ஆதியாகமம் 12: 1-9
ஆதியாகமம் 12: 1-9
1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
5. ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான்தேசத்தில் சேர்ந்தார்கள்.
6. ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
7. கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
8. பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
9. அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
ஆரம்பமுதலே, வேதாகமம் ஒரு நம்பிக்கையின் கதையாகும். பாவம் உலகிற்குள ; பிரவேசித்தபொழுது, அது நிலைநிற்காது என்று தேவன் வாக்கருளினார். தேவன் ஸ்திரீயின் வித்தான, சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற, ஒரு இரட்சகரை அனுப்புவார். தேவன் தமது வாக்குத்தத்தத்தை எப்படி நிறைவேற்றப்போகிறார் என்கிற வரலாறு, ஆதியாகமம் 12-ல் தொடங்குகிறது.
ஆரம்பமுதலே, வேதாகமம் ஒரு நம்பிக்கையின் கதையாகும். பாவம் உலகிற்குள் பிரவேசித்தபொழுது, அது நிலைநிற்காது என்று தேவன் வாக்கருளினார். தேவன் ஸ்திரீயின் வித்தான, சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற, ஒரு இரட்சகரை அனுப்புவார். தேவன் தமது வாக்குத்தத்தத்தை எப்படி நிறைவேற்றப்போகிறார் என்கிற வரலாறு, ஆதியாகமம் 12-ல் தொடங்குகிறது.
ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தோட்டத்தில் தோன்றியதைப்போலவே, தேவன் ஒரு நாள் ஆபிரகாமுக்குத் தோன்றினார் (அப்போஸ்தலர் 7:2). தேவன் சொன்னார், “நான்… உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதியாகமம் 12:2-3). ஆகவே, ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமாகும். இதன் காரணமாகவே, ஆதியாகமம் 12 முதல், வேதாகம சரித்திரம் ஆபிரகாமின் வம்சாவளியையும், குடும்பத்தையும் பின்பற்றிவருகிறது.
தேவனின் வாக்குத்தத்தம் கிருபையின் ஒரு பரிசு
ஆபிரகாமுக்குத் தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தின் வாக்குத்தத்தத்தில் இரண்டு பிரத்யேகமான காரியங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவது, ஆசீர்வாதமான ஒரு ஜனம்: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி…” (12:2). இரண்டாவது, ஆசீர்வாதமான ஓர் இடம்: “கர்த்தர் ஆபிராமை நோக்கி: ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ'” (12:1). ஆபிரகாம் அந்த இடத்திற்குச் சென்றான், அவன் அங்கே வந்ததும், தேவன் சொன்னார், “உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” (12:7).
அதுதான் வேதாகமக் கதையின் இரத்தினச் சுருக்கம். அது மொத்தத்தில், ஆசீர்வாதமான ஒரு மக்கள் கூட்டத்தைக் கூட்டிச் சேர்க்கவும், ஆசீர்வாதமான ஒரு ஸ்தலத்திற்கு அவர்களைக் கொண்டுவரவும், விழுந்துபோன இந்த உலகத்திற்குள் எவ்வாறு தேவன் அடியெடுத்து வைக்கிறார் என்பதைப் பற்றியதுதான். அதன் காரணமாகவே, கதையின் முடிவில், எல்லாக் கோத்திரங்களிலும், எல்லாத் தேசங்களிலுமிருந்து தேவ சமூகத்தில் கூட்டிச் சேர்க்கப்பட்ட திரள்கூட்டமான ஜனங்களின் சந்தோஷத்தை நாம் காண்கிறோம் (வெளிப்படுத்தல் 7:9).
