வேதத்தில் இதுவரை எனக்கு மிகவும் விருப்பமான கதை என்றால், அது 'கெட்ட குமாரன்' கதைதான். ஞாயிறு வேதாகமப் பள்ளிக் கதை நேரங்களில், அநேக முறைகள் இந்தக் கதை சொல்லப்படுவதை நான் அதிகமாகக் கேட்டிருக்கிறேன். மேலும், அநேகப் பிரசங்கிமார்கள் இந்த உவமைக் கதையின் பின்னே இருக்கும் சத்தியத்தையும், ஆழ்ந்த அர்த்தத்தையும் சொல்வதையும் நான் கேட்டிருக்கிறேன். எந்தவொரு கதைக்குமே எப்பொழுதும் இரு பக்கங்களுண்டு. அதேபோல், இந்த உவமை ஒரு புறம் கெட்ட குமாரனின் இருதயத்தைப் பிரதிபலித்தாலும், மறுபுறம் தேவனின் இருதயத்தைப் பிரதிபலிக்கிறதை நான் காண்கிறேன்.
இந்தக் கதை, லூக்கா 15:12-ல் ஒரு தகப்பனிடம் அவருடைய குமாரன் சொத்தில் தன் பங்கைக் கேட்பதாகத் தொடங்குகிறது. ஒரு மகன் தன் தந்தையிடம் கேட்டிருக்கக்கூடிய மிகுந்த மன வேதனையளிக்கும் ஒரு வேண்டுகோளாக அது இருந்திருக்க வேண்டும். தான் பெற்ற மகனை நேசித்துப் பராமரித்து வந்திருக்கக்கூடிய ஒரு தகப்பனின் இருதயத்தை அது நொறுக்கியிருக்க வேண்டும். மகனுடைய வேண்டுகோளின் நோக்கங்களைத் தகப்பன் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் ஒரு அன்புள்ள தகப்பனாயிருந்தபடியால், தன் மகனின் விருப்பத்திற்கு உடன்பட்டார். கடைசி வெள்ளிக்காசைத் தன் மகனிடம் கொடுக்கும்பொழுது, அதுதான் தனது அன்பின் கடைசி வெளிப்பாடு என்று எண்ணி அந்தத் தந்தை, மிகவும் மனஉளைச்சல் பட்டிருப்பார்.
தகப்பனின் இருதயம்
நீங்கள் லூக்கா 15:20-ஐ வாசிப்பீர்களானால், வேதம் சொல்கிறது, "… அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்."
அந்த வசனத்தில் "அவன் தூரத்தில் வரும்போதே," என்னும் முதல் பகுதியைச் சற்றே பார்ப்போம். வசனத்தின் இந்தப் பகுதி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே பாவம் கொண்டுவந்துவிட்ட பிரிவினையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார், "பாவம் தேவனுக்கும் நமக்குமிடையே பிரிவினையை உண்டாக்குகிறது" (ஏசாயா 59:2), என்று. நான் உட்கார்ந்து இதைத் தியானிக்கையில், இந்தக் கேள்வியைக் குறித்துச் சிந்திக்கிறேன் - இந்தப் பிரிவினை, பாவத்துடன் நேரடி விகிதாசாரத்தில் இருக்கிறதா? எவ்வளவுக்குப் பெரிய பாவமோ, அவ்வளவுக்குப் பெரிய பிரிவினையோ? எப்படியாயினும், மறுக்க முடியாத உண்மை என்னவெனில் - பாவம் பிரிவினையை உண்டாக்குகிறது, நம் பாவம் அதிகரிக்கும்பொழுது, நமக்கும் தேவனுக்கும் உண்டான பிரிவினை அதிகரித்து ஒரு பள்ளத்தாக்கை உருவாக்குகிறது. அந்தப் பள்ளத்தாக்கு எவ்வளவு அகலமாகவோ, குறுகியதாகவோ இருந்தாலும், நம் அனைவருக்குமே தேவனின் மீட்கும் கரம் தேவைப்படுகிறது.
