• தமிழ்
  • English
  • முன் பகுதி
  • கட்டுரை
  • காணொளி
  • கடவுளின் மீட்பின் திட்டம்
  • தொடர்பு
No Result
View All Result
GospelLife.Tv
No Result
View All Result

நெருக்கங்களின் மத்தியில் நம்பிக்கை

by Ebenezer (Ebi) Perinbaraj
December 5, 2022
in Christian Growth, Christian Life, The Bible
வாழ்வில் நெருக்கங்களுக்கு விலக்கானவர் என்று யாருமே இல்லை. ஒன்று, கடந்த காலத்தில் நீங்கள் அவற்றைச் சந்தித்திருக்கவேண்டும் அல்லது தற்சமயம் நீங்கள் அவற்றைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். "எனக்கு நெருக்கடி அனுபவங்களே இல்லை" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வீர்களானால், அது வந்துகொண்டிருக்கிறதென்று நிச்சயித்திருங்கள்.
கிறிஸ்தவ வாழ்வில் நெருக்கடி தவிர்க்க முடியாதது எனில், ஒருவர் அதனை எவ்வாறு கையாள்வது? நெருக்கங்களை அனுபவிக்கிறவர்களுக்கு வேதாகமம் எத்தகைய உதவியை வழங்குகிறது? வேதத்தில் அநேகப் பயனுள்ள பகுதிகள் இருப்பினும், ஏற்றதொரு ஆதாரமாக எனக்குத் தோன்றுவது தாவீதின் சங்கீதம் 3.
மூன்று சரணங்களைக் கொண்ட சங்கீதம் 3-ல் ஒவ்வொரு சரணமும் சற்று நிறுத்தித் தியானிப்பதைக் குறிக்கும் "சேலா" என்ற பதத்துடன் முடிகின்றன. ஆகையால், இந்த அற்புதமான சங்கீதத்தில், மூன்று முக்கியமான காரியங்களை நாம் எளிதாகப் பார்க்கலாம்.

1. நெருக்கடி

கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள் (சங்கீதம் 3:1-2).

இவ்விரு வசனங்களில் (சங்கீதம் 3:1-2), "அநேகர்" என்று பொருள்படும் வார்த்தையை இரண்டு முறைகள் தாவீது பயன்படுத்துகிறார். ஒருவரோ, இருவரோ, அல்லது நூறு பேர்களோ, ஆயிரம் பேர்களோ அல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் (வசனம் 6). மேலும், இங்கே பகைமையானது அதிகரிப்பதும், வெளிப்படையாய் வெடிப்பதுமானதொரு விரோதமாக வளர்ந்து வருவதைக் கவனியுங்கள். அவரது அநேகப் பகைவர்கள், "தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நம்மிடம் யாராவது, "தேவனிடத்தில் நமக்கு எந்தவொரு உதவியும் இல்லை" என்று சொல்லக் கேட்பதைவிடவும் மோசமானது ஒன்றும் இல்லை.

தாவீது, தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருந்தபோது, சங்கீதம் 3-ஐ இயற்றினார். நாம் இச்சரித்திர நிகழ்வைக் குறித்து 2 சாமுவேல் 15 மற்றும் 16-ல் வாசிக்கிறோம். தாவீது சிங்காசனத்தில் இருக்கும்போது, அவரது மகன் அப்சலோம், இஸ்ரவேல் ஜனங்களின் இருதயங்களை வஞ்சகமாய்த் தன்வசம் திருப்பித் தாவீதுக்கு எதிராகச் சதியாலோசனை செய்தான். தாவீது எருசலேமைவிட்டுத் தப்பியோடும் நிர்ப்பந்தத்திற்குள்ளானார். சுருக்கமாகச் சொன்னால், தாவீதின் குடும்ப மற்றும் தேசீயப் பிரச்னைகளைச் சங்கீதம் 3 விவரிக்கிறது. "என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்" மற்றும் "எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்" என்பவை, அப்சலோமுடன் இருந்தவர்களைக் குறிக்கிறது. அப்சலோமின் ஆதரவாளர்களில் ஒருவன் சீமேயி. தாவீதைக் குறித்த சீமேயியின் தூஷணம், இந்த நெருக்கத்தில் தாவீது சந்தித்த வெளிப்படையான விரோதத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.