ஆனால், அதில் இரண்டு பிரச்சனைகளிருந்தன. முதலாவது, தேவன் ஆபிரகாமைப் பெரிய ஜாதியாக்குவதாக வாக்குத்தத்தம் செய்தார். ஆனால், ஆபிரகாமுக்கோ பிள்ளைகளில்லை. அவன் எழுபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். சாராள் அவனிலும் பத்து வயது குறைவானவளாக இருந்தாள். ஆகவே, அவர்கள் இருவருமே, ஒய்வூதியத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களாகவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையை வெகுவாகக் கடந்தவர்களாகவும் இருந்தார்கள். இரண்டாவது பிரச்சனை எதுவெனில், ஆபிரகாம் வாக்குத்தத்த பூமிக்கு வந்து சேர்ந்தபொழுது, அது ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததைக் கண்டான்: “கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்” (ஆதியாகமம் 12:6). தேவன் மாத்திரமே வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற முடியும். வாக்குரைக்கப்பட்ட ஆசீர்வாதம் தேவனிடமிருந்து வருகிறதும், அது தேவனையே சார்ந்ததாயும் இருக்கிறது. அது கிருபையின் ஒரு பரிசாகும்.
தேவனின் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் பெறப்படுகிறது
ஒரு குழந்தை வருவதற்கோ, கானானியர்கள் வெளியேறுவதற்கோ எந்தவொரு அடையாளமும் இன்றியே ஆண்டுகள் பல கடந்தன. ஆனால், ஆபிரகாம் “கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” (15:6). இது பழைய ஏற்பாட்டிலுள்ள மிக முக்கியமான வசனங்களுள் ஒன்றாகும். காரணம், அது நாம் தேவனுடன் எவ்வாறு சரியான உறவில் சீர்பொருந்த முடியும் என்று நமக்குக் கூறுகிறது.
ஆபிரகாம் கீழ்ப்படிந்தான் என்பதனாலோ, ஜெபித்தான் என்பதனாலோ தேவன் அவனை நீதிமான் என்று எண்ணியதாக வேதாகமம் கூறவில்லை. ஆபிரகாம் விசுவாசித்த காரணத்தினால், அவன் நீதிமான் என்று எண்ணப்பட்டான். அப்படியானால், தேவன் ஆபிரகாமை நீதிமான் என்று எண்ணத்தக்கதாக, அப்படி எதை அவன் நம்பினான்?
வேதாகமம், தேவனால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரே கதை. அதில், ஓரிடத்தில் புரிந்துகொள்ளக் கடினமாய் இருப்பது, பெரும்பாலும் வேறோரிடத்தில் விளக்கப்படுகிறது. வேதத்தின் வெளிச்சத்திலேயே நாம் வேதத்தை வியாக்கியானப்படுத்துகிறோம்.
வேதாகமக் கதையை, இயேசுவின் காலத்துக்கு முன்னோக்கித் திருப்பிக்கொள்ளுங்கள். அங்கே நம் ஆண்டவர், ஆபிரகாமைப் பற்றி உரையாடிக்கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்: “உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்” (யோவான் 8:56).
இயேசு பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே, ஆபிரகாமுக்கு இயேசு கிறிஸ்துவை நிழலாட்டமாய்க் காணமுடிந்தது. தேவன் தனக்கொரு வாரிசை அருளுவார் என்றும், அவர் மூலமாக உலகத்தை ஆசீர்வதிக்கத் தேவன் தந்த வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படும் என்றும் அவன் புரிந்துகொண்டான். இந்த வாரிசு, ஆபிரகாமின் வித்தாக, மரியாள் வழியாக இவ்வுலகிற்குள் வந்த, தேவகுமாரனாகிய இயேசுவே.
வேதாகமத்தின் முதல் புத்தகம், தேவனோடு நாம் எவ்வாறு சீர்பொருந்த முடியும் என்பதையும், அத்துடன் அது விசுவாசத்தினால்தான் முடியும் என்பதையும் நமக்குக் கூறுகிறது. நம்மைப்போலவேதான் ஆபிரகாமும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததாலேயே இரட்சிக்கப்பட்டான். கிறிஸ்துவின் நாளை அவன் தொலைவிலிருந்து கண்டு, அதை விசுவாசித்தான்.
இயேசுவின் நாமத்தையோ, சிலுவையைக் குறித்த விவரங்களையோ ஆபிரகாம் அறிந்திராதபொழுதும், நாம் விசுவாசத்தில் பின்னோக்கிப் பார்க்கிறதுபோல, அவனும் கிறிஸ்து நிறைவேற்றப்போகிற காரியங்களை எதிர்நோக்கிப் பார்த்தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதனால்தான், நாம் தேவனுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம்.
“உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா?” என்பது முக்கியமான கேள்வியல்ல. மாறாக, “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா?” என்பதுதான் முக்கியமான கேள்வி. ஆபிரகாம் விசுவாசித்ததைப்போல நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
இயேசுவின் மீது நாம் வைக்கக்கூடிய விசுவாசம் எப்படி நம்மைத் தேவனுக்குள் நீதிமான்களாக்கும்? உங்கள் வங்கிக் கணக்கு பற்றாக்குறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும், ஒரு நண்பர் உங்களுக்கு உதவ முன்வருகிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள் என்று அவர் கேட்கிறார். நீங்கள், “1,00,000 ரூபாய்கள்,” என்கிறீர்கள்.
உங்கள் நண்பர் உங்களுக்குதவ உடன்படுகிறார். அவரது பணம் உங்களது கணக்கில் செலுத்தப்படும்பொழுது, உங்கள் கடன் அடைக்கப்படுகிறது. அவரது நஷ்டம், உங்களுக்கு இலாபம். உங்கள்மேல் சுமந்திருந்தது, இப்பொழுது அவருக்கு எதிராக, அவர் மீது சுமத்தப்படுகிறது. இங்கே பேசப்படுவதும் அதுதான். ஆபிரகாம் “கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” (ஆதியாகமம் 15:6).
கிறிஸ்து நமக்கு நீதியை வரவாக வைக்கவேண்டுமானால், அளவிடற்கரிய, மகத்தான கடனை அவர் சுமக்கவேண்டும். அதை, அவர் சிலுவையிலே செய்தார். நமது அனைத்துக் கடனும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அவரில் நீங்கள் விசுவாசம் வைக்கும்பொழுது, பிதாவானவர் அவரது நீதியை உங்களுக்கு வரவாக வைப்பார்.
தேவனின் வாக்குத்தத்தம் கற்பனைக்கெட்டாத விலையில் கிடைக்கிறது
“இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்” (ஆதியாகமம் 22:1-2). இந்த வசனங்களை நீங்கள் படித்துவிட்டு, “என்ன இதெல்லாம், தேவன் ஏன் ஆபிரகாமிடம் இப்படிச் செய்யச் சொல்லவேண்டும்?” என்று யோசிக்கலாம்.
தேவன், ஆபிரகாமின் சந்ததியின் மூலமாக உலகிற்குத் தமது ஆசீர்வாதம் வரும் என்று வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஆனால், சந்ததியோ ஏதுமில்லை. அதன்பின்பு, ஒரு அற்புதமான விதத்தில், தேவன் சந்ததியைக் கொடுத்தார். ஆனால், இப்பொழுதோ, தேவன் அந்த ஆசீர்வாதமான சந்ததி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்கிறார்!
ஈசாக்கு மற்றும் அவனது வழித்தோன்றல்களின் வரிசை மூலமாகவே, மேசியா உலகிற்குள் வரவேண்டியிருந்தது. எனவே, ஈசாக்கு பிழைத்திருக்கவே வேண்டும்; அவன் மணமுடித்துப் பிள்ளைகளைப் பெறவேண்டும். ஈசாக்கு பலியிடப்பட்டால், வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுவது எப்படிச் சாத்தியமாகும்?
ஆபிரகாம், பலியின் அவசியத்தைக் குறித்துக் கேள்வி கேட்கவில்லை. இது ஆச்சரியம்தான். காரணம், தேவன் சோதோமின் மீதான நியாயத்தீர்ப்பைப் பற்றி ஆபிரகாமிடம் கூறியபொழுது, ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக நின்று, பட்டணம் காக்கப்படும்படியாக மன்றாடினான் (18:22-23). ஆனால், ஒரு பலி செலுத்தப்பட வேண்டுமென்று தேவன் கூறும்பொழுதோ, ஆபிரகாம் எந்த ஒரு ஆட்சேபணையையும் எழுப்பவில்லை.
தேவனுடைய ஆசீர்வாதம் உலகிற்குப் பொழியப்பட வேண்டுமானால், ஒரு பலியானது ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆபிரகாம் புரிந்துகொண்டவனாகக் காணப்படுகிறான். ஒருவேளை, அவனது மனச்சாட்சி அதை அவனுக்குக் கூறியிருக்கலாம். தேவன் சொல்லியிருந்தார், “நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” (17:1). ஆபிரகாமுக்கும், உத்தமத்திற்கும் வெகுதூரம். ஒரு சந்தர்ப்பத்தில் தன் மனைவியைக் குறித்துப் பொய் சொன்னான், மற்றோரிடத்தில் தேவனின் வாக்குத்தத்தத்தைக் குறித்துச் சிரித்துவிட்டான். மொத்தத்தில் ஆபிரகாம், தேவனுக்கு ஓரளவுக்குத்தான் கீழ்ப்படிந்திருந்தான். அவனால் தலை நிமிர்ந்து, “செய்யும்படித் தேவன் எனக்குக் கூறியதனைத்தையும் நான் செய்து முடித்துவிட்டேன்,” என்று சொல்ல முடியவில்லை. அவன் உத்தமனாயிருக்கவில்லை, நாமும்கூடத்தான்.
ஆகவே, உலகம் ஆசீர்வதிக்கப்படுவதற்கான தேவனின் வாக்குத்தத்தம், அதன் நிபந்தனைகளை ஆபிரகாம் நிறைவேற்றாத பட்சத்தில், எப்படி நிறைவேறுதலுக்கு வரும்? அங்கே ஒரு பலி நிச்சயம் இருக்கவேண்டும், அதை ஆபிரகாம் அறிந்திருந்தான்.
தேவன் பலியை அருளிச்செய்தார்
ஆபிரகாம் தன் குமாரனுடன் மலை மீது ஏறிப்போகையில், அங்கே, மிகத் துயரமான அத்தருணத்தில்: “…ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்” (ஆதியாகமம் 22:7-8).
மலையின் உச்சியை அவர்கள் வந்தடையும்பொழுது, ஈசாக்குதான் பலியாக இருக்கப்போகிறான் என்பது புலனாகிறது. அவன் கட்டப்பட்டு, பலிபீடத்தின்மேல் கிடத்தப்பட்டான். அச்சமயத்தில் ஈசாக்கு ஒரு வாலிபனாக இருந்திருப்பான். ஆகவே, பலிபீடத்தின்மேல் ஒரு சிறுவன் உதவுவாரற்றுக் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாக, நீங்கள் கண்டிருக்கக்கூடிய ஏதாவது சித்திரங்களின் தோற்றங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். ஈசாக்கு, தன் தோள்களின்மேல் பலிக்கான கட்டைகளைச் சுமந்துவந்தான் (22:6). அவன் தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான பலமுள்ள வாலிபக் காலத்தில் இருந்தான். அவன் நினைத்திருந்தால், நூறு வயது காலங்களுக்குமேல் கடந்துவிட்டிருந்த ஆபிரகாமைச் சுலபமாக மேற்கொண்டிருக்க முடியும்.
ஆனால், ஈசாக்கு அப்படிச் செய்யவில்லை. அவன் தன் ஜீவனை ஒப்புக்கொடுக்க மனதாயிருந்தான். ஆக, நீங்கள் இங்கே காண்பது என்னவெனில், தன் குமாரனை ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கும் ஒரு தகப்பனையும், தன்னையே ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கும் ஒரு குமாரனையும்தான். அப்படி அவர்கள் செய்கிற காரியத்தில், உலகிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்பொருட்டு, அவர்கள் இருவருமே ஒருமனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
அதன்பின்பு, சரியான தருணத்தில், கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து கூப்பிடுகிறார்: “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே” (22:12).
பிறகு, தேவனே பலியை அருளிச்செய்கிறார்: “ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்” (22:13).
