்க்கையில் இருந்ததைக்காட்டிலும், எவ்விதத்திலும் அவர்களது இருதயங்கள் மாற்றமடைந்திருக்கவில்லை. ஒரு நபரின் சூழ்நிலைகளை மாற்றுவதால், பாவமானது மனித இருதயத்தில் கிறுக்கிய கீறல்களை, உங்களால் அழிக்க முடியாது.
ஆலயத்துக்கு வருவதும், ஜெபங்களைச் சொல்வதும், அல்லது வேதாகமத்தை வாசிப்பதும் இருதய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா? மீண்டும் சொல்வதானால், இவை யாவும் நல்லவையும், சரியானவையுமான காரியங்கள்தாம். ஆனால், அவற்றுக்கு இருதயத்தை மாற்றும் வல்லமை இல்லை. மனமாற்றமடைவதற்கு முன்பு பவுல், மதம் சார்ந்த ஒரு வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தார். அவர், தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற விரும்பினார். ஆனால் அவரது இருதயமோ, தன்னை வேறொரு திசையில் இழுப்பதை அவர் கண்டார்: “எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை் நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்” (ரோமர் 7:15), என்று அவர் சொன்னார். நியாயப்பிரமாணம், அவரை மாற்றுவதற்கு வல்லமையற்றிருந்தது. அது, அவரது இருதயத்தில் நிறைந்திருந்த சுபாவத்தினால், மூழ்கடிக்கப்பட்டிருந்தது.
பெற்றோர்கள் பெரும்பாலும், தாங்கள் சரியான ஒழுங்குமுறைகளை நடப்பித்து, சுய மதிப்பீட்டை ஊக்குவித்து, மற்றும் பிள்ளைகளை ஆலயத்துக்கு அழைத்துவந்துவிட்டால், பிள்ளைகள் நல்மனமுடையோராய் இருப்பார்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள், பிள்ளைகள் தவறான திசையில் செல்ல முனைகிற போக்கு, அவர்களுடைய இருதயங்களிலேயே இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைகிறார்கள். ஒருவேளை உங்களுக்குள்ளும் நீங்கள் அதே போராட்டத்தைக் காணலாம். நீங்கள் மாறவேண்டியது அவசியம் என்றும், மேம்பட்டதொரு வாழ்வை வாழவேண்டுமென்றும், நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் முயற்சிக்கும்போது, சுயநலம், பெருமை, இச்சை மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறித்த உங்கள் இருதயத்தின் உணர்ச்சித்தூண்டுதல், அதன் ஒவ்வொரு அணுவிலும், முன்பிருந்ததைப்போலவே வலுவாக இருப்பதைக் கண்டு, திகைப்படைகிறீர்கள். அப்படியானால், உங்கள் இருதயம் எப்படி மாற்றப்பட முடியும்?
தேவன், “. . . நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” (எரேமியா 31:33), என்று சொல்கிறார். தேவன் மட்டுமே உங்கள் இருதயத்தை மாற்ற முடியும். நீங்கள் எவ்வளவுதான் போராடி முயற்சித்தாலும் சரி, தேவனுடைய நியாயப்பிரமாணத்துடன் உங்கள் இருதயத்தைச் சீர்பொருந்தப்பண்ண உங்களால் முடியாது. அது கூடாதகாரியம். எனவே தேவன், “நீங்கள் செய்வதற்குத் திராணியற்றிருக்கிறதை, நான் செய்வேன். நான் என் நியாயப்பிரமாணத்தை உங்கள் இருதயத்திலே எழுதுவேன்,” என்று சொல்கிறார்.
இந்த இருதய மாற்றத்தை வேதாகமம், “மறுஜென்மம்” (தீத்து 3:5), என்று குறிப்பிடுகிறது. தேவனின் இந்தக் கிரியை, அவருக்கானதொரு புதிய அன்பையும், அவரது வார்த்தையைக் குறித்ததொரு புதிய தாகத்தையும், மற்றும் அவரது வழிகளில் நடப்பதற்கானதொரு புதிய வாஞ்சையையும் உங்களுக்குத் தருகிறது.
மனித வாழ்வு தொடங்குகிற விதமே, மறுஜென்மத்தைக் குறித்த, மிகச்சிறந்த சித்திரிப்பாகும். ஜீவ வித்துக்கள் வருகின்றன. ஒரு மறைவான, இரகசியமான மற்றும் அதிசயமான வழியில், ஒரு புதிய ஜீவன் கருத்தரிக்கப்படுகிறது. அது உடனடியானது. அது, ஒரு நொடிப்பொழுதில் நடக்கிறது! ஒரு பெண்ணின் சரீரத்திற்குள், ஒரு புதிய வாழ்க்கை தொடங்கிவிட்டது. அதில் வியக்கத்தக்கது என்னவெனில், அந்தக் கணப்பொழுதில், அவள் அதை அறிந்திருக்கக்கூடமாட்டாள்!
மறுநாளிலே, அவள் வேலைக்குப் போகிறாள். எல்லாமே, வழக்கம்போலவேதான் தோன்றுகின்றன. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, அவள் தனக்குள் ஏதோ சிற்சில மாற்றங்களை உணரத் தொடங்குகிறாள். ஏதோ வித்தியாசமான உணர்வாயிருக்கிறது. அவள், ‘நான் கர்ப்பந்தரித்திருக்கக்கூடுமோ?’ என்று யோசிக்கிறாள்.