தாவீதைப்போல, இரகசியப் பகைமை முதல் வெளிப்படையான விரோதம் வரையிலான அநேகமாயிரம் எதிரிகளை நாம் சந்திக்காமலிருக்கலாம். ஆனால் இதுபோன்ற நெருக்கங்களை நம் வீடுகளில், பணியிடங்களில், நமது அண்டை, அயலகத்தார்களிடம் மற்றும் வருந்தத்தக்க விதமாக, நமது சபைகளில் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களிலும் நாம் சந்திக்கிறோம். விரோதம் சிலவேளைகளில் மிக மறைவானதாகவும், சிலவேளைகளில் நேரடியானதாகவும் இருக்கிறது.

2. தேவனின் குணாதிசயம்

"ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:3-4).

தாவீது, தனக்கு விரோதமாய் எழும்பிக்கொண்டு, "தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை" என்று அவரைக் குறித்துச் சொல்லுகிற அநேகச் சத்துருக்களால் நிலைகுலைந்து போகவில்லை. மாறாக, தேவன் யார் என்பதனால் அவர் ஆட்கொள்ளப்பட்டிருந்தார் அல்லது ஈர்க்கப்பட்டிருந்தார். வேறொரு வகையில் சொன்னால், அவர் அந்தப் பிரச்னையைக் கண்டார், ஆனால் நிரந்தரமாக அதிலேயே அவர் நிலைகொண்டிராமல், விரைவாகவே தன்
கவனத்தைத் தேவனின் குணாதிசயத்தை நோக்கித் திருப்பினார். இங்கே நாம் கற்றுக்கொள்ள வேண்டியதொன்று இருக்கிறது. நாம் ஒரு பிரச்னையையே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளாமல், நமது கவனத்தைத் தேவனின் குணாதிசயத்தை நோக்கித் திருப்புவதன் மூலம் அப்பிரச்னைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்கிறோம்.

முதலாவது, தாவீது, தேவனைத் தனது 'யாவே'யாகப் பார்க்கிறார். யாவே என்பது ஆங்கில வேதாகமத்தில் 'ஆண்டவர்' என அனைத்தும் பெரிய எழுத்துக்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது 'நானே' என்னும் மகாப்பெரிய தேவனை, ஒரே உன்னத சர்வ சிருஷ்டிகரை, தாங்குபவரை மற்றும் இரட்சகரைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. தாவீது, தேவனை 'யாவே'யாக ஒரு முறை அல்லது இரு முறைகள் அல்ல, அவர் தேவனை 'யாவே'யாக ஆறு முறைகள், இந்த எட்டு வசனங்களில் குறிப்பிட்டு அழைக்கிறார். மேலும், 3-ஆம் வசனத்தில் தாவீது, யாவே தேவனைத் திடநம்பிக்கையோடு, அழுத்தந்திருத்தமாக, "நீர்" என்று மாற்றுப் பெயரிட்டு அழைக்கிறார். அதாவது, தாவீதுக்கு, 'யாவே' என்பவர் ஜனங்களிடமிருந்தும் அவர்களது போராட்டங்களிலிருந்தும் விலகித் தொலைவில் நிற்கும் ஒருவர் அல்லர் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது, தாவீது, தனது கேடகமாகவும், பாதுகாப்பவராகவும் தேவனைக் காண்கிறார். கேடகம் என்பது தேவனுடைய பாதுகாப்பை விளக்கும் ஒரு உருவகச் சொல்லாகும். தாவீது தன்னையே யாவே தேவனின் பாதுகாப்புக்குக் கீழாக வைத்துக்கொள்கிறார்.

மூன்றாவது, தாவீது, தேவனைத் தன் மகிமையாகக் காண்கிறார். "மகிமை" என்பது விசேஷமாகக் கர்த்தருடைய மகிமையான பிரசன்னத்தையும் அவரது திவ்ய வல்லமையையும் குறிக்கிறது. தாவீது தன்னைத்தானே யாவே தேவனின் பிரசன்னத்திற்கும், வல்லமைக்கும் கீழாக நிறுத்துகிறார்.

நான்காவது, தாவீது, தேவனைத் தனது தலையை உயர்த்துகிறவராகக் காண்கிறார். இதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எருசலேமைவிட்டுத் தப்பியோடி, வெறுங்காலால் ஒலிவமலையின்மேல் ஏறி, தன் தலையை மூடியவராய், அழுதுகொண்டு போன தாவீது, கர்த்தாவே, நீர் என் தலையை உயர்த்துகிறவராயிருக்கிறீர் என்கிறார். இது தெள்ளத் தெளிவான ஒரு விசுவாச அறிக்கையாகும்.