இந்தக் கதைக்கு நீங்கள் இருவிதங்களில் பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலாவது, நீங்கள் திகிலில் உறைந்து போய்விடுவீர்கள் என்று நம்புகிறேன். இக்கதையை நீங்கள் வாசித்துவிட்டு, “இது எப்படிப்பட்ட கற்பனைக்கெட்டாத விலைக்கிரயமாகும்?!” என்று கேட்கக்கூடும். இரண்டாவது, இந்தக் கதை சுட்டிக்காட்டும் உண்மையை நீங்கள் பிரமிப்புடன் உற்று நோக்குவீர்கள் என்று நம்புகிறேன். ஆபிரகாம், ஈசாக்கைப் பலியிடவேண்டும் என்பது ஒருபோதும் தேவனுடைய நோக்கமல்ல. ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படவும், அவரது ஆசீர்வாதம் உலகத்திற்குக் கிடைப்பதற்குமான விலைக்கிரயம் எத்தனை பெரியது என்பதை நமக்குக் காண்பிக்கவே, தன் குமாரனைப் பலியிட ஆயத்தமாயிருக்கும் தகப்பனையும், தன் ஜீவனையே பலியாய் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கும் குமாரனையும் பற்றிய, இருதயத்தைப் பிளக்கும் இவ்வேதனையின் கதை, இங்கே இடம்பெறுகிறது.
ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் சித்திரிக்க மட்டும் கூடுமாயிருந்ததைத் தேவன் செய்து முடித்தார். பிதாவாகிய தேவன் தம் குமாரனை ஒப்புக்கொடுத்தார். குமாரனாகிய தேவன் தம்மையே நமக்காகக் கொடுத்தார். ஈசாக்கு தன் முதுகில் கட்டைகளைச் சுமந்ததைப்போல, இயேசு தம் தோள்களின்மேல் சிலுவையைச் சுமந்தார். அவரே பலியானார். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினியில் நமது இடத்தை அவர் எடுத்துக்கொண்டார்.
உங்களுக்காகவும், எனக்காகவும் தம்மையே வழங்குவதில், பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும் ஒன்றாகவே இருந்தனர். உங்களுடைய ஜீவனைப் பலியிடுவதோ, உங்கள் அன்புக்குரியவரை ஒப்புக்கொடுப்பதோ, எது கடினமானது? தேவன் இவ்விரண்டு வேதனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவித்தார். பிதாவானவர் தமது சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார் (ரோமர் 8:32). குமாரனாகிய தேவனோ, “என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 2:20). தேவனின் வாக்குத்தத்தமாகிய ஆசீர்வாதம், தேவன்தாமே நமக்காகச் சுமந்துகொண்டதான, கற்பனைக்கெட்டாத விலையில் நம்மை வந்தடைந்தது.
ஆபிரகாமின் சந்ததி மூலமாக உலகத்தை ஆசீர்வதிக்கிற தேவனின் வாக்குத்தத்தம், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றப்படுகிறது. குமாரன் நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்து, தமது ஜீவனைப் பலியாக ஒப்புக்கொடுத்ததினால், அவருடைய நீதியானது, விசுவாசத்தில் அவரிடம் வருவோர் அனைவருக்கும் உரியதாகும்படிக்கு, தமது குமாரனை உலகிற்குள் அனுப்புவதற்குப் பிதாவாகிய தேவன் பிரியமாயிருந்தார்.
1. வேதாகமம் ஏன் ஆபிரகாம் மற்றும் அவனது வம்சாவளியைப் பின்பற்றுகிறது?
2. ஆபிரகாம் “கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” (ஆதியாகமம் 15:6). இந்த வேத வசனம் நமக்கு என்ன
கூறுகிறது?
3. ஆபிரகாம் விசுவாசித்ததைப்போல நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் விசுவாசம் எவ்வாறு ஒத்திருக்கிறது? அது எவ்வாறு வேறுபடுகிறது?
4. விசுவாசம் எப்படி ஒரு நபரைத் தேவனோடு சீர்பொருந்தப்பண்ணுகிறது?
5. இதற்கு மாறுத்தரம் கொடுங்கள்: “உங்கள் பாவங்களுக்கான பலியைத் தேவன் செலுத்தியிருக்கிறார்.”