ஒருவேளை, நீங்கள் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து, தேவன் உங்கள் இருதயத்தை எவ்வாறு மாற்றியிருக்கிறார் என்று காணக்கூடும். தேவனுக்கு நீங்கள் பதிலேதும் அளிக்காதிருந்த ஒரு காலமுண்டு. ஆனால் அதன்பின்பு, காரியங்கள் மாறத் தொடங்கின. தேவனுக்காகப் புதியதொரு பசிதாகமும், உங்கள் சொந்தத் தேவையைக் குறித்த, புதியதொரு உணர்வும், பரிசுத்தமாயிருப்பதற்காகப் புதியதொரு வாஞ்சையும் உங்களுக்கு வந்தது.
அதன் விளக்கம் இதோ: நீங்கள் மறுஜென்மம் அடைந்திருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், புது ஜீவன் உங்களுக்குள் நடப்பட்டுள்ளது. இது உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களுக்கு நிகழ்ந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கர்ப்பந்தரித்தலையும்போலவே, அது சிலநாட்களில் தெரியவரும்! மனந்திரும்புதல் மற்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் ஆகியவையே, தேவனிடத்திலிருந்து வரும் புது வாழ்வைக் குறித்த, கண்களுக்குப் புலப்படும் முதல் சான்றுகளாகும்.
ஒரு முறை, நிக்கொதேமு எனப்பட்ட மிகவும் மதிப்பிற்குரியதான ஒரு மனிதர், இயேசுவுடன் பேசும்படி வந்திருந்தார். இயேசு, “நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்,” என்று சொன்னார் (யோவான் 3:7). சன்மார்க்கமும், சமய நம்பிக்கையும் வாய்ந்த அந்த மனிதருக்கு இருந்த அடிப்படைப் பிரச்னை என்னவெனில், அவருக்கு ஒரு புதிய இருதயம் தேவைப்பட்டது என்பதுதான்.
நிக்கொதேமு குழப்பமடைந்தார். அதெப்படி நடுத்தர வயதுள்ள ஒரு மனிதன், தன் தாயின் கர்ப்பத்திற்குத் திரும்பிச் சென்று, மறுபடியும் பிறந்து வர முடியும்? இயேசு, “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6), என்று கூறித் தாம் பேசியது சரீரப்பிரகாரமான பிறப்பைப் பற்றியல்ல் மாறாக, ஆவிக்குரிய பிறப்பைப் பற்றியே, என்று விளக்கினார். நிக்கொதேமுவுக்குப் புதியதோர் இருதயத்தை அளிக்கக்கூடிய, பரிசுத்த ஆவியானவரின் ஒரு கிரியை, அவருக்குள் செயலாற்றவேண்டியிருந்தது.
உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறதோ, அதுதான் நீங்கள் பரலோகத்தில் இருக்கும்போது, உங்களின் பரிபூரணத்துவமாக இருக்கும். தேவன் உங்கள் இருதயத்தில் புது வாழ்வை நாட்டியிருந்தால், உங்களது மனதின் ஆழ்ந்த வாஞ்சை, திருப்தியடையும். நீங்கள் ஏங்கி, வாஞ்சித்த நபராகத் தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பீர்கள்.
பாவத்தின் கோரமான கீறல்களால், மனித இருதயம் சிதைக்கப்பட்டுள்ளது என்பதே, அதன் பிரச்சினை. தேவன் கட்டளையிடுவதே நமது வாஞ்சையாய் மாறும் பொருட்டு, அவரது நியாயப்பிரமாணம் நமது இருதயங்களில் எழுதப்படவேண்டும் என்பதே, நமது மிகப்பெரிய தேவையாகும். தேவன் மட்டுமே தமது நியாயப்பிரமாணத்தை நமது இருதயங்களில் எழுத முடியும். இதைச் சாத்தியமாக்கும்படியே, அவர் இயேசு கிறிஸ்துவில், நம்மிடத்திற்கு வந்தார். இயேசு, "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்," என்றார் (யோவான் 7:37-38).
1. நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று அறிந்திருந்தும், அதைச் செய்ய விரும்பாமல் இருந்ததான ஒரு காலத்தை உங்களால் நினைவுகூர முடியுமா?
2. இன்னதென்று கணிக்க முடியாத மனித இருதயத்தின் தன்மையை, வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது?
3. நாம் பாவம் செய்யும்போது, (சங்கீதம் 51-ன் படியாக) ஏன் நமக்குப் பாவமன்னிப்பைவிட மேலானதொன்று தேவைப்படுகிறது?
4. மனித இருதயத்தை மாற்ற, பயம், செழிப்பு மற்றும் மதம் ஆகியவற்றின் மூலம் முயற்சிக்கப்படுவதை நீங்கள் எங்கே கண்டிருக்கிறீர்கள்?
5. தேவனிடத்திலிருந்து வருகிறதான புது வாழ்வை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்பதை, நீங்கள் எப்படி அறிவீர்கள்? அதன் சில அடையாளங்கள் எவை?