கிறிஸ்து இவ்வுவமையை மேலும் விவரித்துச் சொல்லும்பொழுது, இவ்வசனத்தின் இரண்டாவது பகுதியான, "அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு," என்பது தகப்பனின் இருதயத்தின் சிந்தனைகளைத் தெரியப்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் காலை விடியும்போதும், அந்தப் பெரும் பண்ணைக்கும் மற்றும் அத்தனை திரளான சொத்துக்களுக்கும் உரிமையாளரான அந்தத் தகப்பன், தன் மகனைக் குறித்த செய்திக்காக ஏக்கத்தோடு காத்திருந்திருக்க வேண்டும். தனக்குப் பரிச்சயமான தன் மகனின் உருவத் தோற்றத்தை எங்காவது அடையாளம் காணக்கூடுமோவென, கண்ணுக்கெட்டிய தொடுவான தூரம் வரை, கண்களால் துழாவித் தேடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். 'அவரது மகன் அவருடைய சொத்துக்களையெல்லாம் வீணாக்கியிருப்பானா? அல்லது இன்னும் அதிக சொத்துக்களைப் பெறும்படியாகத் தன் உடைமைகளையெல்லாம் வியாபாரத்தில் செலவிட்டு, மிகுந்த செல்வங்களுடனும், ஆடம்பரத்துடனும் வீடு திரும்பி வந்துகொண்டிருப்பானா? அவரது மகன் திரும்பி வரும்போது அவன் எப்படிக் காணப்படுவான்? அல்லது அவரது மகன் திரும்பி வருவானா?' என்று ஏகப்பட்ட சிந்தனைகள் அந்தத் தகப்பனின் இருதயத்தை நொறுக்கியிருக்கும்.
…நமக்கோ, நம்மை நோக்கி ஓடிவருகின்ற ஒரு தேவன் இருக்கிறார்
அநேகக் கேள்விகள் மேலோங்குகின்றன ஆனால் கிறிஸ்து அதை எல்லாரும் புரிந்துகொள்ளும்படியாக எளிதாக்குகிறார். நாம் தேவனைவிட்டு எவ்வளவுதான் தொலைவிலிருந்தாலும், ஒவ்வொரு நபரும் தமது இராஜ்யத்திற்குத் திரும்பி வந்துவிடவேண்டுமென்றே அவர் ஏக்கமாயிருக்கிறார். பாவம் இடைவெளியை உண்டாக்குகிறது ஆனால் நாம் இரட்சிப்படையும்படிக்குக் கிறிஸ்து தம்மைத்தாமே ஒரு தியாகப் பலியாகச் செலுத்தி அவ்விடைவெளியை இணைக்கும் பாலமாகிறார். மனித அறிவு கிரகித்துக்கொள்ளக்கூடியதற்கும் மிகவும் அப்பாற்பட்டதாக அவரது மனதுருக்கம் இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை கெட்ட குமாரனின் உவமை அதற்குச் சற்று முன்பதாகக் கிறிஸ்து கூறும் காணாமற்போன ஆட்டைப் பற்றிய உவமையின் மூலமாகக் குறிப்பிடும் கருத்துக்கு வலுசேர்ப்பதாகவே இருக்கின்றது (லூக்கா 15:3-7). இங்கே, காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி அலைந்து திரியும் நல்ல மேய்ப்பனைப் பற்றி அவர் பேசுகிறார். இரண்டிற்குமிடையே ஒற்றுமைகள் உள்ளன. தமது தொலைந்துபோன ஆடுகளை மீட்பதற்காக இந்தப் பு+மியின் எந்த உயரங்களுக்கும் ஆழங்களுக்கும் செல்லக்கூடுமான அளவுக்கு நல்ல மேய்ப்பரின் இருதயம் அத்தனை மனதுருக்கம் வாய்ந்தது என்று கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோருக்குக் கூறுகிறார். இதை நீங்கள் கவனமாக வாசிப்பீர்களானால், மேய்ப்பன் அந்த ஆடு தம்மிடம் திரும்பிவரக் காத்திருக்கவில்லை. மாறாக, அவர் தொலைந்துபோன அந்த ஆட்டைத் தேடிச்சென்றார்.
கெட்ட குமாரனின் உவமைக்குத் திரும்பிச் சென்று, லூக்கா 15:20-ன் கடைசிப் பகுதியை மீண்டும் வாசிப்போம். அங்கே, "… ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகப்பன் தன் மகனைச் சந்திக்கும்படி ஓடிச்சென்றார் என்பதை இதைவிடத் தெளிவாகக் கூற முடியாது. அவர் காத்திருக்கவில்லை, அவர் தம் மகன் தம்மிடம் திரும்ப வந்து சேரும்வரை காத்துக்கொண்டு சும்மா நிற்கமுடியவில்லை. மாறாக, தன் மகனை நோக்கி ஓடிச்சென்றார்.
கடைசியாக ஒரு சிறு விஷயத்தைச் சொல்லி, நான் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். மத்தியக் கிழக்கு நாடுகளில் எனக்கு நண்பர்கள் உண்டு, அவர்கள் அடிக்கடிச் சொல்லக் கேட்கும் ஒன்று என்னவெனில், செல்வச் சீமானாயிருக்கும் ஒரு மனிதர், வழக்கமாகத் தம்மைச் சுற்றி ஒரு கௌரவமான சூழலைக் கொண்டிருப்பார் என்பதாகும். ஏனென்றால், அவரைச் சுற்றி; அவர் தேவைகளை நிறைவேற்ற அநேக வேலைக்காரர்கள் இருப்பதால், அவருக்கு ஒரு குறைவும் இல்லை. ஆகவே, அவர் துரிதமாய்ச் செயலாற்றுவது அரிதாகவே இருக்கும். அந்த மனிதர் தன் விருந்தினரைச் சந்திக்க மட்டுமே துரிதமாக நடந்து வரலாம். ஆகவே அநேக வேதவல்லுநர்களும் வரலாற்றாளர்களும் கிறிஸ்து இந்த வார்த்தையை உட்கருத்தோடு கூறியிருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். காரணம், பணக்காரரான ஒருவர் யாரையோ சந்திக்கும்படி ஓடிவருவது என்பது அக்காலத்தில் கேள்விப்படாத, இன்னும் சில சம்பவங்களில் சொல்லப்போனால் அவமரியாதையாகக் காணப்பட்ட சமயத்தில்;, கிறிஸ்து ஏன் அவ்வார்த்தைகளை உபயோகித்தார்? நாம் எவ்வளவுதான் பாவம் செய்திருந்தாலும் சரி, தேவனின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து, நம்மைத் தழுவிக்கொள்ள எதிர்கொண்டோடி வந்து, நம்மைத் தமது மந்தைக்குள் வரவேற்பார் என்னும் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறவே அப்படிச் சொன்னார்.
இதைக் கற்பனை செய்து பாருங்கள். இந்த உலகத்தின் பாவங்களினிமித்தம் நாம் எவ்வளவு அழுக்கடைந்திருந்தாலும், கிறிஸ்துதாமே நம்மை நோக்கி ஓடிவருகிறார். நமக்கொரு தகப்பன், தாமதியாத, நம் தேவன் இருக்கிறார் என்னும் அக்கற்பனை, அவர் ராஜா என்னும் ஒட்டுமொத்தக் கோட்பாட்டையும் தலைகீழாகப் புரட்டி விடுகிறது. மாறாக, நம் தேவன் நம்மைச் சந்திக்க, நம்மை வாழ்த்தி, வீட்டிற்குள் வரவேற்க, தாமதியாமல் எதிர்கொண்டோடி வரும் ஒரு தகப்பனாக இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
என்னே ஒரு ஆசீர்வாதமான சிந்தனை!