இறுதியாக, தாவீது, தேவனை ஜெபத்தைக் கேட்கிற ஒரு தேவனாகக் காண்கிறார். கடந்த காலங்களில் தேவன் எவ்வாறு தன் ஜெபங்களுக்குப் பதிலளித்தார் என்பதைத் தாவீது நினைவுகூர்கிறார். தேவன் நமது ஜெபங்களைக் கேட்கிறார். சிலவேளைகளில், நம் ஜெபங்களுக்குப் பதில் தரும் விதமாக, பிரச்னையை உடனடியாக நீக்கிவிடுகிறார். மற்ற நேரங்களில், பிரச்னையை அதன் நோக்கம் நிறைவேறும்பொருட்டுச் சற்று நீடிக்கவிடுகிறார்.

3.  தாவீதின் நம்பிக்கை

"நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன். கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக" (சங்கீதம் 3:5-8).

இந்தப் பிரச்னையின்போது தாவீது, எந்த அளவுக்குத் தேவனின் குணாதிசயத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தாரோ, அந்த அளவுக்கு அவர் நம்பிக்கையுடையவராக மாறினார். இதுவே நமது பிரச்னைகளின்போதும் சாத்தியமாயிருக்க முடியும்.

முதலாவது, "நான்" என்னும் தன்மை அடையாளப் பெயரை விசேஷ விதமாகத் தாவீது பயன்படுத்துகிறார். அதாவது, இதை "என்னைப் பொறுத்தவரை" என்றும் மொழிபெயர்க்கலாம். எனக்கு விரோதமாக அநேகமாயிரம் பேர்கள் எழும்பலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் படுத்து நித்திரை செய்வேன். நாம் ஒரு பிரச்னையினூடாகக் கடந்து செல்லும்போது, நமது உறக்கம் பாதிக்கப்படுகிறது. என்றபோதிலும், தாவீதுக்கு அப்படியிருக்கவில்லை. தேவனிடத்தில் அவர் நம்பிக்கையாயிருந்தபடியால் அவரால் படுத்து, நித்திரை செய்ய முடிந்தது.

இரண்டாவது, அச்சமின்மை, தேவனிடத்தில் தாவீது கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நாம் ஒரு பிரச்னையைக் கடந்து செல்லும்போது, பெரும்பாலும் நாம் அச்சத்தை அனுபவிக்கிறோம். பயம் நம்மைப் பிடிக்கிறது. என்றபோதிலும், தாவீதுக்கு அப்படியிருக்கவில்லை. தேவனிடத்தில் அவர் நம்பிக்கையாயிருந்தபடியால் அவரது அநேகமாயிரம் பகைவர்களுக்கு அவர் அஞ்ச மாட்டார்.

மூன்றாவது, தாவீதின் ஜெபம் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. "தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று" அநேகர் சொன்னார்கள். ஆனால், இங்கே, "என் தேவனே, என்னை இரட்சியும் (என்னை விடுவியும்)!" என்று தாவீது ஜெபிக்கிறார். இங்கே கவனியுங்கள், தேவனிடத்தில் தாவீது, "நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்துத் துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போடும்." என்று கேட்கவில்லை. மாறாக, அவர் நம்பிக்கையோடு சொல்கிறார், "நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்." நீங்கள், 'தாவீது எப்படி இப்படிப்பட்ட சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம்?' என்று வியக்கலாம். தாவீது மிக மோசமானவர் என உங்களுக்குள் நீங்கள் கூறிக்கொள்ளலாம். "தாடையிலே அடிப்பது" மற்றும் "துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போடுவது" என்பவை, எழுத்தின்படியே பொருள்கொள்ளப்படக்கூடாது. "தாடையிலே அடிப்பது" என்பது அவமானப்படுத்துவது. இந்த அறிக்கையை, "நீர் என் பகைவர்களை அவமானப்படுத்துகிறீர்." எனப் பொருள்படும்படியாக வாசிக்கலாம். அதேபோல, "துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போடுவது" என்பது பலமிழக்கச் செய்வது. நாம் இவ்வறிக்கையை, "நீர் துன்மார்க்கருடைய பலத்தையெல்லாம் அகற்றிப்போடுகிறீர்." எனப் பொருள்படும்படியாக வாசிக்கலாம்.

