சமீபத்தில் ‘பார்னெஸ் அண்ட் நோபுள்’; புத்தக நிலையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அண்மைக் காலத்திய புத்தகங்களில் தேடிக்கொண்டிருந்தேன். மனதுக்குத் துக்கமாயிருந்தது. இந்தத் தலைமுறையினர் வாசிக்கின்ற புத்தகங்களைப் பார்க்கும்போது சன்மார்க்கச் சீரழிவு கண்கூடாகத் தெரிந்தது. சிறந்த விற்பனையாளர்கள் வக்கிரம், வஞ்சகம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதில் தங்களுக்குள் போட்டாபோட்டியிடுகின்றனர். கிடைக்கக்கூடிய இந்தத் தொகுப்பில் மனம் சலித்து, “கிறிஸ்துவப்”; பிரிவை நோக்கி, அங்கு ஆறுதலடையலாம் என்ற நம்பிக்கையில் நகர்ந்தேன். அங்கே எனது தேடலில், ஒரு புத்தகம் என் கவனத்தைக் கவர்ந்தது. அது பழைய ஏற்பாட்டிலிருக்கும் 2 சாமுவேல் புத்தகத்தின் அதிகம் கவனிக்கப்படாத வசனத்தை அடிப்படையாகக் கொண்டது.
“பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்” – 2 சாமுவேல் 23:20.
பெனாயா என்னும் சிங்க வேட்டைக்காரன்! மனித சக்திக்கு அப்பாற்பட்ட வீரதீரன்! அவன் தாவீது ராஜாவின் தலைமை மெய்க்காப்பாளனாகும்படி வரவழைக்கப்பட்டு, இறுதியில் சாலொமோன் ராஜாவின் கீழ் இஸ்ரவேல் இராணுவத்தின் பிரதான இராணுவத் தளபதியாக ஆகிறான்.
இப்புத்தகத்தின் ஆசிரியர் மார்க் பேட்டர்ஸன்;;, தாவீதின் மற்ற பராக்கிரமசாலிகள் மற்றும் அவர்களது பராக்கிரமங்கள் குறித்த நீண்ட பட்டியலுடன்கூட, பெனாயாவைப் பற்றிய உண்மையான விவரங்களைத் தருகிறார். இப்புத்தகத்தின் அடிப்படைக் கருத்து என்னவெனில், கிறிஸ்துவர்களாகிய நமக்கு நம் வாழ்வின் மிகுந்த கனம் பொருந்திய இலக்கை அடைவதற்கான கனவுகளை அடையாளம் காணவும், அவற்றைத் துரத்திச் சென்று கைப்பற்றவும் விசுவாசமும், தைரியமும் தேவை என்பதே.
எண்பதுகளில், இந்தியாவில் சிறுவனாக வளர்ந்துவந்த நான், தெருக்களில் அலைந்து திரியும் நாய்களுக்குப் பயப்படுவேன். அந்தத் தெருக்களில் நடக்கும்போது அநேக முறைகள், எனது பயத்தை ஒரு மைல் தூரத்துக்கு முன்பாகவே உணர்ந்துகொள்ளக்கூடிய நாய்களால் நான் துரத்தப்பட்டிருக்கிறேன். 500 இராத்தல் எடையுள்ள சிங்கத்தைத் துரத்துவது இருக்கட்டும்! அநேக மக்களைப்போல, சிங்கத்தைத் துரத்திச் செல்வது என்பது நான் சந்திக்கும் கடைசிப் பிரச்னையாக இருக்கக்கூடும். என்றபோதிலும், ஆசிரியருடைய விசுவாசத்தைக் குறித்த கண்ணோட்டத்தை நான் புரிந்துகொள்கிறேன். நாம் வல்லமையான ஒரு தேவனைச் சேவிக்கும் காரணத்தால் நம்மைவிடப் பெரிதான பிரச்னைகளைச் சமாளிக்க நாம் விசுவாசமுள்ளவர்களாயிருப்பது அவசியமாகிறது.
வெறும் அதிக விசுவாசம் கொண்டிருப்பது என்பதைப் பற்றிய பாடத்தைவிடவும் இந்த வேதாகமக் குறிப்பில் வேறு ஏதேனும் உள்ளதா? புத்தக நிலையத்தைவிட்டு வெளிவந்த நான், இதைப்பற்றி யோசித்துக்கொண்டும், என் குடும்பத்தினருடன் பெனாயாவைக் குறித்துப் பேசிக்கொண்டும் இருந்தேன். சிங்கத்தைக் கொல்ல அவனைவிடவும் மிகச்சிறந்ததொருவர் இருக்கிறார் என்பது நிதானமாகவும் அதேசமயம் நிச்சயமாகவும் எனக்குத் தெளிவாயிற்று: அவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து! பெனாயாவின் வீரதீர சாகசக் குறிப்புகளுக்கும் சிலுவையின்மீது சாத்தானுடனான நம் ஆண்டவரின் போராட்டத்திற்குமிடையேயான ஒப்புமைகள் எனக்கு அதிகத் தெளிவாகின. வேதத்தினடிப்படையில் இந்த ஒப்புமைகளை நான் உங்களுக்கு விளக்க முயல்கிறேன்.
இயேசு பூமிக்கு இறங்கி வந்தார்.
யோவான் 3:13-ல் இயேசு பரலோகத்திலிருந்து இறங்கினார் என்று பார்க்கிறோம். விழுந்துபோன, பாவம் நிறைந்த மற்றும் கலகக்காரராகிய நம்மை மீட்க, அவர் இவ்வுலகத்திற்குள் இறங்கிவரும்பொருட்டுத் தன்னார்வத்துடனும் வீரத்துடனும் தமது பரலோக அதிகாரங்களை விட்டுக்கொடுத்தார். “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” – பிலிப்பியர் 2:7.
தொடக்கத்திலிருந்தே, ஒரு யுத்தம் வெடிக்கத் தயாராவதையும் அது சீக்கிரமாய் வந்துகொண்டிருப்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆனால் அவர் சளைக்கவில்லை. இரக்கமற்ற, கொடூரமான அந்த யுத்தத்தை நோக்கி முழு வேகத்துடன், ஆற்றலுடன் முன்னேறினார். தமது பிதாவின் ஆளுகை
பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதைப்போல இந்தப் புமியிலேயும் ஸ்தாபிக்கப்படுவதற்கு, நமது ஆத்துமாக்களின் சத்துருவை முற்றிலும் வீழ்த்துவதை வீரத்துடன் எதிர்நோக்கினார்.
இயேசு, தனியொருவராய்ச் சிங்கத்துடன் போராடினார்.
அப்பொழுது, அந்த வேளை வந்தது. ஓர் இருண்ட நாள்.
“‘பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” – லூக்கா 22: 42-44.
தமது உள்ளான வேதனையினால் இரத்தம் பெருந்துளிகளாய் வெளியில் சிந்திக்கொண்டிருக்கையில், “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று இயேசு தைரியமாய்த் தெரிவிக்கிறார். சிக்கலான பிரச்னையொன்றிற்குத் தீர்வுகாணப்போகும் தருணத்தில், அதைக்குறித்த அவரது தைரியத்தைச் சற்று யோசித்துப்பாருங்கள். அவரது அனைத்து சீஷர்களும் அவரை விட்டுவிட்டு இருளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அவரைத் தேற்றவோ, உதவி செய்யவோ அவருக்கு ஒருவருமில்லை. காட்டிக்கொடுக்கப்பட்டார். பரிகாசம் செய்யப்பட்டார். வாரினால் அடிக்கப்பட்டார். நொறுக்கப்பட்டார். காயப்பட்டார். ஆணிகளால் சிலுவையிலறையப்பட்டார். அவர் சுமந்துகொண்டிருந்த நம் பாவங்களினிமித்தம் அதைக் காணக்கூடாதிருந்த தமது பரிசுத்தப் பிதாவினிடத்திலிருந்து பிரிக்கப்பட்டார். தனியொரு நபராக, எவ்வித உதவியுமின்றி, அவர் பாதாளத்திற்குள் இறங்கிச் சென்று, கெர்ச்சிக்கிற நமது பெரிய சத்துருவும், சாத்தானுமாகிய அந்த சிங்கத்துடன் போராடினார்.
இயேசு வெற்றி சிறந்தார்.
“துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” – கொலோசெயர் 2:15.
அவர் தீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றார். அது காண்பதற்கு எத்தனை அருமையானதொரு காட்சியாய் இருந்திருக்க வேண்டும்! அதன்பின்பு அவர் ஜெயமடைந்த மனுஷ குமாரனாகப் பிதாவினிடத்திற்கு ஏறிச் சென்றார். தானியேல் 7:14-ல் எழுதியுள்ளபடி, சகல ஜனங்களும், ஜாதியாரும், பாஷைக்காரரும் இயேசுவையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். மெய்யாகவே இயேசுதான் நமது சிறந்ததொரு பெனாயா! நமது வாழ்வின் பாவம் மற்றும் துன்பங்களை மேற்கொள்ள உதவுமாறு அவரை நோக்கிப் பார்ப்போம். அவர் நம்பத்தக்கவரும், உண்மையுள்ளவருமாய், நமது கஷ்டங்களில் நமக்கு எப்போதுமே உதவுவதற்கு விருப்பமுள்ளவராயிருக்கிறார். மெய்யாகவே அவர் நம்மை விசாரிக்கிறவர்.
“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” – யோவான் 16:33.
Discussion about this post