கடைசியாக, இந்தச் சங்கீதத்தைத் தாவீது நம்பிக்கையோடு முடிக்கிறார். "இரட்சிப்பு கர்த்தருடையது." விடுதலை கர்த்தருடையது. ஜெயம் கர்த்தருடையது.

தாவீது ஒரு நெருக்கத்தினூடே கடந்து சென்றார். ஆனால் அந்த நெருக்கம் அவரை மதிகலங்கிய நிலைக்கு நடத்தவில்லை. அவர் தேவனுடைய குணாதிசயத்தினால் ஆட்கொள்ளப்பட்டார். அது அவரைத் தேவனிடத்தில் நம்பிக்கைகொள்ளும்படி வழிநடத்தியது. உண்மையில் கர்த்தர் தாவீதுக்கு வெற்றியைக் கொணர்ந்தார். யுத்தத்தில் அப்சலோம் கொல்லப்பட்டான். தாவீது எருசலேமுக்குத் திரும்பினார்.

நீங்கள் உங்கள் பிரச்னையையே பார்த்துக்கொண்டிருப்பதால் உங்கள் பிரச்னை உங்களைப் பயமுறுத்துகிறதா? உங்கள் பிரச்னையின் மீது சகல அதிகாரமும் உள்ள தேவனையே நோக்கிப் பாருங்கள். இரட்சிப்பு, அதாவது, விடுதலை, கர்த்தருடையது.
Tags: ConflictFaith & WorkPerseverancePrayerSuffering
ShareTweetSendSend
Ebenezer (Ebi) Perinbaraj

Ebenezer (Ebi) Perinbaraj

Ebenezer (Ebi) G.P. Perinbaraj has been in vocational ministry since 1995. He is the Co-founder and Teaching Pastor of Gospel Life Resources. Born and raised in Chennai, India, he trained at Asbury Theological Seminary and Trinity Evangelical Divinity School (TEDS) where he earned the degrees of M.A in Intercultural Studies and PhD in Educational Studies respectively. Before coming to the States in 2012, Ebi served as a missionary with Friends Missionary Prayer Band (FMPB). He and his wife, Esther were married in 1998 and they have two sons.

Next Post

உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல்

Recent Posts

No Content Available

Categories

  • Christian Growth (3)
  • Christian Life (4)
  • Church (3)
  • Marriage and Family (1)
  • The Bible (5)
  • Worldview (1)
  • காணொளி (2)
  • சுவிசேஷம் (4)
  • வேதாகமம் (1)

GLR Tags

and Anxiety Bible Study Church Practices Conflict Culture Devotion to Christ Ethics Faith & Work Fear Friendship God Identity in Christ Jesus Christ Life in Christ Loving Others Missions New/Old Testament Outreach Parenting Perseverance Prayer Rest Salvation Service Sharing the Gospel Sin Spiritual Warfare Suffering Theology Worry


GospelLife.TV is a ministry of Gospel Life Resources. Gospel Life Resources exist to help people everywhere behold Christ so they turn to Him in faith and repentance, be transformed into His image, and bear faithful witness to Him in all of life. 

We accomplish this by:

  • – Producing biblical content that lifts Christ high through GospelLife.TV
  • – Mobilizing Indian Christians through life-on-life discipleship
  • – Supporting Christ’s work in India through partnering with gospel leaders and networks

Categories

Categories
  • Christian Growth (3)
  • Christian Life (4)
  • Church (3)
  • Marriage and Family (1)
  • The Bible (5)
  • Worldview (1)
  • காணொளி (2)
  • சுவிசேஷம் (4)
  • வேதாகமம் (1)

Contact Us

Address:

Gospel Life Resources
P.O. Box 56
Westfield, IN 46074.

Phone (Whatsapp/Signal):
(224) 804-0225

Prayer Support:
[email protected]

© Gospel Life Resources. All Rights Reserved.
  • காணொளி
  • கட்டுரை
  • தொடர்பு
No Result
View All Result
  • முன் பகுதி
  • கட்டுரை
  • காணொளி
  • கடவுளின் மீட்பின் திட்டம்
  • தொடர்பு

© 2021 Gospel Life Resources. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist